Tuesday, November 30, 2010

ஞான சூரியன் - 11

2.கிரிமினல் சட்டத்தை யாவருக்கும் சமமாக ஆங்கிலேயர் எழுதிய காலத்தில் ஆரியர்கள் பலமான கண்டனங்கள் செய்தார்களென்று கேள்விப்படுகிறோம்.
3. விருஷலன் - தருமத்தைக் கெடுப்பவன்.
ஏட்டுச் சுரைக்காய் சமையலுக்கு உதவாததுபோல, இந்த இலக்கணம் கண்கூடாகப் பார்ப்பதற்கு இல்லை. எத்தகைய தீய ஒழுக்கமுடைய பார்ப்பனியின் பிள்ளையாயினும், தீய ஒழுக்கங்களில் தலைசிறந்து விளங்குவோனாயினும் ஒருவன், ஜாதிமாத்ரோப ஜீவீவா என்று தொடங்கிய பிரமாண வாக்கியங்களும், கட்குடி முதல் அய்ம்பெரும் பாதகங்களைச் செய்தாலும், பார்ப்பனன் பார்ப்பனனே என்பது முதலிய பிரமாணங்கள் சமயத்திற்கேற்றவாறு எடுத்துக் காட்டப்படும். ஆனால், மேற்குறித்த கீதா வாக்கியம் கிருஷ்ணனுடைய சொந்த வாக்கியம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இதே கருத்துடைய ஒரு சுலோகம் புத்த பகவான் பாலிமொழியில் திருவாய் மலர்ந்தருளிய தம்மபதமென்னும் நூலில் 25-ஆவது அத்தியாயத்தின் கண்ணும் காணப்படுகிறது. 1ஆனால், நல்லோர்களின் இலக்கணம் கீதைக்கு முன்னரே சொல்லப் பட்டிருப்பினும், பார்ப்பனர் மாத்திரமே நல்லோர்கள் என்ற தன்கொள்கையை நிலைநிறுத்த விரும்பி, பிராஹ்மணோ மமதேவதா பிராமணனே என் குலதெய்வம் என்று கூறிய பார்ப்பனத்தாசனாகிய கிருஷ்ணன், தன் சொந்த வாக்கியமாகத் திருத்திக் கூறியிருக்கலாம். சங்கராச்சாரி யாரின் மதத்திற்கு இந்தக் கீதையே அடிப்படையான நீதி நூலாகும். (ஸ்மிருதியாகும்) சங்கரர் மதம் பெரும்பகுதியும் பொறாமைக் களஞ்சியமாதலால், அதில் சிலவிடங்களில் காணப்படும் சில உயர்ந்த கருத்துகளும் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வராமையால், குப்பைக்குள் புதைந்துகிடக்கும் மாணிக்கம் போல் மங்கி நிற்கின்றன. ஆகையால், இந்துமத முறைப்படிக்குப் பார்ப்பனியின் வயிற்றில் பிறந்தவனே பார்ப்பனன் என்று கருதப்படுகிறதென்பது மேற்கூறிய உதாரணங்களாலும் வழக்கத்தினாலும் பெறப்பட்டதன்றோ? இத்தகைய பார்ப்பனனுக்குரிய தொழில்களாவன:
அத்தியாயனம் சாத்தியனம்
யஜனம் யாஜனம ததா
தானம் ப்ரதிக்ரஹம் சைவப்
பிராஹ்மணானா, மகல்பயத (மனு)
பொருள்: கற்றல்-கற்பித்தல், யாகம் செய்தல்-செய்வித்தல், தானம் கொடுத்தல்-பெற்றுக்கொள்ளுதல் இவை கடவுளால் பிராமணனுடைய தருமங்களாக விதிக்கப்பட்டிருக்கின்றன.
1. தம்மபதம் எழுதியதற்குப் பிற்பாடு கீதை எழுதப்பட்டது என்பது, புத்த காலத்தையும் அதன் ஆசிரியர் காலத்தையும் ஆராய்ச்சி செய்தால் விளங்கும்.
இந்தத் தானமோ, இப்பொழுது சம்பளமென்று உருவத்துடன் விளங்கு கின்றது. ஆனால், தரும சாஸ்திர முறைப்படிச் ஜாதியைத் தெரிவிக்கிற சர்மா என்ற பட்டப்பெயருக்கு உரியவர்களான அய்யர், அய்யங்கார், நம்பூதிரி, போத்தி முதலிய ஜாதிப் பிராமணர்களுக்கு மட்டும்தான் உத்தியோகம் கொடுப்பது என்ற பிரிட்டிஷ் ஆட்சியில் வேற்றுமை காட்டாமல் இந்துக்கள் எல்லோரையும் சமமாகக் கருதி உத்தியோகத்தில் பார்ப்பனரல்லாதார் ஒருவர் இருந்தால், அவரை மேலேற ஒட்டாமல் தடுப்பதும், மனுவின் சட்டப்படி ஒழுங்குதானே. அன்றியும் 1ஆபத்துக் காலத்தில் வேறு சில சவுகரியங்களும் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டி ருக்கின்றன.
ரிதாம் ருதாப் யாம் ஜிவேத் ம்ரு
தேனப்ரம் ருதேனவா
ஸத்யான் ருதாப் யாமதவா
நஸ் வய்ருத்யாகதாசன (மனு)
இதன் பொருள்: அறுவடையான நிலத்தில் சிந்திக்கிடக்கிற தானியங்களைப் பொறுக்கியெடுத்து, அதனால் உயிர் வாழ்வதே ரீதம். பிச்சையேற்காமல் யாரேனும் கொடுக்கிற பொருளைப் பெற்றுக்கொண்டு ஜீவனம் செய்வது அமிருதம், பிச்சையேற்று உண்ணுவது மிருதம். உழுது பயிரிட்டு, அதனால் வரும் பொருளை வைத்துக்கொண்டு உண்பது பிரமிருதம், வியாபாரம் செய்வது சத்தியான்ருதம். பிராமணன் இந்தத் தொழில்களைப் பின்பற்றிக் கொண்டு, காலத்திற்கேற்றவாறு ஜீவிக்கலாம். ஆனால், அடிமையாகிய சூத்திரன் நாய்க்குச் சமானம். ஆகையால், அவனுடைய தொழிலினால் எக்காலத்தும் ஜீவனம் செய்யலாகாது. என்னே மனுவின் தருமம்!
இக்காலம்தான் பிராமணர்களுக்கு ஆபத்துக்காலம். ஆகையால், அவர்களின் ஆணைப்படி பிராம்மணோமமதை வதம் என்று நடக்கிற ஓர் அரசனை நியமிக்கும் பொருட்டு ஹோம்ரூல் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு முயற்சி நடத்துகிறார்கள். ஆயினும், கோரிய பலன் கூடவில்லை. இப்போது நேபாள தேசம் ஒன்று மட்டும் மனுஸ்மிருதி முறைப்படிப் பிராமணன் ஆணைக்கு முழுவதும் கட்டுப்பட்டு நடக்கிறது. ஏனைய இந்திய நாட்டுச் சிற்றரசர்களும் சிற்சில காரியங்களில் இன்றும் கட்டுப்பட்டே ஒழுகி 1. ஆபத்காலம் - பார்ப்பனன் சொன்ன மனுவை அனுசரித்து ராஜன் ராச்சியப் பரிபாலனம் செய்யாத காலம்.
வருகின்றார்கள். முற்கூறிய பிரமாணத்தைத் தெரிந்து கொண்டவர்கள் பிராமணன் தோற்கடை, செருப்புக் கடை சோற்றுக்கடை முதலியன வைத்து வியாபாரம் செய்யலாமோ என்று கேட்பார்களோ?
1. பிராஹ்மணோ ஜாயமானோ
ஹிப்ருதில்யாம் அபியாஜதே ஈஸ்வர:
ஸர்வபூதானாம் ப்ரஹ்ம
கோசஸ்ய குப்தயே
2. ஸாவஸ்வம்ப் ராஹ்மணஸ்யேதம்
யத்கிஞ் சிஜ்ஜகதீகதம்;
ஸ்ரைஷ்டைனா பிஜனேனேதம்
ஸர்வம் வைப்பிராஹமணோர் ஹதி
3. ஸ்வமேவப் ராஹ்மணோ
புங்க்தேஸ்வம் ததாதிச:
ஆன்ருமிம்ஸ்யாத் பிராஹ்மண
ஸ்யபுஞ்ஸதே ஹீதரேஜனா
இதன் பொருள்: சகல பிராணிகளுக்கும் தலைவனாயும், வேதமாகிய களஞ்சியத்தின் காவலனாயும் பிராமணன் படைக்கப்பட்டிருப்பதால், இப் பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் பிராமணன் உரிமையுள்ள வனாவான். பிராமணன் பிச்சை எடுத்துண்பவனாயினும் உண்பதும், உடுப்பதும், கொடுப்பதும் அவன் பொருளேயாம்.
ஏனையோர் பிராமணனுடைய கருணையால் அவனால் கொடுக்கப் பட்ட சிற்சில பொருட்களைப் பெற்றுக்கொண்டு உயிர் வாழ்கின்றார்கள்.
பிரம்மதேவன் இந்த உலகத்தைப் படைத்துப் பிராமணர் களுக்குத் தான் வழங்கினான் என்னும் புராண வாக்கியமும் இதற்குச் சான்றாகும். இதே கருத்துடைய வாக்கியங்களை யாக்ஞவல்கியரும் கூறுகின்றார்.
தபஸ்தப்த்வாஸ்ருஜத் ப்ரஹ்மா
ப்ராஹ்மணோ கோசஸ் யேதகுப்தயே
த்ருபத்யர்த்தம் பித்ருதேவானாம்
தர்மஸம் ரக்ஷ்ணாயச்
ஸார்வஸ்ய ப்ரபவோவிப்ரா;
ஸ்ருதாத் யயனசீலின:
-(தொடரும்)
நன்றி:விடுதலை 30-11-2010
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1928 20 ஆம் பதிப்பு : 2010

