Sunday, February 27, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917-ஆம் ஆண்டு செயல்பாடுகள்


தொடர் கட்டுரை
பார்ப்பனர் அல்லாத மக்களின் பிரகடனம் –
பொது வேலை வாய்ப்புகள்

ராஜதானியின் பொதுப் பணிகளில் பார்ப்பனர் களும், பார்ப்பனர் அல்லாதவர்களும் இருந்த நிலை பற்றி விரிவாக பொதுப் பணி ஆணையத்தின் முன் 1913 ஆம் ஆண்டில், தற்போது சென்னை நிருவாகக் கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும்  மதிப்பிற்குரிய சர் அலெக் சாண்டர் கார்டியூ சாட்சியம் அளித்தார்.  அவர் ஒன்றும் பார்ப்பனர் அல்லாத வர்க்கு ஆதர வானவர் அல்ல. இந்திய சிவில் பணிக்கான தேர்வுகளை ஒரே நேரத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடத்தினால், ஒரு சிறிய கட்டுப்பாடு மிகுந்த  ஜாதியான பார்ப்பனர்கள் இந்தப் பணியை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்பதை எடுத்துக் காட்டும் நோக்கத்துடன் மட்டுமே அவர் இவ்வாறு சாட்சியம் அளித்தார்.  1892-க்கும் 1904-க்கும் இடையே நடத்தப்பட்ட மாகாண சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் பார்ப்பனர்கள் அதாவது 95 விழுக்காடு பார்ப்பனர்கள் என்று அவர் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது.  மைசூர் ராஜ்ஜியத்தில், கடந்த 20 ஆண்டு காலத்தில் நடத்தப்பட்ட  மைசூர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில், காலிப் பணியிடங்களில் 85 விழுக்காடு இடங்களைப் பார்ப்பனர்களே பெற்றுள் ளனர். இதே கால கட்டத்தில், சென்னையில் நடந்த உதவிப் பொறியாளர் நியமனத்துக்கான போட்டித் தேர்வில்  17 பார்ப்பனர்களும், 4 பார்ப்பனர் அல்லா தாரும் வெற்றி பெற்றனர்.

இதனைப் போன்ற முடிவுகளே கணக்குத் துறைக்கு நடந்த போட்டித் தேர்வுகளின் முடிவுகளும் இருந்தன.  அக்கால கட்டத்தில் இருந்த 144 உதவி ஆட்சியர்களில் 77 பேர் பார்ப்பனர்கள், 30 பேர் பார்ப்பனர் அல்லாத இந்துக் கள், எஞ்சியவர்கள் முஸ்லிம்களாகவும், இந்தியக் கிறித்தவர்களாகவும், அய்ரோப்பியர்களாகவும், ஆங்கிலோ இந்தியர்களாகவும் இருந்தனர். போட்டித் தேர்வுகள் இல்லாத பணிகளிலும், எடுத்துக்காட்டாக ராஜதானியின் நீதித்துறை சார்புப் பணியில், பெரும்பாலான நியமனங்கள் பார்ப்பனர்களின் கைகளில் இருந்தன. 1913 இல் இருந்த 128 நிரந்தர மாவட்ட முன்சீப்புகளில் 93 பேர் பார்ப்பனர்கள், 25 பேர் பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், எஞ்சியவர்கள் முஸ்லிம்களாகவும், இந்தியக் கிறித்துவர்களாகவும், அய்ரோப்பியர்களாகவும், ஆங்கிலோ இந்தியர்களாக வும் இருந்தனர் என்பதை சர் அலெக்சாண்டர் கார்டியூ தெரிவித்தார். இதிலிருந்தும், இதனைப் போன்ற மற்ற புள்ளிவிவரங்களிலிருந்தும், இந்திய சிவில் சர்வீஸ் பணிக்கான திறந்த போட்டி இந்தியாவில் நடத்தப் படுகிறது என்றால், அது முற்றிலுமாக பார்ப்பனர் களின் ஆதிக்கம் நிறைந்ததாகவே இருக்கும் என்ற முடிவுக்கும், பார்ப்பனர் அல்லாத பிரிவு மக்கள் உண்மையில் அதில் இடம் பெறாதவர்களாகவே இருப்பார்கள் என்ற முடிவுக்கும் அவர் வந்தது இயல்பானதே.

