Showing posts with label நீதிக்கட்சி. Show all posts
Showing posts with label நீதிக்கட்சி. Show all posts

Sunday, June 16, 2013

பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் - அவதூறுக்குப் பதிலடி! - 4

1) 1921-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினருக் கும் பார்ப்பனரல்லாத ஜாதியினருக்கும் கலவரம் மூண்டபோது நீதிக்கட்சி, அரசாங்கமும் அதன் தலைவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலையை எடுத்தனர் என்று தோழர் அருள் கூறுகிறார் அல்லவா? மேலே நாம் எடுத்துச் சொன்னதிலிருந்து பார்ப்பனர் அல்லாத ஜாதியினர், முஸ்லிம், ஆதி திராவிடர் ஆகிய தொழிலாளர்கள் ஜாதி வித்தியாச மின்றி பணியாற்றியதை, போராடி வந்ததைப் பிளவு படுத்தியது யார் - எம்.சி.ராஜா என்று ஆவணங்கள் இன்றும் பேசிக்கொண்டு இருக்கின்றன. இவரால் தான் கலவரமே மூண்டது அவரே ஒப்புக் கொண்டு நாளடைவில் வருந்தினார். இதற்கு என்ன சொல்லு கிறார் அருள்?
நீதிக்கட்சியின் அதிகாரம் என்னவென்பதை விளக்கி இருக்கின்றோம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எப்படி சும்மா இருக்க முடியும்? களத்தில் இறங்கி சமரசத்திற்கு முயற்சியை மேற்கொண்டார்கள். இதை எதிரான நிலை என்று சொல்லுவது சரியா? பிறகு, எதிரான நிலை எனத் தோழர் அருள் எதனைக் குறிப்பிடுகிறார்? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பல சலுகைகள், ஆணைகளை வழங்கிய கட்சி நீதிக்கட்சி ஆயிற்றே!
பி அண்டு சி  ஆலை வேலை நிறுத்தம் நடக்கும்போது எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் தானே இருந்தார். இந்த நிலையை அவர் மேற்கொள்ள ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஓ.தணிகாசலம் செட்டியார் வேலை நிறுத்தம் பற்றியும், கலவரம் பற்றியும் சட்டமன்றத்தில் பேசிய அளவுக்கு பொதுமை உணர்ச்சியோடு எம்.சி.ராஜா நடந்து கொள்ளவில்லையே அது ஏன்? என்பதை அருள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.
நீதிக்கட்சி வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் ஆனால் உண்மையான ஆட்சியாளரான ஆங்கிலேயர்கள்தான் எதிர்த்தனர் என்றும் தோழர் அருளே அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். இதிலிருந்து தெரிவது என்ன? வேலை நிறுத்தத்திற்கு எதிரானவர்கள் ஆங்கிலேயர்கள், அவர்கள் தான் வேலை நிறுத்தத்தின்போது ஜாதி பார்க்காமல் போர்க் குணத்தோடு இயங்கியவர்களை - ஆதிதிராவிடர் களைப் பிரித்தார்கள். அதற்குத் துணை நின்றார் எம்.சி.ராஜா என்பது தானே நிகழ்மை. குஹஊகூ இதனால் தானே கலவரம் நிகழ்ந்தது. குழப்பம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடந்தது, 6+2=8 பேர் மாண்டனர். எயிலிஸ் கமிட்டியை அரசாங்கம் போட்டது. கலவரம் நடந்த பகுதிக்கு கவர்னர் லார்டு வெலிங்டன் வந்தார். நீதிக்கட்சியினர் நிதி தண்டியபோது ரூ. 750/- வழங்கினார். இவ்வளவும் ஏற்பட்டது யாரால்? நீதிக் கட்சியாலா? அக்கட்சியின் இதரத் தலைவர்களாலா? அருள்தான் இதனை விளக்க வேண்டும்.
2) கட்டுரையாளர் அருள் பிட்டி.தியாகராயர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் அவர், தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது என்றும் அந்த அறிக்கை இந்துவிலும், திராவிடனிலும் வெளிவந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த அறிக்கையை நம்மால் பார்க்க முடியவில்லை. 1921-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி விரிவான ஆவணங்களாக நமக்குக் கிடைப்பவை திரு. வி.க.வின் வாழ்க்கைக்குறிப்புகளும் ஆ.சிவசுப்பிரமணியனும், ஆ.இரா.வேங்கடாசலபதியும் எழுதியுள்ள பின்னி ஆலை வேலை நிறுத்தம் - 1921 எனும் நூலுமாகும். இவ்விரு நூல்களில் நன்றாகப் பிரச்சினை அலசப்பட்டும், ஆராயப்பட்டும் இருக்கின்றன. இதுவன்றி நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் - ஓர் ஆய்வு? எனும் நூலிலும் வேலை நிறுத்தம் பற்றி மேலோட்டமும் கூறப்பட்டு இருக்கிறது. சிங்காரவேலர் எழுதியுள்ள கட்டுரையில் அப்போதைய நிலைமைகள் மட்டும் விளக்கப்பட்டன. எம்.சி.ராஜா தமது நூலில் தமக்கு சாதகமானதைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். இப்படி பல ஆவணங்கள் இருந்தாலும் இது குறித்த சிறந்த ஆவணமாகத் திகழுவது பின்னி வேலை நிறுத்தம் - 1921 எனும் நூல் மட்டுமே! அந்நூலில் இவ்வேலை நிறுத்தம் எல்லாக் கோணங்களிலும் பார்க்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்நூலில் அருள் குறிப்பிடும் பிட்டி. தியாகராயரின் அறிக்கை மட்டும் காணப்படவில்லையே - அது ஏன்? அவர்கள் இருவரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் அல்லர்.
எயிலிஸ் கமிட்டியின் அறிக்கையின்படி 400-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பாதிக் கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு அரசின் சார்பாக முகாம் அமைக்கப்பட்டு உதவி இருக்கிறார்கள் என்றும் ஆவணங்கள் பேசுகின்றன. இவ்வளவு அவலங்களை யும் நீதிக்கட்சித் தலைவர்களான பிட்டி.தியாகராயர், ஓ.தணிகாசலம் செட்டி, டாக்டர் சி.நடேச முதலியார் கலவரப் பகுதிகளைச் சென்று பார்வையிடுகிறார்கள். அப்பகுதியில் உள்ள டாக்டர் சி.நடேச முதலியாரின் உறவினர் வீடு பாதிக்கப்பட்டதால் தான் நீதிக்கட்சித் தலைவர்கள் வந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். எது எப்படி இருப்பினும் நீதிக்கட்சித் தலைவர்கள் கலவரப்பகுதியில் சென்று பார்த்து இருக்கிறார்கள். நிதி திரட்டி இருக்கிறார்கள், உதவி இருக்கிறார்கள் கலவரம் நிற்க வேண்டும் - வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தியவர் களாக இருந்திருக்கிறார்கள் என்பது மிக வெளிப் படையாகத் தெரிகிறது.
மேலும் அருள் குறிப்பிட்டு இருக்கிற பிட்டி. தியாகராயர் அறிக்கையைப் படித்து பார்த்தோம். அய்யத்திற்கு இடமின்றி ஆம் (டிக உடிரசளந) என்று ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவ்வறிக்கை அவருடையதாக இருக்க முடியாது என்றே கருத இடமிருக்கின்றது. ஏனென்றால் ஒரு சில ஆவணங்களில் இவ் வேலை நிறுத்த கலவரம் குறித்து அரசுக்கு பிட்டி. தியாராயர் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார்கள். அக்கடிதமும் இன்ன தென்று நமக்குத் தெரியவில்லை. அதில் வேலைக்குச் செல்லும் புதியவர்களை அப் புறப்படுத்த சொன்னதாகக் கூறுகிறார்கள்.  திரு. வி.க.வோ, ம.சிங்காரவேலரோ பிட்டி. தியாகராயரின் அறிக்கையைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் வேலை நிறுத்தம் பற்றி பிட்டி. தியாகராயர் நிகழ்த்திய இராஜதந்திரப் பேச்சைப் பற்றி திரு. வி.க. குறிப்பிடுகிறார்.
அப்பேச்சில் ஓர் இடத்தில் அப்புறப்படுத்துதல் என்ற சொல் வருகிறது. ஆனால் நகரத்தை விட்டே ஆதி திராவிடர்களை ஓட்டும்படியாக அதில் இல்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்தே அதனை அவர் கூறுகிறார். தியாகராயரின் பேச்சு குறித்து திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில்,
வேலை நிறுத்தம் எப்படி முடிந்தது? ராஜா ஸர், இராமசாமி முதலியார் பங்களா வெளியில் கூடிய கூட்டத்தில் சர்.பி.தியாகராய செட்டியார் நிகழ்த்திய இராஜதந்திரச் சொற்பெருக்கில் மூழ்கித் தொழிலாளர்கள் பலர் வேலைக்குத் திரும்பினர். சர்.பி.செட்டியார், மாதங்கள் பல ஆயின. இனிப் பிடிவாதம் வேண்டாம், உங்களுக்கு இராஜ தந்திரம் வேண்டும். மில்களில் புதிய ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள். புது ஆட்கள் தொழிலைப் பயின்று விடுவார்களாயின் உங்களுக்குத் தொல்லை விளையும். போலீஸ் காவலையும், இராணுவக் காவலையும் கடந்து அவர்களைத் தடுத்தல் இயலாது. ஆனால் அவர்களை ஒரு வழியில் அப்புறப்படுத்தல் கூடும். நீங்கள் எல்லோரும் வேலைக்குச் செல்ல உறுதி கொண்டால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ஆதலால் நீங்கள் உள்ளே போங்கள், நன்மையே விளையும், சங்கம் சாகாது என்று பேசிய பேச்சு அவ்வேளையில் தொழி லாளர்க்கு உசிதமாகத் தோன்றிற்று, சர்.பி.செட்டியாரின் ஜோசியம் பெரிதும் பலித்தது என்று எழுதியிருக்கிறார். திரு.வி.க. இந்து ஏடு வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் கஸ்தூரி ரங்கன் அய்யங்கார் ஆதரவு தந்தார் என்றும் எழுதியிருக்கிறார். ஆக நமக்குத் தெரிந்த அப்புறப்படுத்தல் என்பது தியாகராயரின் பேச்சில் தொழிலாளர் நலன் விழைந்தே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திராவிட இயக்கத்தினர் வரலாற்றை மறைப் பதில்லை. எங்களுக்கு அகப்பகைவர்களும் உண்டு. புறப் பகைவர்களும் உண்டு, அவர்களின் விமர்சனங்களினால் அவை மறைக்கப்படுவது உண்டு.
3) தோழர் அருள் அவரது கட்டுரையில் 1921 வேலை நிறுத்தத்தின் போது 14,000 தொழிலாளர்கள் இருந்த தாகத் தெரிவித்து இருக்கிறார். அக்காலக்கட்டத்தில் இரு ஆலைகளிலுமாக தொழிலாளர்கள் எத்தனை பேர் பணி யாற்றினார்கள் என்பது குறித்து நாம் மேலே குறிப்பிட்டு இருக்கின்றோம். அதன்படி 1921-இல் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது தொழிலாளர்களின் எண்ணிக்கை 14,000 அல்ல; சுமார் 11,000 மட்டுமே! மேலே புள்ளி விவரத்தை ஒப்பு நோக்கிப் பார்த்துக் கொள்க!
4) தோழர் அருள் சொல்லுகிற மற்றொரு செய்தியைப் பார்ப்போம். அவர் கூறுகிறார்:-
இந்த சூழலில் 1921 ஜூன் 28 அன்று இரவு புளியந்தோப்பு சேரி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் பெரும் மோதலாக வெடித்தது. புளியந்தோப்பு கலவரம் 1921 என்று அழைக்கப்படும் இந்த கலவரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், மற்றவர் களும் மோதிக்கொண்டனர். சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. மூன்றுபேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் (இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருக்கலாம்). போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசின் காவல்துறையினர் நடத்திய துப் பாக்கிச் சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆறு பேரும் பார்ப்பனரல்லாத இந்துக்கள்.
புளியந்தோப்பில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சுமார் மூன்றாயிரம் பேர், அங்கிருந்து ஆங்கிலேய அரசாங்கத்தால் வெளியேற்றப் பட்டு வியாசர்பாடி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
கே.ஓ.அந்தோணி சிறப்புக் கடமையாற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் அறிக்கை ஜூன் 29/1921-லிருந்து ஜூலை 4-ஆம் தேதி வரை கலவரத்தைப் பற்றி வெளி யிடப்பட்டது. இதில் ஆதிதிராவிடர்களின் குடிசைகள் 269, சக்கிலியர் குடிசைகள் 61, ஓட்டர் குடிசைகள் 17, ஜாதி இந்துக்கள் குடிசைகள் 28, முகமதியர் குடிசைகள் 43 என மொத்தம் 418 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. எந்தெந்த ஜாதியினர் என்னென்ன ஆயுதங்களை வைத்து இருந்தனர் என்ற விவரத்தையும் அப்போதைய நீதித் துறையின் ஆவணங்கள் நமக்கு இன்றும் கூறிக்கொண்டு இருக்கின்றன. இவையன்றி கலவரத்தினால் இறந்த வர்கள் பற்றிய குறிப்பில் ஆதி திராவிடர் எவரும் இல்லை. தோழர் அருள் குறிப்பிட்டிருப்பது போல மூன்று பேர் வெட்டிக் கொல்லப்படவும் இல்லை. ஆதிதிராவிடர் எவரும் இறக்கவும் இல்லை. இறப்பு, காயம் அடைந்தவர்களின் விவரம் வருமாறு:
1921 ஆம் ஆண்டு ஆக்ஸ்டு 29-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் இறந்தனர். இவர்களின் சடலம் மறுநாள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இடுக்காட்டில் திரு. வி.க., சிங்கார வேலர், சக்கரைச் செட்டியார் போன்றோர் உரையாற்றினர். இவை தான் கலவரங்களின் போது நடைபெற்ற இழப்புகளாகும்.
தோழர் அருள் வியாசர்பாடி முகாம்களில் 3000 பேர் இருந்ததாக எழுதி இருக்கிறார், அது தவறு. ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த முகாமில் 1669 பேர் இருந்தனர். இவர்கள் 446 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஜூலை 2-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 2-ஆம் தேதி வரை முகாம் வாழ் மக்கள் அனைவருக்கும் இலவச உணவு, துணிமணிகள் வழங்கப்பட்டன. இதற்காக ரூ. 2885 - 3 - 0 செலவழிக்கப்பட்டது. அகதிகள் முகாம் அமைப்பதற்காக ரூ. 2849 = 13 - 0 செலவழிக்கப்பட்டது. 1922 ஜூன் வரை உணவு வழங்குவதற்காக ரூ. 12,495. 11 - 5 செலவாகி இருக்கிறது. இவ்வளவு அன்பு ஆதிதிராவிடர்கள் மேல் ஆங்கிலேய அரசுக்கு ஏன் ஏற்பட்டது? பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தை உடைத்ததற்காக! எம்.சி.ராஜாவின் வழிகாட்டு தலுக்காக! இந்நிலையில் நீதிக்கட்சி அரசு என்ன செய்ய முடியும்? அதன் தலைவர்கள் என்ன செய்ய முடியும்? இயன்றதைச் செய்ய அவர்கள் தவறவில்லை.
5) எம்.சி.ராஜாவின் சட்டமன்றப் பேச்சைப் பற்றி அருள் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் பேச்சும் குற்றச்சாட்டுகளும் சட்டமன்றத்தில் எடுபடவில்லை. இதர நீதிக்கட்சி தலைவர்களின் பேச்சு சிறப்பாக இருந் தது. ராஜா தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். நீதிக்கட்சியின் மேல் சொந்த பகையை வைத்துக் கொண்டு தனது ஜாதியாரை அவர் பலி கொடுத்து அவர்களுக்கும் அவர் கெட்ட பெயரையே சம்பாதித்துக் கொடுத்தார். அது சரித்திரமாகி விட்டது. அவரே ஒப்புக்கொண்ட அதை  அருள் ஒன்றும் செய்ய முடியாது.
காந்தியார், சென்னைக்கு வந்தது பற்றியும் அவரிடம் ஆலை பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டது பற்றியும் தோழர் அருள் கூறியிருக்கிறார். ஆம், காந்தியார் 1921 செப்டம்பர் திங்களில் வந்தார். செப்டம்பர் 16-ஆம் தேதி தொழிலாளர்களிடையே பேசினார். வழக்கம் போல் ஒத்துழையாமை, அகிம் சையைப் பற்றி பேசினாரேயன்றி ஆலைத் தொழி லாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரி டையாகவோ, தெளிவாகவோ எந்தக் கருத்தையும் எடுத்துக் கூறவில்லை. வேலை நிறுத்தம் செய்தவர்கள் சரணடைந்து விட்டதாக அருள் தெரிவிக்கிறார். பிட்டி. தியாகராயரின் பேச்சை ஏற்று தொழிலாளர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொண்டார்கள். ஆட்சியாள ருக்கு துணை நின்ற எம்.சி.ராஜா போன்றவர்களை வைத்துக் கொண்டு எந்தத் தொழிலாளர்கள் இலக்கை அடைய முடியும்? இன்னும் பல செய்திகள் இது குறித்து சொல்ல வேண்டி இருந்தாலும், அது இங்கே - அருள் எழுப்புகிற பிரச்சினைக்கு பொருந்தாது.
தோழர் அருள் அல்லது அருள் போன்றவர் களுக்கு நாம் சொல்வதெல்லாம் இதுதான்:-
நீதிக்கட்சிக்காரர்கள் ஜாதி இந்துக்கள் தான்; பெருந்தனக்காரர்கள்தான்! ஆனால் மனிதா பிமானிகள். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாத வர்கள். பிரித்தாளப்பட்டபோது உண்மையின் பக்கம் நின்றவர்கள் அவர்கள். அரையாட்சி அதிகாரத்தில் எதுவும் செய்யாத நிலையில் இருந்தனர். எதையாவது செய்து பிரச்சினையை அமைதிக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டினார்கள். அவர்கள் எரிந்து கொண்டு இருக்கையில் எண்ணெய்யை வார்க்க வில்லை, ஆதித்திராவிடர்களை ஒழிக்க நினைத்தா பார்ப்பனர் அல்லாதார் தொகுப்பிற்குள் அவர்களை நீதிக்கட்சியினர் கொண்டு வந்தார்கள்? நேரிய பார்வையானாலும் இயல்பாகவே ஒரு பகுதி, பார்வைக்கு உட்படாதது போல பல சிக்கல்கள் நாட்டில் இருப்பதைப் பார்க்க வேண்டும்.
நாம் அடிக்கடி ஒரு கருத்தை வலியுறுத்தி வருவோம். வாழ்நிலையிலிருந்து தான் சிந்தனை தோன்றுகிறது. அந்தச் சிந்தனை பல பரிமாணங்களைத் தோற்றுவிக் கிறது. அப்படித் தோன்றியதுதான் அரசியல் இயக்கங்கள்; நீதிக்கட்சி முதலானவை! அதன் பிறகு தான் தேவையும், மறந்துபோன சேர்த்துக் கொள்ள மறந்தவைகள் பலவும் விவாதத்திற்கு வருகின்றன. இவை இணைத்துக் கொள்ளப்பட்டு அரசியல் இயக்கங்கள் அதனதன் கொள்கைகளுக்கு ஏற்ப முன்நகர்வை இயல்பாக பெறுகின்றன. இவற்றில் சர்ச்சைகள் எழும்; சண்டைகளும், இழப்புகளும் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கும். செய்தவைகள் நியாமானதாகத் தெரியும். பின்னர் அவற்றைப் பரிசீலிக்கிறபோது நேர்ந்தவைகளுக்காக வருத்தப்பட வேண்டி இருக்கிறது. அப்படித்தான் 1921-ஆம் ஆண்டு பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பல அனுபவங்களை அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் நமக்கு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அருள் போன்றவர்கள் தெரிந்து கொண்டால் போதுமானது.
(நிறைவு)
விடுதலை 16.6.2013 

பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் - அவதூறுக்குப் பதிலடி! - 3

பி அண்டு சி ஆலை வேலை நிறுத் தத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றில் ஜாதி, இந்துக்கள், முஸ்லிம்கள், ஆதி திராவிடர் என்று வேற்றுமை பார்க் காமல் தொழிலாளர் என்கிற முறையில் ஒட்டு மொத்தமாக பங் கேற்று வந்தனர். 1921 ஜூன் 20-ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் ஆயத்த மாகி இருந்தனர். ஆனால் அதற்கு முதல் நாள் ஜூன் 19-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு நிலைமை வேறாக இருந்தது. பக்கிங்காம் ஆலையின் ஆதி திரா விட தொழிலாளர்களின் கூட்டம் புளியந்தோப்பு பகுதியில் கூட்டப்பட்டது. அக்கூட்டத்திற்குத் ஆதிதிராவிடத் தலைவரான எம்.சி. ராஜாவும், சுவாமி தேசிகானந்தாவும் முன் நின்றனர், உதவித் தொழில் துறை ஆணையாளரும் உடனிருந் தார். அவர் பெயர் சுந்தராச்சாருலு. இக்கூட்டத் தில் அனுதாப வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடி வெடுக்கப்பட்டது. அரசும், ஆலை நிரு வாகமும் இணைந்தே இப் பிளவை உண்டாக்கினர். எம்.சி.ராஜா இதற்கு துணை நின்றார்.
இந்நிலைமைக் குறித்து வெகுண் டெழுந்து திரு.வி.க.,
... இந்நாளில் எம்.சி.ராஜா வேலை நிறுத்தத்தை உடைத்தெறிய ஊக்கங் கொண்டு முன் வந்ததன் நோக்கத்தை அறிய விரும்புகின்றோம், வேலை நிறுத்த காலத்தில் தலைகாட்டிய சிறீமான் எம்.சி.ராஜா தொழி லாளர்கள் 11ஙூ  மணி நேரம் வேலை செய்து வருந்திய காலத்தில் எங்கே சென்றிருந்தார்? தொழிலாளர் இருண்ட காலத்தில் எங்கே சென்றி ருந்தார்? தொழிலாளர் மலக்குப் பையில் அழுத்தப்பட்ட காலத்தில் எங்கே இருந்தார்? பகலில் உணவு கொள்ளப் போதிய நேரம் பெறாது சாப்பிட்டதும் சாப்பிடாமலும் கை கழுவியும், கை கழுவாமலும் மில்லுக் குள் ஓடித் தொழிலாளர் வருந்திய போது எங்கே நண்ணினார்?
தொழிலாளர் சங்கத்தை அமைத் துக் கொண்டு, நியாயக்கிளர்ச்சி செய்து வேலை நேரத்தைப் பத்து மணியாகவும் பகல் உணவு கொள் நேரத்தை ஒரு மணியாகவும் செய்து கொண்டு, வேறு பல நன்மைகளை பெற்று வரும் இந்நாளில் ஆதி திராவிடர் பெயரை முழங்கிக் கொண்டு வேலை நிறுத்தத்தைக் குறைக்க வீர வார்த்தை பேசுவது நியாயமோ? என்று எழுதினார்.
- நவசக்தி நாளிதழ் (25.6.1921) தலையங்கம்
ஆக, வேலை நிறுத்தம் கெடுவதற்கு எம்.சி.ராஜா முக்கிய காரணமாக இருந் திருக்கிறார் என்பது திரு. வி.க.வின் எழுத்துகளிலிருந்தும் பிற ஆய்வு நூல்களிலிருந்தும் காணக்கிடைக்கிற செய்திகளாகும். முதலில் வேலை நிறுத்தத்திற்கு எதி ராக செயல்பட்ட எம்.சி.ராஜா பின்னர் 1930ஆம் ஆண்டு களில் இது குறித்து அவர் வருத்தப்பட்டும் இருக்கிறார் என்று  பதிவுகள் கூறுகின் றன. ஆதி திராவிட தலை வர்களில் ஒருவரான ராவ் பகதூர் மதுரைப் பிள்ளை இது குறித்து எம்.சி.ராஜா வின் அணுகுமுறையை ஏற்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது குறித்து அவர்கள் வெளியிட்ட கருத்துக்களையெல்லாம் இக்கட்டுரை யில் இணைத்தால் கட்டுரை மிக நீண்டதாக ஆகிவிடும், ஆகவே அவற்றை நாம் இங்கே வெளியிட விரும்பவில்லை. அவையெல்லாம் ஆவணங்களாக பதிவாகி இருக்கின்றன,
ஆலை வேலை நிறுத்தத்தில் ஏற்பட்ட இக்குழப்பங்களில் போலீஸ் பாதுகாப்பும், வழிக்காவலும் வேலை நிறுத்தத்திற்கு எதிராக இருந்தவர்களுக்குத்தான் சாதகமாக இருந்தது. ஆனாலும் இந் நிலைமைகள் குறித்து எல்லாம் 1921 மே இறுதியில் வெளிவந்த சுதர்மா எனும் ஏடு கீழ்க்காணும்படி எழுதி இருக்கிறது.
... தொழிலாளர் நெடும் போராட் டத்திற்குத் தயாராகி வருகின்றனர். போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு ஆதிதிராவிடரைத்தான் கம்பெனி நம்பியுள்ளது. ஏழை ஆதிதிராவிட தொழிலாளர் வேலைக்குத் திரும்ப வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வேலை நிறுத்தம் முறிவதோடு சங்க ஒற்றுமையும் குலையும், பிரித்தாளும் சூழ்ச்சி கையாளப்படும் என்பது வெளிப் படை பக்கிங்காம் ஆலையில் சென்ற முறை ஏற்பட்ட வேலை நிறுத்தத்தில் இதே போல் மிரட்டினர், இம்முறை இது வெறும் மிரட்டலாக முடியுமா, இல்லையா என்பது ஆதிதிராவிடரைப் பொறுத்துள்ளது
எம்.சி.ராஜாவினால் ஆதிதிராவிடர் கள் வேலை நிறுத்தத்திலிருந்து விலகி இரு ஆலைகளுக்கு கொஞ்சம் கொஞ்ச மாகச் செல்லத் தொடங்கினர். இதன் விவரத்தை எயிலிஸ் கமிட்டியின் அறிக்கை கீழ் காணும் விதத்தில் எடுத்து கூறுகிறது. இந்த எயிலிஸ் கமிட்டி என்பது என்ன? என்பது குறித்து பின்னர் ஓர் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம்.
இவ்வாறு இரண்டு மாதங்களில் வேலை நிறுத்தம் உடைவதற்கு எம்.சி. ராஜா காரணமாக இருந்தார். ஜூலை 11-ஆம் நாளிலிருந்தே ஆலைகளின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்த திரு. வி.க.வுக்கு ரூபாய் ஒரு இலட்சத்தை காங்கிரஸ் கமிட்டி கொடுத்தது என்று மெயில் எழுதியது. அவதூறான இச் செய்தியை எதிர்த்து வழக்குத் தொட ருவேன் என்று திரு. வி.க. கூறியதால் மெயில் அச்செய்தியைத் திரும்பப் பெற்றது. இதனால் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பதற்றம் ஏற் படுவது இயல்பே. இதனால் தொழி லாளர் வாழும் குடிசைப் பகுதிகளில் தீ வைப்பு நிகழ்வுகள் நடந்தேறின. ஆதிதிராவிடர்கள் வாழ்ந்த பகுதி களிலும் தீவைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றை விசாரிப்பதற்காக எயிலிஸ் கமிட்டி அமைக்கப்பட்டது. 1921 ஜூன் 29-ஆம் தேதியிலிருந்து பெரம்பூர் வட்டத்தில் நிகழ்ந்த குழப்பங்களை விசாரிக்கவே இக்கமிட்டி நியமிக் கப்பட்டது.
இக்குழுவில் சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.வேங்கடரத் தினம் நாயுடு, ராவ்பகதூர் நரசிம்ம மாச்சாருலு உறுப்பினர்களாக இருந் தனர். இக்குழுவின் முன் செல்ல திரு. வி.க. மறுத்துவிட்டார். எல்லா ஜாதிகளும் தொழிலாளர் களாகப் பணியாற்றிய நிலையில் சங்கம் வேலை நிறுத்தம் மேற்கொண்டபோது எம்.சி.ராஜா ஏற்படுத்திய பிளவே பெருங்குழப்பங்களுக்கு காரணமா யிற்று. ஹோம் ரூல் இயக்கத்தின் அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சும் வாடியா விலகி அய்ரோப்பா சென்றதற்குப் பிறகு முற்று பெற்று விட்டது எனலாம். தலைமை பொறுப்பில் திரு.வி.க.வே இயங்கினார் காங்கிரஸ் விடுதலை இயக்கமாக இயங்கிய காலகட்டமாதலால் திரு. வி.க. காங்கிரஸ்காரராக இருந்தும் உழைத்தும் சங்கத்திற்கு நிதி உதவியோ தொழிலாளர்களுக்கு வேறுவித தார்மீக ஆதரவோ வழங்க வில்லை. வழங்குவதாகக் கூறி செய் யவும் இல்லை என்று எழுதினால் இன்றும் சரியானது என்று கருது கின்றோம். அடுத்து நீதிக்கட்சி இக்கட்சி அப்போதுதான் இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது. எப்படி மாறுகிறது என்றால் நிதி, இராணுவம், போலீஸ் மூன்றையும் ஆங்கிலேயர் வைத்துக் கொண்டு இதரதுறைகளை இந்தியர் களுக்கு வழங்கியது தான் இரட்டை ஆட்சி முறை. இந்நிலையில்தான் இரண்டு பெரிய கலவரங்கள் சென்னை மாகாணத்தில் உண்டாயின 1) பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தம் 2) மலையூரில் மாப்பிள்ளை கலகம், நாம் அவற்றில் பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தைத்தான் இங்கே பார்த்து வருகின்றோம்.
இப்போது நாம் பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பற்றிய விவரங்களை மிகச்சுருக்கமாக மேலே எடுத்து கூறி இருக்கின்றோம், இனி தோழர் அருள் எழுதியுள்ள வற்றைப் பார்ப்போம்.                      
                                                                                                                                         (தொடரும்) விடுதலை 15.6.2013

பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் - அவதூறுக்குப் பதிலடி!- 2

அறிவியல் கண்டுபிடிப்புகள், அத னால் நிகழ்ந்த மாற்றங்கள் ஏற்கெனவே இருந்த முறைகளை மாற்றுதலுக்கு உட்படுத்தின. இந்தியாவில் ஆலைகளின் வரவும், ரயில்களின் வரவும், அய்ரோப் பியக் கலாச்சார ஊடுருவல்களும் இங்கே இந்த ஜாதி அமைப்புகளை கூக்குரல் இடச் செய்தன. பழமை அவலக்குரல் எழுப்பிக் கொண்டே புதுமையை ஏற்றுக் கொண்டது. காரணம் ஒரு ஜான் வயிறு! அது பி அண்டு சி மில்லுக்கும் பொருந்து வதாக இருந்தது.
பி அண்டு சி ஆலை யில் எல்லா ஜாதியினரும் பணியாற் றினர். இவர்களுள் தாழ்த்தப்பட்டோர் சரி பகுதியினர். இவர்கள் சென்னை நகரின் சேரிகளில் வாழ்ந்தனர். பிறர் ஒட்டுக் குடித்தனத்தில் இருந்தனர். ஒரு வீட்டில் 32 குடித்தனங்கள் வரை இருந்தன. அந்தக்குடும்பங்களே ஒரு தொழிற் சாலையாக இயங்கின.
தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ஆலையில் ரூ.26/- பயிற்சியற்ற தொழிலாளிக்கு (Unskilled)
12½   அணா முதல் 14 அணா வரை தினக்கூலி. (78 பைசா முதல் 87 பைசா வரை) இது அக்கால புள்ளி விவரங்கள் தருகின்ற செய்திகளாகும். தொழிற்சங்கம் தொடங் கப்பட்ட காலத்தில் இங்கே நிலைமை என்ன? நீதிக்கட்சி, காங்கிரஸ், ஹோம் ரூல் இயக்கம், முஸ்லிம் லீக் ஆகியவை அரசியல் களத்தில் இருந்து வருகின்ற அமைப்புகள். நீதிக்கட்சியின் தொடக்கக் காலத்தில் தொழிற்சங்க இயக்கத்தில் பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள் இரண்டொருவர் இருந்தனர். அதில் ஒருவர் சக்கரைச் செட்டியார். ஹோம்ரூல் இயக்கத்தினரும் இருந்தனர். காங் கிரஸ்காரர்கள் இருந்தனர்.
அப்படி இருந்தோரில் முக்கியமானவர்கள் திரு. வி.க., B.P. வாடியா, சக்கரைச் செட்டியார், தண்டபாணி பிள்ளை, வ.உ.சி., ம.சிங்காரவேலர், சுப்பிரமணிய சிவா, இ.எல்.அய்யர் (இலும்பை இலட்சுமண அய்யர்) போன்றோர் ஆவர்.
சென்னைத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரே தவிர இதன் உறுப் பினர்கள் பி அண்டு சி ஆலைத் தொழி லாளர்களே ஆவர். இச்சமயம் தொடங் கப்பட்டபோது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளாக B.P.
வாடியா தலைவ ராகவும், திரு. வி.க. துணைத் தலைவராக வும், செல்வபதி செட்டியாரும் இரா மஞ்சலு நாயுடுவும் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹோம் ரூல் இயக்கத்தினர் தொழிற்சங்க இயக்கத் தில் ஆர்வங்காட்டி இதே கால கட்டத்தில் மத்திய சங்கம் அமைத்தனர், இது வெற்றி பெற்றதாகச் சொல்லி விட முடியாது.
சென்னைத் தொழிலாளர் சங்கம் தோன்றுவதற்கு முன்பாகவே பி அண்டு சி யில் 1878-லும், 1889-லும் வேலை நிறுத்தங்கள் நடந்தன. 1902 பங்கிங்காம் ஆலையில் மட்டும் வேலை நிறுத்தம் நடந்தது. உலகப் போர் முடிந்தும், ரஷ்யப் புரட்சி நிகழ்ந்தும் இருந்த வேளையில் பசிப்பிணியும், பஞ்சமும் சென்னையில் வாட்டியதால் 1920-21-இல் அப்போதைய நகரில் மட்டும் 30 வேலை நிறுத்தங்கள் நடைபெற்று இருக்கின்றன. சென்னை யில் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் 25-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இருந்ததாகத் திரு. வி.க. குறிப்பிடுகிறார். இதனால் 90,000 தொழிலாளர்களை வேலை வாங்கும் 35 முதலாளிகள் 1920-ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஒன்று கூடிப்பேசினர். அத்தியாவசியமானதாக கருதப்படுகிற ரயில்வே, மின்சாரம், டிராம்வே, மண் ணெண்ணெய், பெட்ரோல் முதலியன நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தடை செய்யப்பட வேண்டும் என இக் கூட்டம் தந்தி மூலம் அரசைக் கேட்டுக் கொண்டது. இப்படித்தந்தி கொடுத்தவர் யார்? அப்போதைய பின்னி நிறுவனத் தின் இயக்குனரான ஏ.பி.சிமன்ஸ் என்பவர் தான். இத்தந்தியைத் தொடர்ந்து இக்கூட்டத்தினர் அரசினர்க்கு ஒரு கடிதத்தையும் அனுப்பினர். இவற்றைக் கிடைக்கப் பெற்றவுடன் அரசினர் ஓர் ஆணையை வெளியிட்டனர். அதில் தாடண்டர் என்பவர் குறிப்பு எழுதினார். இவர் ஓர் உயர்அரசு அலுவலர். இவர் பெயரில் சென்னை சைதாப்பேட்டையில் தாடண்டர் நகர் இருப்பதை இத்தருணத் தில் இங்கே பதிவு செய்கின்றோம்.
1920-ஆம் ஆண்டு பி அண்டு சி ஆலையில் ஒரு வேலை நிறுத்தம் நடந் தது. போலீஸ், பின்னி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டது. அரசு வெள்ளையர் கையில் இருந்தது. துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்கு பிரச்சினை போயிற்று. அதனால் இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர். 1920-ஆம் ஆண்டு அக்டோபரில் சங்க நடவடிக்கை களில் பெரிதும் பங்காற்றிய நடேச முதலியார் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் அவர்க்குக் கீழே இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவர்களும் இப் பதவியை ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் அனைவரும் வேலையிலிருந்து நீக்கப்படுகின் றனர். இதனால் தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு இயந் திரங்களுக்கு அருகே அமர்ந்து விடுகின்றனர். அதாவது உள்ளி ருப்பு வேலை நிறுத்தத்தைச் செய்தனர். பிறகு தொழிலா ளர்கள், ஆலை மேலாளரைக் காணச்சென்றனர். கூட்டத்தைக் கண்ட மேலாளர் தன்னுடைய கைத் துப்பாக்கியை எடுத்தான். தொழிலாளர்கள் அதனைக் கைப்பற்றினர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நிர்வாகத்தினர் கதவடைப்பு என்று அறிவித்தனர். கதவடைப்புக்குப் பிறகு சென்னைத் தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தம் செய்தது.
இதனால் ஆத்திரமடைந்த பி அண்டு சி ஆலை நிர்வாகம் சென்னைத் தொழிலாளர் சங்கத்தை ஒழிக்க முடிவு எடுத்து செயல்படத் தொடங்கிற்று. வேலை நிறுத்தத்தினால் நிர்வாகத்திற்கு நட்டம் ஏற்பட்டதென்றும் அதனால் இழப்பீடாகத் தொழிற்சங்கம் ரூ. 75,000/- வழங்க வேண்டும் என்றும் வாடியா, திரு. வி.க., ஜி.ராமஞ்சலு நாயுடு, வேதநாயகம், எஸ்.நடேச முதலியார், வரதராஜ நாயகர், கேசவலு நாயுடு, சையட் ஜலால், கோ.மா.நடேச நாயகர், நமசிவாயம் பிள்ளை ஆகிய 10 பேர் மீது பின்னி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்தப் பத்து பேரில் வாடியாவும், திரு. வி.க.வும் தவிர மீதமுள்ள 8 பேரும் ஆலைத் தொழிலாளர்கள். தொழிற்சங்க சட்டங்கள் இயற்றப்படாத காலமாதலால் வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பத்துபேரும் வேலை நிறுத்தம் முடியும் வரை தொழிலாளர் கூட்டத்தில் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் வேலை நிறுத்தக் காலமாதலால் தொழிற்சங்க வங்கிக் கணக் கிலிருந்து பணம் எடுத்து தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்தப் போராட்டத்தினால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் இறந்தனர் என்பதை முன்பே குறிப்பிட்டு இருந்தோம்.
B.P. . வாடியாவுக்கு மேலே நாம் குறிப்பிட்டு இருக்கிற உயர்நீதிமன்ற வழக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இவர் அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் - தியோசிபிக்கல் சொசைட்டியச் சேர்ந்தவர். 1921-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் பெசண்ட் அம்மையாரோடு பின்னி கம்பெனியின் தலைமை நிர்வாகி களை இரகசியமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் விளைவாக பத்துபேர் மீதான வழக்குத் திரும்பப் பெறப்படும் என்றும் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவர் என்றும் வாடியா திரு. வி.க.விடம் கூறினார். அதோடு தொழிலாளர் கூட்டத்திலும் என்ன நிபந் தனைகள் என்பதை விளக்கி வாடியா பேசினார். ஆனால் வாடியா பேசிய பேச்சுக்கும் தியோசிபிக்கல் சொசைட்டியின் நாளேடான நியு இந்தியாவில் வெளியான ஒப்பந்த நிபந் தனைகளுக்கும் வேறுபாடுகள் இருந்தன. மூன்று மாதங்கள் நடந்த இந்த வேலை நிறுத்தம் அடிப்படை சிக்கல் எதுவும் தீர்க்கப்படாமல் முடிவுற்றது. தொழிலாளர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இந்த ஏமாற்றமே 1921-ஆம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் வேலை நிறுத்தத்திற்கு அடிப் படையாக விளங்கியது.
1921-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மே வரை சிறு சிறு வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.  மே மாதம் 20ஆம் தேதி சம்பளம் போதாது என்று கர் நாடிக் ஆலையின் பஞ்சை தூய்மைப்படுத்தும் (Carding) பிரிவுத் தொழிலாளர்கள் 600 பேர் வேலை நிறுத்தம் செய்தனர். இப்பிரிவு இயங்காத நிலையில் இதரப்பிரிவுகளுக்கும் வேலை இருக்காது என்பதால் நிர்வாகத்தினர் வேலை இல்லை என்று தொழிலாளர் களுக்கு மே 21-ஆம் தேதி அறிவித்தனர். திரு. வி.க., ஞானியார் அடிகள் கடலூரில் கூட்டிய மாநாடு ஒன்றிற்குச் சென்று இருந் தார். அவருடனோ, பிற சங்க நிர்வாகி களுடனோ கலந்து கொள்ளாமல் தொழி லாளர் வேலை நிறுத்தம் செய்து விட்டனர். சங்கத்தின் கட்டளை இன்றி வேலை நிறுத்தம் செய்தது தவறு என்று இதனைத் திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
எனவே தொழிலாளர் பிரதிநிதிகள் கர்நாடிக் ஆலையின் மேலாளர் ஆஷ் வந்த்தை அணுகினர். வேலைக்குத் திரும்பு கிறோம் என்று கோரினர். அதற்கு மேலாளர் தாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்றும் மேலாண்மை இயக்குனரைச் சந்திக்குமாறு கூறினார். தொழிலாளர்கள் மறுநாள் மே 26-ஆம் தேதி மேலாண்மை இயக்குநரை 30 பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர் சில நிபந் தனைகளை விதித்தார்.
1) இவ்வாண்டுக்குரிய போனஸ் யாருக்கும் கிடையாது.
2) வேலை நிறுத்த நாளுக்குரிய கூலி கிடையாது.
3) விடுமுறை விதிகள் மாற்றியமைக்கப்படும்.
இவையே அந்த நிபந்தனைகள். பிரதி நிதிகள் அனைவருக்கும் இத்தண் டனையை விதித்தல் உரியதாகாது. 600 கார்டிங் தொழிலாளர்களும் பாதிக்கப் படுகிறார்கள். இது முறையற்றது என்று எடுத்துரைத்தார்கள். இதைத் திரு. வி.க.விடமும் கூறினர்.
அவரோ, 600 பேருக்காக 5000 பேரைத் தண்டிப்பது நியாயமல்ல என்று கூறியதோடு இதற்கு ஓர் ஆலையின் வேலை நிறுத்தம் பயன்படாது. இரண்டு ஆலைகளிலும் வேலை நிறுத்தம் செய்தால் தான் பயன் விளையும் என்று திரு. வி.க. விளக்கினார்.
திரு. வி.க.வின் யோசனைப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1921 ஜூன் 3ஆம் தேதி பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களின் கூட்டம் நடத்தப்பட் டது. கூட்ட முடிவுப்படி பின்னி மேலாண்மை இயக்குநருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினர். அறிக்கை மட்டுமின்றி இது குறித்து திரு. வி.க.,
..... எங்களுக்கு இம்மாதம் 11ஆம் தேதிக்குள் தக்க பதில் கிடைக்காவிட்டால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்ய நேரிடும். இரண்டு ஆலைகளும் வெவ் வேறானவை, கர்னாடிக் ஆலைக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக் கிறது என்று வினவியவரிடம் இரு மில்களும் ஒரே நிர்வாகத்திற்கு உட்பட்டு உள்ளமை யால் ஒரு மில்லுக்கு ஏற்பட்டது இன் னொரு மில்லுக்கும் ஏற்பட்டதாகும். அதைபற்றி கர்நாடிக் மில் தொழிலாளர்கள் அநியாயமாய் நடத்தப்பட்டபோது எப்படி பங்கிங்காம் தொழிலாளர்கள் சும்மா இருக்க முடியும்?
- நவசக்தி (10.6.1921) என்று எழுதினார். இதற்கு எந்த பதிலையும் பின்னி நிர்வாகம் தொழிற்சங்கத்திற்கு அனுப்பவில்லை, ஆகவே மீண்டும் தொழிலாளர்கள் ஜூன் 14-ஆம் தேதி கூட்டத்தைக் கூட்டி வேலை நிறுத்த அறிவிப்பை நிர்வாகத்திற்கு அனுப்பினர், இது குறித்து திரு. வி.க.
... நீங்கள் கர்நாடிக் மில் தொழி லாளர்களுக்கு நியாயம் செய்யாததற்காக வும் நாங்கள் 4-ஆம் தேதியில் எழுதிய கடிதத் திற்குப் பதில் விடுக்காமல் இருப்பதற் காகவும் வருந்துகிறோம்.
கர்நாடிக் மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அனுதாபத்தைக் காட்டுவதற்காக வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. 14-ஆம் தேதி மாலையில் சங்கக்கூட்டத் தில் கூட்டம் கூட்டி எல்லோரும் 20-ஆம் தேதியில் வேலை நிறுத்தம் செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். எங்களுடைய குறை நிவர்த்திக்கப்படும் வரை வேலை நிறுத்தம் நீடிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
- நவசக்தி (17.6.1921) என்று எழுதி னார் இதற்கு நிர்வாகத் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் ஆலை முதலாளியும், அரசும் கைகோர்த்து கொண்டனர். ஒற்று மையாய் இருந்த தொழிலாளர் களிடையே பிளவுகளை உண்டாக்கினர். ஒரு காலத்தில் இராயப்பேட்டை வெஸ்லியன் கல்லூரியில் திரு.வி.க. வேலை பார்த்த போது அவரோடு ஆசிரியராக வேலை பார்த்த எம்.சி. ராஜா இக்கட்டத்தில் திரு.வி.க. தொழிலாளர் தலைவர் ஆனது போல் அவர் ஆதிதிராவிட வகுப்பாருக்குத் தலைவராகி இருந்தார்.
                                                                                                                                                     (தொடரும்) விடுதலை 14.6.2013

பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் - அவதூறுக்குப் பதிலடி! - 1

திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. 1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக் கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது. ஊன்றிப் படித்து உண்மையை உணருவீர்! - (ஆர்)

பசுமைத் தாயகத்தைச் சேர்ந்த அருள் என்கிற தோழர் தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும் - திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு எனும் கட்டுரையை இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அக்கட்டுரை எம் நண்பரால் எமக்கு அனுப்பப்பட்டு நாம் அதை மிகக் கவனமாகப் படித்துப் பார்த்தோம். அக்கட்டுரை தொடர்பாக எமது கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றோம்.
தோழர் அருளின் கட்டுரை மொத் தம் ஏழு பக்கங்கள் உள்ளன.(காண்க: http://arulgreen.blogspot.com/2013/06/Pulianthope-riots-1921.html) அதில் நுதல் பொருள் (Subject Matter) முழுவதுமாக இல்லை. நிகழ்வரத்தை (Facts) அவர் நடுநிலையோடும் ஆரா யவில்லை, எழுதவும் இல்லை. மேலும் அவர் ஒரு தலைப்பட்சமாகவே எழுதி யிருக்கிறார். ஆயினும் அவருக்கு நாம் நன்றி தெரி விக்கின்றோம். 1921 ஆம் ஆண்டு பின்னி ஆலை வேலை நிறுத் தம் வரலாற்றுப் புகழ் பெற்றது ஆகும்.
இந்நிகழ்வு நீதிக்கட்சி காலத்தில் - அவர்களின் ஆட்சியின்போது நடைபெற்று இருக்கிறது, ஆகவே இவ்வேலை நிறுத்தம் குறித்து நாம் எழுதிய நீதிக்கட்சி வரலாற்றில் அவசியம் இடம்பெற்று இருக்கவேண் டும். ஆனால், இடம்பெறவில்லை. அடுத்த பதிப்பில் பின்னி வேலை நிறுத்தம் குறித்து ஒரு தனி அத் தியாயம் இடம்பெறும். எம் மனத்தி லிருந்து மறப்பெனும் கள்வனால் வாரிச் சென்ற அந்நிகழ்மையை நினைவூட்டிய தோழர் அருளுக்கு நாம் நன்றி சொல்வதில் தவறு இல்லை அல்லவா? பின்னி வேலை நிறுத்தம் குறித்து நிரம்பச் செய்திகள் இருக் கின்றன. ஆனால், கட்டுரையாளர் அருள் ஏதோ ஒன்றை தனக்குச் சாதகமானது போன்ற கருத்தை இணைய தளத்தில் கொளுத்திப் போட்டு விட்டார்.
நமது நாவலர் நெடுஞ்செழியன் மேடைகளில் உரை நிகழ்த்துகிறபோது - எதிரிகளுக்குப் பதில் சொல்கிறபோது, மொட்டை தாதன் குட்டையில் விழுந் தான் என்பதுபோலப் பேசினால், எழுதினால் எப்படி? என்று எதிரிகளை வினவுவார். மொட்டை தாதன் என்றால் எந்த ஊர் மொட்டை; எந்த இடத்தில் உள்ள குளத்தில் விழுந்தான்? என்கிற விவரம் வேண்டாமா? என்று கேட்பார். அதைப்போல நாமும் இந்த இணைய தளக் கட்டுரையாளரைக் கேட்கத் தோன் றுகிறது. அவர் எழுதியுள்ள கட்டுரையில் விவர அடர்த்தியும், ஆழமும் இல்லாமல் பிரச்சினை என்ன என்பதைப் படிப்ப வருக்குப் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கிறது.
1921 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் நிகழ்வுகளைப்பற்றிய நிகழ்வரங்களின் உண்மைகளை நாம் இங்கே எடுத்துக் கூறக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
சென்னை மாநகரத்தின் பழைய தலைமுறையினருக்கு பி அண்ட் சி மில் என்றால் நன்றாகத் தெரியும். இப்போது அந்தப் பெயர் மெல்ல மறைந்து வருகிறது. அந்த மில் மூடி 17 ஆண்டுகள் ஆகி விட்டன. சுமார் 118 ஆண்டுகள் இந்த ஆலை நடைபெற்று வந்திருக்கிறது. ஆலை தொடங்கப்பட்டு 40 ஆவது ஆண் டில் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒரு வேலை நிறுத்தத்தை சந்தித்தது - சென்னை! அவ்வேலை நிறுத்தம் நிகழ்ந்த ஆண்டு 1921. இதைப்பற்றி இன்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதற்குப் பதில் சொல்லவேண்டிய தேவையும், அவசியமும் நமக்கு இருக்கிறது.
பங்கிங்காம் மில் (1878), கர்நாடிக் மில் (1882) என்கிற இரண்டு ஆலைகள் சென்னை சூளை பட்டாளம் பகுதியில் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாலைகள் இரண்டும் 1920 முதல் ஒரே நிர்வாகத் தின்கீழ் செயல்பட்டன. இந்த ஆலைகள் தொடங்கப்பட்டு சுமார் 40 ஆண்டு களுக்குப் பிறகுதான் சென்னைத் தொழி லாளர் சங்கம் என்கிற அமைப்பு உருவா யிற்று. அப்போது எந்தவித சட்டங்களும், தொழிற்சங்கம் பற்றி இயற்றப்படவில்லை. சங்கம் தோற்றுவிக்கப்பட்ட காலம் அநேகமாக முதல் உலகப் போர் முடிந்த நேரம், அந்தக் கால நிலைமை எப்படி இருந்தது தெரியுமா?
உணவுப் பஞ்சம் எல்லா இடங்களிலும் நிலவுகிறது. இப்பகுதிகளில் மழையே இல்லை, காய்ச்சலால் பலர் மடிகின்றனர், வாழ்க்கையே வெறுமையாய் இருக்கிறது
- என்று அந்தக் கால பஞ்ச நிலை மையைக் குறித்து 28.10.1918 ஆம் நாள் மறைமலையடிகள் எழுதிய நாள் குறிப்பு கூறுகிறது.
இப்படி ஒரு நிலைமை இருந்த போதுதான் சென்னைத் தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல தொழிற் சங்கங்கள் சென்னை மாநகரெங்கும் தோற்றுவிக்கப்பட்டன. ஏன்? போலீ சாருக்கும் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு இயங்கியது என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன். எந்தவிதமான தொழிற்சங்க சட்டங்களும் அப்போது இயற்றப்படவில்லை. இங்கே இடது சாரி இயக்கத் தலைவர்களின் மார்க் சியம் பயிலப்படவில்லை. அதனைப் பற்றிய நிழலுருவப் பேச்சு இல்லை. ஆனால், பின்னாளில் மார்க்சிய பார்வையில் வேலை நிறுத்தத்தைப் பார்த்தார்கள்; ஆராய்ந்தார்கள். அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் சிக்கலை - பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள் ளவே விரும்பினார்கள். எனவே, தேவைக் கருதிதான் சங்கம் உருவா கிறது. வாழ்நிலையிலிருந்து ஓர் அமைப்பு கட்டப்படுகிறது; உருவா கிறது. இரண்டு ஆலைகளிலுமாகச் சேர்ந்து தோழர் அருள் குறிப்பிடுவது போல 14,000 தொழிலாளர்கள் பணியாற்றவில்லை.
ஆண்டு    ப.ஆலை    கர்.ஆலை
1878            300                     -
1907           4304                3954
1920           5526                5158
இதுதான் வரலாறு சொல்கிற புள்ளிவிவரமாகும். புகழ்பெற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றபோது பதி னொயிரம் தொழிலாளர்கள் என்று திரு.வி.க. எழுதுகிறார். புள்ளி விவரப்படி இரு ஆலைகளிலும் சுமார் 11,000 பேர் பணியாற்றி வந் திருக்கிறார்கள்.