Monday, November 29, 2010

ஞான சூரியன் - 10


பொருள்: குலத் தொழிலை மீறி நடக்கிற வைசியன் இறந்தபின், மலத்துவாரத்தில் கண்களை உடையதும் மலத்தையே புசிக்கும் இயற்கையுடையுதுமான, மைத்திராக்ஷ ஜோதிகன் என்கிற பிசாசாகவும், இம் மாதிரியே சூத்திரன் வெள்ளைப் பேனைத் தின்கிற கைலாசகன் என்கிற பிசாசாகவும் பிறக்கின்றனர். இதைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர், இன்னும் பாப்பனருக்கே அடிமையாக இருக்கவிரும்பினால், அவர்களையே வணங்கிக் கேட்டும், அடிமைத் தனத்தைத் தள்ளிச் சுதந்திரமாக இருக்க விரும்பினால், ஸ்மிருதிகளைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.
1சனாதன தரும முறையாக வருணங்கள் நான்கே உள்ளன. இதற்கு மனுவின் வசனம் வருமாறு:
பிராஹ்மண; க்ஷத்திரியே வைஸ்த;
த்ரேயோவர் ணாத்விஜாதய
சதுர்த்த ஏகஜாதிஸ்து சூத்ரோ
நாஸ்திது பஞ்சம (மனு)
பொருள்: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்ற இம்மூவரும் துவிஜர்கள். 2நான்காவது ஜாதியான சூத்திரன் ஒரே ஜாதி (இவனுக்கு உபநயனமில்லாததால், துவிஜாதியாக மாட்டான்). அய்ந்தாவது ஜாதி கிடையாது. ஆனால், இக்காலத்தில் காணப்படுகிற அளவற்ற ஜாதி வேற்றுமைகள் எங்ஙனம் உண்டாயின என்றால், எட்டுப் பார்ப்பனர்களும், ஒன்பது அடுக்களை என்று வங்க தேசத்தில் ஒரு பழமொழி வழங்குவதுண்டு. இதைப்போல் ஒழுக்கங்களையுடைய வகுப்பினர்கள் அனைவரும் ஸ்மிருத முறைப்படி சூத்திர ஜாதியைச் சேர்ந்தவர்களேயாவர்.
1. சனாதன தருமம், வைதிகம், மனுதர்மம், வருணாச்சிரம தருமம் ஆகிய சைவம், வைணவம், தருமம் என்பனவெல்லாம் பிராமண மதமென்றே கொள்ள வேண்டுவதன்றிப் பெயர் மாற்றத்தால் மயங்கவேண்டாம்.
2.பிறப்பினால் மனிதனாகவும், வைதிக ஸம்காரத்தாலும், ஒழுக்கங்களினாலும் ஜாதிகள் உண்டாவதால், எம்மனிதனுக்கும் சமஸ்காரஞ் செய்து ஒழுக்கங்களைப் பழக்கினால் ஜாதியுண்டாமென்றது கருத்தாகவும், பிற்காலத்தில் பொறாமையால் எழுதிய சுவடிகளில் சம்ஸ்காரம் செய்யாதே என்று எழுதியும், நல்லொழுக்கத்தில் பழகினால் தண்டித்தும் வந்த மதமே பிராமண மதமென்றறிய வேண்டும். நிற்க, அய்ந்தாவது ஜாதி கிடையாது என்று இதில் கூறவும் 180 ஜாதி என்கிறது எசுர்வேதம்.
ஆதலால், எவ்வளவு உயர்ந்த ஜாதியென்று தன்னை மதித்துக் கொண்டாலும் வேதவிதிப்படி உபநயனமில்லாத வர்கள் யாவரும், இந்த நான்காவது ஜாதியிலேயே கட்டுண்டு கிடக்கிறார்கள். புலையர், சான்றார், செட்டியார், பிள்ளை எனத் தங்களை உயர்வுப்படுத்திக் கூறிக்கொண்டு, ஒருவரோ டொருவர் கலக்காமல் நூல் முறையும் தெரியாமல், நம்மவர்கள் சண்டை போட்டுக்கொண்டு, வருவது பார்ப்பனருக்கு நன்மையும் நம்மவருக்குள் தீமையும்தான் பயக்கம். தவிரவும் அய்ரோப்பியர், அமெரிக்கர், ஜப்பானியர், அராபியர், சைனாக்காரர் முதலிய பலதிறப்பட்ட மனிதர்களும் பார்ப்பனர் பார்வைக்குச் சூத்திரன் என்ற வார்த்தைக்கு இடங்கொடுப்ப தில்லை. பார்ப்பனர் தங்களுக்கு இடையூறு நேராவண்ணம், ஒரு ஜாதியாருக்குள்ளேயே இவ்வளவு அதிகமான வேற்றுமையை உண்டாக்கி, அதை அழியாமல் நிலைநிறுத்திக் கொண்டு வருவதால் அவர்களுக்கு மிகுந்த நன்மையுண்டு. ஆனால், இந்த வேற்றுமைகளைப்பற்றி அவர்கள் ஒன்றும் கூறமாட்டார்கள். இப்போது பலவிடங்களிலும் நாடார்களுக்கும், நாயக்கமார்களுக்கும் யுத்தம். புலையர்களுக்கும் ஏனைய