Sunday, June 16, 2013

பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் - அவதூறுக்குப் பதிலடி! - 4

1) 1921-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினருக் கும் பார்ப்பனரல்லாத ஜாதியினருக்கும் கலவரம் மூண்டபோது நீதிக்கட்சி, அரசாங்கமும் அதன் தலைவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலையை எடுத்தனர் என்று தோழர் அருள் கூறுகிறார் அல்லவா? மேலே நாம் எடுத்துச் சொன்னதிலிருந்து பார்ப்பனர் அல்லாத ஜாதியினர், முஸ்லிம், ஆதி திராவிடர் ஆகிய தொழிலாளர்கள் ஜாதி வித்தியாச மின்றி பணியாற்றியதை, போராடி வந்ததைப் பிளவு படுத்தியது யார் - எம்.சி.ராஜா என்று ஆவணங்கள் இன்றும் பேசிக்கொண்டு இருக்கின்றன. இவரால் தான் கலவரமே மூண்டது அவரே ஒப்புக் கொண்டு நாளடைவில் வருந்தினார். இதற்கு என்ன சொல்லு கிறார் அருள்?
நீதிக்கட்சியின் அதிகாரம் என்னவென்பதை விளக்கி இருக்கின்றோம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எப்படி சும்மா இருக்க முடியும்? களத்தில் இறங்கி சமரசத்திற்கு முயற்சியை மேற்கொண்டார்கள். இதை எதிரான நிலை என்று சொல்லுவது சரியா? பிறகு, எதிரான நிலை எனத் தோழர் அருள் எதனைக் குறிப்பிடுகிறார்? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பல சலுகைகள், ஆணைகளை வழங்கிய கட்சி நீதிக்கட்சி ஆயிற்றே!
பி அண்டு சி  ஆலை வேலை நிறுத்தம் நடக்கும்போது எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் தானே இருந்தார். இந்த நிலையை அவர் மேற்கொள்ள ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஓ.தணிகாசலம் செட்டியார் வேலை நிறுத்தம் பற்றியும், கலவரம் பற்றியும் சட்டமன்றத்தில் பேசிய அளவுக்கு பொதுமை உணர்ச்சியோடு எம்.சி.ராஜா நடந்து கொள்ளவில்லையே அது ஏன்? என்பதை அருள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.
நீதிக்கட்சி வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் ஆனால் உண்மையான ஆட்சியாளரான ஆங்கிலேயர்கள்தான் எதிர்த்தனர் என்றும் தோழர் அருளே அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். இதிலிருந்து தெரிவது என்ன? வேலை நிறுத்தத்திற்கு எதிரானவர்கள் ஆங்கிலேயர்கள், அவர்கள் தான் வேலை நிறுத்தத்தின்போது ஜாதி பார்க்காமல் போர்க் குணத்தோடு இயங்கியவர்களை - ஆதிதிராவிடர் களைப் பிரித்தார்கள். அதற்குத் துணை நின்றார் எம்.சி.ராஜா என்பது தானே நிகழ்மை. குஹஊகூ இதனால் தானே கலவரம் நிகழ்ந்தது. குழப்பம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடந்தது, 6+2=8 பேர் மாண்டனர். எயிலிஸ் கமிட்டியை அரசாங்கம் போட்டது. கலவரம் நடந்த பகுதிக்கு கவர்னர் லார்டு வெலிங்டன் வந்தார். நீதிக்கட்சியினர் நிதி தண்டியபோது ரூ. 750/- வழங்கினார். இவ்வளவும் ஏற்பட்டது யாரால்? நீதிக் கட்சியாலா? அக்கட்சியின் இதரத் தலைவர்களாலா? அருள்தான் இதனை விளக்க வேண்டும்.
