Tuesday, January 22, 2013

பெரியாரின் தத்துவ நோக்கு!


பேரா. கருணானந்தனின் பெரியாரியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு - (4.9.2012 சென்னைப் பல்கலைக் கழகம்)

பெரியாரை ஒரு சமூகப் போராளியாகத்தான் பலரும் அறி வார்கள்; அவர் ஒரு  தத்துவவாதியும் கூட. இது விஷயத்தில் அவரின் சம  கால முன்னோடிகள் - அயோத்தி தாசர், சிங்காரவேலர், அம்பேத்கர்.
அயோத்திதாசர் பூர்வ பவுத்  தத்தை நாடிய ஒரு பவுத்தவாதி. சமூக  நீதித் தளத்திலிருந்து தத்துவதளம் நோக்கிப் பயணித்தவர். அதற்காகவே அவர் பவுத்தத்தை தேர்ந்தெடுத்தார். அதனாலேயே மூல பவுத்தத்தை நோக்கிச் சென்றார். அங்கே கடவு ளுக்கு வேலையில்லை என்பதை அறிவார். அதே நேரத்தில் பவுத்தம் நாத்திகவாதம் அல்ல என்றும் வாதிட் டார். கடவுள் என்பதற்கு நன்மை என்று பவுத்தம் பொருள் கொண்டதாகச் சொல்லி அந்தக் கடவுள் உண்டு. ஆனால் பிரபஞ்ச சிருஷ்டிகர்த்தா எனும் கடவுள் இல்லை என்றார்.
1914இல் காலமான அயோத்தி தாசரின் சிந்தனைகள் பெரியாரை எட்டினவா என்று தெரியவில்லை. 1924-25-இல் அவர் சுயமரியாதை இயக்கம் கண்ட போது அயோத்தி தாசரின் சிந்தனைகள் புழக்கத்தில் இல்லாமல் போயிருக்கக் கூடும் அல்லது மறைக்கப்பட்டிருக்கக் கூடும்.
1899-இல் புத்தர்பிரான் மறைவின் 2443ஆம் ஆண்டு விழாவைத் தனது இல்லத்தில் கொண்டாடினார் சிங்கார  வேலர். புத்தர் பற்றி தான் எழுதியிருந்த சிறு நூல்களை அங்கு வந்திருந்தவர்களிடையே விநியோகித் தார். இதே விழாவில் அயோத்தி  தாசரும் பேசினார். ஆனால் 1920-லேயே மார்க்சியத்திற்கு மாறிவிட்டார் சிங்காரவேலர். அதில் காலூன்றிக் கொண்டுதான் பெரியாரின் சுயமரி யாதை இயக்கத்தோடு 1930களில் நல்லுறவு கொண்டிருந்தார். குடி  அரசு ஏட்டில் தத்துவக் கட்டுரைகள் எழுதிய அந்த மேதை 1946இல் இயற்கை எய்தினார்.
அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் எனும் அருமை யான படைப்பு பிராமணியவாதிகளால் கீழே அழுத்தப்பட்டிருந்த பூர்வ பவுத் தத்தை தோண்டி எடுத்து மீண்டும் மக்கள் முன்பு வைக்கிற அரிய சித்  தாந்த முயற்சி, அயோத்திதாசரைப் போல இவரும் சமூக நீதிக்கான தத்துவ - சமூக ஸ்தாபன வழிமுறை  யாகவே மூல பவுத்தத்தைத் தேர்ந்  தெடுத்தார். 1956 அக்டோபரில் தனது ஆயிரக்கணக்கான நேசர்களோடு அந்த மதத்தை தழுவினர். அந்த ஆண்டு இறுதியில் காலமானார்.
இந்த மூவரில் ஒரு பொதுமையாக பூர்வ பவுத்தம் இருந்தது. அதிலிருந்து சிங்காரவேலர் எப்போதோ விலகி மார்க்சியத்தைத் தேர்ந்தெடுத்திருந் தார். அயோத்திதாசர் ஆரம்பம் முதல் இறுதிவரை பவுத்தத்தில் உறுதி காட்டினார். அம்பேத்கர் தனது இறுதிக் காலத்தில் அதில் சங்கமித்தார்.
