Wednesday, January 18, 2012

தேவிகுளம் - பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியாரை உரசுவதா?

முல்லைப் பெரியாறு அணை பிரச் சினையைத் தொடர்ந்து இப்பொழுது தேவிகுளம் - பீர்மேடு பிரச்சினை சில ஏடுகளில் வெடித்துக் கிளம்பியுள்ளது.
அப்பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை காட்டாதது போன்ற ஒரு கருத்தை வலம் வரவிட்டுள்ளன.
தேவையில்லாத உரசல்
இனி போவதற்கு வேறு கட்சியில்லை என்ற நிலையில் காந்தி தேசத்தில் பயணிக்கும் தோழர் ஒருவர்  அளித்த பேட்டியில் தேவிகுளம் - பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியாரை தேவை இல்லாமல் உரசி இருக்கிறார்.
குளமாவது - மேடாவது என்று சொன்ன காமராசர்பற்றி அவரால் குறிப்பிட முடியவில்லை. காரணம். இன்னும்  விட்ட குறை - தொட்ட குறை என்பதில் நண்பர் அவர்கள் ஊசலாடிக் கொண்டு இருப்பதுதான்.
மாதம் இரு முறை இதழ் ஒன்றில்...
மாதம் இருமுறை இதழ் ஒன்றில் தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையில் - குலக்கல்வித் திட்டத்தில் ஆச்சாரி யாருக்குச் சாமரம் வீசிய திருவாளர் ம.பொ.சி. அவர்களால் எழுதப்பட்டுள்ள எனது போராட்டம் என்ற நூலிலிருந்து ஒரு நீண்ட பகுதி எடுத்துப் போடப் பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் நிலைப்பாடு என்ன?
தேவிகுளம், பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களின் நிலைப்பாடு என்ன? ம.பொ.சி. அவர்கள் இந்தப் பிரச்சினையில் எப்படி முரண்பாடாக நடந்து கொண்டார் என்பதற்கு நீண்ட விளங்கங்கள் தேவையில்லை.
தந்தை பெரியார் அவர்களின் மூன்று அறிக்கைகள்
இது குறித்து தந்தை பெரியார் அவர்கள் கையொப்பமிட்டு விடுதலை யில் வெளியிட்ட மூன்று அறிக்கைகளே போதுமானது. அவை இதோ:
திரு. ம.பொ.சிக்கு பெரியார் கடிதங் கள்
கூட்டுக் கிளர்ச்சிக்கான திட்டங்கள்
திருச்சி ஜன.21  (1956):
அன்புள்ள நண்பர் சிவஞானம் அவர்களுக்கு ஈ.வெ.ரா. வணக்கம்.
தங்கள் தந்தி இன்று பகல் கிடைத் தது. அதில் குறிப்பிட்ட கடிதம் எனக்குக் கிடைக்கவில்லை. இதைப் பற்றி தங் களுக்கு ஒரு தந்தி அனுப்பிவிட்டு விஷ யம் என்ன என்று தெரிந்து கொள்ளும்படி தோழர் குருசாமி  அவர்களுக்கு டெலிஃபோன் பேசினேன். அவர் ஊரில் இல்லை என்று அவர்கள் வீட்டில் சொன் னார்கள். வந்த உடனே தங்களைக் கண்டு பேசி விவரம் எழுதும்படி சொல்லி முடித்தேன். பிறகு இப்போது 3.50க்கு தங்கள் டெலிஃபோன் வந்தது. டெலிஃபோனில் பேசிய விஷயங்களை உறுதிப்படுத்த இக்கடிதம் எழுதுகிறேன்.
