Showing posts with label பார்ப்பனீயம். Show all posts
Showing posts with label பார்ப்பனீயம். Show all posts

Saturday, June 23, 2012

யஜுர் வேதத்தில் பசுவைக் கொன்று யாகம்!


சமஸ்கிருதத்தில் யாகத்துக்குப் பெயர்    தமிழில் பொருள்
1. கோஸவம்    பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்
2. வாயவீய ஸ்வேதபக    வாயு வேதனைக்காக வெள்ளைப் பசு யாகம்
3. லத்ஸோப கரணம்    கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.
4. அஷ்டதச பசு விதானம்    பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்
5. ஏகாதசீன பசுவிதானம்    பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்
6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா    நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்.
7. உபாகரண மந்த்ரம்    யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்.
8. கவ்ய பசுவிதானம்    பசு மாட்டைக் கொன்று நடத்தும் யாகம்
9. ஆதித்ய தேவ தாகபசு    சூரிய தேவதைக்கு பசு யாகம்
- மத விசாரணை நூல். பக்கம் 79,80 -சிவானந்த சரஸ்வதி
பசுவதைத் தடைச் சட்டம் கோரும் பார்ப்பனீயமே! இதற்கென்ன பதில்?

Saturday, October 22, 2011

தமிழ் மக்களிடையே குருட்டு நம்பிக்கை இன்னும் ஒழியவில்லையே

அறிவுக்கொத்து என்ற நூலில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் எழுதியது 