                                                                                                                                                (தொடரும்) விடுதலை 13.6.2013

Friday, March 11, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை



நமது கடந்த காலம்
நல்லது, பெரியோர்களே, இங்கே நாம் சந்தித்துக் கொண்டோம். எனவே நாம் பேசிக்கொள்வோம். எனக்கு அளிக்கப்பட்டுள்ள தலைப்பு நமக்கு உடனடியாகத் தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம் என்பது.  அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால்,  உங்களின் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் நமது அரசியல் நிலை என்னவாக இருந்தது? கடந்த கால அரசியலை, உங்களில் இளைஞர்களாக உள்ள சிலரால் நெருக்கமாகக் காண இயலாமல் போயிருக்கலாம். நமது கடந்த கால அரசியல் நிலை என்னவாகத்தான் இருந்தது என்பதை உங்களில் பெரும்பாலோர் நினைவு வைத்திருக்கலாம். நமது அரசியல் நிலையில் முன்னேற்றம் தேவை என்று இந்தியர்களாகிய நாம் எப்போதுமே ஆங்கிலேயரைக் கேட்டுக்கொண்டே வந்துள்ளோம்.  நமது கோரிக்கை களைக் கேட்டு ஆங்கிலேய அரசும் அவ்வப்போது அரசியல் சலுகைகளை நமக்கு அளித்து வந்துள்ளது. நம் நாடு நேரடியாக ஆங்கிலேய ஆட்சியின் கீழ் 1857 ஆம் ஆண்டு வந்தது.  இந்திய அரசைப் பொறுத்தவரை, 1861 முதல் இந்தியாவை ஆள்வது பற்றி தொடர்ந்து சட்டங்கள் பல இயற்றப் பட்டு வந்துள்ளன. முடிவாக 1909 ஆம் ஆண்டு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேய அரசின் கீழ் நம் நாடு நேரடி ஆட்சிக்கு வந்தவுடன், இந்தி யாவில் இந்தியர்களின் சுயஆட்சி என்ற ஒரு நடைமுறையையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர். அந்த சுய ஆட்சி யினையும் அவர்கள் அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்படுத்தி மேம் படுத்தி  வந்துள்ளனர். எனவே நமது கடந்த கால நிலை இதுதான்.  நாம் அரசியல் சலுகைகளைக் கேட்டு வருகிறோம்; அரசும் அவ்வப்போது நமக்கு அரசியல் சலுகைகளை அளித்து வருகிறது. நாம் கேட்ட சலுகைகள் அனைத்தையும் நமக்கு அரசு வழங்கி யிருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன்.  எந்த ஒரு நாட்டிலும் அவ்வாறு நடக்க முடியாது.  அரசு அளிக்க விரும்பும் சலுகைகளை விட சற்று அதிகமான சலுகைகளைத்தான்  மக்களும் கேட்டு வருவார்கள்.  ஆனால் நீங்கள் படிப்படியாக முன்னேற்றம் பெற்று வருகிறீர்கள் என்பது உறுதிப் படுத்தப் பட்டு, உங்களின் அரசியல் நிலை எப்போதுமே முன்னேற்றப் பாதையில் வளர்ச்சியே அடைந்து வந்திருக்கிறது, எப்போதும் பிற்போக்குத்தனத்தை அடையவில்லை என்பதைக் காணும்போது அது நமக்கு மனநிறைவை அளிப்பதாக இருக்கிறது. சமீப காலம் வரை நமது நிலை பற்றி நாம் அனைவரும் மனநிறைவு கொண்டவர் களாகவே இருந்து வந்துள்ளோம். 1909 இல் நமக்கு அளிக்கப்பட்ட மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் எனும் சலுகைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்நாட்டில் வரவேற்கப்பட்டன என் பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்நாட்டில், இந்தச் சீர்திருத்தத்துக் காக மிண்டோ-மார்லி பிரபுக்களுக்கு நன்றி தெரிவித்து இந்த மன்றத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். சென் னையில் உள்ள எனது அரசியல் சகாக்கள் பலரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். ஆனால், தாங்கள் விரும்பியவை அனைத்தும் தங்களுக்கு அளிக்கப் படவில்லை என்று அவர்களில் பலர் பேசினர்.  அவ்வாறு கூறியவர்களில் நானும் ஒருவன். ஆனால் இச் சலுகைகள் ஒரு தவணை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொண்டோம். தொடர்ந்து நாம் கோரிக்கைகளை முன் வைப்பது என்றும் அடுத்த தவணையில் என்ன கொடுக்கப்படுகிறதோ,அதனைப் பெற்றுக் கொள்வது என்றும் நமது மனங்களை நாம் தயார் செய்து கொண்டோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றம் திடீரென இந்திய அரசியல் நிலையில் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு நாம் ஆலோசனை செய்யும் முன், இப்புதிய அரசியல் இயக்கத்தின் ஆணிவேர் வரை சென்று, இந்த இயக்கம் தோன்று வதற்கான காரணங்கள் எவை, அவற்றை நியாயப்படுத்தும் சூழ்நிலை என்ன, அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன ஆகியவை பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  இந்தப் பொருள் பற்றி எந்த முடிவும் மேற்கொள்ளும் முன், இவற்றைப் பற்றி ஆராய்ந்து பார்த்து மன நிறை வளிக்கும் பதில் ஒன்றை நீங்கள் காண வேண்டும். அண்மையில் தோன்றிய இந்த இயக்கத்தை (இது வன்முறைசார்ந்த இயக்கம் என்பது எனது கருத்து) ஆங் கிலேய பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதை உங்களால் காட்ட முடிந்தால்,  அதுவே நமது உடன டியான அரசியல் கண்ணோட்டமாகும். அந்த இயக்கத்தை ஆங்கிலேயப் பொது மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதை மெய்ப்பிக்க நான் இங்கே வந்துள்ளேன். அப்படியானால் வேறு ஒரு உடனடியான அரசியல் கண் ணோட்டத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
அயர்லாந்து நாட்டிற்கான சுய ஆட்சி
பெரியோர்களே, அயர்லாந்தில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து வருவது பற்றிய கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட் டிருந்த ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டில் நான் மாணவனாக இருந்துள் ளேன் என்பதால், சுயஆட்சி (ஹோம் ரூல்) என்னும் கூப்பாடு பற்றி நானும் நன்கு அறிந்துதான் உள்ளேன். அரசியல் களத்தில் நான் இருந்த அந்த அய்ந்து ஆறு ஆண்டு காலத்தில்  ஹோம் ரூலைத் தவிர வேறு எதனைப் பற்றியுமே கேள்விப்படவில்லை. எங்கு பார்த்தாலும் ஹோம் ரூல்தான்.  எந்த அரசியல் கூட்டமாக இருந்தாலும், வேறு என்ன பொருள்கள் பற்றி பேசப்பட்டாலும், அயர்லாந்துக்கான ஹோம் ரூல் பற்றிய பேச்சு அங்கு கட்டாயம் இருக்கும்.  எனவே இங்கிலாந்தில் அப்போது இருந்த ஹோம் ரூல் இயக்கம் என்பதைப் பற்றி நான் நன்கு அறிந்தவனாகவே இருந்தேன். ஆனால், இந்தியாவிலும் இதே கூச்சலைக் கேட்ட போது,  உண்மையில் அது நம்பிக்கையுடன் எழுப்பப்பட்ட கோரிக்கை என்று தொடக் கத்தில் என்னால் கருத இயலவில்லை. ஹோம் ரூல் என்னும் சுயஆட்சி அளிக்கப்படுவதற்கான நிபந்தனைகள், சூழ்நிலைகள் ஆகியவை பற்றி முழுமை யாக எவருமே அறிந்திருக்கவில்லை. அவ்வாறு அறிந்திருந்தால்,  அதற்கான குரல் எழுப்ப எவருமே முன் வந்திருக்க மாட்டார்கள். அயர்லாந்தில் இருந்த சூழ்நிலைகளும் கூட சுயஆட்சிக்கு ஏற்ற வையாக இருக்கவில்லை. ஆனால்,   நீண்ட நாட்களாக இருந்து பின்னர் நீக்கப் பட்ட அயர்லாந்து நாட்டு நாடாளுமன்றம் மீண்டும் தங்களுக்கு வேண்டும் என்பது ஒன்றே அயர்லாந்துக்காரர்களின் போராட்டம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அயர்லாந் தில் நீண்ட காலமாக நாடாளுமன்றம் இருந்து வந்தது. ஆனால் 1800 ஆம் ஆண்டு இணைப்புச் சட்டத்தின் மூலம் அது நீக்கப்பட்டது. இந்த இணைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் முதல், அயர்லாந்துக்காரர்கள் அமைதியாக இல்லாமல், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற அவர்கள் ஏதோ ஒரு வழியில் போராடிக் கொண்டு இருந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக் கத்தில் உண்மையில் அந்தப் போராட்டம் ஹோம் ரூல் இயக்க வடிவத்தைப் பெற்றி ருக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அவர்கள் ஹோம் ரூல் இயக்கத்தை உருவாக்கினர்.  கத்தோலிக் கர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களது இதர கோரிக்கைகளுக்கான போராட்டம் உண்மையில் அவர்களிடமிருந்து எடுக்கப் பட்ட நாடாளுமன்றம் தேவை என்ற ஹோம் ரூலுக்கான கோரிக்கையே ஆகும்.
இந்தியாவில் உள்ள சூழ்நிலைகள்
இந்தியாவைப் பொறுத்தவரை, ஹோம் ரூல் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரச்சினையாகும். நமக்கு இதற்கு முன் நாடாளுமன்றம் என்று ஒன்று இருந்த தில்லை. உண்மையான பொருளில் சுய ஆட்சி என்ற ஒன்றை நாம் பெற்றிருந் தோமா என்பதும் எனக்குத் தெரியாது. பண்டைய இந்து அரசர்களின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டு, அப்போதிருந்த அற்புதமான வசதிகளை, சலுகைகளை, வாழ்க்கை முறையை இன்றைய 20 ஆம் நூற்றாண்டின் ஏமாற்றம் அளிக்கும் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பேசுவதே ஒரு புதுமையான பாணியாக ஆகிவிட்டது. பண்டைய இந்தியாவில் இருந்த சுயஆட்சி முறையே சிறந்தது என்றும், அதனால் நாம் அதைக் கேட்கிறோம் என்று சில நேரங்களில் நமக்குக் கூறப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை, பண்டைய இந்தியாவில் நாம் கொண்டிருந்த சுய ஆட்சி என்னவென்றால், தனிப்பட்ட கிராமங்களில் இருந்த பஞ்சாயத்துகள் தான்.  இந்த பஞ்சாயத்துகளின் கூட் டமைப்பு என்ற எது ஒன்றும் உருவாகவே இல்லை. ஒரு கிராமத்திலிருந்து இன் னொரு கிராமத்துக்கு சரியான தகவல் போக்குவரத்து வசதிகள் அந்நாள்களில் இல்லாமல் இருந்ததே இதற்குக் காரணம். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்றதாக விளங்கியது. பண்டைய இந்தியாவில் இதைத் தவிர வேறு எந்தவகை சுய ஆட்சி முறையும் நடைமுறையில் இருந்ததாக அதிகார பூர்வ ஆவணங்கள் எவற்றிலும் எங்கும் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை.  வாதத்துக்காக, பண்டைய இந்தியாவில் சுய ஆட்சி முறை இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இன்று உங்களின் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து நீங்கள் வெகு தூரம் விலகி உள்ளீர்கள். சுயஆட்சிக்கான ஆற்றலை அவர்களிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதைக் காட்ட உங்களிடம் எதுவுமே இல்லை. அத் தகைய ஆற்றலை உங்கள் முன்னோர் களிடமிருந்து நீங்கள் பெற்றிருந்தால், உங்களது நகராட்சிகள் இன்னும் மேன்மையாக நிருவகிக்கப்பட்டு இருக்க வேண்டும். சிறு நகராட்சிகளைத் திறமை யாக நிருவகிக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு நீண்ட காலம் தேவையில்லை. இந்தியாவில், நமக்கு சுய ஆட்சி தேவை என்றால் அதற்கான பயிற்சியும் நமக்கு அவசியம் தேவை. அதற்கான தகுதியை நாம் பெற்று, அதற்குத் தேவையான நமது பண்புகளை வளர்த்துக் கொண்டு, அதன் பின் சுய ஆட்சியைத் தொடங்க வேண்டும். மேலும், ஒற்றுமையாக, எந்த வித வேறுபாடுகளும் அற்ற ஒரே ஒரு நாடாக உள்ள நாடு ஒன்றுக்குதான் சுயஆட்சி என்பதைத் தர இயலும். இந்த பாடத்தை அயர்லாந்து ஹோம் ரூல் இயக்கத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். ஒரு காலத்தில் நாடாளுமன்றம் இருந்த அந்த நாட்டிற்கு, சுயஆட்சி பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் இருந்த போதிலும்,  சுயஆட்சி பெறும் நிலையில் இருந்து அவர்கள் வெகு தொலைவில் உள்ளனர். ஏன்? அயர்லாந்தின் சில பகுதிகளில் குடியேறி வாழும் பிராட்டஸ்டன்ட் கிறித்துவர்கள் தவிர, மொத்த அயர்லாந்தினரும் கத்தோலிக் கக் கிறித்துவர்கள் என்பதுதான் இதன் காரணம். பெரியோர்களே, அந்த ஒரே ஒரு காரணத்துக்காக அயர்லாந் தினால் சுயஆட்சியைப் பெற இயல வில்லை என்பதை அறிந்து கொள்ளுங் கள். இங்கிலாந்து நாட்டின் மக்கள் அவையில் நடக்கும் விவாதங்கள் அனைத்தையும் பார்த்தால், பிராடஸ் டன்டுகள் வாழும் உல்ஸ்டர் பகுதியை ஆட்சி செய்யும் வகையில் கத்தோலிக்கர் வாழும் அயர்லாந்து சுய ஆட்சியைப் பெறும் என்று நான் கருதவில்லை. சுயஆட்சிக்குத் தேவையான மற்றொரு நிபந்தனையான இதுவும் நம் நாட்டிற்கு பொருந்துவதாக இல்லை. ஹோம் ரூலுக்கான மூன்றாவது தேவை என்ன வென்றால், தங்களது வாக்குரிமையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கல்வியிலும் அறிவிலும் மக்கள் முன்னேற்றம் பெற்ற நாடாக அது இருக்கவேண்டும் என்பது. நமது நாட்டின் மிகப் பெரும்பான்மையான மக்கள் அந்த அளவுக்கு முன்னேற்றம் பெற்றவர்களாக இல்லை. அதனால், சுய ஆட்சி பெறுவதற்குத் தேவையான சூழ்நிலைகள், நிபந்தனைகளை முழு மையாக அறிந்து கொண்ட எவரும், இந்தியாவுக்கு சுயஆட்சி தேவை என்று கூற முன்வரமாட்டார்கள்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

