Sunday, October 23, 2011

அசுரன் யார் என்று தெரியுமா?


திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கண வாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரி விக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தை யும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்த வர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப் பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்-களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்-கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி,  விருத் திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந் திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக் கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர் களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்-கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண் டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படு பாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளை-யடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்-கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.
அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவி டர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவி டர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திரா-விடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ-தனர், பிசாசு, பூதம் என்று குறித்துள் ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர் கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.
அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந் துபவர். அசுரன் என்றால் மது அருந் தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்-கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்-துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்-பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டி-கை-கள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்-களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.
- விடுதலை, 27.10.2005

Saturday, October 22, 2011

தமிழ் மக்களிடையே குருட்டு நம்பிக்கை இன்னும் ஒழியவில்லையே

அறிவுக்கொத்து என்ற நூலில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் எழுதியது 

நம் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குறை என்னவென்றால் எதனையும் ஆய்ந்து, ஓர்ந்து பார்க்கும் குணம் இல்லாமையேயாகும். ஒருவர் கல்வியறிவு ஆராய்ச்சியுடைய பெரியவ ராயிருந்தாலும் அவரைப் பத்துப் பேர் கொண்டாடா விட்டால் அவரை நம்மனோர் தாமுங்கொண்டாட மாட்டார், அதுவேயுமின்றி, அவரைப் பத்துப்பேர் பொறாமையினாலோ, அல்லது வேறு காரணத்தாலோ இழித்துப் பேசக் கேட்டால், அது தகுமா? தகாதா என்று ஆய்ந்து பாராமல் தாமும் அவரை உடனே இழித்துப் பேசி விடுவர்; அவர்க்குத் தீங்கு இழைப்பர்.
இனி, மற்றொருவர் கல்வியறிவு ஆராய்ச்சிகள் சிறிதும் இல்லாராயினும் அல்லது அவை சிறிதேயுடையரா யினும், பத்துப் பேர் அவர்பால்  வைத்த பற்றினாலோ, அல்லது அவர்பால் தாம்பெறும் ஏதேனும் ஒரு பயன் குறித்தோ அவரைக் கொண் டாடுவாராயின் அவர் எதற்காக அவரைக் கொண்டாடுகின்றார், நாமும் அவரை ஏன் கொண்டாட வேண்டு மென்று சிறிதேனும் ஆராய்ந்து பாராமல், உடனே அவரைக் கண்கால் தெரியாமற் கொண்டாடி விடுவர்; அக்கொண் டாட்டத்தால் வருந்துன்பங்களையும் தாம் அடைவர். பெரும்பாலும் , நாட்டவர் உண்மையறிவு ஆராய்ச் சிகள் உடைய பெரியாரைக் கொண் டாடுவதும் இல்லை; அவரால் தாம் அடைவதற்குரிய பெரும் பயன் அடைவதுமில்லை. வெளியினுக்கும் வெற்றாரவாரமும் உடையாரைப் பின்பற்றித் தமது நலனையும், தம் நாட்டவர் நலனையும் இழந்து விடுவதே அவர்க்கு இயற்கையாய்ப் படிந்துவிட்டது.