சென்னை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப் பணிகளில் நிலவிய நிலைக்கு ஆணையத்தின் கவனத்தை அவர் ஈர்க்க வில்லை என்றாலும் இப்போது இருப்பதுபோலவே  முன்பும் அரசுப் பணிகளில் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கம் இருந்தது. புரவலர்களின்  பரிந்துரையின் பேரில் நியமனம்  செய்யப்படும் அரசு சார்நிலைப் பணிகள் பற்றிய புள்ளி விவரங்களை அவர் விரித் துரைக்கவில்லை. இந்தப் பணிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயமானது.

அரசின் பல்வேறுபட்ட துறைப் பணிகளில் தற்போது நிலவும் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு  புள்ளிவிவரங்களுக்குள் செல்ல வேண்டும் என்பதில்லை.  ஆனால்  அதிக அளவிலான இந்தியர்கள் நியமனம் செய்யப்படும் இந்த ராஜதானியைப் பற்றியும், எந்தக் கொள்கையின் அடிப்படையில் அவை விநியோகிக்கப் படுகின்றன என்பது பற்றியும் ஆணையத்தின் கவனத்தை ஈர்ப்பதை நம்மால் தவிர்க்க இயலவில்லை. மேதகு ஆளுநரின் நிருவாகக் குழுவில் இந்தியர்கள் நியமிக்கப்படத் தொடங்கியது முதல் தொடர்ந்து மூன்று கனவான்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் பார்ப்பன வழக்கறிஞர்கள் ஆவர். உயர்நீதிமன்றத்தில் இருந்த அய்ந்து நீதிபதிகளில் நான்கு இந்து நீதிபதிகளும் பார்ப்பனர்கள் ஆவர். 1914 இல் உருவாக்கப்பட்ட அரசு செயலாளர் பதவியிலும் உடனடியாக பார்ப்பனர்தான் நியமிக்கப்பட்டார்.  வருவாய்த் துறைக் கழகத்தின் இந்திய செயலாளரும் ஒரு பார்ப்பனர்தான்.  மாகாண சிவில் சர்வீசின் இந்தியர்களுக்கான இரண்டு மாவட்ட ஆட்சியர் பணியிடங்களும் முகமதியர் அல்லாதவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டியது எப்போதும் பார்ப்பனர்களுக்கே சென்றுள்ளன. பொது அமைப்புகள்

அரசுப் பணிகளில் என்ன நிலை நிலவியதோ, அதே நிலைதான் உள்ளாட்சி மற்றும் இதர பொது அமைப்புகளி லும் நிலவி வந்தது. வாக்காளர்களில் பெரும்பாலானவர் கள் பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில், பார்ப்பனர் அல்லாதவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்ப தில்லை. அதன் காரணம் பார்ப்பனர் அல்லாதவர்கள் ஒற்றுமையாக ஒரு வேட்பாளரை ஆதரிக்காமல் பல வேட் பாளர்களை ஆதரிப்பதும், ஆனால் பார்ப்பனர்கள் ஒற்றுமையாக தங்கள் பார்ப்பன இனத்தைச் சேர்ந்த வேட்பாளரை ஆதரிப்பதும்தான்.  இந்திய கல்வியாளர்கள் பெரும்பான்மையாக உள்ள சென்னை பல்கலைக் கழகத்தில்  இவர்கள் பல இந்தியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.  பார்ப்பனர்கள் எப்போதுமே பார்ப்பனர் அல்லாத ஒருவரை உள்ளாட்சிக்கான சட்ட மேலவை உறுப்பினராக அனுப்பியதே இல்லை. அதைப் போலவே பார்ப்பனர் அல்லாத எந்த இந்தியரும், அவர் எவ்வளவுதான் உயர்ந்த தகுதி படைத்தவராக இருந்தாலும் சரி அய்ரோப்பிய கல்வியாளர்களின்  ஆதரவு இன்றி, பல்கலைக் கழகத்துக்கான சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பே இருந்ததில்லை.

