Wednesday, March 14, 2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 3

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்

இந்தியா என்பது பெரிய நாடு. இதில் பல திறப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றா லும் இந்நாட்டில் இரண்டு பெரிய கலாச்சாரங்களே அடிப் படைக் கலாச்சாரங்களாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் பெரிதும் முரண்பட்ட கலாச்சாரங்களாகவும்  இருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்று ஆரியச் கலாச்சாரமாகும். மற் றொன்று திராவிடக் கலாச்சார மாகும். வடநாட்டில் பெரும் பாலும் ஆரிய கலாச்சாரமும், தென்னாட்டில் பெரும்பாலும் திராவிட கலாச்சாரமும் நிலவி வருகிறது.
இவற்றுள் ஆரியக் கலாச் சாரம் சுரண்டலையும் ஏமாற்று தலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதைப் பின் பற்றி வருபவர்கள் தமது சுரண்டு தலுக்காக அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டு முயற்சி செய்து வரு கிறார்கள். திராவிட கலாச்சாரம் சமதர்மத்தை, சோஷலிசத்தை அடிப்படை யாகக் கொண்டதாக இருப்பதால் அதைப் பின்பற்று பவர்கள் பிறர் சுரண்டலை ஒழித்துச் சுதந்திரமாக வாழ விழைகிறார்கள். எனவேதான் பிரிந்து வாழ நினைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு மிகமிக உயர்ந்திருந்தது. பிறகு ஆரியத்தின் சுரண்டலுக்கு ஆட்படவே இன்று மிகமிகத் தாழ்ந்துவிட்டது.
சுரண்டலுக்கு உள்ளாக்கிய வடநாடு மிகமிக உயர்ந்து நிற்கின்றது இன்று.
திராவிடம் தனித்து வாழமுடியுமா? என்று இன்று  கேட்பது போல் அன்றும் கேட்டார்கள். இன்று சிலர் கூறுவது போலக் கேரளம் கேட்கவில்லை, கன்ன டம் காது கொடுக்கவில்லை, ஆந்திரம் ஆதரிக்கவில்லை. அப்படியிருக்கையில் திராவிடம் என்ற பேச்சு எதற்கு? அதுவும் இப்போது எதற்கு என்று கேட்பது போல அன்றும் கேட்டவர்கள் இருந்தனர். எனவே அவர்களுக்கும் திராவிடர் கழகமோ தந்தை பெரியாரோ பதில் கூற வேண்டாத அளவுக்குத் திரு.வி.க. கேள்வியையும் கேட்டுப் பதிலையும் கூறி னார். இத்தகைய அருமையான விளக்கம் கூறிய திரு.வி.க. இன்றும் திராவிடர் மனத்தில் இருக்கிறார். எண்ணத்தில் என்றும் நிறைந்து நிற்கிறார்.
இன்று சிலர் கேட்கிறார்கள், திராவிட நாடு பிரிந்தால் தனித்து வாழமுடியுமா? என்று. நிச்சயமாகத் தனித்து வாழமுடியும். இன்றைய நிலையைக் காட்டிலும் பன்மடங்கு உயர்நிலையில் வாழ முடியும் என்று அதி திடமாகச் சொல்வேன். இந்நாட்டில் எதுதான் இல்லை? மலைகள் இல்லையா?  இருபுறமும் கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் இருக் கின்றனவே. செழிப்பான நெல் விளையும் நிலப் பரப்பில்லையா?  எரிமலைச் சாம்பல் நிரம்பிய இயற்கை வளம் பொருந்திய மண்ணல்லவோ இந்நாட்டு மண். அதில் என்ன விளையாது?  ஆறுகள் இல்லையா?  இந்நிலப் பரப்பை வளம் செய்ய, அதற்கும் குறைவில்லாத வகை யில் கோதாவரியுண்டு, கிருஷ்ணா வுண்டு, காவிரி உண்டு, பாலாறு உண்டு, பெண்ணையாறு உண்டு, இன்னும் எத்தனை வேண்டும்?  உலோகங்கள் இல்லையா?  கோலார் தங்க வயல்கள் எந் நாட்டைச் சேர்ந்தவை?  அய்தராபாத்தி லுள்ள மணிமலைகள் எந்நாட்டைச் சேர்ந்தவை? அந்த மணிமலைகளை வெட்டி எடுப்போமானால் இந்த அகண்ட உலகத்தையே விலைக்கு வாங்கிடலாமே, இந்நாட்டில் என்ன இரும்புக்குத்தான் குறைவா?  கவலையோடு பூமியைத் தோண்டிப் பார்த்து ஆராய்ச்சி நடத்தி வந்தால் இந்நாட்டில் எதுதான் கிடைக் காது என்று நினைக்காதீர்கள். எல்லாம் கிடைக்கும்.! கிடைக்காவிட்டால்தான் என்ன?  மற்ற மேலை நாடுகளைப் போலக் கிடைத்த உலோகத்தைக் கொண்டு  நமக்குத் தேவையான உலோகத்தைச் செய்து கொள்ள முடியாதா?  எல்லா உலோகப் பொருள்களும் ஒரே மூல தாதுப் பொருள்களிலிருந்து தான் உண்டா கின்றன. எனவே ஒன்றோடு ஒன்றைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது ஒன்றிலி ருந்து மற்றொன்றைப் பிரிப்பதன் மூலமோ எப்பொருளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும் விஞ்ஞான முறைப்படி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாம் என்ன சோடைகளா? ஒரு பொருளை வேறு நாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்க.
இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டில் வாழும் எங்களுக்குப் பிழைக்கும் வழிதானா தெரியாது? வாணிபம் செய்யத் தெரியாதா?  அல்லது துறைமுகங்கள்தான் இல்லையா?  எங் களுக்கு  முதன் முதலாகக் கப்பல் வழி வாணிபம் நடத்தியவர்கள் திராவிடர் களாயிற்றே. உலகம் உணரா முன்னமே உள்நாட்டு நகரத்திற்கும் கடற்கரையோர நகரத்திற்கும் வெவ்வேறு பெயர் கொடுத்து வழங்கியவர்களாயிற்றே தமிழர்கள். பட்டினமும், பட்டணமும் என்கிற இரு சொற்கள் எத்தனையோ காலமாகத் தமிழ்நாட்டில் வெவ்வேறு பொருளுடன் வழங்கி வருகின்றனவே. ஆங்கிலம் வந்த பிறகு இவ்வேற்றுமை கூடச் சிலருக்கு மறைந்து போயிருக்கும். சென்னைப் பட்டினம் என்பதற்குப் பதிலாக சென்னைப் பட்டணம் என்று தானே பலர் வழங்கி வருகின்றனர். ஹிந்தி வருமுன்னரே இந்நாடென்றும் ஹிந்தி வந்த பிறகு என்னவாகும் என்று சொல்லவும் வேண்டுமோ?  இன்று விசாகப்பட்டினம் என்கிற ஒரு இடத்தில் தான் கப்பல்தளம் இருக்கிறதென்றால் திராவிட நாடு பிரிவினையானதும் எத்தனையோ விசாகைகளைக் காண முடியுமே.
எத்தனையோ வழிகளில் இந்நாட்டில் தலை விரித்தாடிக் கொண்டிருக்கும் தரித்திரத்தை எங்களால் போக்கிக் கொள்ள முடியுமே. தனித்தியங்கும் நாடுகளைப் பிரித்துத் தனியாக இயங்கும்படிச்செய்து ஏதோ சொற்ப அதிகாரங்களை மட்டும் மேலெழுந்த வாரியாக மத்திய சர்க்காருக்கு வைத்துக் கொள்வதைவிட்டு இமயம் முதல் குமரி வரை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டுமென்று பாடுபட்டு வரு கிறார்களே?  அது சாத்யமா?  யோசித்துப் பார்த்தார்களா?  வங்காளத்தை ஒன் றாக்க முடிகிறதா?  அய்க்கிய மாகாண மக்களுக்குச் சமாதானம் சொல்ல முடிகிறதா?  எங்கே இருக்கிறது ஒற்றுமையும் ஒருமைப்பாடும். காங்கிரஸ் காரர்களிடையேயாவது காணப்படுகிறதா ஒருமைப்பாடு?  இவர்கள் கூறும் இந்தியாவில் ஒருமைப்பாடு இருக்கிறதா?
                                                                                                                                                                        - விடுதலை 14.3.2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 2

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்
திராவிட என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சிச் சரித்திரத்தில் திராவிடர்களைப் பற்றிய குறிப்பு காணப்படு கிறது. ஸ்மிருதியிலும், பஞ்ச திராவிடம்  என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழகம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு மராத்தி தேசம் ஆகிய அய்ந்து திராவிடங்கள் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன. மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்து வடமொழி கற்று சவுந் தர்யலகரி என்ற சமஸ்கிருத நூல் எழுதிய சங்கராச்சாரியாரும் அப்புத்தகத்தில் திராவிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள் ளார். எல்லையப்பர் அவர்களின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறிய லாம் என்று கூறுவதோடு,
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கின்ற தமிழ்வாணரால் எழுதப்பட்ட திராவிட பிரகாசிகா என்கின்ற நூலிலும் திராவிடம் என்கிற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப் பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் இதுவரை எவரும் சுட்டிக் காட்டாத புதிய தகவலைக் கூறுகிறார். சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க நூறாவது ஆண்டுத் தொடக்க விழாவில் தலைவர் கலைஞர் இரவீந்திரநாத் தாகூரின் ஜனகண பாடலில் திராவிட என்ற சொல்லாட்சி இடம் பெற்றிருப்பதைப் பாடிக் காட்டினார்.