நாம் 19 ஆம் தேதி பேசி முடிவு செய்து கொண்டபடி நடவடிக்கை எடுத்துக் கொள்வதில் அன்று மாலையில் தாங்கள் மற்றும் இரண்டொருவரை சந்தித்து முடிவு தெரிவிப்பதாகச் சொன்னீர்கள். நான் என்னுடைய நிலைமையை தெரி வித்துவிட்டு புறப்பட்டு வந்துவிட்டேன். தங்கள் டெலிஃபோன் வந்த பிறகும் இப்பொழுதும் அந்த முடிவை நான் உறுதிப்படுத்துகிறேன். அதாவது இப் பொழுது இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்துள்ள - செய்து வருகிற - செய்யப்போகின்ற - அநீதி களை சிந்தித்தால் நாம் நமது எதிர்ப்பை ஏதாவது ஒரு கிளர்ச்சியின் மூலம் இந்திய அரசாங்கம் உணரும்படி செய்ய வேண் டியது அவசியம் என்று கருதுகிறேன். இது போலவே தங்களுக்கும்மற்றும் சில நண்பர்களுக்கும், ஸ்தாபனக்காரர் களுக்கும் கருத்து இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப்படி செய்வதில் கிளர்ச்சிக்கு நமது லட்சியம் என்ன என்பதை அரசாங்கத்தார் உண ரும்படியும், பொதுமக்களும் தெரிந்து நமக்கு ஆதரவளிக்க ஆவல் கொள்ளும் படியும் விளக்குகிறேன்.
1. எல்லைக் கமிஷன் என்பது எல்லை வரையறுப்பதில் நமக்கு (தமிழர்களுக்கு) செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங் களைத் திருத்துதல்.
2. இந்தி மொழியை யூனியனுக்கு ஆட்சி மொழியாகவும், இந்தியாவுக்கு தேசிய மொழியாகவும் ஆக்கப்படுவதற்கு பல வழிகளில் அரசாங்கம் முயற்சிப்ப தைத் தடுப்பது.
3. தமிழ் யூனியன் ஆட்சி என்பதில் படை, போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற அதிகார ஆட்சி உரிமை கள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.
இதற்கு ஒரு விளக்கம் : திராவிடர் கழகம், தமிழ் நாடு, யூனியனிலிருந்து பூர்ண சுயேச்சை உரிமையுடன் தனித்து இயங்கவேண்டும் என்பதாக முடிவு செய்து க்ண்டிருந்த போதிலும், அந்த கொள்கைக்குப் பாதகம் இல்லாமலும் மேற்கண்ட விஷயங்களைப் பற்றிய கிளர்ச் சியை முன்னிட்டு மற்ற ஸ்தாபனக்காரர் களுடைய ஒத்துழைப்பையும் நட்பையும் முன்னிட்டு இந்த மூன்றாவது வாசகத் துக்கு இணங்குகிறது.
4. சரித்திர சம்பந்தமாகவே தமிழ்நாடு என்ற பெயரைக் கொண்டு இயங்கி வரும் நம் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலத்தில் மதராஸ் என்ற பெயரையோ, சென்னை என்ற பெயரையோ கொடுத்து தமிழ் நாட்டைப் பிரித்து, தமிழ்நாட்டுப் பெயரை நிரந்தரமாக மறைப்பதைத் தடுப்பது.