அம்பேத்கரின் இந்த மாற்றத்தை நெருங்கி நின்று கவனித்திருந்தாலும் பெரியார் அதைத் தன்னளவில் ஏற்க  வில்லை. சமூகநீதிக் களத்திலும் சரி, சித்தாந்த தளத்திலும் சரி மதமாற்றம் ஒரு சரியான தீர்வாகாது என்பதில் தெளிந் திருந்தார். அதே நேரத்தில் அவர் மார்க் சியத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் தனக்கென வகுத்துக் கொண்டே ஒரு தனிப்பாதையில் நடைபோடத் துவங்கினார்.
இதற்கான காரணத்தையும், அவரது தத்துவ நோக்கத்தையும் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப் பெரியாரின் சமகாலச் சித்தாந்த எதிரிகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவர், பெரியாரின் காலம் முழுக்க வாழ்ந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்  திரர். இன்னொருவர் ரமண மகரிஷி. இந்த அளவுக்கு நேரடியாக இல்லா  விட்டாலும் நடைமுறையில் இருந்த மற்றொருவர் காந்திஜி.
சகலமும் பிரம்மத்தில் அடக்கம் என்ற முறையில் உலகம் ஒரு மாயை எனச் சொன்ன ஆதிசங்கரின் தத்துவத்தைப் பின்பற்றுகிறவர்கள் சங்கராச்சாரிகள் என்பதை அறிவோம். அவர்கள் வருணா சிரமத்தை பின்பற்றுகிறவர்கள் என்ப  தையும் அறிவோம். இதில் அடிப்படை முரண் உள்ளது. உலகம் வெறும் மாயை என்றால் அதில் சாதிய - ஆணாதிக்க ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, பராமரிக்கிற வருணாசிரமத்தை மட்டும் நிஜமாகக் கடைப்பிடிப்பது ஏன் எனும் கேள்வி எழுகிறது. இதைச் சந்திரசேக ரேந்திரர் தீர்த்து வைத்த விதம் அலாதி  யானது.
அவர் கூறியுள்ளார் - பாவாத்வைதம் ஸதா குர்யாத்: க்ரியாத்வைதம் நகதஞ் சன என்று சொல்லியிருக்கிறது. அதா  வது எல்லாம் ஒன்று என்ற அத்வைதம், பாவனையில்தான் எப்போதும் இருக்க வேண்டும். காரியத்தில் ஒரு போதும் அல்ல என்று அர்த்தம். பிராமணியம் எனும் சமூகக் கட்டமைப்புக்கும் அத்  வைதம் எனும் தத்துவ நிலைப்பாட்டுக்கும் இடையே மோதல் ஏதுமில்லை என்றார். சொல்லப் போனால் முன்னதைக் காப்  பாற்ற பின்னது உதவுகிறது என்பதுதான் அவர்கள் நடைமுறையில் கண்டது. சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறவர்  களை மடக்கிப் போட, செயலற்றுப்போக வைக்க இவர்களது அத்வைதம் பயன்  பட்டது.
இதை ரமண மகரிஷி இன்னும் வெளிப் படையாகவே சொன்னார். 1916இல் திருவண்ணாமலையில் ஆசிரமம் க ண்டவர் 1950இல் காலமானார். உலகம் என்று தனியாக உமக்கு அயலாய் வெளியே ஏதும் இல்லை என்று நம்மை நம்பச் சொன்னார். இதன் பொருள் புறவுலகில் சீர்திருத்தம் தேவையில்லை. வேண்டியது எல்லாம் அகவுலக ஏற்பே என்பதுதான். அநீதிகளையும், அசிங்கங் களையும் அப்படியே ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவம் வர அத்வைதம் உதவுகிறது என்பதுதான் அவரது நிலைப்பாடு. ஆகவேதான், சமூக சீர்திருத்தவாதிகள் பற்றிய ஒரு கேள்விக்கு ரமணர் இப்படி பதில் சொன்னார் - முதலில் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்வதில்  கவனம் செலுத்தினால் சமூக சீர்திருத்தம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்.