வகுப்பினருக்கும் சண்டை. மலையாளத்தில் வைக்கத்தில் நடந்த சத்தியாகிரகம் மற்றும் பலவிடங்களிலும் மண்டை உடைபடுதல் ஆகிய இவைகளெல்லாம் இவ்வேற்றுமையின் பயனென்று நம்மவர்கள் நன்கு யூகித்து உணர வேண்டும். இதனால் நம்மை வஞ்சிக்கிற பார்ப்பனர்கள் ஜெயமடைகிறார் களென்றும், நாம் தோல்வியடைகிறோமென்றும் நன்கு விளங்குகிறன்றோ? வேத முறைப்படி சம்ஸ்காரமில்லாத வர்களைச் சூத்திரர்கள் என்று பார்ப்பனர்கள் கூறும் சொற்படியே நாமும் கூறுகிறோமேயல்லாது, தாழ்மைப்படுத்திக் கூறுவது எமது கருத்தன்று.
சம்ஸ்காரமில்லாதவர்களும் சூத்திரர்களே என்று பார்ப்பனரும் அவர்களின் சமய நூற்களும் கூறினும், பார்ப்பன சமயத்தைப் பின்பற்றி யொழுகுவோர் யாரோ அவர்களைத்தான் இதனால் ஏற்படும் தீமைகள் சாரும். 1அதினின்றும் ஒழிந்தவுடன், ஜாதிச்சங்கிலி அறுபட்டுப் போவதால், அத்தகைய தன் மதிப்புள்ள ஒரு மனிதனைப் பார்த்து, நீ சூத்திரனாகப் பிறந்தமையால் எங்களுக்கு அடிமை; வீட்டுக்கு வந்து எனது கட்டளைப்படி நடக்கவேண்டும் என்று ஒரு பார்ப்பனன் கூறத்துணிவானோ? எவனேனும் இறுமாந்து மதிப்பைக் கெடுக்கக்கூடிய வார்த்தை யாதேனும் கூறுவானாயின், அக்கணமே பிறரால் நையப் புடைக்கப்படுவதோடு,
1. கிறிஸ்துக்கள், முகம்மதியர்கள், புத்தர்கள் முதலியோர்.
2கிரிமினல் சட்டப்படி தண்டனையும் அடைவானென்பது திண்ணம். ஆனால், பார்ப்பனரல்லாத ஓர் இந்து முன்சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியதுதானே, அதனாலன்றோ வைக்கத்தில் பொதுவழியில் நடக்க உரிமை வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக்கொண்டும் பயன்படாது, ஓராண்டு காலமாய்க் கடுந்தவம் புரிகின்ற பார்ப்பனரல்லாத இந்து சகோதரர்கள் கிறிஸ்துவையோ முகம்மது நபியையோ சரணமடைந்தால், அடுத்த நிமிஷத்திலேயே இரத்தம் ஒழுகுகின்ற மாமிசத்தைக் கையில் தாங்கிக் கொண்டு எந்தப் பொதுவழியிலும் தடையின்றிச் செல்லும் உரிமையுடையவர் களாகின்றார்கள். இது ஜாதிச்சங்கிலி அறுந்து போனதனா லென்றே உணரவேண்டும். இந்துச் சமயத்தைத் தங்கள் சமயமாக ஒப்புக்கொள்ளும் பார்ப்பனரல்லாதாரைப் பார்ப்பனர்கள் தஸ்யு, தாஸன் 3விருஷலன் என்றும் மற்றும் இழிவாகக் கூறுவதிலும் இதினின்றும் விலகியவர்களைத் துரை (அரசன்), சாயபு (பிரபு) என்றும் அழைத்து உபசரிப்பதிலும் என்ன ஆச்சரியமிருக்கிறது?
இனி, ஒவ்வொரு வருணங்களையும் அவர்களின் ஒழுக்கங்களையும் பற்றிக் கூறுவோம். பார்ப்பனன் யாவன்? என்னும் வினாவிற்குப் பார்ப்பனியின் வயிற்றிற் பிறந்தவன் என்று மனுஸ்மிருதி முதலிய தரும சாஸ்திரமுறைப்படி விடை இப்படியே நடைபெறுவதையும் பார்க்கிறோம் அல்லவா? இஃதன்றி வேறு வகையாகவும் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு:-
சமோதமஸ்தப: சௌசம்
க்ஷாந் திராஜவமேவச
ஜ்ஞானம் விஞ்ஞானம் மாஸ்திக்யம்
ப்ராஹ்மம் கர்ம, ஸ்வபாவஜம்
(கீதை - அத்தியாயம் 18)
பொருள்: ஞானேந்திரியம், கருமேந்திரியங்களை அடக்குதல், சுத்தி, பொறுமை, நல்லொழுக்கம், சாஸ்திரஞானம், அனுபவஞானம் இவை பிராமணனது இயற்கைக் குணங்களாம். முன்சொன்ன மனுஸ்மிருதிக்கும் இதற்கும் இருக்கிற வேற்றுமை, வீட்டுச் சுரைக்காய்க்கும், ஏட்டுச் சுரைக்காய்க்கும் உள்ள வேற்றுமை போன்றதே.
-(தொடரும்
 ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1928 20 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை 29-11-2010