5. தமிழ்நாடு தனித்து இயங்கி தமிழ் நாட்டின் முன்னேற்ற விஷயத்தில் தமிழ் மக்கள் பாடுபட முன்வந்து  தமிழ்நாட்டின் நலம் என்று சிறிதாவது உணர்ச்சி பெற் றிருக்கின்ற இந்த சமயத்தில் தமிழர் களின் பழக்க வழக்கம், கலாசார பண்பு, தமிழர் நலம் ஆகியவைகளைப் பற்றி கவலை கொள்ள அவசியம் இல்லாத மற்ற நாட்டாரை ஒன்று சேர்த்து தென்மண் டலம் என்பதாகப் பிரிக்க ஏற்பாடு செய்துள்ள மத்திய அரசாங்க முடிவை சிதைப்பது ஆகிய காரியங்களுக்கு நாம் போராட்டம் துவங்கவேண்டும். இசையும் ஸ்தாபனங்களையும், இசையும் தனிப்பட்ட மக்களையும் சேர்த்து பொதுமக்கள் ஒத் துழைப்பையும் பெறுவதற்கான காரியங் கள் செய்து போராட்டத் திட்டம் வகுக் கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்காக யோசிப்பதற்கென்று ஒரு நாள் குறித்து மற்ற ஸ்தாபன தோழர்களுக்கும், தனிப்பட்ட தோழர்களுக்கும் தாங்கள் மேற்கண்ட கருத்துக்களைக் காட்டி அழைப்பு அனுப்புவதை நான் மனப்பூர்வ மாக ஆதரிக்கிறேன். (இது விஷயமாக நாம் நேரிலும் பேசியிருக்கிறோம்.) அதன்படி அனுப்பப்படும் அழைப்பில் என் பெயரையும் திராவிட பார்லிமென்டரி கட்சித் தலைவர் திரு சுயம்பிரகாசம் அவர்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ள சம்மதிக்கிறேன்.
அழைப்பை அருள்கூர்ந்து நண்பர் குருசாமி அவர்களுக்கும் காட்ட வேண்டிக்கொள்கிறேன்.
தங்கள் அன்பன்
25.1.1956    ஈ.வெ. ராமசாமி
தந்தை பெரியாரின் இரண்டாவது அறிக்கை
கிளர்ச்சி நடத்தவேண்டிய முறைபற்றி
தமிழ் மக்களுக்கு பெரியார் வேண்டு கோள்
சென்னை, ஜன. 25:
இந்திய யூனியன் மத்திய அரசாங் கத்திற்கு தலை கனத்துவிட்டது. இட் லரிசம் துவக்கப்பட்டுவிட்டது. ஜனநாய கம் என்ற வேஷத்தில் சர்வாதிகார நாயகம் நடத்தப்படுகிறது.
இந்தச் சமயத்தில் சுயநலக்காரர் களும், விளம்பரக் காரர்களும் பொது வாழ்வின் பேரால் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும், மக்களின் பிரதிநிதி கள் என்னும் வேஷத்தில் முன்னணியில் நிற்கிறார்கள். இவர்களது போலி நடிப் பில், பொதுமக்கள், இளைஞர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், ஏமாறுகிறார்கள்.
இன்று யூனியன் மத்திய அரசாங்கத் தின் நடத்தை நாளுக்கு நாள் தமிழர் களை - தமிழ் நாட்டை - அழுத்தி வட நாட்டுச் சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற் கும் அடிமையாக்கும் காரியத்தில் முனைந்திருக்கிறது.
அடிமை வாழ்வை விட எதிர்த்து அழிந்து போகும் வாழ்வே மேலானது.
இப்போது தமிழ்நாட்டைப் பற்றி மத்திய அரசாங்க நடத்தைகள், தீர்ப்புகள், உத்தேசங்கள் பற்றித் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கிடையில் பெரும் குமுறல் இருந்து வருகிறது.
இது காரணமாய், கடிவாளம் இல்லாத குதிரைகள் போல் தமிழ் நாட்டுப் பாமர மக்கள் பலரும், மாணவர்கள் பலரும் தன்னிச்சை முறையில் கண்டபடி நடந்து பெரும் காரியங்களைச் செய்கிறார்கள். இவை தேவையும் வரவேற்கத் தக்கதுமா னாலும் தக்க லட்சியமில்லாத பொறுப் புக்கு ஆளில்லாத தன்மையில் அவசரத் தில் நடைபெற்று வருவது அறிகிறேன். இந்தப்படி குறைபாட்டுடன் நடக்கு மானால், இது சீக்கிரத்தில் ஓய்ந்து விடக்கூடுமென்று பயப்படுகிறேன்.