மேல்நாட்டவர் இயல்பு
இனி, மேல் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குணம் என்ன வென்றால், எவர் எதைச் சொன்னாலும், எவர் எதை எழுதினாலும், அவ்வப்பொருளின் இயல்புகளைத் தம்மாலான மட்டுஞ் சோம்பாமலாராய்ந்து பார்த்து எது தழுவத் தக்கதோ அதைத் தழுவுவர்; தழுவத் தகாததை விலக்குவர் வெறும் வெளி மினுக்கையும், வெற்றாரவாரத்தை யுங்கண்டு அவர் ஏமாந்து விடுவதில்லை. அறிவிலும், ஆராய்ச்சியிலுமே அவர்கள் தமது காலத்தைப் பயன்படுத்தி வருவ தால், அவர்கள் பால் வீணான பேச்சு களும் நிகழ்வதில்லை. பிறர்பாற் குற்றங்கள் இருந்தாலும் அவற்றை அவர்கள் ஆராய்வதில்லை; பிறர்பா லுள்ள குணங்களை மட்டும் ஆராய்ந்து அவற்றுக்காக அவரைப் பாராட் டுவதுடன்,அவரால் தாமும் உலகமும் பயன்படுதற்கான ஒழுங்குகளெல்லாஞ் செய்தவர். அதனால் மேல் நாட்டவரில் நற்குணமும், நல்லறிவும், நன் முயற்சியும் உடையவர்கள் சீருஞ் சிறப்பும் எய்தித் தாமுந்தம்மைச் சேர்ந்தவரும் வறுமையும் கவலையுமின்றி உயிர் வாழப் பெற்று, நாடோறும் ஆயிரக்கணக்கான புதுமைகளையும், ஆயிரக்கணக்கான பொறிகளையும் (இயந்திரங்களையும்) ஆயிரக்கணக்கான தொழிற்சாலை களையும், ஆயிரக்கணக்கான கல்விச் சாலைகளையும்,ஆயிரக்கணக்கான சொற்பொழிவு மண்டபங்களையும், ஆயிரக்கணக்கான கலையறிவுக் கழகங்களையும் இன்னும் இவைபோல் நம் சொல்லளவில் அடங்காத பலப்பல நலங்களையும் தாமிருக்கும் நாடு களிற்பரவச் செய்துவருவதோடு தாம் செல்லும் பிற நாடுகளிலும் அந்நலங் களையும் பரப்பி வருகின்றனர்.
நம்நாட்டவர் தன்மை
இனி, நம் நாட்டவர்களுக்கோ அறிவாராய்சியில்லாமையோடு, ஒற்றுமைக் குணமும் இல்லை; பிறர்பால் அருள் இரக்கமும் இல்லை, தமக்குத் தம் மனைவி மக்களும், நெருங்கிய உறவி னருமே உரியரெனவும், மற்றையோ ரெல்லாந் தமக்கு வேறானவரெனவும், தாமும் தம்மினத்தவரும் நன்றாயி ருத்தலே தமக்கு வேண்டும், நம்மவ ரல்லாத பிறர் எக்கேடு கெட்டா லென்ன, எத்தெருவே போனாலென்ன எனவும் நினைந்து, பிறர்நலத்தைச் சிறிதும் கருதாதவர்களாய் இருக் கின்றனர்.
தன்னலங் கருதும் இப்பொல்லாத எண்ணத்தால் இத்தமிழ் நாட்ட வர்க்குட் பிரிந்திருக்கும் அளவிறந்த சாதிகளும், அவற்றால் விளைந்திருக்கும் அளவிறந்த வேற்றுமைகளும் கணக் கிட்டுச் சொல்லல் இயலாது. நாலு பேர் ஒன்று சேர்வார்களானாற் சாதிபேச்சு; பெண் கொடுக்கல், வாங்கல் பற்றிய பேச்சும்; அவன் சாதிகெட்டவன், அவனுக்கும் நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது எங்கள் சாதியில் ஒடித்தாற்பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்காரரோடுதான் நாங்கள் கலப்பது வழக்கம் மற்றவர்கள் கையில்  தண்ணீர் கூட வாங்க மாட்டோம், என்னும் பேச்சும் அதை விட்டாற் பொருள் தேடும் வகைகளைப் பற்றிய பேச்சும் அதுவும் விட்டால் தமக்கு பொருள் சேருங்காலத்தைப் பற்றியும், நோய்தீரும் நேரத்தைப் பற்றியும், மணம் ஆகும் நாளைப் பற்றியும் எந்த இடத்திற் போனால் குறி கேட்கலாம், எந்த தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் இவை கைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா? கருப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிட லாமா? சுடலைமாடனைக் கும்பிட லாமா? என்னுஞ்சிறு தெய்வச்சிற்றுயிர்க் கொலைக் கெடும் பேச்சும் தனக்குப் பகையானவனைப் பல வகையால் இழித்துத் தன்னைப் பல வகையால் உயர்த்திச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண் கின்றோம் புகை வண்டிகளிலும், இந்தப் பேச்சே, பொதுக்கூட்டங்களிலும் இந்தப் பேச்சே கோயில்களிலும் இந்தப் பேச்சே, குளக்கரைகளிலும் இந்த பேச்சே.
பசி எடுத்த வேளையில்......