Sunday, November 28, 2010

ஞான சூரியன் - 9

விப்ரத்வேனது சூத்ரஸ்ய
ஜீவவதோஷ்- சதோதம
பொருள்: விப்பிரன் (பார்ப்பனன்) என்று சொல்லிக் கொண்டு உயிர் வாழுகின்ற சூத்திரன் எண்ணூறு (800) நிஷ்கங்களை (ஒருவகைப் பொன் நாணயம்) அபராதமாகக் செலுத்தக் கடவன் (யாக்ஞவல்கிய ஸ்மிருதியில்).
இவ்விதமாக வேலை செய்து கூலியைக்கூட அடையமுடியாதபடி கஷ்டப்பட்டுக் கொண்டு வநத சூத்திரர்கள் எங்ஙனம் உயர்ந்து வாழமுடியும்? இவர்கள் செய்கிற வேலையினால் பார்ப்பனர்கள் ஜீவனம் செய்து வந்ததாக மேற்கண்ட பிரமாண வாக்கியங்களாலும் விளங்குவதால், இவர்களின் முன்னேற்றத்தைப் பார்ப்பனர்கள் விரும்புவார்களா? மற்றும்,
ந சூத்ராய மதிம் தத்யாத்
நொச்சிரஷ்டம் நஹவிஷ்க்ருதம்
ந சாஸ்யோபதிசேத் தர்மம்
ந சாஸ்ய வ்ரதமாதிசேத்
பொருள்: சூத்திரனுக்குக் கல்வியைக் கற்பிக்கவும் யாக சேஷமாகிய அவிசை (எஞ்சிய உணவுப் பொருளை)க் கொடுக்கவும் கூடாது. தருமோபதேசத்தையும் பண்ணலாகாது; நோன்பு நோற்கும் முறையையும் சொல்லலாகாது.
இதைமீறிச் சூத்திரனுக்குப் பவுரோஹித்யம் (சிரார்த்தம் முதலியன நடத்துவது) செய்துவந்த பார்ப்பனர்களை மலையாளத்திலும், தமிழ் நாட்டிலுங் கூடச் சிலவிடத்துப் பந்தியில், போசனத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. இத்தகைய பார்ப்பனர்களுக்கு மலையாளத்தில இளையது எனப்பெயர். இதைப்போன்ற உதாரணங்கள் பலவுள. அவற்றுள் சிலவற்றைச் ஜாதி தருமத்தைக் கூறுமிடத்து விரிவாகக் கூறுவோம்.
இக்காரணத்தால், கருமத்தினால் பிராமணனாவதற்கு இந்து மதம் இடந்தரமாட்டாது. இக்காலத்துப் பிரிட்டிஷ் அரசாட்சியின் கருணையால் கல்விக்கு இடம் ஏற்பட்ட போதிலும், சங்கரலிங்கம் பிள்ளை, கிருஷ்ணசாமி முதலியார், கோவிந்தராஜுலு நாயுடு, சுப்பையா நாடார் முதலிய பட்டப் பெயர்கள் அணிந்துகொண்டிருக்கிற வகுப்பினர் எவ்வளவு வேதாந்தம் படித்த போதிலும் இந்தச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிற வரையில் இவர்கள் இந்துக்களேயாகையால், சமஸ்காரத்திற்கு அதிகாரம் இல்லை.சமஸ்காரு மில்லாததால், பிராமணத்தன்மையை அடையவும் மாட்டார்கள். யாவரும் சூத்திரர்களே (பிராமணனுக்கு அடிமையே). இதற்கும் மேற்கோள் காட்டுவோம்.
அனார்யமார்ய கர்மாணம்
ஆர்யம் சானார்யகர்மிணம்;
ஸம்ப்ரதார்யாப்ரவீத் தாதா,
நஸமௌ நாஸமாவிதி (மனுஸ்மிருதி)
பொருள்: 1ஆரியன் (பார்ப்பனன்) தொழிலைச் செய்கிற அனாரியன் (தமிழன்) ஆரியனும் ஆகப்பேவதில்லை. அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனு மாகமாட்டான். தொழிலினால் இவ்விருவர்களுக்கும் சமத்துவம் தோன்றினும், ஒரு ஜாதியான் மற்றொரு ஜாதியானாக முடியாதென்பது கருத்து.
ஆனால், ஜாதி வேற்றுமைகள், தொழில் வேற்றுமையால் தான் ஏற்பட்டன என்று சொல்லுகிறவர்களும் தாங்கள் பரம்பரையாகவே அடிமைகளாயிருப்பினும் சாணியில் புழுத்த புழுக்களில் சில தங்கள் இனத்தில் பலவற்றைத் தின்று தாங்கள் பலசாலிகள் என்று நடித்துக் கொண்டிருப்பது போல், இவர்களும் தங்களை உயர்ந்த ஜாதியாகச் சொல்லிக்கொண்டு பலரைத் தங்களினின்றும் தாழ்த்தி வந்ததோடு, மனிதப் பிறவியானது எத்தகைய பெருமை வாய்ந்த தென்பதைக் குறித்துக் தாங்களும் ஆராயாமல் பிறரையும் ஆராயவொட்டாமல் தடுத்தும் 1. ஆரியன் என்ற சொல் முற்காலத்தில் ஆரியமொழி பேசுவோரைக் குறித்திருந்தும், பிறகு ஒரு நாட்டாரைக் குறித்தும், பிற்காலத்தில் ஒரு ஜாதியாருக்கே உரியதாகவும் வழங்கி வருகின்றன. ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் எனத் தமிழ்மறை மிழற்றும். வருகிறார்கள். இதனால் இதுகாறும் யாதொரு நற்பயனும் அடையவில்லை. இனிமேலும் அடையவும் முடியாது. அன்றியும் நான்கு வேதங்களையும் படித்தவ னாயும் சிறந்த நல்லொழுக்க முடையவனாகவும் இருப்பினும், சூத்திரனே. எதிர்மறையாகப் பார்ப்பனன் எழுத்துவாசனை தெரியாத வனாயும், கொலை, களவு, கட்குடி, விபச்சாரம், பொய் பேசுதல் என்னும் இவை களையே தொழிலாக உடையவனாயிருப்பினும், அன்னான் பார்ப்பான் என்கிற ஒரே காரணத்தை முன்னிட்டுப் பந்தியில் உண்ணவும், தானம் வாங்கவும் சுவாமி என்று பிறரால் அழைக்கப்படவும் உரிமையுள்ளவனாக இருக்கின்றான். இப்படியே இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறதன்றோ? இக்காலத்தில் பிராமணனைப்போல் வேடம் போட்டுக் கொண்டு தவம், சந்நியாசம், பலருக்கு உபதேசம் புரிதல் இவை முதலிய தொழில்களை மேற்கொண்டு நடிப்பவரும் சிலர் உளர். இவர் அடையும் பயன் யாது,? இங்குமங்குமில்லாமல் அந்தரத்தி லிருப்பதேயாம். மனுவின் கொள்கைக்கு விரோதமாக ஆரிய சமாஜத்தினரால் சூத்திரர்கள் அடைந்துவரும் நன்மையைப் புராணங்களில் சொல்லப்படும் திரிசங்குவின் சுவர்க்கத் திற்கு ஒப்பிடலாம்.
தனக்கு ஏற்படுத்திய தொழிலை மீறி நடக்கிற சூத்திரனை அரசனானவன் ஆடு, மாடுகளைப்போல் நினைத்துச் 1சித்திரவதை செய்யவேண்டும். தங்கள் குலத்தொழிலை மீறுகிற வைசிய சூத்திரர்கள் இறந்தபின் மறுமையில் அடையவேண்டிய பயனை மனு கூறுவதையும் கேளுங்கள்.
2மைத்ராக்ஷ ஜ்யோதிக: ப்ரேதோ
வைஸ்யோ பவதிபூய புக்
கைலாச கஸ்ச யவதி சூத்ரோ
தர்மாத்ஸவ காச்யுத 1.
சரீரத்திலுள்ள அவயவங்களைச் சிறிது சிறிதாக அரிந்தெடுத்தும், உறுப்புகளில் ஆங்காங்கு ஆணியடித்தோ, மற்றெவ்விதமாகவோ பல நாள்கள் துன்புறுத்தி, முடிவில் உயிர் போக்குவதைச் சித்திரவதை என்பார்கள். ரோமன் காலத்தில் இக்கொள்கை போல நடந்ததால்தான் இயேசுநாதர் சித்திரவதை செய்யப்பட்டார்.
2. காசி முதலிய வடநாடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் தங்களைப் பிராமண, க்ஷத்திரியன், வைசியன் என்று கூறிக்கொண்டு துறவு பெற்றுக்கொண்டு வரும் பலரையும் இக்காலத்தில் காணலாம். இவர்கள் அறிவிருந்தவாறென்னே! தமிழ் நாட்டிற் பிறந்தும், தமிழ் மக்களால் வளர்க்கப்பட்டும், தமிழன் நாகரிகத்தினை உணராமல் ஆரியர்களுக்கு அடிமையென நினைத்துக் கொண்டு ஏனையோரை வெறுக்கின்றனர். இவர்களுக்கு நல்லறியுண்டாவதாக.
-(தொடரும்)
நன்றி:விடுதலை(28-11-2010)