1924 நவம்பரில் நடைபெற்ற சட்ட மேலவைக் கூட்டம் ஒன்றில் உறுப்பினர் திரு. குன்னிராமன் நாயரின் துணைக் கேள்விக்கு பல்கலைக் கழகத்தின் பதிவு செய்யப்பட்ட 650 பட்டதாரிகளில், 452 பேர் பார்ப்பனர்கள், 12 பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், 74 பேர் இதர சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 1907 முதல் நடத்தப்படும் சட்ட மேலவைக்கான தேர்தல்களில் தேர்ந் தெடுக்கப்பட்ட 12 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்ற 11 பேரும் பார்ப்பனர்களே என்றும்  பதிலளிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில ஆண்டு கால அனுபவம் பெற்ற கல்வியாளர்களை பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கும் முறை 1907 -க்கு முன்பு அனுமதிக்கப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை. அதே போல் பார்ப்பனர்களே பெரும் பாலானவர்களாக இருக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து எப்போதுமே பார்ப்பனர் அல்லாத ஒருவர், அவர் எவ்வளவுதான் திறமை பெற்றவராக இருந்தாலும் சரி சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதே இல்லை. திறந்த வழி தேர்தல் என்றழைக்கப்படும் சென்னைப் பல் கலைக் கழக செனட் அவையின் தேர்தலிலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. மாமன்னரின் சட்ட அவை, உள்ளூர் சட்ட மேலவை மற்றும் நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்தும் கட்டுக்கோப்பும், ஒற்றுமையும் மிகுந்த பார்ப்பனர் இனத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்ததால் இதுவரை விவரிக்கப்பட்டு வந்த  உண்மையே இத்தேர்தல்களிலும் நிலவி வந்தது. எப் போதாவது, நியாய உணர்வு கொண்ட ஆட்சியாளர், இந்த சமமற்ற தன்மையைச் சரி செய்யும் நோக்குடன், இதுவரை பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களைச் சேர்ந்த ஒருவரை எந்த பொது அமைப்புக்காவது நியமனம் செய்து விட்டால் போதும், பார்ப்பனப் பத்திரிகைகள் அவரைக் கடுமையாக விமர்சித்தன. 

அண்மையில், தனது சட்ட மேலவைக்கு சிலரை நியமனம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக மேதகு பென்ட்லாண்ட் பிரபு பார்ப்பனர்களின் பத்திரிகைகளில் எவ்வாறு விமர்சிக்கப் பட்டார் என்பதை பார்ப்பனர்களின் எதிர்ப்பு மனப்பான்மைக் கும், நியாயமற்ற விமர்சனத்துக்கும் எடுத்துக் காட்டாகக் கூறலாம். ஏறக்குறைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்  பொறுப்புமிக்க இந்த அவைகளைத் தவிர, சென்னையிலும், மாவட்டங்களிலும்  தற்போதுள்ள அரசியல் அமைப்புகளி லும் நடைபெறுகின்ற பொறுப்பாளர்கள் தேர்தல்கள் பற்றிய புள்ளி விவரங்களும் இதே கதையைத்தான் கூறும். அண்மையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு, சென்னை ராஜதானியிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேரில் ஒரு பார்ப்பனரல்லாத  இந்துவைத் தவிர மற்ற 14 பேரும் பார்ப்பனர்களே என்ற  ஒரு நிகழ்வை இதற்கு எடுத்துக்காட்டாகச்  சுட்டிக் காட்டலாம். என்றாலும், போருக்குப் பின் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது போன்ற மிகவும் முக்கியமான விஷயங்களில் காங்கிரஸ் கட்சியின் நிருவாகக் குழுவான இந்தக் கமிட்டியின் முடிவே, 4 கோடி பார்ப்பனர் அல்லாத மக்களைக் கொண்ட இந்த பெரிய, முக்கியமான ராஜதானியின் ஒருமித்த கருத்து என்ற தோற்றம் உலக அரங்கின் பார்வைக்குக் காட்டப்படுகிறது. அரசின் சலுகைகளும், அரசால் அளிக்கப்படும் உரிமைகளும் தாராளமாக வழங்கப் படுவது அதிகரிக்க அதிகரிக்க, அவற்றைப் பெற்று அனுபவிக்கும் இந்தக் கட்டுப்பாடும், ஒற்றுமையும் மிகுந்த பார்ப்பன ஜாதி இன்னும் கட்டுப்பாட்டுடனும், ஒற்றுமையுடனும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