ஆனால், மேல்நாட்டவர்களிலோ எதையும் ஆராய்ந்து பார்ப்பவரும் எழுதுபவரும், ஆராயுங்கழகங்களும் அவர்களாலும் எழுதி வெளியிடப்பட்ட, வெளியிடப்படுகின்ற நூல்களும் நாள்  வெளியீடுகள், அவை தம்மைக் கற்பாருங் கற்பிப்பாரும் இவ்வகை கட்கெல் லாங்கோடி கோடியாகத் தமது பொருளை வழங்குவாரும் எண்ணிக் கையிலும் அடங்குதல் இல்லை. மேல் நாட்டவர்கள் பசியெடுத்த வேளையில் எந்த இடத்தில் எந்த உணவு கிடைக் கின்றதோ அதனைப் பெற்று மகிழ்ச்சி யோடு உண்பர். தமது வாழ்க்கைத் துணைக்கு எந்த நாட்டில் எவர் இசைந்தவராய்த் தெளியப்படு கின்றனரோ, அவரை மணந்து கொள்வர். உடம்பைப் பற்றிய இவ்விரண்டு குறைகளையும் இங்ஙனம் எளிதிலே நிரப்பிக் கொண்டு அதற்கு மேல் அவற்றில் தம் கருத்தைச் செலுத் தாமல், தம் அறிவு ஆராய்ச்சிகளை மென்மேற்பெருக்குவதிலும், நாடோறும் புதிய புதிய ஆற்றல்களையும், புதிய புதிய பொறிகளையும், புதிய புதிய உண்மை களையும் கண்டுபிடிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலுமே தமது கருத்தை ஓயாமற் செலுத்தி வருகின்றனர்.
ஆங்கிலங் கற்கும் இந்நாட்டவர்  எந்த இனத்தைச் சேர்ந்தவரா யிருந்தாலும், அவர் எல்லாம் மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கே தாங்கற்ற கல்வியைக் கருவியாக்கி, ஏழைக் குடிமக்களைப் பாழாக்குகின் றார்கள். இந்நிலையிற் பார்ப்பனரும், பார்ப்பனரல்லா தாரும் ஒத்தவர் களாகவேயிருக்கின்றார்கள்.
தந்நலந்தேடுவதிலேயே நாட்டம் வைத்திருக்கும் இவர்கள் அவைக் களங்களில் மேடை மேலேறிப் பேசும் போது மட்டும் ஏழைமக்களுக்காகக் கண்ணீர் விட்டுக்கதறுகின்றார்கள்! இஃது எதனை ஒத்திருக்கின்றதென்றால், ஆடுநனைகிறதே என்று ஓநாய் குந்தியழுததையே ஒத்திருக்கின்றது. மேடைமேல் இவ்வளவு இரக்கங்காட்டி பேசிய அவர்கள் வீட்டுக்கு, ஏழையிரவலர்கள் சென்றால் அவர்களை  ஏசித் துரத்துகின்றார்கள்.
வேலியே பயிரைத் தின்றால்....?
இந்த வகையிற் பார்ப்பனரைவிடப் பார்ப்பனரல்லாதாரே மிகக் கொடி யராயிருக்கின்றார்கள். யாங்ஙனமென் றால், உயர்ந்த நிலைகளிலுள்ள பார்ப்பனர்கள் தம் இனத்தவரல்லா தாருக்கு ஏதோருதவியுஞ் செய்ய தம்மினத்தவர்களில் ஏழைகளாயிருப் பவர்களுக்கு எல்லா வகையான உதவியுஞ் செய்யக் காண்கின்றோம். மற்றும், பார்ப்பனரல்லாதாரில் உயர்நிலைகளிலிருப்பவர்களே, ஏழைக்குடிகட்கு ஏதோரு நன்மையுஞ் செய்யக் காண்கிலோம்; நன்மை செய்யாதொழியினுந் தீமையேனுஞ் செய்யாதிருக்கிறார்களா வென்றால், அப்படியுமில்லை, எளியவர்களைத் துன்புறுத்தியும், அவர்கள் பொருளைத் தோலிருக்க சுளை விழுங்குவது போல் விழுங்கியும் வந்தாற்றானே, தாம் வல்லாண்மை வாழ்க்கை செலுத்தலாம்.