திரு.வி.க.வோ விடுதலை பெற்ற அடுத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் 1949இல் தமது உரையில் இன்று இந்நாட்டின் தேசியப் பாட்டாக வழங்கி வரும் ஜனகணமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உட்கல வங்கா என்ற வரியில் திராவிட நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்  என்று கூறுகையில் சிந்திப்பவர்கள் கருத்து ஒரே திசை நோக்கிச் செல்லும் என்பது சான்றாகிறது.
மேலும் அவர் அழுத்தந்திருத்தமாக, திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதாரங்களே போதும் என நினைக்கிறேன். இத் திராவிட நாட்டுக்கு எல்லை குறிப்பது மிகச் சிரமமான காரியம் அல்ல. சரித்திரமே சுலபமாக நிர்மாணித்துவிடும் எந்தெந்தப் பகுதிகள் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்று.
எனவே திராவிடம் என்று ஒரு பகுதி இருந்து வருகிறது என்பது பற்றியோ அல்லது அதன் எல்லையைக் குறிப்பிடு வது பற்றியோ யாரும் நம்மோடு சர்ச் சைக்கு வர முடியாது என்று எல்லை குறித்த சர்ச்சைக்கும் கூட முற்றுப் புள்ளி வைக்கிறார்.
நம் திராவிடப் பண்பாடு வேறு, ஆரியப் பண்பாடு வேறு - அடிப்படையிலேயே ஒட்டாது. இரண்டுக்கும் உள்ள தொலைவு அதிகம் என்று கூறும்போது, தாம் தூம் தையாதக்கா என்று சில ஆரிய, வைதீக ஆதரவாளர்கள் குதி, குதியென்று குதித்து, ஆரியமாவது, திராவிடமாவது, எல்லாம் ஒன்று கலந்து விட்டது என்றெல்லாம் கூறி வருவதை அறிவோம்.
அவர்களுக்கு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னே - அருமை யான விளக்கத்தைத் தமிழ்த் தென்றல் கூறி ஆரியம் வேறு, திராவிடம் வேறு என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.
நாம் கூட ஆரியர்களில் சிலர் - சில நடிகர்கள் - பார்ப்பனர்கள் - பகுத்தறிவு பேசுவதுகண்டு, பூணூல் மேல் வெறுப் பாகப் பேசுவது கண்டு ஏமாந்துவிடுவது உண்டு. எனவேதான் தமிழர் தலைவர் ஆசிரியர், எந்தப் பார்ப்பானாவது, கட வுள் மறுப்புக் கொள்கையைக் கூறினால் ஏமாந்துவிடாதீர்கள். ஏனென்றால் அவனுக்குக் கல்லிலும், செம்பிலும் கடவுள் இல்லை என்பது நம்மைவிட அவனுக் குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால் வகுப்புரிமைக் கோட்பாட்டை இடஒதுக் கீட்டினை ஏற்கிறானா என்று பாருங்கள். அப்போது தெரியும் அவன் உண்மையான ஆரியனா, திராவிட ஆதரவாளனா என்று தெரியும் என்று கூறுவார்.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் உரை யாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று கண்டறிய வேறோர் அளவு கோலை எடுத்து வைத்தார். பிறப்பொக் கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட் பாட்டை எவனொருவன் ஏற்கிறானோ அவன்தான் திராவிடன். பிறவியில் வேற் றுமை பாராட்டி நிற்பவன் ஆரியன் என்று.
இவ்வாறான சிந்தனைகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மவர்களுக்கு அளவு கோல் வைத்திடத் தோன்றியுள் ளது. ஏன் தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூற வேண்டியதற்கும் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டார்.
தமிழ் பேசுவதாலேயே, தமிழ் நாட்டில் பிறந்ததாலேயே திராவிடன் என்று கூறுவோமேயானால் கல்கியும், கவிஞர் வாலியும் கூடத் தமிழர் என்று கூறும் இடம் உண்டு. ஆனால் திராவிடர் என்று தங்களை அவர்கள் கூறுவார்களா? திருஞான சம்பந்தர் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டாலும், இவர்கள் அழைத் துக் கொள்ள மாட்டார்கள்.