1920-40-களில் இந்திய அரசியல் வானில் உச்சத்தில் இருந்தவர் காந்திஜி என்பதை அறிவோம். கூடவே காந்தியம் எனப் பிற்காலத்தில் அறியப்பட்ட ஒருவித தத்துவ நோக்கையும் அவர் வெளிப் படுத்தி வந்தார். ஆரம்ப நிலையில், இந்து ராமராஜ்ஜியம் வருணாசிரமம், கீதை எனும் சொல்லாடல்களை எல்லாம்  பொது வாகப் பழைமைவாதிகளின் கண்ணோட் டத்திலிருந்தே பிரயோகித்து வந்தார். 1930களில் தீண்டாமை ஒழிப்பில் இறங் கிய பிறகுதான், இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு குரல் கொடுக்கத் துவங்கிய பிறகுதான் இந்தச் சொற்களுக்குத் தனது சொந்த வியாக்யானத்தைத் தரத் துணிந்தார். அதிலும் முழுச் சாதியத்திற்கு  எதிராகவே தான் இருப்பதாக அவர் சொன்னது கடைசி கட்டத்தில், அதனால்தானோ என் னவோ அவர் இந்துத்துவா குண்டுக்கு பலியானார்.
பெரியார் காலத்து இந்தியாவைப் பொறுத்தவரை நடைமுறை வாழ் நிலையிலிருந்தே சமூக மாற்றத்திற்  கான போராளிகளும் சரி, அதை விரும் பாத சனாதனிகளும் சரி, தங்களின் தத்துவ நிலைபாட்டை எடுத்தார்கள். பெரியாரும் அந்தபடியாகவே இது விஷயத்தில் பயணப்பட்டார்.
வகுப்புவாரித் தீர்மானம் எனப்பட்ட இடஒதுக்கீட்டைக் காங்கிரஸ் ஏற்காத நிலையில் அதிலிருந்து 1925-இல் வெளி யேறிய பெரியார் சுயமரியாதை இயக் கம் எனப்பட்டதைத் துவக்கினார், குடிஅரசு ஏடு நடத்தினார். செங்கற் பட்டில் 1929இல் நடைபெற்ற அந்த இயக் கத்தின் முதல் மாநாட்டில் சமூகநீதி தொடர்பாக பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டதைப் பலரும் அறிவர். அங்கே இப்படியொரு தீர்மானமும் போடப்பட்டது - மக்கள் பிறவியினால் உயர்வு, தாழ்வு உண்டென்ற கொள்  கையை இம்மாநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கும் மதம், வேதம், சாஸ்திரம்,  புராணங்களை எல்லாம் பொது ஜனங்கள் பின்பற்றக் கூடாது என்று தீர்மானிக்கிறது.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு என்றால் ஜாதி மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுகிற இந்து மதத்தைப் பின்பற்றக் கூடாது என்பதாகும். அதன் அங்கங்களாகிய வேதம், சாஸ்திரம், புராணங்களை மதிக் கக் கூடாது என்பதாகும்.  இதன் அர்த்  தம் அப்போதே இந்து மத மறுப்புக்குப் பெரியார் வந்துவிட்டார் என்பதாகும். மற்ற மதங்கள் பற்றிய அவரது  பார்வை என்ன?
1931-இல் விருதுநகரில் சுயமரி  யாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அதில் இப்படி  யொரு தீர்மானம் - மனிதத் தன்மையை தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால் அப்படிப்பட்ட  எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டும் என்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராது என்றும் இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது.
                                                                                                                                                                           விடுதலை-21.1.2013

பகுதி 2 
மனிதம் என்பதற்கு எதிராகவே எல்லாப் புனிதங்களும் உள்ளன என்ற முடிவுக்கு தன்னளவில் பெரியார் அப்போதே வந்துவிட்டது தெரிகிறது. எனினும், சுயமரியாதை இயக்கம் எனும் நேரடி சமூக நீதிப் போராட்ட  அமைப் பிற்கு சகல மதங்கள் ஒழிப்பு என்பது உடனடிக் குறிக்கோளாக இருக்க முடியாது என்கிற காரியார்த்தமான புரிதல் இருந்ததால் இது வொரு அபிப்  பிராயமாகவே அங்கே கூறப்பட்டி  ருந்தது எனலாம்.