Sunday, March 6, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்


தொடர் கட்டுரை

நினைவு தெரிந்த காலம் முதல், இந்தப் பிரிவினரும், சமூகத்தினரும் அரசிடமிருந்து ஊக்கமும் ஆக்கமும் பெற்று வந்திருக்கவில்லையா? கல்வியைப் பொறுத்தவரையிலும் கூட அனைத்துப் பார்ப்பன ஜாதி மக்களின் பக்கமே வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கவில்லை. கல்வித் துறையில் தாமதமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும், பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் கல்வி கற்று முன்னேறத் தொடங்கினர். பலவிதங்களிலும் முன்னேற்றம் பெற்ற  நிலைகளில் இன்று அவர்கள் இருக்கின்றனர். அவர்களில் செட்டி, கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற சமூகத்தினர் விரைந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். மிகவும் பின்தங்கியிருந்த மக்களும்கூட தங்களைவிடப் பல விதங்களிலும் முன்னேற்றம் அடைந்தவர்களைப் போலவே,  புதிய காலத்துக்கு ஏற்ற உயர்நிலையை அடைவதற்குக் கடுமையாக உழைக்கத் தொடங்கி யுள்ளனர். கல்வி கற்று முன்னேற்றம் அடைவது என்ற உணர்வு அந்நியமானது என்றாலும், சில பார்ப்பனர் அல்லாத சமூகங்களின் முன்னேற்றம், பார்ப்பனர் களின் முன்னேற்றத்தைவிட நல்லிணக்கம் கொண்ட தாகவும், ஒரே பக்க முன்னேற்றம் அற்றதாகவும் அமைந்திருந்தது. பார்ப்பனப் பெண்கள், குறிப்பாக பார்ப்பன விதவைகளின் கல்வியில், பார்ப்பனர்கள் ஏதோ பின்தங்கிய வகுப்பினரைப் போலக் கருதி, என்ன காரணத்தினாலோ கல்வித் துறை தனி அக்கறை காட்டி வந்தபோதிலும், கல்வி கற்கும் பார்ப்பனப் பெண்களின் சதவிகிதத்தை விட கல்வி கற்கும் நாயர்கள் போன்ற பார்ப்பனர் அல்லாத சமூகப் பெண்களின் சதவிகிதம் அதிகமாகவே இருந்தது. பார்ப்பனர் அல்லாத மக்கள் இப்போது பெரு விருப்பம் கொண்டவர்களாகத் தோன்றாவிட்டாலும், வாழ்க்கையின் பல தொழில்களிலும், பல்வேறுபட்ட வழிகளிலும் ராஜதானியின் பொருளாதார மற்றும் ஒழுக்கநெறி முன்னேற்றத்தில் பயன் நிறைந்த வகையில் பெரும் பங்காற்றி வந்தனர். ஆனால் அவர்களும், அவர்களின் சகோதரர்களும் இதுநாள் வரை எந்த வித உதவியுமின்றி இருட்டில் தடுமாறிக் கொண்டிருந்தனர்.  அரசியல் அதிகாரம் மற்றும் அலுவலக செல்வாக்கினை பார்ப்பன ஜாதி மக்கள் பல வழிகளிலும் நுணுக்கமாகப் பயன்படுத்தி வந்ததே இதன் காரணம்.
பார்ப்பனர் அல்லாதவர்களுக்கென ஓர் அமைப்பு தேவை
கடுமையான நுண்ணறிவுப் போட்டி நிலவும் இன்றைய நாள்களில், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஒரு தனிப்பட்ட திறமை தேவை என்பதை நாம் மறுக்க வில்லை. ஆனால், மக்கள் தொகையில் ஒரு சிறு சதவிகிதம் உள்ள பார்ப்பன ஜாதி மக்கள்,  ஆங்கிலம் அறிந்த மக்களின் எண்ணிக்கையில், பார்ப்பனர் அல்லாத மக்களைவிட,  அதிக சதவிகிதம் உள்ளவர் களாக இருக்கின்றனர் என்ற  ஒரே காரணத்துக்காக, அனைத்து அரசுப் பணிகளையும் - பெரிய பதவியாக இருந்தாலும் சரி, சிறிய பதவியாக இருந்தாலும் சரி, உயர்ந்த பதவியாக இருந்தாலும் சரி, தாழ்ந்த பதவி யாக இருந்தாலும் சரி, - ஒரு சிறிய அளவிலாவது காணப்பட இயன்ற  திறமையும், அறிவும், பண்பும்  கொண்ட பார்ப்பனர் அல்லாத மக்களை ஒதுக்கி விட்டு, பார்ப்பனர்களே முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள  எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றனர் என்பதுதான் நமக்குப் புரியவில்லை.  தங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த எண்ணற்ற தடைகளையும் மீறி,    குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்த, கேள்வி கேட்க முடியாத உயர்ந்த நிலையை எட்டிய, பார்ப்பனர்களிலும் அவர்களுக்கு இணையான வர்களைக் காணமுடியாது என்னும் அளவிலான  நிருவாக, நீதித்துறை அதிகாரிகளையும், கல்வியாளர் களையும், வழக்குரைஞர்களையும், மருத்துவர்களை யும், மற்ற முக்கிய அதிகாரிகளையும் பார்ப்பனர்  அல்லாத சமூகங்கள் உருவாக்கியுள்ளன. தங்களது சுயமரியாதை உணர்வு மற்றும் அறிவொளி பெற்ற சுய நலன்களைப் பற்றிய அக்கறையினால் வழிநடத்தப் பட்ட அவர்களும் அவர்களது சமூகங்களும் எப்போதும் ஒற்றுமையாகச் செயல்பட்டிருந்தால், அரசு பணிகளுக் கான நியமனங்களிலும், அரசியல் அதிகாரத்திலும் கூட, பார்ப்பனர் அல்லாத மக்கள் அவர்களுக்கு உரிமையான உச்ச நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால் இன்று உள்ள நிலையில், தங்களுக்கென்ற திறமை வாய்ந்த தனி அமைப்புகள் எதனையும் அவர்கள் பெற்றிராத காரணத்தினாலும், நவீன ஆயுதமான விளம்பரத்தினைத் தாராளமாகவும்,  பயன் நிறைந்த வகையிலும் பயன்படுத்தக் கூடிய ஆவலோ, உணர்வோ அற்றவர்களாக அவர்கள் உள்ள காரணத் தினாலும் அவர்களின் நலன்கள், கோரிக்கைகள் முறை யான அளவுக்கு கவனத்தையோ, அங்கீகாரத்தையோ பெற்றிருக்கவில்லை.
நமக்குத் தேவையானது முறையான அரசியல் முன்னேற்றமே  அன்றி, அதிகாரபூர்வமற்ற முறையில் அரசமைப்புச் சட்டம் இயற்றுவது அல்ல இன்றைய அரசியலில் ஒரு நிலையான இடத்தைப் பெறுவதற்கான வழி இருந்தும் மனநிறைவடையாத இந்த ராஜதானியின் தீவிர அரசியல்வாதிகள், புதிய புதிய அரசியல் சலுகைகளை அவர்கள் கேட்டுப் பெறும் போதெல்லாம் இருந்ததைப் போன்ற மகிழ்ச்சியை இன்று  அடையாதவர்களாக இருக்கின்ற காரணத்தினால், அவர்கள் இப்போது ஹோம் ரூல் கேட்கின்றனர். இதுபற்றி ஒரு மறுப்புக் கருத்தை  உரிய காலத்தில் தெரிவிக்காமல் போனால், இந்தியா முழுவதிலும் ஹோம் ரூலைப் பெறுவதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்ற கருத்து ஏற்பட்டு விடும் என்று, நமது முந்தைய அனுபவங் களிலிருந்து அறிந்து கொண்ட நாம் அஞ்சுகிறோம். இந்த ஆடம்பரமான திட்டத்தினைப் பற்றிய அல்லது மாமன்னரின் சட்டப் பேரவையின் 19 உறுப்பினர்கள் மேதகு வைஸ்ராய் அவர்களுக்கு அளித்த திட்டம் பற்றிய விவரங்களுக்குள் விரிவாகச் செல்வது நமது நோக்கத் திற்குத் தேவையல்ல. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அதிகாரத்தையும், செல்வாக்கையும் குறைக்கும் நோக்கம் கொண்ட எந்த திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் நாம் ஆதரவாக இல்லை. அனைத்து இனம் மற்றும் பிரிவு மக்களிடையே சமநிலை நிலவச் செய்வதற்கும்,  ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும்,  ஒரு பொது நோக்கமோ தேசபக்தியோ அற்ற  மக்கள் குழுக்களாக இந்தியா விளங்காமல் தடுக்கத் தேவையான ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வினை மேம்படுத்தவும் ஆங்கிலேய ஆட்சியாளரால் மட்டுமே முடியும். சில குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்தமான தொழிலான, அதிகாரபூர்வமற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றும் செயலில் இருந்து நம்மை நாமே முற்றிலுமாக விலக்கிக் கொள்கிறோம். தொடர்ந்து அரசியல் முன்னேற்றத்திற்குத் தேவையான, மெய்ப்பிக்கப் படும் தகுதியின் காரணமாக உரிய காலத்தில் வழங்கப் படும் தாராளமான சலுகைகள் மற்றும் விவேகம் பெற்ற பொது மக்களின் நம்பிக்கையைப் பெற இயன்ற,  நன்கு விளக்கமளிக்கப்பட்ட ஒரு கொள்கையை பலமாக ஆதரிக்கிறோம் என்று நாம் கூறவேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் தொடக்க நாள்களில், காலம் சென்ற திருவாளர்கள் ஏ.ஓ. ஹ்யூம், டபிள்யூ.சி. பானர்ஜி, பத்ருதீன் தியாப்ஜி, எஸ்.ராமசாமி முதலியார், ரங்கைய நாயுடு, ராவ் பகதூர் சபாபதி முதலியார், சர்  சங்கரன் நாயர் கட்டுப்பாட்டிலும் வழிகாட்டுதலிலும் செயல்பட்டு வந்த காலத்தில், சென்னை ராஜதானி முழுவதிலும் இருந்த அறிவொளி பெற்ற பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் தங்களின் உளம் நிறைவான, ஆர்வம் நிறைந்த ஆதரவை அக்கட்சிக்கு அளித்து வந்தனர்.  அப்போது அந்தக் கட்சி பெயரிலும் வடிவத்திலும் இல்லாவிட்டாலும், உணர்விலும், நடைமுறையிலும் உண்மையான ஒரு தேசிய அமைப்பாக விளங்கியது. அதன் பழைய கொள்கைகளில்  சில இன்னும் அப்படியே மாறாமல் இருக்கின்றன. ஆனால் இன்று அதனை வழிநடத்திச் செல்பவர்களின் உணர்வு,  கடைப்பிடிக்கும் வழி முறைகள் அனைத்தும் இந்த ராஜதானியின் சிந்தனைமிக்க, சுயமரியாதை உணர்வு கொண்ட பார்ப்பனர் அல்லாத மக்களின் பாராட்டைப் பெற இயலாதவையாகவே உள்ளன. இந்த மண்ணில் தன் கால்களைப் பதிக்காத சமூக பிற்போக்குவாதிகளும், பொறுமையற்ற அரசியல் கோட்பாட்டளரும் காங்கிரஸ் கட்சியின் முழு கட்டுப் பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜனநாயகத்தைத் தனது நோக்கமாக இக்கட்சி கொண்டிருந்தாலும், கட்சியின் செயல்பாடுகளை பொறுப்புணர்வற்ற அதிகார அமைப் பினர் இன்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக் கின்றனர். இந்த நாட்டையும் மக்களையும் நன்கு அறிந்துள்ள, நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்பு ஏற்கத் தயாராக இருக்கும்,  சுய உணர்வும் தெளிவும் கொண்ட அரசியல் வாதிகள் காங்கிரஸ் இயக்கத்தின்மீது மீண்டும் தங்களின் ஆளுமையை ஏற்படுத்தி, நாட்டில் இன்று நிலவும் உண்மை நிலைக்கு ஏற்றவாறு கட்சியைச் சரியாக நடத்திச் செல்ல விரைவில் வழிகாட்டுவார்கள்.