நம் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குறை என்னவென்றால் எதனையும் ஆய்ந்து, ஓர்ந்து பார்க்கும் குணம் இல்லாமையேயாகும். ஒருவர் கல்வியறிவு ஆராய்ச்சியுடைய பெரியவ ராயிருந்தாலும் அவரைப் பத்துப் பேர் கொண்டாடா விட்டால் அவரை நம்மனோர் தாமுங்கொண்டாட மாட்டார், அதுவேயுமின்றி, அவரைப் பத்துப்பேர் பொறாமையினாலோ, அல்லது வேறு காரணத்தாலோ இழித்துப் பேசக் கேட்டால், அது தகுமா? தகாதா என்று ஆய்ந்து பாராமல் தாமும் அவரை உடனே இழித்துப் பேசி விடுவர்; அவர்க்குத் தீங்கு இழைப்பர்.
இனி, மற்றொருவர் கல்வியறிவு ஆராய்ச்சிகள் சிறிதும் இல்லாராயினும் அல்லது அவை சிறிதேயுடையரா யினும், பத்துப் பேர் அவர்பால்  வைத்த பற்றினாலோ, அல்லது அவர்பால் தாம்பெறும் ஏதேனும் ஒரு பயன் குறித்தோ அவரைக் கொண் டாடுவாராயின் அவர் எதற்காக அவரைக் கொண்டாடுகின்றார், நாமும் அவரை ஏன் கொண்டாட வேண்டு மென்று சிறிதேனும் ஆராய்ந்து பாராமல், உடனே அவரைக் கண்கால் தெரியாமற் கொண்டாடி விடுவர்; அக்கொண் டாட்டத்தால் வருந்துன்பங்களையும் தாம் அடைவர். பெரும்பாலும் , நாட்டவர் உண்மையறிவு ஆராய்ச் சிகள் உடைய பெரியாரைக் கொண் டாடுவதும் இல்லை; அவரால் தாம் அடைவதற்குரிய பெரும் பயன் அடைவதுமில்லை. வெளியினுக்கும் வெற்றாரவாரமும் உடையாரைப் பின்பற்றித் தமது நலனையும், தம் நாட்டவர் நலனையும் இழந்து விடுவதே அவர்க்கு இயற்கையாய்ப் படிந்துவிட்டது.
மேல்நாட்டவர் இயல்பு
இனி, மேல் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குணம் என்ன வென்றால், எவர் எதைச் சொன்னாலும், எவர் எதை எழுதினாலும், அவ்வப்பொருளின் இயல்புகளைத் தம்மாலான மட்டுஞ் சோம்பாமலாராய்ந்து பார்த்து எது தழுவத் தக்கதோ அதைத் தழுவுவர்; தழுவத் தகாததை விலக்குவர் வெறும் வெளி மினுக்கையும், வெற்றாரவாரத்தை யுங்கண்டு அவர் ஏமாந்து விடுவதில்லை. அறிவிலும், ஆராய்ச்சியிலுமே அவர்கள் தமது காலத்தைப் பயன்படுத்தி வருவ தால், அவர்கள் பால் வீணான பேச்சு களும் நிகழ்வதில்லை. பிறர்பாற் குற்றங்கள் இருந்தாலும் அவற்றை அவர்கள் ஆராய்வதில்லை; பிறர்பா லுள்ள குணங்களை மட்டும் ஆராய்ந்து அவற்றுக்காக அவரைப் பாராட் டுவதுடன்,அவரால் தாமும் உலகமும் பயன்படுதற்கான ஒழுங்குகளெல்லாஞ் செய்தவர். அதனால் மேல் நாட்டவரில் நற்குணமும், நல்லறிவும், நன் முயற்சியும் உடையவர்கள் சீருஞ் சிறப்பும் எய்தித் தாமுந்தம்மைச் சேர்ந்தவரும் வறுமையும் கவலையுமின்றி உயிர் வாழப் பெற்று, நாடோறும் ஆயிரக்கணக்கான புதுமைகளையும், ஆயிரக்கணக்கான பொறிகளையும் (இயந்திரங்களையும்) ஆயிரக்கணக்கான தொழிற்சாலை களையும், ஆயிரக்கணக்கான கல்விச் சாலைகளையும்,ஆயிரக்கணக்கான சொற்பொழிவு மண்டபங்களையும், ஆயிரக்கணக்கான கலையறிவுக் கழகங்களையும் இன்னும் இவைபோல் நம் சொல்லளவில் அடங்காத பலப்பல நலங்களையும் தாமிருக்கும் நாடு களிற்பரவச் செய்துவருவதோடு தாம் செல்லும் பிற நாடுகளிலும் அந்நலங் களையும் பரப்பி வருகின்றனர்.
நம்நாட்டவர் தன்மை
இனி, நம் நாட்டவர்களுக்கோ அறிவாராய்சியில்லாமையோடு, ஒற்றுமைக் குணமும் இல்லை; பிறர்பால் அருள் இரக்கமும் இல்லை, தமக்குத் தம் மனைவி மக்களும், நெருங்கிய உறவி னருமே உரியரெனவும், மற்றையோ ரெல்லாந் தமக்கு வேறானவரெனவும், தாமும் தம்மினத்தவரும் நன்றாயி ருத்தலே தமக்கு வேண்டும், நம்மவ ரல்லாத பிறர் எக்கேடு கெட்டா லென்ன, எத்தெருவே போனாலென்ன எனவும் நினைந்து, பிறர்நலத்தைச் சிறிதும் கருதாதவர்களாய் இருக் கின்றனர்.