தந்தை பெரியார் நம்மை ஏன் பார்ப் பனர் அல்லாதார் என்று எதிர்மறையாக அழைத்துக் கொள்ள வேண்டும்?  சூத் திரர் எனும் இழி மொழியால் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திராவிடர் என்று வகுத்தார் என்பது வரலாறு. அதனாலேயேதான் சுயமரி யாதைத் திருமணம் எனும் பார்ப்பனர் மேற்கொள்ளாத, பார்ப்பனர் உயர்வாகக் கருதிக் கொள்கின்ற பார்ப்பனீயத் திருமண முறை ஒழித்த திருமண ஏற் பாட்டை வலியுறுத்தி லட்சக் கணக்கில் அவற்றைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அத்திருமணங்களை ஏற்பு செய்து அண்ணாவின் ஆட்சி சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் நிறைவேற்றியபோது அகம் மகிழ்ந்து தம் கனவு நிறைவேறியது கண்டு வாழ்நாளிலேயே கண்டு மகிழ்வுற்றார். இந்தப் பின்னணியில் அன்றே திரு.வி.க. இரண்டு பண்பாடுகளும் எதிர் எதிரானவை. ஒன்றுக் கொன்று ஒட் டாதவை என்று தெளிவுபடுத்தி இரண் டையும் வேறுபடுத்திக் காட்டும் அருமை யான விளக்கத்தை அளித்தது இன்றும் நமக்கு ஆரியப் பண்பாடு எது?  திராவிடப் பண்பாடு எது? என்று பகுத்துப் பிரித்துக் காட்டுகிறது.
                                                                                                                                                                            - விடுதலை 13.3.2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 1

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்
தந்தை பெரியார், திரு.வி.க., வ.உ.சி. ஆகிய மூவரும் தேசியத் திலகங்கள் - நம்மவர்கள் - திராவிடர்கள். இந்திய விடுதலைப் போர் வரலாறு ஆயினும், இந்தியச் சமூக சீர்திருத்த வரலாறு ஆயினும், பொதுவான இந்திய வரலாறு ஆயினும்  - அவற்றைத் தீட்டுவோர் - எடுத்து இயம்பி வரலாற்றுக்குக் கட்டியம் கூறுவோர் இவர்களை ஒதுக்கிவிட்டு, புறந்தள்ளி அல்லது புறக்கணித்து வரலாறு வரைவார்களேயாயின் - வரைந்து படித்து இருப்பார்களேயாயின் அது உண்மையான வரலாறும் அன்று - ஏன் வரலாறே அன்று.
இம்மூவரில் திரு.வி.க., தேசிய இயக் கத்திற்காகவும், தொழிலாளர் இயக்கத் துக்காகவும் மட்டும் உழைத்ததோடு அல்லாமல் தமிழ் மொழி, இன உணர்வு, பெண்மை உயர்வு போற்றியவர்.
அன்னைத் தமிழ், தீந்தமிழ், செந்தமிழ், உயர்தமிழ் என்றெல்லாம் புகழப்படும் தாய்த் தமிழைத் தமிழ் உணர்வாளர் - தமிழ் நெஞ்சத்தவர் - திரு.வி.க. தமிழ் என்று அழைக்கத் தகும் பெருமையினைத் தமிழ்க் குழவிக்கு ஊட்டி வளர்த்த தகைமையாளர்.
மேடைப்பேச்சில் எத்தனை, எத் தனையோ பேர் முத்திரை பதித்திட்டாலும் - சென்ற நூற்றாண்டின் முதல் அரைப் பகுதி திரு.வி.க. தமிழ், அண்ணாதுரை தமிழ் என்று கொஞ்சி மகிழ்ந்தது. அண்ணாவின் அழகுத் தமிழில் ஆண்மை தழைத்தது. திரு.வி.க.வின் தமிழில் தமிழ்த் தென்றல் வீசிப் பெண்மையின் எழிலோங்கியது.
அரசியல் வாணில் பண்பாளர், நயத்தக்க நனி நாகரிகர் - சாது முதலி யார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க. தந்தை பெரியார் நட்பு ஆழமும், அகலமும் உடையது. தந்தை பெரியாரை எவ்வளவு சிறப்பாகப் போற்றித் தம் நெஞ்சத்துக் கொண்டு புகழ்ந்துரைத்தார் என்பதற்குத் திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் எனும் அவர்தம்  தன்வரலாறு வாழும் சான்றாகும்.