பெரியார் வெகு விரைவிலேயே தத்துவத்தின் அந்தச் சிகரத்தைத் தொட்டார். அதுதான் 1933-இல் வெளி வந்த அவரின் மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம் எனப்பட்ட சிறு நூல். குடிஅரசு ஏட்டில் 1932-ல் சிங்காரவேலர் எழுதிய கட்டுரைகள் கடவுளும் பிரபஞ்சமும் எனும் தலைப்பில் வெளிவந்தது. அதன் தாக்கம் பெரியாரின் படைப்பில் உண்டு என்ற போதிலும் இது உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தனித்து நின்றது. Proactical Philosophy எனப்பட்ட நடைமுறைத் தத்துவ நிலையிலிருந்து Speculative Philosophy எனப்பட்ட சிந்தனா ரீதியான தத்துவ வெளிக்கு அவர் பாய்ந்ததன் வெளிப்பாடு இந்த நூல். கடவுள், ஆத்மா போன்ற புலன றிவு கடந்த (Metaphysics) விஷயங் களின் இருப்பு பற்றிய ஊடகங்கள் இதில் கேள்விக்கு உட்படுத்தப்பட் டிருந்தன.
பிறர் சொல்லிக் கொடுத்த பிறகு தான் கடவுள் நினைப்பு வருகிறதே தவிர தானாக அல்ல என்றார். நிஜம்தானே? பசி உணர்வு, அதற்காகத் தாய்ப்பாலைத் தேடும் உணர்வு பிறக்கும் போதே வந்து விடுகிறது. அதுபோல தன்னை பற்றிய நினைப் பையும் கடவுள் அப்போதே சொல்லி அனுப்புகிறாரா? இல்லையே. பிறந்த குழந்தை மட்டுமல்ல வளர்ந்த குழந்தை கூட பிறர் சொல்லித்தராமல் எதையும், யாரையும் கும்பிடுவதில்லை. இதிலிருந்தே கடவுள் இல்லை என்பது தெளிவாகிறதல்லவா என்றார்.
அப்படியென்றால் கடவுள் பற்றிய எண்ணம் எப்படி உருவானது? அது எண்ணம்தான், மனிதனின் கருத்துத் தான். மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவைகளுக்கு கடவுள் சக்தி என்று சொல்லி விடுகின்றான் என்று அதி முக்கியமானதொரு விஷயத்தை சர்வ சாதாரணமாகச் சொல்லிச் சென்றார் பெரியார். கடவுள் எனப்பட்டது மனிதனின் கற்பிதம் என்பதே உண்மை. ஆனால் இந்தக் கற்பிதம் எனும் உண் மையைக் கொண்டே அதன் இருப்பும் மெய்யானது எனும் திருகல் வாதத்தை முன் வைத்தார்கள்.
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதர் அன்செல்ம்  வைத்த வாதம் இது தான். கடவுள் எனப்பட்டவர் இருப்ப திலேயே முழுநிறை என்று வரையறை செய்யப்பட்டுள்ளார்.
அப்படியென்றால் அவரது இருப்பும் நிஜம்தானே, இல்லை யெனில் அவர் எப்படி முழுநிறை ஆவார், ஆகவே கடவுள் இருக்கிறார். இருப்ப  திலேயே  முழுநிறை என்று இவர்களாலே இலக்கணம் வடித்துக் கொண்டு, அதைக் கொண்டே அதன் இருப்பும் நிரூபணமாகிப் போனது என்றார்கள். கற்பிதத் தைக் கொண்டே நிஜம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். பெரியாரோ கடவுள் எனப்பட்டவர் முழுநிறை, எல்லாம் வல்ல வர் என்பதெல்லாம் மனிதனால் முடியாத வைகளுக்கு மனிதன் கொடுத்துக் கொண்ட பெயர்கள் என்றார். கடவுள் எனும் கற்பிதத்திற்கு அடிப்படை மனி  தனின் இயலாமையே தவிர வேறில்லை என்றார். கடவுள் எனும் கற்பிதத்தின் மூலம் நிரூபிக்கப்படக் கூடிய ஒரே விஷயம் அந்தக் கற்பிதத்தை உருவாக்கிய மனிதனன்றி வேறில்லை.