தன்னலங் கருதும் இப்பொல்லாத எண்ணத்தால் இத்தமிழ் நாட்ட வர்க்குட் பிரிந்திருக்கும் அளவிறந்த சாதிகளும், அவற்றால் விளைந்திருக்கும் அளவிறந்த வேற்றுமைகளும் கணக் கிட்டுச் சொல்லல் இயலாது. நாலு பேர் ஒன்று சேர்வார்களானாற் சாதிபேச்சு; பெண் கொடுக்கல், வாங்கல் பற்றிய பேச்சும்; அவன் சாதிகெட்டவன், அவனுக்கும் நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது எங்கள் சாதியில் ஒடித்தாற்பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்காரரோடுதான் நாங்கள் கலப்பது வழக்கம் மற்றவர்கள் கையில்  தண்ணீர் கூட வாங்க மாட்டோம், என்னும் பேச்சும் அதை விட்டாற் பொருள் தேடும் வகைகளைப் பற்றிய பேச்சும் அதுவும் விட்டால் தமக்கு பொருள் சேருங்காலத்தைப் பற்றியும், நோய்தீரும் நேரத்தைப் பற்றியும், மணம் ஆகும் நாளைப் பற்றியும் எந்த இடத்திற் போனால் குறி கேட்கலாம், எந்த தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் இவை கைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா? கருப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிட லாமா? சுடலைமாடனைக் கும்பிட லாமா? என்னுஞ்சிறு தெய்வச்சிற்றுயிர்க் கொலைக் கெடும் பேச்சும் தனக்குப் பகையானவனைப் பல வகையால் இழித்துத் தன்னைப் பல வகையால் உயர்த்திச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண் கின்றோம் புகை வண்டிகளிலும், இந்தப் பேச்சே, பொதுக்கூட்டங்களிலும் இந்தப் பேச்சே கோயில்களிலும் இந்தப் பேச்சே, குளக்கரைகளிலும் இந்த பேச்சே.
பசி எடுத்த வேளையில்......
ஆனால், மேல்நாட்டவர்களிலோ எதையும் ஆராய்ந்து பார்ப்பவரும் எழுதுபவரும், ஆராயுங்கழகங்களும் அவர்களாலும் எழுதி வெளியிடப்பட்ட, வெளியிடப்படுகின்ற நூல்களும் நாள்  வெளியீடுகள், அவை தம்மைக் கற்பாருங் கற்பிப்பாரும் இவ்வகை கட்கெல் லாங்கோடி கோடியாகத் தமது பொருளை வழங்குவாரும் எண்ணிக் கையிலும் அடங்குதல் இல்லை. மேல் நாட்டவர்கள் பசியெடுத்த வேளையில் எந்த இடத்தில் எந்த உணவு கிடைக் கின்றதோ அதனைப் பெற்று மகிழ்ச்சி யோடு உண்பர். தமது வாழ்க்கைத் துணைக்கு எந்த நாட்டில் எவர் இசைந்தவராய்த் தெளியப்படு கின்றனரோ, அவரை மணந்து கொள்வர். உடம்பைப் பற்றிய இவ்விரண்டு குறைகளையும் இங்ஙனம் எளிதிலே நிரப்பிக் கொண்டு அதற்கு மேல் அவற்றில் தம் கருத்தைச் செலுத் தாமல், தம் அறிவு ஆராய்ச்சிகளை மென்மேற்பெருக்குவதிலும், நாடோறும் புதிய புதிய ஆற்றல்களையும், புதிய புதிய பொறிகளையும், புதிய புதிய உண்மை களையும் கண்டுபிடிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலுமே தமது கருத்தை ஓயாமற் செலுத்தி வருகின்றனர்.
ஆங்கிலங் கற்கும் இந்நாட்டவர்  எந்த இனத்தைச் சேர்ந்தவரா யிருந்தாலும், அவர் எல்லாம் மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கே தாங்கற்ற கல்வியைக் கருவியாக்கி, ஏழைக் குடிமக்களைப் பாழாக்குகின் றார்கள். இந்நிலையிற் பார்ப்பனரும், பார்ப்பனரல்லா தாரும் ஒத்தவர் களாகவேயிருக்கின்றார்கள்.