எந்த ஜாதியின் ஆட்சியும் கூடாது
நம்மைப் பொறுத்தவரையில், நாம் முன்பே கூறியபடி, இன்றைய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமில்லாத, தேவை யில்லாத மாற்றங்களை அறிமுகப்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம். ஜாதி அல்லது வர்க்க ஆட்சியை வன்மையாகக் கண்டிக்க நம்மால் இயலாது. இந்தியாவின் சிறந்த உண்மையான நலனுக்காக, ஆங்கிலேயரின் நீதி மற்றும் சமவாய்ப்பு என்னும் கொள்கைகளின் அடிப் படையில் இந்திய அரசு தொடர்ந்து நடத்தப்படவேண்டும். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பலத்த ஆதரவையும், அக்கறையையும், ஆர்வத்தையும் தெரிவிப்பவர்களாக நாம் இருக்கிறோம்.  பல குறைபாடுகள் மற்றும் எப்போதாவது நேரும் குழப்பங்களை அது கொண்டிருந்தாலும், ஆங்கிலேய ஆட்சி பொதுவாக நியாயமாகவும், மக்கள்மீது அனுதாபத்துடனும் நடத்தப்படுவதாகும். இந்த நாட்டைப் பற்றி அவர்கள் இன்னும் அதிகமாக  அறிய நேரும்போது, பொது மக்களின் விருப்பத்திற்கு - குழப்பமற்ற தெளிவான விருப்பத்திற்கு - பெரிதும் மதிப்பளித்து, அது பற்றி முடிவு எடுப்பதற்கு முன், இதுவரை முன் எப்போதும் இல்லாத முறையில், வழக்கமான முறையில் அல்லாமல், ஒவ்வொரு ஜாதி, பிரிவு, சமூக மக்களின் நலன்கள் மற்றும் விருப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். சமூகப் புறக்கணிப்பு உணர்வும், கடுமையான ஜாதி, பிரிவு வேறுபாடுகளும் மறையத் தொடங்கும்போது ஏற்படும் சுயஆட்சியை நோக்கமாகக் கொண்ட முன்னேற்றம் மனநிறைவளிப்பதாக இருக்கும் என்பதில் அய்யமேதுமில்லை. ஆனால், இன்றைய நிலையில், உண்மை நிலையை உணர்ந்துள்ள அரசியல்வாதி, தன் முன் உடனடியாக உள்ள விஷயங்களைப் பற்றியே கவலைப்பட வேண்டும்.
சமஅதிகார விநியோகத்தின் அடிப்படையிலான சுய ஆட்சி
போர் வெற்றிகரமாக முடிந்த பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் முன் இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றிய பிரச்சினை வரும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. தனது அரசமைப்புச் சட்டம் அகண்டதாகவும், ஆழமானதாகவும் இருக்க வேண்டும் என்றும், தன் மக்கள் - ஒவ்வொரு பிரிவு, ஜாதி, சமூகத்தின்  பிரதிநிதிகளாக விளங்குபவர்கள் - நாட்டில் அவர்களுக்கு உள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை மற்றும் அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கையின்படி,  அதன் நிருவாக விஷயங்களில் மேலும் பயனுள்ள வகையில் ஆலோசனை கூற அனுமதிக்கப்படவேண்டும் என்றும்,  உள்நாட்டின் கொள்கை மற்றும் பொருளாதார நிலையைப் பாதிக்கும் விஷயங்களில் நிதிச் சுதந்திரமும், சட்டமியற்றும் சுயஅதிகாரமும் அளிக்கப்பட வேண்டும் என்றும்,  அதன் மக்களின் - ஆங்கிலேயக் குடிமகன்களான அவர்களின் -  சுயமரியாதை உணர்வுக்கு ஏற்ற,  எந்த சுயஆட்சி காலனி யாலும் ஆக்ரமிக்கப்பட்ட அதிகாரம், கவுரவத்திற்குச் சற்றும் குறையாத அளவில்- ஆங்கிலேயப் பேரரசின்கீழ் ஓரிடம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவதற்கான உரிமையை இந்தியா ஈட்டியிருக்கிறது.
பார்ப்பனர் அல்லாதாரின் உடனடியான கடமை
விழிப்புணர்வு பெற்று செயல்பட்டு வரும் பார்ப்பனர் அல்லாத சமூகத்தின் அறிவொளி பெற்ற  உறுப்பினர் களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள். அவர்களின் எதிர்காலம் அவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள பணி மிகவும் பெரியதும், அவசரமானதுமாகும்.  முதலாவதாக, இது வரை செய்ததைவிட அதிக எண்ணிக்கையில் தங்களின் பையன்களையும், பெண்களையும் அவர்கள் கல்வி பயிலச் செய்யவேண்டும். பொறுப்புணர்வு மிக்க பார்ப்பனர் அல்லாத சமூகத் தலைவர்களின் வழிகாட்டுதலில் சங்கங்கள் ஒவ்வொரு மக்கள் தொகை அதிகமாக உள்ள மய்யங்களிலும் தொடங்கப்பட்டு, திறமை மிக்க நிலையில் நிருவகிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள கல்வி வசதிகளை மேலும் சுதந்திரமாக அனுமதிக்க பல்வேறுபட்ட பார்ப்பனர் அல்லாத சமூகங்களைத் தூண்டுவதுடன், அத்தகைய வசதிகள் இல்லாத இடங்களில் வசதிகளை ஏற்படுத்தவும், ஏழையாக உள்ள அறிவுக்கூர்மையான மாணவர்களை - மற்றவர்களின் உதவியின்றி அவர்களால் படிக்க முடியாது என்ற காரணத்தால் -  படிக்க வைக்கத் தேவையான நிதியைத் தேடித் திரட்டவும் வேண்டும். மேலும்  நீண்ட காலத் தேவையான, தீவிரமான ஒரு கல்விக் கொள்கை பார்ப்பனர் அல்லாத மக்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். பார்ப்பனர் அல்லாத பிரிவு மக்கள் கல்வியில் முன்னேற்றம் பெறச் செய்வதற்கான சங்கங்களைத் துவக்குவதுடன்,  சமூக - பொருளா தார அமைப்புகளையும் தேவைப்படும் இடங்களில் தொடங்கி நன்கு நிருவகிப்பதுடன், தங்களின் கொள் கைகளை, கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லத் தேவையான நம் உள்ளூர் மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சொந்த நாளிதழ்களைத் தொடங்கி நடத்தவும் வேண்டும். பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் தங்களின் மவுனம் மற்றும் செயலற்ற தன்மையால், தங்களின் குரல் கேட்கப்படச் செய்யத் தவறிவிட்டனர். அவர் களை விட புத்திசாலிகளான மற்றவர்கள் தங்களின் சுயநலத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக் கொண்டதன் விளைவாக,  பார்ப்பன சக குடிமக்க ளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தாங்கள் அடைந் துள்ள இழிந்த நிலையையும், இழந்த வாய்ப்புகளையும் எண்ணி பார்ப்பனர் அல்லாதவர்களிடையே பெரும் அளவிலான மனநிறைவின்மை தோன்றியது. இதைப் பற்றி அரசு முழுமையாக அறிந்திருக்கவில்லை.  இந்த மனநிறைவின்மை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அரசின் கவனம் அதன் பக்கம் ஈர்க்கப்பட வேண்டும். ஆனால் பார்ப்பனர் அல்லாதவர்கள் முதலில் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து கல்வி, சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தையும் அகண்டதொரு வழியிலும்,  நீடிக்கும் வகையிலும்  அவர்கள் செய்ய வேண்டும். அதன் பின், ஆங்கி லேயக் குடி மக்களான அவர்களின் எதிர்கால வாழ்க்கை இன்றிருப்பதைவிட ஒளிமிகுந்ததாகவும், வளம் மிகுந்ததாகவும் இருக்கும். தேசக் கட்டமைப்பு என்று கூறப்படுவது, உயிர்த் தோற்ற வளர்ச்சியின் மெதுவான நடைமுறையில், ஒவ்வொரு சமூகமும் பிரிவும் குறிப்பிட்ட காலத்தில் தங்களின் கடமைகளை  முதலாவதாகவும் முதன்மையானதாகவும் செய்வது என்பது ஒரு கடினமான மாபெரும் பணியாகும்; தேவையானதுமாகும். இந்தியாவில், எந்த வழியிலும் எதிர்காலத்தில் வரும் சில நாள்களில், ஒவ்வொரு சமூகமும் தங்களின் சமூக அமைப்பின் நிலையை சரி செய்து கொள்ள வேண்டும்; அப்போதுதான், உயர்ந்த சமூக நோக்கங்களுக்காக மற்ற சமூகங்களுடன் சேர்ந்து செயலாற்றும்போது,   வெறும் தலைகளை எண்ணும் மந்தைக் கூட்டமாக இல்லாமல், சுதந்திர மற்ற - உதவுவதற்கு எவரும் அற்ற - இனமாக இல் லாமல், சுயமரியாதை உணர்வுள்ள - மிகவும் முன் னேற்றம் அடைந்த சமூக அமைப்பாக செயல்பட்டு, முற் றிலும் சமத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக் குவது என்ற பொது நோக்கத்தை எட்டுவதற்காக விருப்பத்துடன் இணைந்து செயலாற்ற முடியும்.
- பி.தியாகராய செட்டி
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)
நன்றி:விடுதலை 06-03-2011

Sunday, February 27, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917-ஆம் ஆண்டு செயல்பாடுகள்


தொடர் கட்டுரை
பார்ப்பனர் அல்லாத மக்களின் பிரகடனம் –
பொது வேலை வாய்ப்புகள்

ராஜதானியின் பொதுப் பணிகளில் பார்ப்பனர் களும், பார்ப்பனர் அல்லாதவர்களும் இருந்த நிலை பற்றி விரிவாக பொதுப் பணி ஆணையத்தின் முன் 1913 ஆம் ஆண்டில், தற்போது சென்னை நிருவாகக் கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும்  மதிப்பிற்குரிய சர் அலெக் சாண்டர் கார்டியூ சாட்சியம் அளித்தார்.  அவர் ஒன்றும் பார்ப்பனர் அல்லாத வர்க்கு ஆதர வானவர் அல்ல. இந்திய சிவில் பணிக்கான தேர்வுகளை ஒரே நேரத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடத்தினால், ஒரு சிறிய கட்டுப்பாடு மிகுந்த  ஜாதியான பார்ப்பனர்கள் இந்தப் பணியை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்பதை எடுத்துக் காட்டும் நோக்கத்துடன் மட்டுமே அவர் இவ்வாறு சாட்சியம் அளித்தார்.  1892-க்கும் 1904-க்கும் இடையே நடத்தப்பட்ட மாகாண சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் பார்ப்பனர்கள் அதாவது 95 விழுக்காடு பார்ப்பனர்கள் என்று அவர் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது.  மைசூர் ராஜ்ஜியத்தில், கடந்த 20 ஆண்டு காலத்தில் நடத்தப்பட்ட  மைசூர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில், காலிப் பணியிடங்களில் 85 விழுக்காடு இடங்களைப் பார்ப்பனர்களே பெற்றுள் ளனர். இதே கால கட்டத்தில், சென்னையில் நடந்த உதவிப் பொறியாளர் நியமனத்துக்கான போட்டித் தேர்வில்  17 பார்ப்பனர்களும், 4 பார்ப்பனர் அல்லா தாரும் வெற்றி பெற்றனர்.

