Saturday, June 23, 2012

நினைவு நாள்: 18.07.1919 திராவிட இயக்க இலெனின் டி.எம். நாயர்


புலவர் குறளன்பன்
கல்விக்களம்: கேரள மாநிலம் பாலக்காட்டை ஒட்டித் திருத் என்றொரு சிறு நகரம்.. அதன் அருகில் உள்ள ஊர் தாரவாட். அங்கு பிறந்தவர் தான் நம்முடைய மாதவன் நாயர் அவர்கள்.
அவருக்குப் பிறப்பும், பள்ளிப் படிப்பும் மட்டும்தான் கேரளம். மற்றபடி அவர் கல்லூரிக் கல்விக்கு நாடிய இடம் சென்னை மாநிலக் கல்லூரி. பின்னர் மருத்துவம் கற்கப் போன இடம் இங்கிலாந்து. கற்றதும் திருப்பி வராமல் இங்கிலாந்தில் கால் கொண்டு மருத்துவமனை ஒன்றை நடத்திப் பெரும் பொருள் ஈட்டிய கருத்தாளர்.
காதல் களம்: தன்னுடைய தாயகமாய் அவர் கருதிய சென்னைக்குத் திரும்பிய ஆண்டு 1897. பண வெறி மருத்துவராய் வாழ்ந்த அவர் பொதுப் பணி புரிய விரும் பினார் பேராய (காங்கிரஸ்) கட்சியில் புகுந்தார்.
பேராயக் கட்சியின் பார்ப்பனத் தலைமை வழக்கம் போல திராவிடரான நாயரையும் புறக்கணித்தது. தியாகராயர் திராவிட இயக்கத்திற்குத் திரும்பியது போல நாயரும் திரும்பினார்.
வாழ்வுக்களம்: வகுப்புவாரி உரிமை: கோவையில் 19.8.1917ஆம் நாள் திராவிடர் இயக்க மூத்த அமைப்பான தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் நடத்திய மாநாட்டில் நம்முடைய நாயர் முன்னிலை யராய் நின்று கருத்துரையாற் றினார்.
சென்னை வந்த மாண்டேகு செம்சுபோர்டு அவர்கள் (15.12.1917) தியாகராயர் தலைமை தாங்கிய வரவேற்புக் குழுவில் இடம் பெற்று வகுப்பு வாரிப்படி கல்வி, வேலையில் ஒதுக்கீடு தருமாறு வலியுறுத்தி விண்ணப்பித்தார்.
மாண்டேகு செம்ஸ்போர்டு ஆரியச் சார்பு அன்னிபெசண்டு, சி.பி. இராமசாமி அய்யர் பேச்சில் மயங்கிச் சாய்ந்ததை அறிந்து பிரிட்டன் பாராளுமன்றம் சென்று மாண்டேகு செம்ஸ் போர்டு அறிக்கைக் கருத்தாடலில் (விவாதம்) பங்கேற்று வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தி வந்தார்.
நடுவுநிலை: சென்னை நகராட்சியில் ஒரு தீர்மானம், கொண்டு வந்தவர் தியாகராயர். அவர்நம் நாயரின் நண்பர். நயன்மைக் (நீதி) கட்சியில் கூட்டுப் பணியாளர். அப்படிப்பட்ட அவர் கொண்டு வந்த தீர்மானம். திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவில் குளத்திற்கு வரி வாங்காமல் தண்ணீர் தர வேண்டும் என்பதாகும்.
வருவாய் கோவில்களுக்கு நிறைய வரு கிறது. வரி கட்டுவதுதான் முறை என்று கூறி நாயர் மறுத்து விட்டார். நண்பருக்காக நயன்மையை விட்டுத் தராத நடுவு நிலையராய் நின்றார்.
போலி பத்தி: மதச் சார்பில் லாத பகுத்தறிவாளராய் இங்கிலாந்திலிருந்து தென் நாட்டிற்கு வந்தவர். பிறகு மனம் மாறிப் பிரம்ம ஞான சபையின் தலைமைப் பொறுப்பேற்றவர். அதன்பின் கண்ணன் மறுபிறப்பு எடுக்கப் போவதாகக் கதை அளந்தவர். அளவில்லாமல் பொய்யை விற்றுப் போலியாய் பத்தி (பக்தி) வேடமிட்டு வாழ்ந்து வந்த பெண்மணி அன்னி பெசண்ட் ஆவார்.
சமுதாய வீதியில் குறிக்கோள் இல்லாமல் கும்மாளம் போட்டு அலைந்த அவரின் அழுக்குச் செயற்பட்டினை ஆங்கில நூல் ஒன்றின் வாயிலாகத் தோலுரித்துக் காட்டிய வீறு நம் தா.மா. நாய ருக்கே உரிய தனித்திறனாகும்.
வெற்றிக்களம்: தலைநகர் சென்னையில் நம்முடைய பெரியார் திடல் அமைந்துள்ள வேப்பேரிப் பகுதியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் 20.11.1916 ஆம் நாள் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தில் தா.மா. நாயர் தென்னாட்டு பிராமணர் அல்லாதார் நலனுக்காக என் உயிரையும் தருவேன் - என்று தெரிவித்தபடி இலண்டன் பாராளுமன்றம் கூட்டுக் குழு விடம் வேண்டுகோள் முன் வைக்க விழைந்த காலத்தில் (18.07.1917) வாழ்க்கை நிறைவுச் சூழலுக்குத் தள்ளப்பட்டுத் தன் உயிரைத் தர நேரிட்டு விட்டது.
அரசியல், பொருளியல், குழுகாயவியல் என்னும் மூன்று தளங்களிலும் அவர் ஆற்றிய பணி அனைத்தும் மிக மிக அருமையானவை.
அவர் போலும் அஞ்சாமை, நடுவு நிலைமை உடைய அறிவுப் பணியாற்ற நாம் நம் இளையரை எழுப்பி அமைவோமாக.
                                                                  விடுதலை 23-6-2012 ஞாயிறுமலர்

No comments:

Post a Comment