சர்வ சக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்தால் சர்வத்திலும் புகுந்து சர்வத் தையும் ஒன்று போலவே சிருஷ்டித் திருக்கலாமன்றோ? வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்பது தான் பதிலாகும் என்றும் கூறினார் பெரியார். பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதர் தாமஸ் அக்யுனஸ், கடவுளின் இருப்பை அய்ந்து வழிகளில் நிரூபிக்க முடியும் என்று முரசறைந்தார்.
அவையெல்லாம் பிரபஞ்சத்தின் இயங்கு நிலை மற்றும் உன்னதம் அல்லது குறை பாடு கண்டு அதிசயித்து, ஆகவே அதற் கொரு சிருஷ்டிகர்த்தா இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டதாகும். பிரபஞ்சத்தின் இயல்புநிலை என்று கருதினால் சிருஷ்டிகர்த்தாவின் தேவை இல்லாமல் போகிறது எனும் எளிய மெய்மையை அவர் உணரவில்லை.
அவர் சொன்ன அய்ந்து வழிகளில் ஒன்று உலகில் உள்ள வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அவரது கூற்று: நல்லது, உண்மை, மேன்மை போன்றவற்றில் ஜீவன்களிடையே கூடுதல், குறைச்சல் இருக்கிறது. கிட்டத்தட்ட அதுபோல இருக்கிறது என்றால் அது, அந்த உச்சபட்சம் இருக்கிறது என்று அர்த்தம். சூடு இருக்கிறது என்றால் மகாச்சூடு இருக்கிறது என்று அர்த்தம். எல்லாச் சூட்டுக்கும் உச்சபட்சமாக J.P இருப் பது போல அந்த உச்சபட்சம் இருக்க வேண்டும். அதையே கடவுள் என்கி றோம்.
இது விநோதமான வாதம். வேறு பாடுகள் இருப்பதாலேயே வேறுபாடு அற்ற ஒன்று இருக்க வேண்டும் எனக் கூறுகிற கோணல் வாதம். பெரியார் இந்த வாதத்தைத் திருப்பிப் போட்டார், நேர் செய்தார். வேறுபாடு அற்ற ஒன்று இருக்கிறது என்றால், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சமத்துவமும் உள்ள ஒன்று இருக்கிறது என்றால் அது சகலத்தையும் ஒன்றுபோல ஆக்கி யிருக்க வேண்டியதுதானே? ஏன் ஆக்கவில்லை?  ஏனிந்தக் குழப்ப வேலை? ஏன் ஒருபுறம் செல்வம் குவி கிறது. மறுபுறம் வறுமை மண்டுகிறது? ஏன்  ஒருபுறம் ஆதிக்க சாதியினர் கொட்ட மடிக்கிறார்கள், மறுபுறம் ஒடுக்கப்பட்ட சாதியினர் நொந்து கிடக்கிறார்கள்? ஏன் ஒருபுறம் ஆணா திக்கவாதிகள் உருமுகிறார்கள். மறுபுறம் பெண்கள் அடங்கிக் கிடக்கிறார்கள்? இப்படி வேறு வேறாகச் சமுதாயம் இருப்பதிலிருந்து சர்வ சக்தியும், சர்வவியாபகமும், சமத்துவமும் உள்ள கடவுள் இல்லை என முடிவுக்கு வருவதுதான் நேர்வழி வாதமாகும், சரியான தர்க்க நியாயம் ஆகும் என்றார் பெரியார்.
                                                                                                                                                                            விடுதலை-22.1.2013