Saturday, June 23, 2012

நினைவு நாள்: 18.07.1919 திராவிட இயக்க இலெனின் டி.எம். நாயர்


புலவர் குறளன்பன்
கல்விக்களம்: கேரள மாநிலம் பாலக்காட்டை ஒட்டித் திருத் என்றொரு சிறு நகரம்.. அதன் அருகில் உள்ள ஊர் தாரவாட். அங்கு பிறந்தவர் தான் நம்முடைய மாதவன் நாயர் அவர்கள்.
அவருக்குப் பிறப்பும், பள்ளிப் படிப்பும் மட்டும்தான் கேரளம். மற்றபடி அவர் கல்லூரிக் கல்விக்கு நாடிய இடம் சென்னை மாநிலக் கல்லூரி. பின்னர் மருத்துவம் கற்கப் போன இடம் இங்கிலாந்து. கற்றதும் திருப்பி வராமல் இங்கிலாந்தில் கால் கொண்டு மருத்துவமனை ஒன்றை நடத்திப் பெரும் பொருள் ஈட்டிய கருத்தாளர்.
காதல் களம்: தன்னுடைய தாயகமாய் அவர் கருதிய சென்னைக்குத் திரும்பிய ஆண்டு 1897. பண வெறி மருத்துவராய் வாழ்ந்த அவர் பொதுப் பணி புரிய விரும் பினார் பேராய (காங்கிரஸ்) கட்சியில் புகுந்தார்.
பேராயக் கட்சியின் பார்ப்பனத் தலைமை வழக்கம் போல திராவிடரான நாயரையும் புறக்கணித்தது. தியாகராயர் திராவிட இயக்கத்திற்குத் திரும்பியது போல நாயரும் திரும்பினார்.
வாழ்வுக்களம்: வகுப்புவாரி உரிமை: கோவையில் 19.8.1917ஆம் நாள் திராவிடர் இயக்க மூத்த அமைப்பான தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் நடத்திய மாநாட்டில் நம்முடைய நாயர் முன்னிலை யராய் நின்று கருத்துரையாற் றினார்.
சென்னை வந்த மாண்டேகு செம்சுபோர்டு அவர்கள் (15.12.1917) தியாகராயர் தலைமை தாங்கிய வரவேற்புக் குழுவில் இடம் பெற்று வகுப்பு வாரிப்படி கல்வி, வேலையில் ஒதுக்கீடு தருமாறு வலியுறுத்தி விண்ணப்பித்தார்.
மாண்டேகு செம்ஸ்போர்டு ஆரியச் சார்பு அன்னிபெசண்டு, சி.பி. இராமசாமி அய்யர் பேச்சில் மயங்கிச் சாய்ந்ததை அறிந்து பிரிட்டன் பாராளுமன்றம் சென்று மாண்டேகு செம்ஸ் போர்டு அறிக்கைக் கருத்தாடலில் (விவாதம்) பங்கேற்று வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தி வந்தார்.