இந்திய அரசாங்கம் செய்து வரும் மற்றும் பல கேடுகளை முன்னிட்டு மக் களுக்கு விளக்கிக் காட்டி மக்களின் எல் லோருடையவும் பலமான ஆதரவு கிடைக் கும்படி செய்து கொண்டு நடத்த வேண் டிய கிளர்ச்சியின் லட்சியத்துக்கு இன்றி யமையாத தேவையாக இன்று மக்களி டையில் இலட்சிய விளக்கமே இல்லாமல் ஒருவரைப் பார்த்து ஒருவர் நடப்பது போல் சில காரியங்கள் நடைபெறுகின்றன. பின்னால் நடக்க வேண்டிய காரியம் முன்னாலும்,  முன்னால் நடக்க வேண்டிய காரியம் பின்னாலுமாய் நடப்பதாக இருக்கிறது.
கிளர்ச்சி எவைகளுக்காக நடத்துவது, எப்படி நடத்துவது, யார் யார் ஆதரவு களைத் தேடிக்கொண்டு துவக்குவது அதற்குத் திட்டங்கள் யாவை - என்பன முதலியவை பற்றியெல்லாம் சென்ற 10 ஆம் தேதி சென்னையில் ஒரு நண்பர் வீட்டில் திரு. சிவஞான கிராமணி உட்பட சில தோழர்கள் கலந்து பேசி இரண் டொருவர் விரும்பிய திட்டங்களையும், மற்றும் பொதுத் திட்டங்களையும் டைப் அடித்து கூடிப் பேச ஒரு நாள் குறிப்பிட்டு ஒரு இடத்தையும் குறிப்பிட்டு அந்த நாளைக்கு வரும்படி இன்ன இன்னா ருக்கு அழைப்பு அனுப்புவது. அதில் இன்ன இன்னார் கையெழுத்து இருப்பது எனப் பல விஷயங்களைத் தெளிவாய்ப் பேசி முடிவு செய்து கொண்டதோடு பிரிந்து கொண்டோம்.
அன்று மாலையிலேயே, திரு.கிராமணி யார் என்னைக் கூப்பிட்டு அழைப்பில் யார் யார் கையொப்ப மிடுவது என்று பேசி ஒப்புக் கொண்டவர்களில் சிலரிடம் தாம் சம்மதம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், அவர்கள் பீர்மேடு, தேவிகுளம் விஷயம் ஒன்றுக்குத்தான் கிளர்ச்சி செய்யும் லட்சியத்திற்குக் கையொப்பமிட சம்மதிக்கிறார்கள்; மற்றது பற்றி தயங் குகிறார்கள் என்று சொன்னார். அதற்கு நான் பீர்மேடு போலவே மற்றும் முக்கியத் துவம் பொருந்திய 4 விஷயங்களையும்  அவருக்கு வலியுறுத்தி, இவைகளுக்கு சம்மதித்தவர்கள் கையொப்பம் மட்டும் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு திருச்சிக்குப் புறப்பட்டுவிட்டேன். இதன் மீது திரு.கிராமணியார் அவர்கள் 20 ஆம் தேதி சென்னையில் இருந்து,
நீங்கள் 19 ஆம் தேதி என்னிடம் கூறிய மூன்று விஷயங்களையும் இலட்சி யத்தில் சேர்த்து பல தலைவர்களுக்கு பிர முகர்களுக்கு, சர்வ கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்புவது என்று முடிவு செய்து விட்டேன். அழைப்பு நகல் இத்துடன் வரு கிறது. அதில் கையொப்பமிட்டு மறு தபாலில் அனுப்பினால் அச்சடித்து எல் லோருக்கும் அனுப்பிவிடுகிறேன். தங்கள் நண்பர் குருசாமியிடம் கொடுத்த வேலைத் திட்டங்களும் பெற்றேன் என்பது ஆக ஒரு கடிதம் எழுதியிருக் கிறார்.
மற்றும் 21 ஆம் தேதியில் அவரே,குருசாமியிடம் கலந்தேன்; என் கடிதப்படி உங்கள் சம்மதத்தை தந்தியில் சொல்லுங்கள் என்பதாக எனக்கு ஒரு தந்தி கொடுத்தார்.