Saturday, November 27, 2010

ஞானசூரியன் - 8

1.வேத முறையாகப் பதினாறு சமஸ்கார கருமங் களைச் செய்தவனே ஞானமுணர்த்துங் குருமூலமாக வேதாந்தம் கேட்க வேண்டுமென்பது விதி. இவ்விதி பிராமணரல்லாதாருக்குக் கிடையாது.
2. வைதிக தாந்திரிகச் சைவமென்ற பெயரிடுவதற்கு முன்னுள்ள தமிழ்நாட்டு முதியோர்களால் அனுஷ்டித்து வந்த சித்தர் கொள்கையையும் புத்தமதக் கொள்கையையும் ஒருவாறு ஒத்திருக்கும். அப்படியே; சமணக் கொள்கையும் என்றறிக
என்பது சொல்லாமலே விளங்கும். இன்னும் இந்நூல்களின் உட்கருத்துகளையும் ஆராய்வோம்.
பிரம்மதேவனுடைய ஒவ்வொரு அங்கத்தினின்றும் பிராமணன் முதலிய ஜாதிகள் உண்டாயின. அல்லது தயானந்த சரஸ்வதியின் கொள்கைப்படி இவ்வங் கங்களோடு, (முகம், தோள் முதலிய பாகங்களை மற்றோரிடத்தில் கூறுகிறோம். இப்போது இந்த மதக் கொள்கைப்படிக்கு ஏற்பட்டிருப்பது ஜாதித் தொழிலினாலா? பிறப்பினாலா? என்பதைக் குறித்து ஆராய்வதே கடமை. இங்ஙனம் ஆராய்ச்சி செய்யப் புகுங்கால், நினைவிற்கு வருகிற பிரமாண வாக்கியங்களாவன:-
சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம், குணகர்மவிபாகச. (பகவத் கீதை)
நான்கு வர்ணங்களும் என்னால் உண்டாக்கப் பட்டவைகள்; அதுவும் குணங்களினாலும், கருமங்களி னாலுமே வேறுபாடன்றி மற்றைய வேறுபாடு கிடையாது.
ஜன்மனா ஜாயதே சூத்ரா;
கர்மணா ஜாயதே த்விஜ (சங்கர விஜயம்)
பிறக்கும் போது எல்லோரும் சூத்திரர்களாகவும், கர்மங்களாகிய கர்ப்பாதானம், உபநயனம் முதலியவை களால் மறுபிறப்பினனாகவும் (விப்ரன்) ஆகிறான்.
இக்கருத்தின்படி, யாவனாயினும் நல்லொழுக்கத்துடன் இருப்பானேல், பிராமணனாகலாமென்றாய் விட்டது. பறையனானாலும், யாகாதி கர்மங்களை அனுஷ்டித்தால் பிராமணன்தானே? பார்ப்பனியின் வயிற்றில் பிறந்தவர் களாயினும், இழிதொழிலுடையவர் புலையருமாவார்.
ஆனால், இத்தகைய பிரமாண வாக்கியங்கள் (சிற்சில இடங்களில் காணுவன) நம்மவர்களை ஏமாற்றும் படிக்குள்ள அநேக தந்திரங்களுள் இது ஒருவகையேயாகும். இவ்வுண்மையானது இத்தகைய (சூத்திரனைப் பிராமண னாக்கத்தக்க) கருமங்கள் யாவை? என வினவி, விடை தெரிந்து கொள்ளும்போது வெளியாகும். அதாவது-
கர்ப்பாதானம் முதல் அந்தியேஷ்டி வரையிலும் உள்ள பதினாறு சமஸ்காரங்கள்; வேதம் ஓதுதல், சாகை கோத்திரம், சூத்திரம், ப்றவரான்ஹம், நித்திய கருமங்கள் இவைகள்தாம் பிராமணத் தன்மையை உண்டுபண்ணு வதற்கு அடிப்படையாயிருக்கின்றன.
அஷ்டவர்ஷம், ப்ராஹ்மணமுபனயீத, தமத்யாபயீத எட்டாவது ஆண்டில் பிராமணனுக்கு உபநயனம் செய்து கல்வி கற்பிக்கவேண்டும் எனத் தொடங்கிய இக்கருமங்களை விதிக்கின்ற வாக்கியங்களினால் ஜாதிப் பிராமணனுக்கும், ஜாதிப் பிராமணத்திக்கும் பிறந்த பிள்ளைதான் அதிகாரியென்பது வெளிப்படையாதலால், முன்சொன்ன சாதுர் வர்ணியம் முதலிய வாக்கியங் களும், இதைப்போல் காணப்படும் வேறு சில வாக்கியங் களும், மயக்கத் தகுந்த வாக்கியங்களே என்பது புலப்படுகிறது மற்றும், ஒவ்வொரு ஜாதியார்க்கும் தொழில்கள் இன்னின்னவை என்று விதித்துக் கீதையில் கூறுவதைக் கேளுங்கள்:
ஸ்ரேயான் ஸ்வதர்மோ விகுண
பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்
ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேய
பரதர்மே நிதனம் பயாவஹ
(பகவத்கீதை, அத்தியாயம் 3 - பாட்டு 35)
பொருள்: ஒரு ஜாதியான் மற்றொரு ஜாதியானுடைய தருமத்தை எவ்வளவு ஒழுக்கமாக நடத்தினாலும், அது நன்மையைப் பயக்காது. ஆதலால், ஒவ்வொரு ஜாதியானும் தத்தம் தொழிலை இயன்றவாறு செய்து முடிப்பதே சிறந்தது. தன் தொழிலைச் செய்யாவிடினும் அவ்வள வாகக் குற்றமில்லை. பிறன் தொழில் பயத்தை உண்டு பண்ணக்கூடியது. ஆதலால், அதைச் செய்யலாகாது.
இத்தகைய வாக்கியங்களினால் நம்மவர்கள் பார்ப்பனருக்கு விதித்துள்ள தொழிலைச் செய்யக் கூடாதென்பதும், மீறிச் செய்பவனைக் கொலை செய்து விடுவோம் என்பதும் பயத்தை உண்டு பண்ணக்கூடியது என்ற கீதா வாக்கியங்களாலும், இதைப்போன்ற வேறு பல வாக்கியங்களாலும் இதுவரையில் நடந்து வந்ததும், இப்போது நடக்கிறதுமான ஒழுக்க முறையாலும் வெளிப்படுகிறது. இது நிற்க,
மறுமைக்குரிய துறையில் முக்கியமான துறவிக்கு உரிமையுடையவன் யாவன்? என்று கீழ்க்காணும் வேதவாக்கியத்தையும், மனுவின் வசனத்தையும் கவனித்து அறிந்துகொள்ளுங்கள்.
ப்ராஜாபத்யாம் மிஷ்டிம் நிருப்ய,
தஸ்யா ஸர்வவேதசம்
ஹுத்வா ப்ராஹ்மண:
ப்ரவ்ர ஜேத் (சதபதப்ராஹ்மணம்)

ப்ராஜாபத்யாம் நிருப்யேஷ்டிம்
ஸர்வவேத ஸதக்ஷிணம்;
ஆத்மன்யக்னீ, ஸமாரோப்ய ப்ராஹ்மண;
ப்ரவ்ர ஜேத்கர் ஹாத் (மனு)
பொருள்:- தன் பொருளனைத்தும் தானம் செய்து நிறைவேற்றத்தக்க பிராஜாபத்ய யாகத்தைச் செய்து அதன் முடிவான அந்தியேஷ்டி ஹோமத்தில் குடுமி, பூணூல் இவைகளை நெருப்பிலிட்டும், பிறகு ஒன்றுமில்லாதவனாக ப்ராஹ்மணன் வீட்டைவிட்டு வெளியேறக்கடவன்.
இதற்கு ப்ராஹ்மணன் நீங்கலாக ஏனையோர் அதிகாரிகளல்லரே? இதோடும் நிற்கவில்லை. தன் தொழிலைச் செய்யாமல் வேறு தொழில் செய்தால், அரசன் கவனித்து அடக்க வேண்டும் என்ற மனுவின் வசனம் வருமாறு:
வைஸ்ய சூத்ரௌ ப்ரயத்நேந: ஸ்வானிகர்மாணி காரயேத் தௌ ஹியுதௌ ஸ்வக்ர்மப்ய: ப்லாவயே தாமிதம் ஜகத் (மனு)
பொருள்: வைசியனும், சூத்திரனும் தத்தம் தொழிலைச் செய்கின்றார்களா என்பதை அரசன் கவனித்துச் சரிவர ஒழுகச் செய்யவேண்டும். அவர்கள் தத்தம் தொழிலைச் செய்யாவிட்டால், உலகம் வறுமையில் முழுகிப் போகுமன்றோ! (தொடரும்)