2) கட்டுரையாளர் அருள் பிட்டி.தியாகராயர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் அவர், தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது என்றும் அந்த அறிக்கை இந்துவிலும், திராவிடனிலும் வெளிவந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த அறிக்கையை நம்மால் பார்க்க முடியவில்லை. 1921-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி விரிவான ஆவணங்களாக நமக்குக் கிடைப்பவை திரு. வி.க.வின் வாழ்க்கைக்குறிப்புகளும் ஆ.சிவசுப்பிரமணியனும், ஆ.இரா.வேங்கடாசலபதியும் எழுதியுள்ள பின்னி ஆலை வேலை நிறுத்தம் - 1921 எனும் நூலுமாகும். இவ்விரு நூல்களில் நன்றாகப் பிரச்சினை அலசப்பட்டும், ஆராயப்பட்டும் இருக்கின்றன. இதுவன்றி நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் - ஓர் ஆய்வு? எனும் நூலிலும் வேலை நிறுத்தம் பற்றி மேலோட்டமும் கூறப்பட்டு இருக்கிறது. சிங்காரவேலர் எழுதியுள்ள கட்டுரையில் அப்போதைய நிலைமைகள் மட்டும் விளக்கப்பட்டன. எம்.சி.ராஜா தமது நூலில் தமக்கு சாதகமானதைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். இப்படி பல ஆவணங்கள் இருந்தாலும் இது குறித்த சிறந்த ஆவணமாகத் திகழுவது பின்னி வேலை நிறுத்தம் - 1921 எனும் நூல் மட்டுமே! அந்நூலில் இவ்வேலை நிறுத்தம் எல்லாக் கோணங்களிலும் பார்க்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்நூலில் அருள் குறிப்பிடும் பிட்டி. தியாகராயரின் அறிக்கை மட்டும் காணப்படவில்லையே - அது ஏன்? அவர்கள் இருவரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் அல்லர்.
எயிலிஸ் கமிட்டியின் அறிக்கையின்படி 400-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பாதிக் கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு அரசின் சார்பாக முகாம் அமைக்கப்பட்டு உதவி இருக்கிறார்கள் என்றும் ஆவணங்கள் பேசுகின்றன. இவ்வளவு அவலங்களை யும் நீதிக்கட்சித் தலைவர்களான பிட்டி.தியாகராயர், ஓ.தணிகாசலம் செட்டி, டாக்டர் சி.நடேச முதலியார் கலவரப் பகுதிகளைச் சென்று பார்வையிடுகிறார்கள். அப்பகுதியில் உள்ள டாக்டர் சி.நடேச முதலியாரின் உறவினர் வீடு பாதிக்கப்பட்டதால் தான் நீதிக்கட்சித் தலைவர்கள் வந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். எது எப்படி இருப்பினும் நீதிக்கட்சித் தலைவர்கள் கலவரப்பகுதியில் சென்று பார்த்து இருக்கிறார்கள். நிதி திரட்டி இருக்கிறார்கள், உதவி இருக்கிறார்கள் கலவரம் நிற்க வேண்டும் - வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தியவர் களாக இருந்திருக்கிறார்கள் என்பது மிக வெளிப் படையாகத் தெரிகிறது.
மேலும் அருள் குறிப்பிட்டு இருக்கிற பிட்டி. தியாகராயர் அறிக்கையைப் படித்து பார்த்தோம். அய்யத்திற்கு இடமின்றி ஆம் (டிக உடிரசளந) என்று ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவ்வறிக்கை அவருடையதாக இருக்க முடியாது என்றே கருத இடமிருக்கின்றது. ஏனென்றால் ஒரு சில ஆவணங்களில் இவ் வேலை நிறுத்த கலவரம் குறித்து அரசுக்கு பிட்டி. தியாராயர் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார்கள். அக்கடிதமும் இன்ன தென்று நமக்குத் தெரியவில்லை. அதில் வேலைக்குச் செல்லும் புதியவர்களை அப் புறப்படுத்த சொன்னதாகக் கூறுகிறார்கள்.  திரு. வி.க.வோ, ம.சிங்காரவேலரோ பிட்டி. தியாகராயரின் அறிக்கையைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் வேலை நிறுத்தம் பற்றி பிட்டி. தியாகராயர் நிகழ்த்திய இராஜதந்திரப் பேச்சைப் பற்றி திரு. வி.க. குறிப்பிடுகிறார்.