அந்தத் தந்தி பார்த்தவுடன், உங்கள் தந்தி வந்தது; கடிதம் எனக்குக் கிடைக்க வில்லை என்று திரு.கிராமணியாருக்கு நான் தந்தி கொடுத்துவிட்டேன்.
தந்தி கொடுத்த சிறிது நேரத்திற்குள் திரு. கிராமணியார் சென்னையிலிருந்து டெலிஃபோனில் என்னைக் கூப்பிட்டார். நான் உடனே விவரம் கேட்டு, விபரம் தெரிந்து சம்மதம் கொடுத்துவிட்டு நாங் கள் பேசிய டெலிஃபோன் பேச்சை உறு திப்படுத்தி ஒரு கடிதமும் எழுதிவிட்டேன்.
இவ்வளவும் நடந்தபிறகு திரு. கிரா மணியார் கூட்டத்திற்கு அழைப்பு அனுப் பாமல், வேறு எவ்விதத் தகவலும் எனக் குத் தெரிவிக்காமல் நான் கலந்து கொண்டேன் என்றும், சம்மதித்தேன் என்றும் பல கூட்டங்களில் பேசியும் பல பத் திரிகைகளில் வெளிவரும்படி செய்து விட்டு நாட்டில் கிளர்ச்சிக்கும் தூண்டி விட்டார்.
மக்களுக்கு லட்சியம் உணர்த்தப்பட வில்லை. ஒழுங்கு முறை கற்பிக்கப்பட வில்லை. பல பொதுமக்கள், முக்கியஸ் தர்கள் என்பவர்களிடம் தக்கபடி சம்மதம், சம்பந்தம் வைத்துக் கொள்ளவில்லை. ஆங்காங்கு கிளர்ச்சி தாறுமாறாக நடக் கின்றன; கைது ஆகிறார்கள். போலீசால் துன்புறுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட இந்த நிலையை அனுமதிப்பது ஒரு தலைவருக்கு நியாயமல்ல என்பதோடு மற்ற தோழர்களுடன் கலந்து பேசிய பேச்சு முடிவுகளை அலட்சியப்படுத்தி அவர்கள் ஆதரவு இருப்பதாக மக்களுக்குக் காட்டிக்கொண்டு இருப்பதும் அரசியல் ஒழுங்குக்கு ஏற்றதுமல்ல என்பதை வெளியிட வருந்துகிறேன்.
இது எப்படி இருந்தாலும் கிளர்ச்சி பல னற்றுப் போகுமே என்று பயப்படுகிறேன் என்பதோடு எனது கவலையெல்லாம் பீர்மேடு விஷயம்போலவே மற்றும் அதை விட முக்கியம் என்று கூட பலர் கருதும்படி தமிழர்களுக்கு யூனியன் அரசாங்கம் செய்த மற்றும் பல கேடுகள் இருக்கின்றன. இம்மாதிரி செய்கையால், அவை பின்ன ணிக்கு மறைந்து போகவும் ஆகிவிடும் போலிருக்கிறது. ஆதலால், இக்கிளர்ச் சியை எல்லா  லட்சியங்களுக்காகவும் பொதுக் கிளர்ச்சியாகவும் செய்ய வேண் டியது அவசியம் என்று கருதுகிறேன்.
அதற்காகவே நான் சென்னையில் இரண்டொரு நாள் தங்கி பலரையும் சந் திக்க ஆசைப்படுகிறேன். சட்ட சபை அங் கத்தினர்களையும் தனிப்பட்ட பிரமுகர் களையும் கலந்து பேச இஷ்டப்படுபவர் களையும் காண ஆவலாய் இருக்கிறேன்.
நல்ல வழக்கு சரியானபடி விவரிக் காததால், கெட்டுப் போகக்கூடாது என் பதுதான் இந்த வெளியீட்டின் தத்துவம்.