ஞான சூரியன் - 7

சந்தோக்கியோப நிஷத்தில், பாலாகி என்ற பிராமணனுக் கும், அஜாத சத்துரு என்னும் அரசனுக்கும் நடந்த வாக்குவாதத்தில், இந்த வித்தையை இதுவரை க்ஷத்திரியர்களே கையாண்டு வந்தார்கள். பிராமணர் களுக்குக் கிடைக்கவில்லை; ஆயினும், கருணையோடு உனக்குச் சொல்லுகிறேன் என்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன. இதன் பிறகே அரசர்களையும், ஏனை யோரையும் பலவகையிலும் அடக்கியாளத் தலைப்பட்டார் கள். அடக்கி வந்த முடிவில் பிரம்மவித்தை என்று பெயரிட்டுச் சங்கராச்சாரியாருக்கு, ஜெகத்குரு வென்று பெயரிட்டு யாவரையும் மயக்கி வருகின்றார்கள்.
மேலும், பகவான் புத்தரிடமிருந்தும் பல உயர்ந்த தத்துவங்கள் (அத்துவைதம்) உலகத்தில் வெளிப்பட்டன. இவரும் வருணமுறைப்படி அரச குடும்பத்தில் பிறந்தவ ரேயாவார். ஆயினும் இவருடைய கருத்துகள் பார்ப்பனர் களின் கருத்துக்கு ஒவ்வாதன. ஜாதியும் அந்தந்தச் ஜாதிக்கு என வகுக்கப் பெற்ற வெவ்வேறு ஒழுக்கங்களும் பொய்யுரைகள் எனவும், மனிதராகப் பிறந்த எல்லோரும் மோட்சம் அடைய அதிகாரிகள் என்றும், இதற்குக் கொலை முதலிய பாதகங்கள் கூடாதென்றும், பஞ்சமா பாதகர்களாகிய மேற்கூறிய சொர்க்கவாசல் திறவுகோல் காரர்களின் (key to the Heaven) தயவை எதிர்பார்க்க வேண்டியதில்லையென்றும் அவர் வெளிப்படுத்தியதனால், பார்ப்பனனின் சுயநலம் நாசமடைந்து, இவற்றோடு இவர்களது சொர்க்கமும் இந்திரனும், பிரார்த்தனைகளும் கண்டிக்கப்பட்டுப் போயின. அத்தருணத்தில் பார்ப்பனர் களுக்கு உண்டான வருத்தம் இத்தன்மையது என எங் ஙனம் எடுத்துக்கூறவியலும்? பவுத்தன் என்கிற சொல் காதில் விழுந்தாலே, இக்காலத்திய மக்களுக்குக்கூட வெறுப்பும், எடுத்துரைக்க முடியாத கோபமும் உண்டா கிறது! பவுத்தன் என்ற சொல்லிற்குப் புத்தனுடைய கொள்கையைப் பின்பற்றி ஒழுகுவோன் என்று மட்டுமே பொருளாயினும், பொதுமக்கள் வெறுப்பானது அக்காலந் தொடங்கிப் பார்ப்பனர்கள் செய்து வருகிற சூழ்ச்சியால் எழுந்த மதிமயக்கத்தினாலேயாம். கருணாமூர்த்தியான பகவான் புத்தர் மக்களின் தாழ்ந்த நிலையைக் கண்டு இரங்கிப் பேரின்ப நிலையைத் தன் அனுபவத்தாற் கண்டுவெளியிட்டார். அவ்வழியில் செல்ல விரும்பினவர் களையும் ஏமாற்றிப் பழைய நரகக் குழியிலே தள்ளி விட்டவர்கள் பார்ப்பனர்களே. தங்கள் விருப்பத்திற்குக் கீழ்ப்படியாத பலரையும் கொன்றும் கொலை செய்வித்தும் ஒடுக்கினார்கள். ஆயினும், பழைய பாட்டிக் கதைகளையே திருப்பித், திருப்பிப் பாடி வருவதைக் கேட்டு அமைதி அடையாத பொதுமக்களை மகிழ்வுறச் செய்யவும் தங்கள் சுயநலம் கெட்டுப் போகாமற் பாதுகாக்கவும் எண்ணிய போலிப் பார்ப்பனர்கள், புத்த தேவனுடைய தத்துவங்களை (பவுத்தர்களை அடிமைகளைப்போல் காட்டி) கிரகித்துக் கொண்டு, இவைகள் வேதத்தின் முடிவில் உள்ளவை; இவைதான் முக்தி வழியை விளக்கிக் காட்டுவன என்பன வாகிய பொய்யுரைகளைப் பகர்ந்து உபநிட தங்கள் என்ற பெயருடன் புதிதாக எழுதி வேதத்தில் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், ஜாதி வருணாச்சிரமம், அதன் ஒழுக்கங்கள், யாகங்கள் இவை யாவும் மோட்ச வழி களன்று எனக் கூறினால், தங்களுடைய வருமானமும், பெருமையும் போய்விடுமே; இதற்கு என்ன செய்வதென்று யோசித்துக் கடைசியில் ஒரு சூழ்ச்சியும் செய்யலாயினர் அத்தந்திரமுறை பின்வருமாறு:
த்வே வித்யே வேதிதவ்யே அபார பராசேதி;
தத்ரா பார ரிக்வேதா, யஜுர் வேதோ: ஸிம்வேதோ,
தர்வ வேத :சிக்ஷா, கல்போ வியாகரணம், நிருக்தம்;
சந்தஸ் ஜ்யோதி ஷமிதி, அதபரா யயா ததக்ஷா
மதிகம்யதே (முண்டகோபநிஷத்து)
வித்தையாவன பரை, அபரையென இருவகைப்படும். இவற்றுள், மோட்ச மார்க்கத்தை உணர்த்துகிற ஆத்ம வித்தை பரவித்தையும், வேதாகமங்கள் அபரவித்தையு மாம்.
இப்பிரமாணத்தால் அச்சூழ்ச்சியை அறிந்துகொள்க.
இவ்விரு வித்தைகளுள் ஜாதி தருமமாதிகள் இல்லாத பரவித்தையைப் பின்பற்றுவோன் ஊரில் இருக்கலாகாது; உடனே காட்டிற்குச் சென்று விடவேண்டும். லவுகிகர்கள் (உலகப்பற்றுடையவர்கள்) அபரவித்தையைப் பின்பற்றி அதன்படி வைதிகத் தருமமும் அதன்படி ஜாதியையும் கட்டாயம் ஒப்புக்கொண்டே தீரவேண்டும். இம்முறையி னால் பூதேவத் தன்மையும் பிராமணத் தன்மையும் கெடாமல் இருக்குமென்பதே கருத்து. ஆயினும், சூத்திரன் பரவித்தையைப் பின்பற்றி உயர்ந்த நிலையை அடையக் கூடாதென்ற கொள்கையோடு, அதற்கு வேண்டிய பொய்யுரைகளை வேதத்திலும் ஸ்மிருதியிலும் எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். மேலும் அபரவித்தையை அனுச ரித்து அதன்படிக்குள்ள கருமங்களைச் செய்யாதவனுக்குப் பரவித்தையில் அதிகாரமில்லை. உபநயனமில்லாத வனுக்குக் கல்வி கற்கவும், நல்லோர்களின் சேர்க்கைக்கும் உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஆகையால் வியாவ ஹாரிக வித்தைக்கு உரியவன் யாவனோ, அவனே பர மார்த்திக வித்தைக்கும் அதிகாரியாவான் என்றும், கூறியிருக்கின்றது. சங்கராச்சாரியார் அபர வித்தையை வியாவஹாரிக வித்தை என்று;, பரவித்தையைப் பரமார்த்திக வித்தை என்றும் கூறுகிறார். இக்காலம் வரையிலும் இந்துமதம் இதே நிலையில்தான் இருந்து வருகிறது. தமிழர்கள் இன்னும் இச்சூழ்ச்சியினை உணர்ந்து கொள்ளாதது விந்தையே.
இவ்விதமாகச் சுயநலத்தைக் காப்பாற்றும் பொருட்டு உண்மைக் கருத்துகளைப் பொய்ப் பெட்டகத்துள் மூடி வைத்திருப்பதால்தான் வேதாந்தக்கருத்துகள்1 அனுபவத் திற்கு வராமல் சொல்லளவிலேயே இருக்கின்றன. இந்த வேதாந்த வாக்கியங்களைப் புத்தமத நூல்களோடு சேர்ந்து ஆராய்ந்து பார்த்தால், குற்றமற்றதும், முன் னுக்குப்பின் முரணின்றிச் சகல சம்மதமுமான ஒரு தத்துவ சாஸ்திரத்திலிருந்து எடுத்து, அதன் பழைய உருவத்தைச் சிதைத்து அனுஷ்டிக்க முடியாதபடி செய்துள்ளார்கள் என்பது2 வெளிப்படும்.
அபர வித்தையில் இம்மைக்குரிய விஷயங்கள் மட்டுமே அடங்கியிருக்கின்றனவென்று முன்னரே கூறியுள்ளோம். அனைச் சற்று ஆராய்வோம். ஜாதிப் பிரிவினை, அந்தந்தச் ஜாதியாரின் ஒழுக்க முறை, அவரவர்களுக்குரிய சடங்குகள் முதலியன தரும சாஸ்திரங்களில் கூறப்பெற்றி ருக்கின்றன. வேதங்கள் எல்லாம் யாகத்திற்கு உபயோக முள்ள விஷயங்களையே அதிகமாகக் கூறுகின்றன.
ஜாதிப் பிரிவினைகளைச் சொல்லுமிடத்து, அந்தந்தச் ஜாதியாரின் உயர்வுதாழ்வுகளை அனுசரித்து, இம்மைக் கும் மறுமைக்குமுரிய எல்லாச் சடங்குகளும் சொல்லப் பட்டிருக்கின்றன. இவையனைத்தையும் குறைவற அனுஷ்டிப்பவன் தேவலோகத்தை அடைவான். மோட்சம் என்று ஒன்றிருப்பதாக அக்காலத்தார் உணர்திருக்க மாட்டாராகையால், அவ்வகையில் இவர்களின் அறிவு எவ்வளவு தூரம் முயற்சியடைந்திருந்தது
(தொடரும்)
நன்றி:விடுதலை 26-11-2010