தந்நலந்தேடுவதிலேயே நாட்டம் வைத்திருக்கும் இவர்கள் அவைக் களங்களில் மேடை மேலேறிப் பேசும் போது மட்டும் ஏழைமக்களுக்காகக் கண்ணீர் விட்டுக்கதறுகின்றார்கள்! இஃது எதனை ஒத்திருக்கின்றதென்றால், ஆடுநனைகிறதே என்று ஓநாய் குந்தியழுததையே ஒத்திருக்கின்றது. மேடைமேல் இவ்வளவு இரக்கங்காட்டி பேசிய அவர்கள் வீட்டுக்கு, ஏழையிரவலர்கள் சென்றால் அவர்களை  ஏசித் துரத்துகின்றார்கள்.
வேலியே பயிரைத் தின்றால்....?
இந்த வகையிற் பார்ப்பனரைவிடப் பார்ப்பனரல்லாதாரே மிகக் கொடி யராயிருக்கின்றார்கள். யாங்ஙனமென் றால், உயர்ந்த நிலைகளிலுள்ள பார்ப்பனர்கள் தம் இனத்தவரல்லா தாருக்கு ஏதோருதவியுஞ் செய்ய தம்மினத்தவர்களில் ஏழைகளாயிருப் பவர்களுக்கு எல்லா வகையான உதவியுஞ் செய்யக் காண்கின்றோம். மற்றும், பார்ப்பனரல்லாதாரில் உயர்நிலைகளிலிருப்பவர்களே, ஏழைக்குடிகட்கு ஏதோரு நன்மையுஞ் செய்யக் காண்கிலோம்; நன்மை செய்யாதொழியினுந் தீமையேனுஞ் செய்யாதிருக்கிறார்களா வென்றால், அப்படியுமில்லை, எளியவர்களைத் துன்புறுத்தியும், அவர்கள் பொருளைத் தோலிருக்க சுளை விழுங்குவது போல் விழுங்கியும் வந்தாற்றானே, தாம் வல்லாண்மை வாழ்க்கை செலுத்தலாம்.
செல்வர்களால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றங்களில் முறையிடச் செல்லும் எத்தனை எளிய மக்கள், தாம் நடுவர்க்குக் கைக்கூலி கொடுக்க இடமில்லாமையின் அங்கும் நடுவிழந்து, ஓலமிட்டு அழுகின்றார்கள்! ஆங்கிலர் நடுவராயிருப்பின், அவரால் எத்திறத்த வரும் முறையாக வழக்குத் தீர்க்கப் பட்டுத்தங்குறை தீருகின்றனர். நம் நாட்டவர் அந்நிலைகளில் இருப்பிற், பெரும்பாலும் அவரால் நடுவராக வழக்குத் தீர்க்கப்படுதல் இல்லை. அவர்க்குக் கைக்கூலி கொடுப்பார் பக்கமே வழக்கு நன்றாய் முடிகின்றது. இதனினும் பெருங்கொடுமையிருக் கின்றது. காவலாக இட்ட வேலியே பயிரை தின்றால் பயிர் விளைவ தெப்படி? இங்ஙனம் பொருளையே பெரிதாய் நினைந்து நடுவு தவறி, எளியவர்களை வருத்திப் பொருள் சேர்க்கும் ஆங்கி லங்கற்ற நம்மனோர், பார்ப்பனரல்லாத நம்மனோர்க்கு, இவ்வாறெல்லாந் தீங்கி இழைப்பினும் பார்ப்பனர்காலில் விழுவதற்கும், அவர்க்குத் தாம் சேர்த்த பொருளை மிகுதியாக வழங்குவதற்கும் மட்டும் அவர்கள் சிறிதும் பின்வாங்குகின்றார்களில்லை.
பார்ப்பனர் காலில் நம்மவர்.....
இவர்கள் ஆங்கிலம் கற்றது வயிற்றுப்பிழைப்புக்கும் பெருமைக்குமே அல்லாமல், ஆங்கிலத்திலுள்ள விழு மிய அறிவாராய்ச்சியைப் பெறுவதற்கு அன்றாகையால், இவர்கள் தம் வீட்டிலுள்ள அறிவில்லாப் பெண் மக்களின் சொல்லுக்கும் ஆராய்ச்சி யில்லாப் பேதைகளான தம் சுற்றத்தார் சொல்லுக்குங் கட்டுப்பட்டவர்களாகித் தம் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு சடங்கிற்கும் பார்ப்பனர்களை வர வழைத்து, அவருக்கு அவர் வேண்டிய பொருளை வழங்கி அவர் காலிலும் விழுகின்றார்கள்! ஒரு வேளை நல்ல சோறுகூடக் கிடையாமற் பட்டினியும், பசியுமாய்க் கிடந்து வாடி வதங்கும் ஏழைகள் முகத்தை ஏறெடுத்தும் பாரா மல் பேதமை வயப்பட்டு வறுமை யறியாத பார்ப்பனர்க்கும், ஆரவாரக் கொண்டாட்டங்கட்கும் சிறு தெய்வ வெறியாட்டுகட்கும் அழிவழக்குகட்கும் தமது பொருளைக் கணக்கின்றிச் செலவிடும் நம்மனோரின் நிலை எண்ணுந்தோறும் நடுக்கத்தை விளைவிக்கின்றது!