நடுவுநிலை: சென்னை நகராட்சியில் ஒரு தீர்மானம், கொண்டு வந்தவர் தியாகராயர். அவர்நம் நாயரின் நண்பர். நயன்மைக் (நீதி) கட்சியில் கூட்டுப் பணியாளர். அப்படிப்பட்ட அவர் கொண்டு வந்த தீர்மானம். திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவில் குளத்திற்கு வரி வாங்காமல் தண்ணீர் தர வேண்டும் என்பதாகும்.
வருவாய் கோவில்களுக்கு நிறைய வரு கிறது. வரி கட்டுவதுதான் முறை என்று கூறி நாயர் மறுத்து விட்டார். நண்பருக்காக நயன்மையை விட்டுத் தராத நடுவு நிலையராய் நின்றார்.
போலி பத்தி: மதச் சார்பில் லாத பகுத்தறிவாளராய் இங்கிலாந்திலிருந்து தென் நாட்டிற்கு வந்தவர். பிறகு மனம் மாறிப் பிரம்ம ஞான சபையின் தலைமைப் பொறுப்பேற்றவர். அதன்பின் கண்ணன் மறுபிறப்பு எடுக்கப் போவதாகக் கதை அளந்தவர். அளவில்லாமல் பொய்யை விற்றுப் போலியாய் பத்தி (பக்தி) வேடமிட்டு வாழ்ந்து வந்த பெண்மணி அன்னி பெசண்ட் ஆவார்.
சமுதாய வீதியில் குறிக்கோள் இல்லாமல் கும்மாளம் போட்டு அலைந்த அவரின் அழுக்குச் செயற்பட்டினை ஆங்கில நூல் ஒன்றின் வாயிலாகத் தோலுரித்துக் காட்டிய வீறு நம் தா.மா. நாய ருக்கே உரிய தனித்திறனாகும்.
வெற்றிக்களம்: தலைநகர் சென்னையில் நம்முடைய பெரியார் திடல் அமைந்துள்ள வேப்பேரிப் பகுதியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் 20.11.1916 ஆம் நாள் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தில் தா.மா. நாயர் தென்னாட்டு பிராமணர் அல்லாதார் நலனுக்காக என் உயிரையும் தருவேன் - என்று தெரிவித்தபடி இலண்டன் பாராளுமன்றம் கூட்டுக் குழு விடம் வேண்டுகோள் முன் வைக்க விழைந்த காலத்தில் (18.07.1917) வாழ்க்கை நிறைவுச் சூழலுக்குத் தள்ளப்பட்டுத் தன் உயிரைத் தர நேரிட்டு விட்டது.
அரசியல், பொருளியல், குழுகாயவியல் என்னும் மூன்று தளங்களிலும் அவர் ஆற்றிய பணி அனைத்தும் மிக மிக அருமையானவை.
அவர் போலும் அஞ்சாமை, நடுவு நிலைமை உடைய அறிவுப் பணியாற்ற நாம் நம் இளையரை எழுப்பி அமைவோமாக.
                                                                  விடுதலை 23-6-2012 ஞாயிறுமலர்