அப்பேச்சில் ஓர் இடத்தில் அப்புறப்படுத்துதல் என்ற சொல் வருகிறது. ஆனால் நகரத்தை விட்டே ஆதி திராவிடர்களை ஓட்டும்படியாக அதில் இல்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்தே அதனை அவர் கூறுகிறார். தியாகராயரின் பேச்சு குறித்து திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில்,
வேலை நிறுத்தம் எப்படி முடிந்தது? ராஜா ஸர், இராமசாமி முதலியார் பங்களா வெளியில் கூடிய கூட்டத்தில் சர்.பி.தியாகராய செட்டியார் நிகழ்த்திய இராஜதந்திரச் சொற்பெருக்கில் மூழ்கித் தொழிலாளர்கள் பலர் வேலைக்குத் திரும்பினர். சர்.பி.செட்டியார், மாதங்கள் பல ஆயின. இனிப் பிடிவாதம் வேண்டாம், உங்களுக்கு இராஜ தந்திரம் வேண்டும். மில்களில் புதிய ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள். புது ஆட்கள் தொழிலைப் பயின்று விடுவார்களாயின் உங்களுக்குத் தொல்லை விளையும். போலீஸ் காவலையும், இராணுவக் காவலையும் கடந்து அவர்களைத் தடுத்தல் இயலாது. ஆனால் அவர்களை ஒரு வழியில் அப்புறப்படுத்தல் கூடும். நீங்கள் எல்லோரும் வேலைக்குச் செல்ல உறுதி கொண்டால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ஆதலால் நீங்கள் உள்ளே போங்கள், நன்மையே விளையும், சங்கம் சாகாது என்று பேசிய பேச்சு அவ்வேளையில் தொழி லாளர்க்கு உசிதமாகத் தோன்றிற்று, சர்.பி.செட்டியாரின் ஜோசியம் பெரிதும் பலித்தது என்று எழுதியிருக்கிறார். திரு.வி.க. இந்து ஏடு வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் கஸ்தூரி ரங்கன் அய்யங்கார் ஆதரவு தந்தார் என்றும் எழுதியிருக்கிறார். ஆக நமக்குத் தெரிந்த அப்புறப்படுத்தல் என்பது தியாகராயரின் பேச்சில் தொழிலாளர் நலன் விழைந்தே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திராவிட இயக்கத்தினர் வரலாற்றை மறைப் பதில்லை. எங்களுக்கு அகப்பகைவர்களும் உண்டு. புறப் பகைவர்களும் உண்டு, அவர்களின் விமர்சனங்களினால் அவை மறைக்கப்படுவது உண்டு.
3) தோழர் அருள் அவரது கட்டுரையில் 1921 வேலை நிறுத்தத்தின் போது 14,000 தொழிலாளர்கள் இருந்த தாகத் தெரிவித்து இருக்கிறார். அக்காலக்கட்டத்தில் இரு ஆலைகளிலுமாக தொழிலாளர்கள் எத்தனை பேர் பணி யாற்றினார்கள் என்பது குறித்து நாம் மேலே குறிப்பிட்டு இருக்கின்றோம். அதன்படி 1921-இல் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது தொழிலாளர்களின் எண்ணிக்கை 14,000 அல்ல; சுமார் 11,000 மட்டுமே! மேலே புள்ளி விவரத்தை ஒப்பு நோக்கிப் பார்த்துக் கொள்க!
4) தோழர் அருள் சொல்லுகிற மற்றொரு செய்தியைப் பார்ப்போம். அவர் கூறுகிறார்:-
இந்த சூழலில் 1921 ஜூன் 28 அன்று இரவு புளியந்தோப்பு சேரி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் பெரும் மோதலாக வெடித்தது. புளியந்தோப்பு கலவரம் 1921 என்று அழைக்கப்படும் இந்த கலவரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், மற்றவர் களும் மோதிக்கொண்டனர். சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. மூன்றுபேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் (இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருக்கலாம்). போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசின் காவல்துறையினர் நடத்திய துப் பாக்கிச் சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆறு பேரும் பார்ப்பனரல்லாத இந்துக்கள்.