இனி, ஆங்கிலமாவது தமிழாவது கல்லாதிருந்தும், பெருஞ்செல்வர்களாக வும், சிற்றரசர்களாகவும் வாழ்வார், நம்நாட்டிற்  பெருந் தொகையினராய் இருக்கின்றனர். இவர்களுடைய செல்வச்செருக்கையும், இவர்கள் தங்கீழ் உள்ள ஏழை மக்கட்குச் செய்யும் கொடுமைகளையும், நாம் எண்ணிப் பார்ப்போமானால் நமதுள்ளம் இன்னும் மிகுதியாய் நடுங்கா நிற்கும். செல்வர்கள் இல்லங்களில் இருக்கும் பொற்சரிகை பின்னிய பட்டாடை களிலும், அவர்களும் அவர்களின் மாதரும் அணிந்து கொள்ளுங் கல்லி ழைத்த நகைகளிலும்,  அவர்கள் புழங் கும் பொன், வெள்ளி ஏனங்களிலும் அவர்கள் ஏறிச் செல்லும் ஊர்தி களிலும், இன்னும் இவை போன்ற வெளிமினுக்குகளிலும் அவர்கள் செலவு செய்திருக்கும் பொருளைக் கணக்கிடப் புகுந்தால், அவை நூறாயிரக்கணக் காயிருக்கும்.
அறியாமை, தலை காட்டுமா?
இனிச் சிற்றரசர்களாகிய ஜமீன் தாரர்களின் அரண்மனைகளிலும் இங்ஙனமே ஆடைகளிலும் அணி கலங்கள் முதலியவற்றிலும் மடங்கி வறிதேகிடக்குஞ் செல்வப் பொருளைக் கணக்கிடப் புகுந்தால் அவை கணக்கிலடங்கா.
இவ்விதமே சைவ-- வைணவ சுமார்த்த மாத்துவ மடங்களில் ஏதொரு நற்பயனுமின்றி அடங்கிக்கிடந்து மங்கும் பெரும் பொருட்டிரளுங் கணக்கில் அடங்கா.
இவ்வாறெல்லாம் இவர்கள் கையில்
முடங்கிக்கிடந்து அவியும் பெரும்
பொருட் குவியல்களெல்லாம்,
இவர்களைவிட்டு நீங்கிப் பொது
மக்கட்குப் பயன்படு நிலைமையை
யடையுமானால் இவ்விந்திய நாட்
டில் வறுமையும், நோயும், அறி
யாமையுந் தலை காட்டுமா?
இவற்றைச் செய்யுங்கள்!
இப்பெரும் பொருள் கொண்டு நூறாயிரக்கணக்கான கல்விச் சாலைகள் நாடெங்குத் திறப்பிக்கலாம். மிக வறியார் விருப்பங்கட்கு அவர் வறுமை நீங்கும் மட்டும் உணவு கொடுக்கும் அறச்சாலைகள் எங்கும் அமைக்கலாம். ஏழையெளிய பிள்ளைகட்கு உண்டியும் உடையும் நூல்களும் வாங்கிக் கொடுத்துச் சம்பளம் வாங்காமற் கல்வி கற்பிக்கலாம். உழவுத் தொழில், கைத்தொழில்களை அறிவாராய்ச்சி யோடு செய்து, இப்போது பெறும் பயனிலும் நூறு  மடங்கு ஆயிரம் மடங்கு மிகுதியான பயனைப் பெறலாம். வாணிகத்திற் பொய்யும், புரட்டுங்கலவாமல் அதனை நேர்மையோடு செய்து பேர் ஊதியத்தை அடையச் செய்யலாம். இவை மட்டுமோ, இந்தியர்கள் தாமே தமது பொருள் கொண்டு புகை வண்டி  தொடர்கள், மின்சார வண்டிகள், வான வூர்திகள் முதலியனவெல்லாம் அமைத் துக் கொள்ளலாம். நீர் வளமில்லாத நாடு நகரங்களுக்குக் குளங்கள் கூவல்கள் எடுப்பித்து குடிநீர்ப்பீலி வைக்கலாம். பொதுமக்கட்கு அறிவு ஊட்டுங் கழகங்கள் நிலை நிறுத்தி, அவற்றிற் கலைவல்ல அறிஞர்களை அமர்த்தலாம். அவர்கள் கடவுளைப் பற்றியும் உயிர்களைப் பற்றியும், உலகங்களைப் பற்றியும், உலகியற் பொருட்களைப் பற்றியும் குழாங்கொண்டு ஆராய்ந்து அறிவு பெறுதற்குக் கலையாராய்ச்சி மன்றங்கள் நிறுவலாம்; அவர்கள் ஆராய்ந்தெழுதும் நூல்களுக்குத் தக்கப்படி பொருளுதவி புரிந்து, அவற்றை அச்சிட்டு நாடெங்கும் பரப்பலாம்  ஆண்டு கடோறும் பன்னூறாயிரக் கணக்காய் மக்களுயிரைக் கொள்ளை கொண்டு போகுங்கொடிய நோய்களை வராமற்றடைசெய்து, மக்கள் வாழ்நாளை நீளச் செய்து, அவரறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும் மருத்துவக் கழகங்கள் எங்கும் அமைக்கலாம்.