முக்கிய குறிப்பு: எனது கிளர்ச்சித் திட்டம் பலாத்காரம், உயிர்ச்சேதம், நாசவேலை, பொருள் நஷ்டம், பொதுஜன அசவுகரியம் ஆகிய காரியங்களுக்கு பெரிதும் இட மில்லாமல் இருக்கும் படியாகவும் இருக் கும். எதிர்பாராமல் அவை நேரிடுமானால் சமாளிக்கும்படி இருக்குமே தவிர, ஓடும்படி இருக்காது. ஆதலால், கிளர்ச்சி என்பவை களில் இவை முதன்யாகக் கவனிக் கப்படவேண்டியது அறிவும் பொறுப்பும் உடைய காரியமாகும்.
26.1.1956    ஈ.வெ.ராமசாமி
தந்தை பெரியாரின் 3 ஆவது அறிக்கை
ம.பொ.சி. கூட்டத்திற்கு வரமுடியாது
பெரியார் ஈ.வெ.ரா. அறிக்கை
இன்று ம.பொ.சிவஞானம் அவர்கள் தமது சொந்த கையெழுத்திட்டு அச்சடித்த ஒரு அழைப்புக் கடிதம் தபாலில் கிடைத் தது.
அந்த அழைப்பு கண்டு நான் வியப் படைந்தேன்.
என்னிடம் அவர் நேரில் ஒப்புக்கொண் டது. 4, 5 விஷயங்களுக்காக எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்துவது என்பதாகும்.
பிறகு அவர் 20 ஆம் தேதி சென்னை யிலிருந்து எழுதி அது எனக்கு 22 ஆம் தேதி கிடைத்தது. அக்கடிதத்தில் 3 விஷ யங்களுக்கு ஆக கிளர்ச்சி நடத்துவது என்று ஒப்புக் கொண்டு எனது சம்மதம் கேட்டார். அது எனக்கு அடுத்த நாள் 21 ஆம் தேதி கிடைக்காததால் ஃபோனில் அவர் சம்மதம் கேட்டதில் 5 விஷயங் களுக்கு என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இடம் - மகாஜனசபை, அழைப்பில் கைழுத்திடுவது,
திருவாளர்கள்
1. ம.பொ.சி. 2. ஈ.வெ.ரா. 3. அந்தோணி பிள்ளை. 4.சுயம்பிரகாசம். 5. கம்யூனிஸ்டு கட்சி அல்லது பி.டி.ராஜன்.
இப்போது அதற்கு நேர்மாறாக தானே கையொப்பமிட்டு, வேறு ஒருவருடைய தனி இடத்தில் - பீர்மேடு என்கின்ற ஒரே பிரச்சினைக்குக் கிளர்ச்சி என்பது ஆக.
இது சிறிதும் நேர்மை அற்ற காரியம் என்பது எனது கருத்து. இப்படிப்பட்ட வர்களுடன் நான் எப்படி இவ்வளவு பெரிய காரியத்தில் கலந்து மக்களை ஈடுபடச் செய்ய முடியும்? ஆதலால் அந்தக் கூட்டத் தில் நான் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை விசனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: இப்போது தட்சிண பிரதேச பிரச்சினை பலம் பெற்று இருப்பதால் பீர்மேடு பிரச்சினை செத்துவிட்டது என்று கருதவேண்டியதாகிவிட்டது. அதா வது 3 நாடுகளை ஒன்று சேர்ப்பதானால் பீர்மேடு எதற்காக பிரியவேண்டும் என்கிற கேள்வி எழுமல்லவா? அதை முதலில் ஒழிக்க வேண்டாமா?
சி.ஆர். 3 நாடு ஒன்று சேருவதற்கு தட் சிண பிரதேசத்திற்கு ஒப்புக் கொண்ட தால் அதை விட்டுவிட வேண்டுமா?
மற்றும் இவை சம்பந்தமான சில தகவல்கள் பின்னால் வெளியிடப்படும்.