செல்வர்களால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றங்களில் முறையிடச் செல்லும் எத்தனை எளிய மக்கள், தாம் நடுவர்க்குக் கைக்கூலி கொடுக்க இடமில்லாமையின் அங்கும் நடுவிழந்து, ஓலமிட்டு அழுகின்றார்கள்! ஆங்கிலர் நடுவராயிருப்பின், அவரால் எத்திறத்த வரும் முறையாக வழக்குத் தீர்க்கப் பட்டுத்தங்குறை தீருகின்றனர். நம் நாட்டவர் அந்நிலைகளில் இருப்பிற், பெரும்பாலும் அவரால் நடுவராக வழக்குத் தீர்க்கப்படுதல் இல்லை. அவர்க்குக் கைக்கூலி கொடுப்பார் பக்கமே வழக்கு நன்றாய் முடிகின்றது. இதனினும் பெருங்கொடுமையிருக் கின்றது. காவலாக இட்ட வேலியே பயிரை தின்றால் பயிர் விளைவ தெப்படி? இங்ஙனம் பொருளையே பெரிதாய் நினைந்து நடுவு தவறி, எளியவர்களை வருத்திப் பொருள் சேர்க்கும் ஆங்கி லங்கற்ற நம்மனோர், பார்ப்பனரல்லாத நம்மனோர்க்கு, இவ்வாறெல்லாந் தீங்கி இழைப்பினும் பார்ப்பனர்காலில் விழுவதற்கும், அவர்க்குத் தாம் சேர்த்த பொருளை மிகுதியாக வழங்குவதற்கும் மட்டும் அவர்கள் சிறிதும் பின்வாங்குகின்றார்களில்லை.
பார்ப்பனர் காலில் நம்மவர்.....
இவர்கள் ஆங்கிலம் கற்றது வயிற்றுப்பிழைப்புக்கும் பெருமைக்குமே அல்லாமல், ஆங்கிலத்திலுள்ள விழு மிய அறிவாராய்ச்சியைப் பெறுவதற்கு அன்றாகையால், இவர்கள் தம் வீட்டிலுள்ள அறிவில்லாப் பெண் மக்களின் சொல்லுக்கும் ஆராய்ச்சி யில்லாப் பேதைகளான தம் சுற்றத்தார் சொல்லுக்குங் கட்டுப்பட்டவர்களாகித் தம் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு சடங்கிற்கும் பார்ப்பனர்களை வர வழைத்து, அவருக்கு அவர் வேண்டிய பொருளை வழங்கி அவர் காலிலும் விழுகின்றார்கள்! ஒரு வேளை நல்ல சோறுகூடக் கிடையாமற் பட்டினியும், பசியுமாய்க் கிடந்து வாடி வதங்கும் ஏழைகள் முகத்தை ஏறெடுத்தும் பாரா மல் பேதமை வயப்பட்டு வறுமை யறியாத பார்ப்பனர்க்கும், ஆரவாரக் கொண்டாட்டங்கட்கும் சிறு தெய்வ வெறியாட்டுகட்கும் அழிவழக்குகட்கும் தமது பொருளைக் கணக்கின்றிச் செலவிடும் நம்மனோரின் நிலை எண்ணுந்தோறும் நடுக்கத்தை விளைவிக்கின்றது!
இனி, ஆங்கிலமாவது தமிழாவது கல்லாதிருந்தும், பெருஞ்செல்வர்களாக வும், சிற்றரசர்களாகவும் வாழ்வார், நம்நாட்டிற்  பெருந் தொகையினராய் இருக்கின்றனர். இவர்களுடைய செல்வச்செருக்கையும், இவர்கள் தங்கீழ் உள்ள ஏழை மக்கட்குச் செய்யும் கொடுமைகளையும், நாம் எண்ணிப் பார்ப்போமானால் நமதுள்ளம் இன்னும் மிகுதியாய் நடுங்கா நிற்கும். செல்வர்கள் இல்லங்களில் இருக்கும் பொற்சரிகை பின்னிய பட்டாடை களிலும், அவர்களும் அவர்களின் மாதரும் அணிந்து கொள்ளுங் கல்லி ழைத்த நகைகளிலும்,  அவர்கள் புழங் கும் பொன், வெள்ளி ஏனங்களிலும் அவர்கள் ஏறிச் செல்லும் ஊர்தி களிலும், இன்னும் இவை போன்ற வெளிமினுக்குகளிலும் அவர்கள் செலவு செய்திருக்கும் பொருளைக் கணக்கிடப் புகுந்தால், அவை நூறாயிரக்கணக் காயிருக்கும்.