பார்ப்பனர்  அல்லாதவர்களும், கல்வியும்
இந்த ராஜதானியின் மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் மிகக் குறைந்த அளவினராக இருந் தாலும் கூட, பல்கலைக் கல்வியில் மற்ற அனைத்து சமூகத்தினரையும் விட மிகவும் முன்னேற்றமான ஒரு நிலையை அடைந்து இருக்கின்றனர் என்னும் வாதம், உயர்ந்த அளவிலான அரசுப் பணி நியமனங்களைப் பெற்றிருப்பதற்கும், அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதற்கும்  ஆதரவாகக் கூறப்படுவதாகும். யாரும் இதனை மறுக்கவில்லை.

 இந்து ஜாதிகளில் மிக உயர்ந்ததும், மிகவும் புனிதமானதும் என்று கருதப்படுவது இந்த பார்ப்பன ஜாதி.  பழைய காலத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய பழக்க வழக்கங்களின் அடிப்படையிலான அவர்களது பண்டைய பண்பாட்டின் தன்மையும், அந்த நம்பிக்கையும் படிப்படியாக அவர்கள் எழுதிய வேத நூல்களிலும், வாய்மொழிப் போதனைகளிலும் சேர்க்கப்பட்டு மக்களின் மனதில் ஊன்றப்பட்டது. பார்ப்பனர்கள்தான் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் தெய்வத்தால் உருவாக்கப்பட்ட தெய்வீக ஆற்றல் படைத்தவர்கள் என்றும், அவர்களின் துணையின்றி ஆன்மா கடைத்தேற முடியாது என்றும், அவர்களின் துணையுடன்தான் உடலுழைப்பின் கொடுமையிலிருந்து விடுதலை பெற முடியும் என்றும் கூறப்பட்டது.  ஆங்கிலேயர் ஆட்சி அமைந்த புதிய சூழ்நிலையில், முந்தைய காலங்களில் நடந்து கொண்டது போலவே ஆட்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் தங்களை மாற்றிக் கொள்வதற்கு, அதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான பணிகளையும், சலுகைகளையும் பெற்று பயன் பெறுவதற்கு மற்ற சமூகத்தினரைவிட பார்ப்பனர்களுக்கு இவையெல் லாம் உதவி செய்தன.

 எவ்வாறாயினும், மண்ணில் நிலவி வந்த பாரம்பரியம் மற்றும் மரபுவழி வந்த நலன்கள், அவற்றுடன் இணைந்த சமூக கவுரவம் ஆகியவற்றைவிட ஆங்கிலக் கல்வி கற்றவர்களுக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு ஏற்பட்டது; ராஜதானியின் பொருளாதார நிலையை நிதானமாக மேம்படுத்தி வந்த அமைதி நிறைந்த தொழில்களைச் செய்யும் கணக்கிலடங்கா எண்ணற்ற மக்களின் பங்களிப்புக்கு எந்தவித மரியாதையும் இல்லாமல் போய்விட்டது.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)
நன்றி:விடுதலை 27.02.2011