Saturday, December 18, 2010

BRAHMINS ONLY-பிராமணர்களுக்கு மட்டும்

1. தாங்கள் சிறை சென்ற தியாகத்தைப் பற்றி ஏ வகுப்புக் கைதியாகப் போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதும், பிறகு அதிலும் பிறரைவிட அதிக வசதிகள் வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொண்டதும், பிறகு ஜஸ்டிஸ் கட்சியாரைக் கொண்டு சிபாரிசு செய்து ஆஸ்பத்திரிக்கு வந்ததும், பிறகு அதை விட்டு குறித்த காலத்திற்கு, முந்தி விடுதலையாவதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் சிபாரிசு செய்ததுமான விஷயங்கள் இருக்கும்போது, ஜஸ்டிஸ் கட்சியைத் தூற்றுவதும் தியாகம் என்று சொல்லிக் கொள்வதும், யோக்கியமான செயலாகுமா?
2. பெண்களில் ஒரு கூட்டத்தாராகிய தேவதாசிகளைக் கோவிலில் ஆடவிட்டால்தான் இந்து மதம் நிலைக்கு மென்று சொல்லி பெண் சமுகத்தை இழிவுபடுத்திய தங்கட்கு பெண்களுடைய ஓட்டுகளைக் கேட்க வெட்கமில்லையா?
3. ஜஸ்டிஸ் கட்சியை வகுப்பு வாதக் கட்சியென்று கூறும் தாங்கள், உங்களுடைய இனத்தார்களாகிய பிராமணர்களின் வீடுகளில் 100-க்கு, 99இல்  tolet for Brahmins only (பிராமணர்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும்) என்று போர்டுகள் போடப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் சொல்லுகிறீர்கள்?
4. வகுப்பு வாதக் கட்சி என்று நீங்கள் கூறும் ஜஸ்டிஸ் கட்சியின் பிரமுகர்களால் நடத்தப்படும் பச்சையப்பன் காலேஜ், தொண்டை மண்டலம் ஹைஸ்கூல் முதலிய பள்ளிக்கூடங்களிலுள்ள உபாத்தியாயர்களில் 100-க்கு சுமார் 65 பேருக்கு மேல் பிராமணராயிருக்க, வகுப்புவாதமே கடுகளவும் இல்லாததாக வேஷம் போடும் தங்கள் இனத்தாரால் (பிராமணரால்) நடத்தப்படும் மயிலாப்பூர் p.s.ஹைஸ்கூல், திருவல்லிக்கேணி இந்து ஹைஸ்கூல் (hindu high school) முதலிய பள்ளிகளில் 100-க்கு 2 பேர் கூட பிராமணரல்லாத உபாத்தியாயர்கள் இல்லாதிருப்பதற்குக் காரணம் என்ன?
5. இந்திய சட்டசபையில் மொத்த அங்கத்தினர்கள் 145, இதில் 40 பேர் சர்க்காரால் (நாமினேஷன்) நியமிக்கப்படும் சர்க்கார் தாசர்கள், 9 பேர் அய்ரோப்பியர்கள்; 7 பேர் நிலச்சுவான்தார்கள்; 30 பேர் முஸ்லீம்கள்; 4 பேர் வர்த்தகத் தொகுதியைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் சீக்கியர்கள். ஆக மொத்தம் 92 போக பாக்கி 53. இதில் காங்கிரஸ்காரர்கள் எத்தனை பேர் வர முடியும்? அப்படியே 53-ம் வந்தாலும் 92 பேருக்கு எதிரிடையாக எதைச் சாதிக்க முடியும் என்பதை விளக்க முடியுமா?
6. அப்படியே ஒரு வேளை தங்களுடைய பேச்சு வன்மையால் இதர 144 பேரையும் தங்கள் கொள்கைக்குத் திருப்ப முடிந்தாலும், வைசிராயினுடைய (certification சர்டிபிகேஷன்) அதிகாரம் இருக்கும் வரையில் தங்களால் என்ன செய்ய முடியும்?
7. பெண்கள் உரிமை, தீண்டாமை ஒழித்தல் முதலிய சகல சமுதாய சீர்திருத்தத் துறைகளிலும் விரோதமான கொள்கை கொண்ட தங்களையும், தங்களுடைய கட்சிக்காரர்களையும் சட்டசபைக்கு அனுப்புவதால் ஜன சமூகத்திற்கு என்ன பிரயோஜனம் இருக்கிறது?
8. சென்ற சட்ட மறுப்பு சமயத்தில் திரு. பக்தவச்சல முதலியார், திரு. முத்துரங்க முதலியார் போன்ற பல பிரமுகர்களும், இன்னும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் போலீசாரால் எவ்வளவோ அடிபட்டிருக்க, திரு. பாஷ்யமய்யங்கார் அவர்கள் அடிபட்டதற்கு மாத்திரம் சென்னை சட்ட சபையில் ஒத்திவைக்கும் தீர்மானம்; இந்திய சட்டசபையில் சரமாரியான கேள்விகள்; பார்லிமெண்டில் கேள்விகள்; இவ்வளவும் போதாமல், திரு. காந்தியவர்கள் இர்வினுக்கு எழுதிய கடிதத்திலும் இதைப் பற்றிய குறிப்பு - இவ்வளவும் செய்ததிலிருந்து காங்கிரஸ் ஸ்தாபனமானது பார்ப்பனர்களுடைய கோட்டை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
9. திரு. காந்தியவர்கள் வந்தபோது மாத்திரம் ஹரிஜன சேவை என்ற பெயரில் சேரியைக் கூட்டியதும், சேரிக் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து முழுக்காட்டினது மான நாடகமெல்லாம் ஹரிஜனங்களின் பெயரால் பணம் திரட்டியதோடு சரியாய்ப் போய்விட்டதா? அந்தப் பணம் என்னவாயிற்று?
10. சோம்பேறிப் பிச்சைக்காரர்கள் தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக திருப்பதி வெங்கடா சலபதியையும், பழனி முருகனையும் சொல்லி பணம் கேட்பது மாதிரி தங்களுக்கு சொந்த யோக்கியதை இருந்தால் மகாத்மாவின் பெயரையும் காங்கிரஸ் பெயரையும் சொல்லி ஓட்டு கேட்பீர்களா?
11. சென்ற சட்டமறுப்பில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அடிபட்டிருந்தபோது, தாங்களும், திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் மாத்திரம் வாடகை மோட்டாரில் சொகுசாகப் போய் துண்டு நோட்டீஸ் கொடுத்து கைதியாகி விட்டு, இப்போது அடிபட்ட பார்ப்பனரல்லாத தொண்டர்கள் பெயரால் ஓட்டுக் கேட்டது யோக்கியமான செயலாகுமா?
12. காங்கிரஸ் பெயரினால் ஒரு பெண்ணைக் கூட தேர்தலுக்கு நிறுத்தாததுமின்றி சுயேச்சையாக நிற்கிறேன் என்று சொன்ன தேசியவாதியான சிறீமதி ராதாபாய் சுப்பராயன் அவர்களை போட்டியின்றி நிற்பதற்கு இடமும் கொடாமல் செய்த காங்கிரசின் பிரதிநிதியான தங்க
ளுக்குப் பெண்கள் ஓட்டுக் கொடுப்பார்கள் என்று நீங்கள் கனவிலும் கருத முடியுமா?
13. ஜஸ்டிஸ் கட்சியில் பிராமணர் உட்பட எல்லோரும் சேர உரிமையுண்டு என்று சமீபத்தில் நடந்த மகாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றி, அதன்படி விதிகளைத் திருத்தம் செய்த பிறகும் கூட வகுப்புவாதக் கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள், என்று தாங்களும், திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் பிற பிரச் சாரகர்களும் சொல்லி வருவதன் காரணம் உங்களுடைய அறியாமையா? அல்லது வேண்டுமென்றே செய்யும் சூழ்ச்சியா? பார்ப்பனத் தந்திரமா?
14. காங்கிரஸ் தனது நிர்மாணத் திட்டங்களாகிய கீழ்க் கண்ட வேலைகளில் இதுவரை எது எதில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தயவு செய்து சொல்வீர்களா?
 கள்ளுக்கடை மறியல்.
 அன்னியத் துணிக்கடை மறியல்
 நீல் சிலை சத்தியாக்கிரகம்.
 காலேஜ்களை அடைத்து விடுதல்
 வக்கீல் கோர்ட்டுக்குப் போவதை நிறுத்துதல்
 உப்புச் சத்தியாக்கிரகம்
 தக்ளியினாலேயே நூல் நூற்றுக் கொண்டிருத்தல்
 சட்டசபைகளில் சென்று சிங்கத்தை அதன் குகையில் எதிர்த்தல்
 ஹரிஜனங்களுக்கு கோவிலில் நுழைய விடுதல்
 வீட்டுக்கு வீடு ராட்டினத்தில் நூல் நூற்கும்படி செய்தல்.
 சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்தல்
 Census’ ஜன கணிதம் கொடுக்கவும் கூடாது என்று 1931இல் பிரச்சாரம் செய்தது முதலியவைகளில் எதைச் சாதித்தது?
இப்படிக்கு
சென்னை அஸெம்பிளி ஓட்டர்கள்
- பகுத்தறிவு - கட்டுரை - 28.10.1934

முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?
கோயம்புத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட் மீது சுமார் 30 மெம்பர்கள் சேர்ந்து நிர்வாக ஊழல் களைப் பற்றியும், போர்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் ஒரு பிராது தயாரித்து கையொப்பமிட்டு சர்க்காருக்கு அனுப்பிய விஷயமும், மற்றும் பிரசிடெண்ட் கனம் வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு காரண கனவான்கள் முதலியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த விஷயமும் நேயர்கள் அறிந்ததாகும்.
பிறகு உடனே கனம் பட்டக்காரர்களுக்கும், சில மெம்பர்களுக்கும், கனம் கவுண்டர் அவர்களுக்கும் ஒரு வித சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அதன் பயனாய் அப்பிராதில் கையெழுத்து செய்திருந்த கனவான்களில் ஒரு சிலர் தங்கள் கையெழுத்துக் களை வித்ட்றா செய்து கொண்டதாகவும் தெரிய வருகிறதோடு சமாதானத்தில் ஒரு நிபந்தனை, கனம் கவுண்டர் அவர்கள் பிரசிடெண்டுஸ்தானத்தை ராஜினாமா செய்து விடுவதாகப் பெரிய இடத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப் படுகிறது.
இதன் உண்மை எப்படி இருந்தாலும் அதைப்பற்றி பொது ஜனங்களுக்கு அக்கறை இருக்காது. ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களில் காண்ட்ராக்ட்டு வேலை களும், சிப்பந்திகள் நியமிக்கும் வேலைகளும் பிரசிடெண்டுகளுக்கும், சேர்மென்களுக்கும் இருப் பதினாலேயே போர்டுகளிலும், கவுன்சில்களிலும் தகராறுகள் ஏற்படுவதற்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கும் பெரிதும் அவசியம் ஏற்பட்டு விடுகின்றன. இதைப் பற்றி நாம் பல தடவைகளில் எழுதிவந்த பிரகாரம் போர்டுகளின் தலைவர்களிடமிருந்து அந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டால் பிறகு சேர்மென்களும், பிரசிடெண்டுகளும், கவுன்சிலர்களுக்கும், மெம்பர்களுக்கும், யோக்கியர்களாகவும், சினேகிதர்களாகவும் ஆகி விடுவார்கள். தகராறுக்கும் சிறிதும் இடமிருக்காது.
ஒரு சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதாய் இருந்தாலும் கமிஷனர்கள் மீதுதான் வரக்கூடுமே ஒழிய வேறில்லை. அதனால் கமிஷனர் களுக்கும் நஷ்டம் இருக்காது. அவர்கள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடலாம். மெம்பர்களுக்கும் அவசியமான காரியங்கள் கவனிக்க சவுகரிய மேற்படும். ஆகவே முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?
- பகுத்தறிவு - கட்டுரை - 28.10.1934