அறியாமை, தலை காட்டுமா?
இனிச் சிற்றரசர்களாகிய ஜமீன் தாரர்களின் அரண்மனைகளிலும் இங்ஙனமே ஆடைகளிலும் அணி கலங்கள் முதலியவற்றிலும் மடங்கி வறிதேகிடக்குஞ் செல்வப் பொருளைக் கணக்கிடப் புகுந்தால் அவை கணக்கிலடங்கா.
இவ்விதமே சைவ-- வைணவ சுமார்த்த மாத்துவ மடங்களில் ஏதொரு நற்பயனுமின்றி அடங்கிக்கிடந்து மங்கும் பெரும் பொருட்டிரளுங் கணக்கில் அடங்கா.
இவ்வாறெல்லாம் இவர்கள் கையில்
முடங்கிக்கிடந்து அவியும் பெரும்
பொருட் குவியல்களெல்லாம்,
இவர்களைவிட்டு நீங்கிப் பொது
மக்கட்குப் பயன்படு நிலைமையை
யடையுமானால் இவ்விந்திய நாட்
டில் வறுமையும், நோயும், அறி
யாமையுந் தலை காட்டுமா?
இவற்றைச் செய்யுங்கள்!
இப்பெரும் பொருள் கொண்டு நூறாயிரக்கணக்கான கல்விச் சாலைகள் நாடெங்குத் திறப்பிக்கலாம். மிக வறியார் விருப்பங்கட்கு அவர் வறுமை நீங்கும் மட்டும் உணவு கொடுக்கும் அறச்சாலைகள் எங்கும் அமைக்கலாம். ஏழையெளிய பிள்ளைகட்கு உண்டியும் உடையும் நூல்களும் வாங்கிக் கொடுத்துச் சம்பளம் வாங்காமற் கல்வி கற்பிக்கலாம். உழவுத் தொழில், கைத்தொழில்களை அறிவாராய்ச்சி யோடு செய்து, இப்போது பெறும் பயனிலும் நூறு  மடங்கு ஆயிரம் மடங்கு மிகுதியான பயனைப் பெறலாம். வாணிகத்திற் பொய்யும், புரட்டுங்கலவாமல் அதனை நேர்மையோடு செய்து பேர் ஊதியத்தை அடையச் செய்யலாம். இவை மட்டுமோ, இந்தியர்கள் தாமே தமது பொருள் கொண்டு புகை வண்டி  தொடர்கள், மின்சார வண்டிகள், வான வூர்திகள் முதலியனவெல்லாம் அமைத் துக் கொள்ளலாம். நீர் வளமில்லாத நாடு நகரங்களுக்குக் குளங்கள் கூவல்கள் எடுப்பித்து குடிநீர்ப்பீலி வைக்கலாம். பொதுமக்கட்கு அறிவு ஊட்டுங் கழகங்கள் நிலை நிறுத்தி, அவற்றிற் கலைவல்ல அறிஞர்களை அமர்த்தலாம். அவர்கள் கடவுளைப் பற்றியும் உயிர்களைப் பற்றியும், உலகங்களைப் பற்றியும், உலகியற் பொருட்களைப் பற்றியும் குழாங்கொண்டு ஆராய்ந்து அறிவு பெறுதற்குக் கலையாராய்ச்சி மன்றங்கள் நிறுவலாம்; அவர்கள் ஆராய்ந்தெழுதும் நூல்களுக்குத் தக்கப்படி பொருளுதவி புரிந்து, அவற்றை அச்சிட்டு நாடெங்கும் பரப்பலாம்  ஆண்டு கடோறும் பன்னூறாயிரக் கணக்காய் மக்களுயிரைக் கொள்ளை கொண்டு போகுங்கொடிய நோய்களை வராமற்றடைசெய்து, மக்கள் வாழ்நாளை நீளச் செய்து, அவரறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும் மருத்துவக் கழகங்கள் எங்கும் அமைக்கலாம்.