ஒரு காலை ஒன்றாக நாட்டு விடு தலைக்கு நாளும் உழைத்திட்ட பெரியார் - வைதீகத்தின் சூடு தாங்காமல் வெளி யேறியது போலவே, திரு.வி.க. எனும் பண்பாளருக்குக் காங்கிரசுப் பேரியக்கம் அதன் போக்கின் மாறுபாட்டால் கசந்தது. திரு.வி.க.வும் தந்தை பெரியாரைப் போல மாஜி காங்கிரசுக்காரர் ஆனார்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கம் கண்டார். திரு.வி.க.வோ இயக்கம் ஏதும் காணாமல் தன் தனி இயக்கத்துடன் நின்று போனார். அவருடைய எழுதுகோல் எழுதிக் குவித்த எழுத்துச் சான்றுகள் - தமிழுக்குத் தமிழன்னைக்கு அவர் அணிவித்த அணிகலன் ஆகிவிட்டன. திரு.வி.க.வின் எழுத்தும், பேச்சும் உள் ளத்தை உருக்கி ஓடச் செய்யும் ஆற்றல் பெற்றன.
1949 இல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா; பிரிந்து செல்வதற்கு முன் ஈரோட்டில் 19 வது திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அந்நாளில் திராவிட எதிர்ப்புணர்வைத் தூள் தூளாக்கும் அணுகுண்டுகளாகத் திரு.வி.க.வின் பேச்சுக் கந்தகத் துகள்கள் விளங்கின.
தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் நடத்திய 19ஆவது திராவிடர் கழக மாநாட்டில் திரு.வி.க. உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலைக்கு உடல் நலிவுற்று இருந்த வேளையில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை இன்றைய இளம் தலைமுறையினர் படித்துத் தெளிவும், சிந்தனை வளமும் பெறத் துணை புரிபவை. திரு.வி.க., மூத்தவரா? பெரியார் மூத்தவரா?
தலைவர் அவர்களே!  பெரியார் அவர்களே!  தோழர்களே!   தாய்மார்களே!   நேற்று பெரியார் அவர்கள் தெரிவித்தபடி அவரைவிட நான் 6 வயது மூத்தோ னாகவே காணப்படுகிறேன். எனவே உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலையில் இருக்கின்றேன். மேலும் இரைந்தோ, விரைந்தோ பேச முடியாமலும் சங்கிலித் தொடர்போல் எழுத்துக்களை வெளியிடுவதற்கு ஞாபக சக்தியில்லாத வனாகவும் இருக்கின்றேன். எனவே இங்கொன்றும், அங்கொன்றுமாகத் தொடர்பற்று என்னால் வெளியிடப்படும் இக்கருத்துக்களை நீங்கள் அத்தொடர்பு களைச் சேர்த்துப் படித்துத் தெளிவு பெற வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் தம் சொற் பொழிவின் தொடக்கத்தில் திரு.வி.க.
திராவிட நாட்டுப் படத்தை நான் திறந்து வைக்க வேண்டுமென்ற விருப் பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் எனது நெருங் கிய நண்பருமான பெரியார் ஆவார் என்று கூறுகிறார்.
திராவிடர் கழக உறுப்பினர் அல்லாத நான், திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பல தடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில் இந் நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர் கள்தான், நானும் திராவிடன்தான். எனவே தாராளமாகத் திறந்து வைக்க லாம். அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன் என்று முதலில் தென்னகம் திராவிடம் என்பதை உறுதி செய்து கொள்கிறார்.
பின்னர் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் கூறத் தலைப்படுகிறார் திரு.வி.க.
திராவிடர்கள் என்பதற்கு என ஆராய்ச்சியில் பல பொருள்கள் தென் பட்டன. அவற்றுள் இரண்டை மட்டும் ஈண்டு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். திராவிடர்கள் என்றால் ஓடுபவர் என்று ஒரு சார்பாரும், ஓட்டுபவர்கள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். வடமொழிச் சார்புடையவர்கள் முன்னைய அர்த்தத்தையும், சிவஞான முனிவர் அவர்கள் பின்னைய அர்த்தத்தையும் கூறுகிறார்கள். இவற்றுள் எதைக் கொள்வதென்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஓட்டுகிறவர்கள்  என்றால் மாசை, அசுத்தத்தை ஓட்டு கிறவர்கள். மனத்துக்கண் உள்ள மாசை ஓட்டுபவர்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத் தறன்
என்கிற அறத்தின் வழி நடந்தவர்களே திராவிடர்கள்.
திராவிடம் எனும் சொல்லுக்கு உரிய விளக்கமும் திரு.வி.க. வாயிலாகப் பெறுகிறோம்.
                                                                                                                        - விடுதலை 12.3.2012