இதனைப் போன்ற முடிவுகளே கணக்குத் துறைக்கு நடந்த போட்டித் தேர்வுகளின் முடிவுகளும் இருந்தன.  அக்கால கட்டத்தில் இருந்த 144 உதவி ஆட்சியர்களில் 77 பேர் பார்ப்பனர்கள், 30 பேர் பார்ப்பனர் அல்லாத இந்துக் கள், எஞ்சியவர்கள் முஸ்லிம்களாகவும், இந்தியக் கிறித்தவர்களாகவும், அய்ரோப்பியர்களாகவும், ஆங்கிலோ இந்தியர்களாகவும் இருந்தனர். போட்டித் தேர்வுகள் இல்லாத பணிகளிலும், எடுத்துக்காட்டாக ராஜதானியின் நீதித்துறை சார்புப் பணியில், பெரும்பாலான நியமனங்கள் பார்ப்பனர்களின் கைகளில் இருந்தன. 1913 இல் இருந்த 128 நிரந்தர மாவட்ட முன்சீப்புகளில் 93 பேர் பார்ப்பனர்கள், 25 பேர் பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், எஞ்சியவர்கள் முஸ்லிம்களாகவும், இந்தியக் கிறித்துவர்களாகவும், அய்ரோப்பியர்களாகவும், ஆங்கிலோ இந்தியர்களாக வும் இருந்தனர் என்பதை சர் அலெக்சாண்டர் கார்டியூ தெரிவித்தார். இதிலிருந்தும், இதனைப் போன்ற மற்ற புள்ளிவிவரங்களிலிருந்தும், இந்திய சிவில் சர்வீஸ் பணிக்கான திறந்த போட்டி இந்தியாவில் நடத்தப் படுகிறது என்றால், அது முற்றிலுமாக பார்ப்பனர் களின் ஆதிக்கம் நிறைந்ததாகவே இருக்கும் என்ற முடிவுக்கும், பார்ப்பனர் அல்லாத பிரிவு மக்கள் உண்மையில் அதில் இடம் பெறாதவர்களாகவே இருப்பார்கள் என்ற முடிவுக்கும் அவர் வந்தது இயல்பானதே.

சென்னை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப் பணிகளில் நிலவிய நிலைக்கு ஆணையத்தின் கவனத்தை அவர் ஈர்க்க வில்லை என்றாலும்,  இப்போது இருப்பதுபோலவே  முன்பும் அரசுப் பணிகளில் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கம் இருந்தது. புரவலர்களின்  பரிந்துரையின் பேரில் நியமனம்  செய்யப்படும் அரசு சார்நிலைப் பணிகள் பற்றிய புள்ளி விவரங்களை அவர் விரித் துரைக்கவில்லை. இந்தப் பணிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயமானது.

அரசின் பல்வேறுபட்ட துறைப் பணிகளில் தற்போது நிலவும் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு  புள்ளிவிவரங்களுக்குள் செல்ல வேண்டும் என்பதில்லை.  ஆனால்  அதிக அளவிலான இந்தியர்கள் நியமனம் செய்யப்படும் இந்த ராஜதானியைப் பற்றியும், எந்தக் கொள்கையின் அடிப்படையில் அவை விநியோகிக்கப் படுகின்றன என்பது பற்றியும் ஆணையத்தின் கவனத்தை ஈர்ப்பதை நம்மால் தவிர்க்க இயலவில்லை. மேதகு ஆளுநரின் நிருவாகக் குழுவில் இந்தியர்கள் நியமிக்கப்படத் தொடங்கியது முதல்,  தொடர்ந்து மூன்று கனவான்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் பார்ப்பன வழக்கறிஞர்கள் ஆவர். உயர்நீதிமன்றத்தில் இருந்த அய்ந்து நீதிபதிகளில் நான்கு இந்து நீதிபதிகளும் பார்ப்பனர்கள் ஆவர். 1914 இல் உருவாக்கப்பட்ட அரசு செயலாளர் பதவியிலும் உடனடியாக பார்ப்பனர்தான் நியமிக்கப்பட்டார்.  வருவாய்த் துறைக் கழகத்தின் இந்திய செயலாளரும் ஒரு பார்ப்பனர்தான்.  மாகாண சிவில் சர்வீசின் இந்தியர்களுக்கான இரண்டு மாவட்ட ஆட்சியர் பணியிடங்களும் முகமதியர் அல்லாதவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டியது எப்போதும் பார்ப்பனர்களுக்கே சென்றுள்ளன. பொது அமைப்புகள்

அரசுப் பணிகளில் என்ன நிலை நிலவியதோ, அதே நிலைதான் உள்ளாட்சி மற்றும் இதர பொது அமைப்புகளி லும் நிலவி வந்தது. வாக்காளர்களில் பெரும்பாலானவர் கள் பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில், பார்ப்பனர் அல்லாதவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்ப தில்லை. அதன் காரணம் பார்ப்பனர் அல்லாதவர்கள் ஒற்றுமையாக ஒரு வேட்பாளரை ஆதரிக்காமல் பல வேட் பாளர்களை ஆதரிப்பதும், ஆனால் பார்ப்பனர்கள் ஒற்றுமையாக தங்கள் பார்ப்பன இனத்தைச் சேர்ந்த வேட்பாளரை ஆதரிப்பதும்தான்.  இந்திய கல்வியாளர்கள் பெரும்பான்மையாக உள்ள சென்னை பல்கலைக் கழகத்தில்  இவர்கள் பல இந்தியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.  பார்ப்பனர்கள் எப்போதுமே பார்ப்பனர் அல்லாத ஒருவரை உள்ளாட்சிக்கான சட்ட மேலவை உறுப்பினராக அனுப்பியதே இல்லை. அதைப் போலவே பார்ப்பனர் அல்லாத எந்த இந்தியரும், அவர் எவ்வளவுதான் உயர்ந்த தகுதி படைத்தவராக இருந்தாலும் சரி,  அய்ரோப்பிய கல்வியாளர்களின்  ஆதரவு இன்றி, பல்கலைக் கழகத்துக்கான சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பே இருந்ததில்லை.

1924 நவம்பரில் நடைபெற்ற சட்ட மேலவைக் கூட்டம் ஒன்றில்,  உறுப்பினர் திரு. குன்னிராமன் நாயரின் துணைக் கேள்விக்கு,  பல்கலைக் கழகத்தின் பதிவு செய்யப்பட்ட 650 பட்டதாரிகளில், 452 பேர் பார்ப்பனர்கள், 12 பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், 74 பேர் இதர சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 1907 முதல் நடத்தப்படும் சட்ட மேலவைக்கான தேர்தல்களில் தேர்ந் தெடுக்கப்பட்ட 12 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்ற 11 பேரும் பார்ப்பனர்களே என்றும்  பதிலளிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில ஆண்டு கால அனுபவம் பெற்ற கல்வியாளர்களை பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கும் முறை 1907 -க்கு முன்பு அனுமதிக்கப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை. அதே போல் பார்ப்பனர்களே பெரும் பாலானவர்களாக இருக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து எப்போதுமே பார்ப்பனர் அல்லாத ஒருவர், அவர் எவ்வளவுதான் திறமை பெற்றவராக இருந்தாலும் சரி,  சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதே இல்லை. திறந்த வழி தேர்தல் என்றழைக்கப்படும் சென்னைப் பல் கலைக் கழக செனட் அவையின் தேர்தலிலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. மாமன்னரின் சட்ட அவை, உள்ளூர் சட்ட மேலவை மற்றும் நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்தும் கட்டுக்கோப்பும், ஒற்றுமையும் மிகுந்த பார்ப்பனர் இனத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்ததால்,  இதுவரை விவரிக்கப்பட்டு வந்த  உண்மையே இத்தேர்தல்களிலும் நிலவி வந்தது. எப் போதாவது, நியாய உணர்வு கொண்ட ஆட்சியாளர், இந்த சமமற்ற தன்மையைச் சரி செய்யும் நோக்குடன், இதுவரை பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களைச் சேர்ந்த ஒருவரை எந்த பொது அமைப்புக்காவது நியமனம் செய்து விட்டால் போதும், பார்ப்பனப் பத்திரிகைகள் அவரைக் கடுமையாக விமர்சித்தன. 

அண்மையில், தனது சட்ட மேலவைக்கு சிலரை நியமனம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக மேதகு பென்ட்லாண்ட் பிரபு பார்ப்பனர்களின் பத்திரிகைகளில் எவ்வாறு விமர்சிக்கப் பட்டார் என்பதை பார்ப்பனர்களின் எதிர்ப்பு மனப்பான்மைக் கும், நியாயமற்ற விமர்சனத்துக்கும் எடுத்துக் காட்டாகக் கூறலாம். ஏறக்குறைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்  பொறுப்புமிக்க இந்த அவைகளைத் தவிர, சென்னையிலும், மாவட்டங்களிலும்  தற்போதுள்ள அரசியல் அமைப்புகளி லும் நடைபெறுகின்ற பொறுப்பாளர்கள் தேர்தல்கள் பற்றிய புள்ளி விவரங்களும் இதே கதையைத்தான் கூறும். அண்மையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு, சென்னை ராஜதானியிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேரில் ஒரு பார்ப்பனரல்லாத  இந்துவைத் தவிர மற்ற 14 பேரும் பார்ப்பனர்களே என்ற  ஒரு நிகழ்வை இதற்கு எடுத்துக்காட்டாகச்  சுட்டிக் காட்டலாம். என்றாலும், போருக்குப் பின் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது போன்ற மிகவும் முக்கியமான விஷயங்களில்,  காங்கிரஸ் கட்சியின் நிருவாகக் குழுவான இந்தக் கமிட்டியின் முடிவே, 4 கோடி பார்ப்பனர் அல்லாத மக்களைக் கொண்ட இந்த பெரிய, முக்கியமான ராஜதானியின் ஒருமித்த கருத்து என்ற தோற்றம் உலக அரங்கின் பார்வைக்குக் காட்டப்படுகிறது. அரசின் சலுகைகளும், அரசால் அளிக்கப்படும் உரிமைகளும் தாராளமாக வழங்கப் படுவது அதிகரிக்க அதிகரிக்க, அவற்றைப் பெற்று அனுபவிக்கும் இந்தக் கட்டுப்பாடும், ஒற்றுமையும் மிகுந்த பார்ப்பன ஜாதி இன்னும் கட்டுப்பாட்டுடனும், ஒற்றுமையுடனும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

பார்ப்பனர்  அல்லாதவர்களும், கல்வியும்
இந்த ராஜதானியின் மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் மிகக் குறைந்த அளவினராக இருந் தாலும் கூட, பல்கலைக் கல்வியில் மற்ற அனைத்து சமூகத்தினரையும் விட மிகவும் முன்னேற்றமான ஒரு நிலையை அடைந்து இருக்கின்றனர் என்னும் வாதம், உயர்ந்த அளவிலான அரசுப் பணி நியமனங்களைப் பெற்றிருப்பதற்கும், அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதற்கும்  ஆதரவாகக் கூறப்படுவதாகும். யாரும் இதனை மறுக்கவில்லை.

 இந்து ஜாதிகளில் மிக உயர்ந்ததும், மிகவும் புனிதமானதும் என்று கருதப்படுவது இந்த பார்ப்பன ஜாதி.  பழைய காலத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய பழக்க வழக்கங்களின் அடிப்படையிலான அவர்களது பண்டைய பண்பாட்டின் தன்மையும், அந்த நம்பிக்கையும் படிப்படியாக அவர்கள் எழுதிய வேத நூல்களிலும், வாய்மொழிப் போதனைகளிலும் சேர்க்கப்பட்டு மக்களின் மனதில் ஊன்றப்பட்டது. பார்ப்பனர்கள்தான் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் தெய்வத்தால் உருவாக்கப்பட்ட தெய்வீக ஆற்றல் படைத்தவர்கள் என்றும், அவர்களின் துணையின்றி ஆன்மா கடைத்தேற முடியாது என்றும், அவர்களின் துணையுடன்தான் உடலுழைப்பின் கொடுமையிலிருந்து விடுதலை பெற முடியும் என்றும் கூறப்பட்டது.  ஆங்கிலேயர் ஆட்சி அமைந்த புதிய சூழ்நிலையில், முந்தைய காலங்களில் நடந்து கொண்டது போலவே,  ஆட்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் தங்களை மாற்றிக் கொள்வதற்கு, அதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான பணிகளையும், சலுகைகளையும் பெற்று பயன் பெறுவதற்கு மற்ற சமூகத்தினரைவிட பார்ப்பனர்களுக்கு இவையெல் லாம் உதவி செய்தன.

 எவ்வாறாயினும், மண்ணில் நிலவி வந்த பாரம்பரியம் மற்றும் மரபுவழி வந்த நலன்கள், அவற்றுடன் இணைந்த சமூக கவுரவம் ஆகியவற்றைவிட ஆங்கிலக் கல்வி கற்றவர்களுக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு ஏற்பட்டது; ராஜதானியின் பொருளாதார நிலையை நிதானமாக மேம்படுத்தி வந்த அமைதி நிறைந்த தொழில்களைச் செய்யும் கணக்கிலடங்கா எண்ணற்ற மக்களின் பங்களிப்புக்கு எந்தவித மரியாதையும் இல்லாமல் போய்விட்டது.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)
நன்றி:விடுதலை 27.02.2011