புளியந்தோப்பில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சுமார் மூன்றாயிரம் பேர், அங்கிருந்து ஆங்கிலேய அரசாங்கத்தால் வெளியேற்றப் பட்டு வியாசர்பாடி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
கே.ஓ.அந்தோணி சிறப்புக் கடமையாற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் அறிக்கை ஜூன் 29/1921-லிருந்து ஜூலை 4-ஆம் தேதி வரை கலவரத்தைப் பற்றி வெளி யிடப்பட்டது. இதில் ஆதிதிராவிடர்களின் குடிசைகள் 269, சக்கிலியர் குடிசைகள் 61, ஓட்டர் குடிசைகள் 17, ஜாதி இந்துக்கள் குடிசைகள் 28, முகமதியர் குடிசைகள் 43 என மொத்தம் 418 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. எந்தெந்த ஜாதியினர் என்னென்ன ஆயுதங்களை வைத்து இருந்தனர் என்ற விவரத்தையும் அப்போதைய நீதித் துறையின் ஆவணங்கள் நமக்கு இன்றும் கூறிக்கொண்டு இருக்கின்றன. இவையன்றி கலவரத்தினால் இறந்த வர்கள் பற்றிய குறிப்பில் ஆதி திராவிடர் எவரும் இல்லை. தோழர் அருள் குறிப்பிட்டிருப்பது போல மூன்று பேர் வெட்டிக் கொல்லப்படவும் இல்லை. ஆதிதிராவிடர் எவரும் இறக்கவும் இல்லை. இறப்பு, காயம் அடைந்தவர்களின் விவரம் வருமாறு:
1921 ஆம் ஆண்டு ஆக்ஸ்டு 29-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் இறந்தனர். இவர்களின் சடலம் மறுநாள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இடுக்காட்டில் திரு. வி.க., சிங்கார வேலர், சக்கரைச் செட்டியார் போன்றோர் உரையாற்றினர். இவை தான் கலவரங்களின் போது நடைபெற்ற இழப்புகளாகும்.
தோழர் அருள் வியாசர்பாடி முகாம்களில் 3000 பேர் இருந்ததாக எழுதி இருக்கிறார், அது தவறு. ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த முகாமில் 1669 பேர் இருந்தனர். இவர்கள் 446 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஜூலை 2-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 2-ஆம் தேதி வரை முகாம் வாழ் மக்கள் அனைவருக்கும் இலவச உணவு, துணிமணிகள் வழங்கப்பட்டன. இதற்காக ரூ. 2885 - 3 - 0 செலவழிக்கப்பட்டது. அகதிகள் முகாம் அமைப்பதற்காக ரூ. 2849 = 13 - 0 செலவழிக்கப்பட்டது. 1922 ஜூன் வரை உணவு வழங்குவதற்காக ரூ. 12,495. 11 - 5 செலவாகி இருக்கிறது. இவ்வளவு அன்பு ஆதிதிராவிடர்கள் மேல் ஆங்கிலேய அரசுக்கு ஏன் ஏற்பட்டது? பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தை உடைத்ததற்காக! எம்.சி.ராஜாவின் வழிகாட்டு தலுக்காக! இந்நிலையில் நீதிக்கட்சி அரசு என்ன செய்ய முடியும்? அதன் தலைவர்கள் என்ன செய்ய முடியும்? இயன்றதைச் செய்ய அவர்கள் தவறவில்லை.
5) எம்.சி.ராஜாவின் சட்டமன்றப் பேச்சைப் பற்றி அருள் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் பேச்சும் குற்றச்சாட்டுகளும் சட்டமன்றத்தில் எடுபடவில்லை. இதர நீதிக்கட்சி தலைவர்களின் பேச்சு சிறப்பாக இருந் தது. ராஜா தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். நீதிக்கட்சியின் மேல் சொந்த பகையை வைத்துக் கொண்டு தனது ஜாதியாரை அவர் பலி கொடுத்து அவர்களுக்கும் அவர் கெட்ட பெயரையே சம்பாதித்துக் கொடுத்தார். அது சரித்திரமாகி விட்டது. அவரே ஒப்புக்கொண்ட அதை  அருள் ஒன்றும் செய்ய முடியாது.