யஜுர் வேதத்தில் பசுவைக் கொன்று யாகம்!


சமஸ்கிருதத்தில் யாகத்துக்குப் பெயர்    தமிழில் பொருள்
1. கோஸவம்    பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்
2. வாயவீய ஸ்வேதபக    வாயு வேதனைக்காக வெள்ளைப் பசு யாகம்
3. லத்ஸோப கரணம்    கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.
4. அஷ்டதச பசு விதானம்    பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்
5. ஏகாதசீன பசுவிதானம்    பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்
6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா    நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்.
7. உபாகரண மந்த்ரம்    யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்.
8. கவ்ய பசுவிதானம்    பசு மாட்டைக் கொன்று நடத்தும் யாகம்
9. ஆதித்ய தேவ தாகபசு    சூரிய தேவதைக்கு பசு யாகம்
- மத விசாரணை நூல். பக்கம் 79,80 -சிவானந்த சரஸ்வதி
பசுவதைத் தடைச் சட்டம் கோரும் பார்ப்பனீயமே! இதற்கென்ன பதில்?

நுழைவுத்தேர்வு நீக்கத்தால் பெற்ற பலன்


1984இல் இதே நாளிலே.... 
திராவிடர் கழக வரலாற்றுப் பாதையில் அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் 
முத் திரை பதிக்கப்பட்டதாகவே இருக் கும்.
இந்நாளில்தான் 1984இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு திணித்த நுழைவுத் தேர்வு ஆணையினை எரிக்கும் போராட்டம் 23 இடங்களில் நடத்தப் பட்டது.
எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தவரையில் திராவிடர் இயக்கத்தின் சமூக நீதி சிந்தனை யில் மிகவும் பின் தங்கி இருந்தார் என்றே கூற வேண்டும்.
அதன் தீய விளைவு தான் - அவரின் நுழைவுத் தேர்வு திணிப்பும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டில் வருமான வரம்பும் கொண்டு வந்தது.
நுழைவுத் தேர்வு என்னும் மாயையை மக்கள் மத்தியில் தோலூரித்துக் காட்டியது கழகம்.
திராவிடர் கழகத்தின் அழுத்த மான தொடர் நடவடிக்கைகளால் அம்மையார் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது நுழை வுத் தேர்வு ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் சொன்ன ஆலோசனைப்படி கல்வி நிபுணர் குழு அமைத்து அவர்களின் ஆலோசனைப்படி அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தால், ஆணை நீதிமன்றத்தால் ரத்தாகி இருக்காது.
கலைஞர் அவர்கள் டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால் உச்சநீதி மன்றம் வரை அந்த ஆணை நிலை பெற்றது. தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் நுழைவுத் தேர்வு கிடை யாது.
ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய கபில்சிபல் அய்ந்து நட்சத்திர கலாச்சாரத்தின் சுகவாசி! அவர் விடும் மூச்சுக்கூட மூன்று நட்சத்திர தகுதியை உடையதாக இருக்கக் கூடும்.
அவர் ஒரு கனவைக் கண்டிருக் கிறார். இளங்கலை முதல் (பி.ஏ., பி.எஸ்.சி., உட்பட) அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்த வேண்டு மாம். இது அவர் கனவாம்.
கனவான்களின் கனவுகளுக் கெல்லாம் காலம் காலமாக ஒடுக் கப்பட்ட இந்த நாட்டு மக்கள் தானா கிடைத்தார்கள்?
போட்டித் தேர்வுக்கும், நுழைவுத் தேர்வுக்கும் இடையே உள்ள வேறு பாட்டைக்கூட புரிந்து கொள்ளாத படிப்பு எதற்கு பிரயோசனம்?
நுழைவுத் தேர்வை நடத்தி னாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெ டுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகி யோர் அடித்துச் சொன்னார்களே பிரபல வழக்கறிஞராக இருந்த கபில்சிபலுக்கு இது ஏன் புரிய வில்லை?
என்ன செய்வது! என்ன படித் திருந்தாலும், மேல் நாடு சென்று மாட்டுக்கறி தின்று இருந்தாலும் பார்ப்பனர்களின் மனப்பான்மை என்ற ஒன்று இருக்கிறதே - அது ஜென்மத்தோடு பிறந்த ஜீவ சுபாவ மாக அல்லவா போய்விட்டது!
ஒடுக்கப்பட்ட மக்கள் தோள் களில் கிளர்ச்சி  எரிமலைகளைத் தூக்குவதன் மூலம்தான் ஆதிக்க புரிகளின் அஸ்திவாரத்தை அஸ்த மனம் செய்ய முடியும்.
ரகசியம் புரிகிறதா?
2010ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் திறந்த போட்டியில் இடம் கிடைக்கப் பெற்ற விவரம் இதோ:
மொத்த இடங்கள் 460
இதில் பிற்படுத்தப்பட்டோர்    300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்    72
தாழ்த்தப்பட்டோர்    18
முசுலிம்கள்    16
உயர்ஜாதியினர்    54
(இந்த 54-இல் பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதி யினரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது).
200-க்கு 200 மதிப்பெண் பெற்றோர் -    8.
இதில் பிற்படுத்தப்பட்டோர்  - 7
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 1
உயர்ஜாதியினர் பூச்சியம்
நுழைவுத் தேர்வு இல்லாமல் நடத்தப்பட்டதால்  சமூக நீதியின் சிகரத்தில் நம் மக்கள் கொடியேற்றினர்.
இந்த நிலையை, நிலைகுலையச் செய்யத்தான். வஞ்சக நோக்கோடு - சூழ்ச்சி வலையோடு பின்னப் படுவதுதான் நுழைவுத் தேர்வு - எச்சரிக்கை! எச்சரிக்கை!
                                                                                                                                                        - விடுதலை 22.6.2012