27.1.1956    ஈ.வெ.ராமசாமி
தந்தை பெரியார் அவர்களின் மேற் கண்ட மூன்று அறிக்கைகளைப் பார்த்த பிறகாவது உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும் தமிழர்கள்.
தேவிகுளம், பீர்மேடு பிரச்சினையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நிறுத்தப் பட்டதாக ம.பொ.சி. அறிவித்து விட்டார். அதனைக் கண்டித்து விடுதலை (28.1.1956) தலையங்கம் தீட்டியது. ம.பொ.சி.யை நம்பினால் இதுதான் என்று எழுதுகிறது விடுதலை.
அரை நூற்றாண்டுகள் கடந்த நிலை யில் யாருக்குத் தெரியப் போகிறது? எதையும் கண்டமாதிரி எழுதலாம் என்று நினைக்க வேண்டாம்.
அதுவும் தவிர, இம்மக்களையும், மண்ணையும் காப்பாற்றும் மாபெரும் பாதுகாவலரான தந்தை பெரியார் அவர்களைப் பற்றிக் கூறும்பொழுது, எழுதும்போது, விமர்சிக்கும்போது மேலான பொறுப்பு ணர்ச்சியும், ஜாக்கிரதையான நிதானமும் தேவை!
தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை எழுந்துநின்ற அதே கால கட்டத்தில்தான் தட்சிணப் பிரதேசம் என்ற - தமிழன் கழுத்துக்குக் கத்தித் தீட்டும் பிரச்சினையும் எழுந்துநின்றது.
வங்காளம், பிகார், அஸ்ஸாம் சோந்து ஒன்று, ஆந்திராவும், ஒரிசாவும் ஒன்று, குஜராத்தும், இராஜஸ்தானும் ஒன்று, தமிழ்நாடு, கேரளம், கருநாடகம் சேர்ந்த ஒன்று, மகாராட்டிரம் தனியே, மத்தியப் பிரதேசம் தனியே, உத்தரப்பிரதேசம் தனியே, பஞ்சாப் தனியே ஆக இந்தியாவை எட்டுப் பகுதிகளாகப் பிரிந்து ஆட்சி புரிவது என்று உள்துறை அமைச்சர் வல்லப பந்த் அவர்களின் பெயரால் ஒரு திட்டம் கருத்தரித்தது. தமிழ்நாடு, கேரளம், கருநாடகம் மூன்றும் ஒன்றாக இணைத்து ஆட்சி அமைக்கப்பட்டால், பார்ப்பனர் களோடு சேர்ந்து மலையாளிகளின் ஆதிக்கம்தான் கொட்டமடிக்கும் என்பதை ப் புரிந்து கொண்ட தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும், மலையாளக் குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம். பார்ப்பானுக்குள்ள புத்தியெல்லாம் மலையாளிக்கும் உண்டு. பார்ப்பனனைப் போலவே மலையாளிகள் மான ஈனமில்லாதவர்கள். மற்ற நாட்டில் போய் அண்டிப் பிழைக்கிறோமே என்ற எண்ணம் கூட இருக்காது. எதற்கெடுத்தாலும் திமிராகப் பேசவும், பார்ப்பனர்களைப் போல் தந்திரமாகப் பேசவும் தெரியும் என்றார் தந்தை பெரியார் . (வேலூரில் பெரியார் உரை 29.1.1956) மகாராஷ்டிரக்காரனுக்கும், பஞ்சாப்காரனுக்கும் தனி ஆட்சி. ஏமாந்தவர்கள் நாம் என்று நினைத்துக் கொண்டு ஒண்டிக் குடித்தனம். இதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள். தந்தை பெரியார் போர்ப்பறை கொட்டினார். 1956 பிப்ரவரி 1,2 ஆகிய நாட்களில் பெங்களூரில் தட்சிணப் பிரதேசம் அமைப்பு பற்றி இறுதி முடிவெடுக்க  கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.