Thursday, November 25, 2010

ஞான சூரியன் - 6

உரை நூற்களாகையால், இந்து மதத்தின் உண்மைக் கருத்துகள் ஸ்மிருதிகளால் அறியமுடியும். இந்நூற்களின் கொள்கைகளை ஆசாரம், விவகாரம் என இரண்டாகப் பிரிக்கலாம். முதற்பிரிவில் வருணாச்சிரம தருமங்கள், உணவின் பாகுபாடுகள், பதார்த்தங்களைச் சுத்தி செய்யும் முறைகள். தானம், சிரார்த்தம், பிராயச்சித்தம் இவைகள் அடங்கியுள்ளன. விவகாரமோ அரசியல் முறைகளாதலால், சமய முறையில் ஆசாரத்தைப் போல் அவ்வளவு பொறுப்பில்லை.
கவுதம, நாரதசங்க, பிரகஸ்பதி, யாக்ஞவல்கியர், ஸ்வாயம்பு, ஸ்வாயம்புவ முதலியஅநேக ரிஷிகள் தரும நூற்களை இயற்றியுள்ளார்கள். இவைகளில் மனுஸ் மிருதிதான் சிறந்தது. சாந்தோக்கிய பிரமாணத்திலும் வேறு பல நூற்களிலும் இதை (மனு)ப் புகழ்ந்து கூறியிருக்கிறது. அவைகளில் சில வருமாறு:
(1மனுர்வையத் கிஞ்சிதவதத் பேஷஜம் (மனுவின் வாக்கு, நோயாளிக்கு மருந்துபோல மனிதனுக்கு இதத்தைக் கொடுக்கும். ஆதலால், சிரேஷ்டமன பிரமாணமாம். இது சாந்தோக்கிய பிரமாணத்தில் உள்ளது.) மற்றும்:-
வேதார்த்தோப நிபந்ஸ்முருத்வாத்
ப்ராதான்யம் ஹிமனோ: ஸ்ம்தரும்:
மன்வர்த்த விபரீதாது
யாஸ்மிருதி; ஸாநசஸ்யதே
நானாசாஸ்த்ராணி சோபந்தே
தர்க்கவ்யா கரணானிச:
தர்மார்த்த மோக்ஷோபதேஷ்டா
மனுர்யாவந்நத் ருஸ்யதே
பொருள்: மனுவின் வாக்கு வேதத்தின் உரையா தலால், வேதம் போலவே பிரமாணமாம். மனுஸ் மிருதிக்கு முரண்பட்ட ஸ்மிருதிகள் ஏதேனுமுளதேல் அவை பிரமாணமாகா. தர்க்கம் வியாகரணம் முதலிய சாஸ்திரங்களும் இவ்வாறே (பிரகஸ்பதி 2யாகமத்தில் 3நிரவ்யாஹ வசனம்)
இக்காரணங்களைக் கொண்டு இந்நூலில் பிரமாணவாக்கியங்கள் பெரும்பாலும் மனு ஸ்மிருதி யிலிருந்தே எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.
1. மனு: மந்திரம் வேதமென்பது இக்காலத்து ஆசிரியர்களின் உரை. இது முற்காலத்திய கருத்துக்கு ஒத்து வராததால், தள்ளத்தக்கதேயாகும்.
2. ஈண்டு ஆகமம் என்ற சொல் தரும நூலுக்காம்.
3. நிரவ்யாஹர் என்பார் ஓர் இருடி.
இரண்டாம் அத்தியாயம்
வைதிக கால (வேதம் எழுதிய கால)த்தில் விண் ணுலக வாழ்க்கையையே முத்தி என்று எண்ணப்பட் டிருந்தது. ஆயினும், அங்குள்ளவர்களாகிய தேவர் களுக்குள்ளும் உயர்வு தாழ்வுகளும் காமம், வெகுளி மயக்கங்களும் இருந்தனவாக வேதத்திலேயே கூறப் பட்டுள்ளதால், சுவர்க்கத்தில் துக்கமில்லை என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. அத்தகைய சுவர்க் கத்தை யாகத்தினால்தான் அடையமுடியும். சுவர்க் கத்தை அடைவதற்குக் காரணமாகிய யாகத்தை நடத்துவிப்போர்கள் புரோகிதர்களாகிய பார்ப்பனர்களே. ஆதலால், சுவர்க்கத்தின் திறவுகோல் அவர்களிடத் தில்தான் இருக்கிறது என்று நம் மக்கள் பெரிதும் மயங்கினார்கள். அதுபற்றியே ஜாதி வேற்றுமையும் உண்டாயிற்று,. மேலும், புரோகிதர்களுக்குப் பூதேவ ரென்ற பட்டத்தைச் சாற்றிப் பொதுமக்கள் வழிபட்டு வந்ததும், வருவதும் இவ்வுரிமை (சுவர்க்கம் அடைவிக்கும் உரிமை) பற்றியேயாகும்.
வரவர மக்களுக்கு அறிவு வளர்ந்து வரவே, ஆத்மா வைப்பற்றிய கவலையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதன் பயனாகத்தான் உபநிடதங்கள் பல ஏற்பட்டன. அவற்றுள் பெரும்பகுதியும் பகவான் கவுதம புத்தருக்குப் பிறகே உண்டாயினவென்றும் முன்னரே கூறியுள்ளோம். ஏதோ ஒன்றிரண்டு கவுதம புத்தருக்கு முன்பே இருந்தன என்று வைத்துக்கொள் வோமாயினும், அவைகளை எழுதியவர்களும் பார்ப்பனராக மாட்டார்கள். காரணம் யாதோவெனில், இவர்கள் தங்கள் தேவத் தன்மையைப் போக்கடித்துக் கொள்ள மாட்டார் களன்றோ? இதனால் மற்றைய வருணத்தாரில் உயர்ந்த நிலையிலிருந்த அறிவினால் முதிர்ந்த அரசர்களே (க்ஷத்திரியர்) உபநிட தங்களை இயற்றியவர்கள். அங்ஙனம் எழுதியவைகளை மிகவும் மறைபொருளா கக் காத்தும் வந்திருக்கிறார்கள். 1உபநிஷத்து என்ற சொல் லிற்கே (ரகசியம்) மறைத்து வைக்கத்தக்கது என்று பொருள்.
சந்தோக்கியோபநிஷத்தில், பாலாகி என்ற பிரா மணனுக்கும், அஜாத சத்துரு என்னும் அரசனுக்கும் நடந்த வாக்குவாதத்தில், இந்த வித்தையை இதுவரை க்ஷத்திரியர்களே கையாண்டு வந்தார்கள். பிராமணர் களுக்குக் கிடைக்கவில்லை; ஆயினும், கருணையோடு உனக்குச் சொல்லுகிறேன் என்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன. இதன் பிறகே அரசர்களையும், ஏனையோரையும் பலவகையிலும் அடக்கியாளத் தலைப் பட்டார்கள். அடக்கி வந்த முடிவில் பிரம்மவித்தை என்று பெயரிட்டுச் சங்கராச்சாரியாருக்கு, ஜெகத்குரு வென்று பெயரிட்டு யாவரையும் மயக்கி வருகின்றார்கள்.
1. உபநிஷத்களுக்கு இராஜ வித்தை என்று மற்றொரு பெயரும் உள்ளதே இதற்குச் சான்று பகரும்.
(தொடரும்)
நன்றி:விடுதலை 25-11-2010