காந்தியார், சென்னைக்கு வந்தது பற்றியும் அவரிடம் ஆலை பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டது பற்றியும் தோழர் அருள் கூறியிருக்கிறார். ஆம், காந்தியார் 1921 செப்டம்பர் திங்களில் வந்தார். செப்டம்பர் 16-ஆம் தேதி தொழிலாளர்களிடையே பேசினார். வழக்கம் போல் ஒத்துழையாமை, அகிம் சையைப் பற்றி பேசினாரேயன்றி ஆலைத் தொழி லாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரி டையாகவோ, தெளிவாகவோ எந்தக் கருத்தையும் எடுத்துக் கூறவில்லை. வேலை நிறுத்தம் செய்தவர்கள் சரணடைந்து விட்டதாக அருள் தெரிவிக்கிறார். பிட்டி. தியாகராயரின் பேச்சை ஏற்று தொழிலாளர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொண்டார்கள். ஆட்சியாள ருக்கு துணை நின்ற எம்.சி.ராஜா போன்றவர்களை வைத்துக் கொண்டு எந்தத் தொழிலாளர்கள் இலக்கை அடைய முடியும்? இன்னும் பல செய்திகள் இது குறித்து சொல்ல வேண்டி இருந்தாலும், அது இங்கே - அருள் எழுப்புகிற பிரச்சினைக்கு பொருந்தாது.
தோழர் அருள் அல்லது அருள் போன்றவர் களுக்கு நாம் சொல்வதெல்லாம் இதுதான்:-
நீதிக்கட்சிக்காரர்கள் ஜாதி இந்துக்கள் தான்; பெருந்தனக்காரர்கள்தான்! ஆனால் மனிதா பிமானிகள். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாத வர்கள். பிரித்தாளப்பட்டபோது உண்மையின் பக்கம் நின்றவர்கள் அவர்கள். அரையாட்சி அதிகாரத்தில் எதுவும் செய்யாத நிலையில் இருந்தனர். எதையாவது செய்து பிரச்சினையை அமைதிக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டினார்கள். அவர்கள் எரிந்து கொண்டு இருக்கையில் எண்ணெய்யை வார்க்க வில்லை, ஆதித்திராவிடர்களை ஒழிக்க நினைத்தா பார்ப்பனர் அல்லாதார் தொகுப்பிற்குள் அவர்களை நீதிக்கட்சியினர் கொண்டு வந்தார்கள்? நேரிய பார்வையானாலும் இயல்பாகவே ஒரு பகுதி, பார்வைக்கு உட்படாதது போல பல சிக்கல்கள் நாட்டில் இருப்பதைப் பார்க்க வேண்டும்.
நாம் அடிக்கடி ஒரு கருத்தை வலியுறுத்தி வருவோம். வாழ்நிலையிலிருந்து தான் சிந்தனை தோன்றுகிறது. அந்தச் சிந்தனை பல பரிமாணங்களைத் தோற்றுவிக் கிறது. அப்படித் தோன்றியதுதான் அரசியல் இயக்கங்கள்; நீதிக்கட்சி முதலானவை! அதன் பிறகு தான் தேவையும், மறந்துபோன சேர்த்துக் கொள்ள மறந்தவைகள் பலவும் விவாதத்திற்கு வருகின்றன. இவை இணைத்துக் கொள்ளப்பட்டு அரசியல் இயக்கங்கள் அதனதன் கொள்கைகளுக்கு ஏற்ப முன்நகர்வை இயல்பாக பெறுகின்றன. இவற்றில் சர்ச்சைகள் எழும்; சண்டைகளும், இழப்புகளும் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கும். செய்தவைகள் நியாமானதாகத் தெரியும். பின்னர் அவற்றைப் பரிசீலிக்கிறபோது நேர்ந்தவைகளுக்காக வருத்தப்பட வேண்டி இருக்கிறது. அப்படித்தான் 1921-ஆம் ஆண்டு பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பல அனுபவங்களை அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் நமக்கு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அருள் போன்றவர்கள் தெரிந்து கொண்டால் போதுமானது.
(நிறைவு)
விடுதலை 16.6.2013 

1 comment:

  1. விடுதலை பத்திரிகையின் பதிலடிக்கு ஒரு பதிலடி: தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானதா திராவிடர் இயக்கம்?

    http://arulgreen.blogspot.com/2013/06/rejoinder-viduthalai-Pulianthope-riots-1921.html

    ReplyDelete