Sunday, December 5, 2010

கொள்கைக்கா- வருமானத்திற்கா?

கும்பகோணத்தில் ஆர்.சி. வெங்கட்ராமன் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். தந்தை பெரியார் அபிமானி. 1928-_இல் குற்றாலத்திற்குக் குடும்பத்துடன் சென்று தங்கி இருந்தார். தந்தை பெரியார் அவர்களும் அந்தக் காலகட்டத்தில் குற்றாலம் சென்று தங்கினார். ஒரு நாள் காலை குற்றாலத்தில் மத்தாளம் பாறைபாட்டையில் தந்தை பெரியார், குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன், தந்தை பெரியாரின் மாப்பிள்ளை ஆகிய மூன்று பேரும் பேசிக் கொண்டு சென்றார்கள். அப்பொழுது குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் தந்தை பெரியாரிடம் கூறினார். நமது குடிஅரசு இதழுக்கு ஒரு லட்சம் சந்தாதாரர் சேரும்வரை இராமாயண ஆராய்ச்சி போன்ற கட்டுரைகளை நிறுத்தி வைப்பது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது என்று கூறினார். உடன் வந்த மாப்பிள்ளையும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு இதைப் பெரியார் ஏற்க மறுக்கிறார் என்றும் கூறினார். அதற்குத் தந்தை பெரியார் புன்னகையுடன் பதில் கூறினார். நான் வருமானத்தை முன்னிட்டு பத்திரிகை நடத்தவில்லை; ஒரே ஒரு சந்தாதாரர் மட்டும் இருந்தாலும் நான் எனது கொள்கையைத் தெரிவித்தே தீருவேன். இதுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தது போதாதா என்று பளிச் சென்று பதிலளித்தார்.

- குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் எழுதிய கட்டுரையிலிருந்து விடுதலை 17.5.1959

சத்தியமூர்த்தி அய்யர் - எஸ். இராமநாதன் சண்டை

ஒத்துழையாமை சட்டவிரோதம் என்று கூறி, காந்தியைக் கைது செய்யச் சொன்ன 
சீனிவாச அய்யங்காரும், பஞ்சாப் அட்டுழியத்தை ஆதரித்து செங்கல்லால்
 அடித்தவர்களைக் குண்டாலடித்தார்கள் வெள்ளையர்கள் _ இதிலென்ன தவறு?
 என்று கூறிய பெசன்டு அம்மையும் டையரும், ராட்சசியும் அல்லவா? என்று 
பதிலடி கொடுத்தார் எஸ். இராமநாதன்.1923-_ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் 
தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது, மாநாட்டிற்குத் தலைவர்
 தந்தை பெரியார் காரிய கமிட்டிக் கூட்டத்தில் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் 
நீதிக்கட்சித் தலைவர் பி. தியாகராய செட்டியாரை டையர் என்றும். பனகல் அரசரை,
 இராட்சசன் என்றும் வருணித்தார். இதனைப் பொறுக்காமல் எஸ். இராமநாதன்
 எழுந்து பதிலடி கொடுத்தார்.

எஸ். இராமநாதன் அவர்களின் இந்த வார்த்தைகளை வாபாஸ் வாங்க வேண்டும் 
என்று பார்ப்பனர்கள் குதித்தனர்.சத்தியமூத்தி அய்யர் சொன்னதை வாபஸ் 
வாங்கினால் இராமநாதனையும் வாபஸ் வாங்கச் சொல்லுகிறேன் என்றார்
 தலைமை வகித்த பெரியார், 
அன்றிலிருந்தே பெரியார் பார்ப்பனர்களுக்கு விரோதியாகிவிட்டார்.