Wednesday, November 24, 2010

ஞானசூரியன் - 5

வேதம் அபவ்ருஹஷேயம் (புருஷனால் செய்யப் படாதது) ஆகையால், குற்றமற்றதும் மற்றொரு பிரமாண நூலின் உதவியின்றிச் சுதந்திரமாகவும் இருப்பது என்பது வைதிகர்களுடைய கொள்கை. மேலும், எல்லா நூற்களும், ஒழுக்கங்களும் இதற்குக் கீழ்ப்படிந்தே இருக்கவேண்டும் என்பதாகக் கவுதம ஸ்மிருதியின் முதலில் வேதோ தர்மமூலம் என்ற சூத்திரத்தால் முடிவு கூறப்பட்டிருக்கிறது. வேத வாக்கியத்திற்கு முரண்படாத ஸ்மிருதி வாக்கியமும், ஸ்மிருதிக்கு முரண்படாத ஒழுக்கங்களும் பிரமாணங் களாகும்.
தத்விதாம்ச ஸ்மரணசீலே என்னும் சூத்திரத்தால் இக்கருத்தைக் கவுதமர் வெளியிட்டுள்ளார். ஆனால், இரண்டு, ஸ்மிருதிவாக்கியங்கள் ஒரு விஷயத்தைக் குறித்துக் கூறும்போது, ஒன்றுக்கொன்று முரண்பட்டால், இரண்டு பிரமாணங்களே இத்தருணத்தில் விகற்பமே கொள்ளத் தக்கது. சுருக்கமாகக் கூறுங்கால், மேற்சொன்ன ஸம்ஹிதை, பிரமாணம், உபநிஷத்துகள் இவைகளடங்கிய வேதம் தானே பிரமாணமும், தரும நூல் வேதத்தைக் கருதிய பிரமாணமும் இவைகளுக்கு முரண்படாத ஒழுக்கங் களாகும். ஆனால், வேத ஸ்மிருதிகளை ஒத்துக் கொள்ளாமல், இந்நூற்களுக்கு விரோதமான வேறொரு வசனம் யுக்திக்குப் பொருத்தமாய் இருந்தாலும் பிரமாண மென்று சொல்வது பெரிய குற்றமாகும் என்பது:
ஸ்ருதி ஸ்துவேதோவிஜ்ஞேயோ
தர்ம சஸ்த்ரம்து வைஸம்ருதி
தேஸர் வார்த்தேஷ்வமீமாம்
ஸ்யேதாப்யாம் தர்மோவிநிச்சித:
யோவமன்யேததேமூலே ஹேது
சாஸ்தராஸ் ரயாந்நர;
ஸஸாது பிர்பஹிஷ்கார்
யோ நாஸ்திகோ வேதநிந்தக - மனு
பொருள்: வேதங்களும், ஸ்மிருதிகளும் தருமத்திற்கு இருப்பிடங்களா தலால் இவைகளை யுக்தி வாயிலாக எவனாவது கண்டிக்க முயன்றால், அத்தகைய வேத நிந்தகனான நாஸ்திகனை நல்லோர்கள் ஊரைவிட்டுத் துரத்திடவேண்டும் என்றும் இதனால் அறியக் கிடக்கின்றது.
இவ்வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் சொல்லப்படுவது தான் ஹிந்து சமயம் இந்நூற்களில் சொல்லுகிறபடி ஒழுகுகின்ற மனிதன், எல்லாவகையிலும் முன்னேற்ற மடைவான் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், வேதத்திற்கு அதிகாரமில்லாத தமிழ்மக்கள் தங்களை இந்துக்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக்கொண்டும் நினைத்துக் கொண்டும் இருந்தாலும், இவர்களுக்கு வேத ஸ்மிருதிகளில் சற்றேனும் உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஆயினும், பார்ப்பனர்களும், இவர்களை (பார்ப்பனல்லாதாரை) இந்துக்கள் என்று சொல்லுகிறார்களே எனின், இது தங்கள் சுயநலத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பார்ப்பனரல்லாதாரை என்றென்றைக்கும் அடிமைப் படுகுழியிலேயே அமிழ்த்தி வைக்க வேண்டுமென்ற மோசக்கருத்தை உள்ளடக்கிக் கொண்டு மயக்குகின்ற பசப்பு வார்த்தை என்றறிந்து கொள்க.
சமய நூற்கள் இம்மைக்குரிய உயர்வுக்கும், மோட்சத் திற்கும் வழிகாட்டிகளன்றோ? ஆனால், இந்துக்களின் மதநூல்களில் மிகப் பழமையான இருக்கு வேதத்தில் மறுமையைப் பற்றிக் கூறுகிற பாகம் மிகக் குறைவே. இயற்கைப் பொருள்களை மேன்மைப்படுத்தித் தேவர் களாகக் கூறுவதும், அங்ஙனம் புகழ்ந்து கூறப்பட்ட தேவர்களிடம் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதும் இதிலடங்கியிருக்கின்றன. இத்தகைய தேவர்களுக்கு இருப்பிடம் சுவர்க்கமும், அதை ஆட்சி புரிபவன் இந்திரனு மாவான். இதை எழுதி வைத்தவர் விரும்புகிற பொருள் களைத் தேவர்களும் விரும்புகிறார்கள். இவர்கள் வெறுக்கிறவர்களைத் தேவர்களும் வெறுக்கிறார்கள். (இதனால், பார்ப்பனர்கள் தங்களையே தேவர்களாக நினைத்துள்ளார்கள் என்று எண்ண இடந்தருகிறது. பூசுரர் என்ற பெயரும் இதற்குச் சான்றாகும்.) அருந்தல், பொருந்தல் முதலியவைகளிலும், பொழுதைப் போக்கும் மற்ற விளையாட்டுகளிலும், இவர்களுக்கும் தேவர்களுக்கும் வேற்றுமை இல்லை. இறந்து போகிற புண்ணியவான்கள் உயிருடனிருக்கும்போது, இங்குத் தேவர்களுக்குக் கொடுத்த சோமம், மாமிசம் (கள்ளு, இறைச்சி) இவைகளின் உயர்வு தாழ்வுக்கேற்றவாறு அங்கும் (சுவர்க்கத்திலும்) சோமம், அமிர்தம், அழகிய பெண்கள் இவைகளை அனுபவிப் பார்கள். புண்ணியம் முடிந்தவுடன் பழையபடியே பூமியில் பிறக்கின்றார்கள். இதுவே இருக்கு வேதத்தில் சொல்லப்பட்ட இன்பநிலையின் சுருக்கம். இத்தோத்திரங்களைப் பார்க்கிற வர்களுக்கு, அக்காலத்தில் இருந்த கொடியவர்களின் எண்ணங்கள் நன்கு புலப்படும். இந்நாட்டின் பழைய குடிகளாகிய நம்மவர்களை, இவர்கள் பலவிதத்திலும் துன்புறுத்தி வந்ததும், தங்களுக்கு உதவி செய்யும்படி இந்திரனையும் ஏனைய தேவர்களையும், அழைத்திருப்பதும் ஆகிய செய்திகளே அத்தோத்திரங்களில் மலிந்து கிடக் கின்றன.
இருக்கு வேதத்திலுள்ள மந்திரங்களையே வேள்வி புரியுங் காலங்களில், ஓதவேண்டிய முறைப்படிக்குக் கோவை செய்ததே யஜுர் வேதமாகும். அன்றியும், அத்வர்யு என்கிற ஓர் இனத்தாரின் (யாகத்தில் சம்பந்தப் பட்ட புரோகிதர்களுள் ஒரு வகையினர்) உபயோகத்திற் குள்ள சில நியமங்களும் இதில் அடங்கி இருக்கின்றன. ஸாம என்ற சொல்லிற்கே பாட்டு என்று பொருள். இதில் உத்காதா என்கிற புரோகிதக் கூட்டத்தாரால் யாக காலங்களில் பாடும் பொருட்டுப் பல ரிக்கு மந்திரங்கள் தொகுக்கப்பட்டிருக் கின்றன.
இருக்கு வேதம் போலவே, பல தோத்திரங்களும் அடங்கிய 1அதர்வ ஸம்ஹிதையில் கர்ம சம்பந்தமில்லாத தனால், மற்ற மூன்று வேதங்களோடு சேராமல் தனித்து நிற்கிறது. வேதத்தின் பயன் சுவர்ககாதி சாதனங்களான யாகம் முதலியவைகளில் மனிதர்களை ஏவுவதும், கருமங்களைச் செய்யுங்கால், பொருளை நினைப்பூட்டு வதைக் கொண்டு மந்திரங்கள் பயனையுடையன வென்றும் வைதிகர்கள் எண்ணுகிறார்கள். பிரமாணக் கிரந்தங்கள் அனைத்தும் கருமங்கள் செய்யும் முறைகளைக் கூறு கின்றன. புரோகிதர்களின் சொத்தாகிய இந்நூல் கருமங் களை விளக்கிக் காட்டுவதேயாகும். இத்துடன் முடி வடையாது, அனந்தாவை வேதா (வேதங்கள் எண் ணிறந்தன) அவைகளில் இப்போது கிடைத்துள்ளவைகள் தவிர, மற்றவை கற்றலும், கற்பித்தலும் இன்றி அறியப்படாமற் போயின. இவைகளின் (பல வேதங்களின்) பொருட்களை அறிந்த ரிஷிகள், பிறருக்கும் பயன்படுமாறு அவைகளை வெளியிட்டார்கள். அவைகளே ஸ்மிருதிகள். ஆதலால், ஸ்மிருதிகள் வேதத்தின் உரை நூற்களாம். ஸ்மிருதிகளில் சொல்லப்பட்ட எல்லா விதிகளும் வேதத்தில் இல்லை. ஆயினும், வேத சம்பந்தங்களும் பிரமாணங் களுமாகையால், அவைகளைப் பின்பற்றியே மனிதன் ஒழுக வேண்டுமென்பது வைதிகர் (ஆரியர்)களின் முடிவு.
1. இஃது பிற்காலத்தியதெனக் கருதப்படுகிறது. காரணம் வேதமத்ரயீ என்ற வசனத்தாலென்க. 
நன்றி:விடுதலை 24-11-2010