பிரதமர் நேரு, சென்னையின் முதல் அமைச்சர் காமராசர் போன்றவர்கள் எல்லாமே அதில் கலந்து கொண்டனர். அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் பிரதமர் நேரு, முதல்வர் காமராசர் ஆகியோருக்கு ஒரு தந்தி கொடுத்தார்.
தட்சிணப் பிரதேசம் ஏற்படுவது என்பது தமிழர்களுக்கு வாழ்வா, சாவா? என்பது போன்ற உயிர்ப் பிரச்னையாகும். உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இது தற்கொலையானதும் ஆகும். தட்சிணப் பிரதேசம் ஏற்படுமேயானால்  முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்கு தமிழ் மக்களை நெருக்குவதாகிவிடும். அருள் கூர்ந்து நம் எல்லாரையும், தமிழ் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டுகிறேன் என்பதுதான் தந்தை பெரியார் அனுப்பிய அந்தத் தந்தி வாசகமாகும்.
காமராசரும் அந்த முயற்சியைக் கைவிட்டார். 1956 அக்டோபர் முதல் தேதியிலிருந்து 15 மொழிவாரி மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் இந்தியா என்ற அமைப்புக்குள் உருவாக்கப்பட்டன. தட்சிணப் பிரதேசத் துக்குக் கொடுக்கப்பட்ட அடி மற்றமற்ற மாகாணங்களிலும் உருவாக இருந்த கரு ஒட்டுமொத்தமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.
தட்சிணப் பிரதேசம் உருவாக்கப்பட்டால் தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை எழ வேண்டிய அவசியம் இல்லை என்று சமாதானம் சொன்னவர்களும் உண்டு. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை எழுந்து வருகிற போது, அதனோடு தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளையும் தெரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக தந்தை பெரியார் மீது கல்லெறிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்
                                                                                                                                                                             விடுதலை 18.1.2012

Sunday, December 11, 2011

இந்து சட்ட திருத்தம்


சென்னை மாகாணத்திலுள்ள மக்கட்தொகையில் இந்துக்கள் எனப்படுவோர் 440 இலட்சம் மக்களாவர். இவர்களில் 20 லட்சம்தான் பார்ப்பனர்கள். பார்ப்பன ருக்கும் பார்ப்பனர் அல்லாதாருக்குமிடையே பல துறைகளிலும் வித்தியாசம் காணப்படுகிறது. பார்ப்பனர்கள் தங்கள் ஏகபோக உரிமை மேலும் நீடிக்கவும், மற்றபடி உள்ள பார்ப்பனரல்லாத வகுப்பார் இன்னும் கீழான நிலையடையவும்தான் முயற்சி செய்வார்கள். எனவே வகுப்பு வாரியாக பிரதிநிதித்துவம் வழங்குதல் என்ற முறையின்பாற்பட்டு யாதாமொரு காரியத்திற்காக இருபத்து அய்ந்து அங்கத்தினர்கள் கொண்டதோர் கமிட்டி ஏற்படுத்தப்படுமாகில், அதில் பார்ப்பனருக்கு ஒரு தானம்தான் கொடுக்கப்படலாம். அதுவேயுமன்றி அத்தகைய கமிட்டியின் தலைவர் கட்டாயம் பார்ப்பனரல்லாதாராகத் தான் இருக்க வேண்டும். இதுவே நீதியும், நல்லாட்சி முறையும், சுயராஜ்ஜிய தத்துவமுமாகும்.
பார்ப்பனர்களிடத்தில் அவநம்பிக்கை சரியான வகையில் ஏற்பட்டிருக்கும் இந்நேரத்தில் சர்க்கார் பார்ப்பனரல்லாதாரை அலட்சியம் செய்யும் முறையில் குழு ஏற்படுத்துவதிலும் பிற நடவடிக்கைகளிலும் ஒருபட்ச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுவார்களானால் எந்த சுயமரியாதையுள்ள பார்ப்பனர் அல்லாத தோழரும் குழுவில் அங்கத்தினராக இருக்க சம்மதிக்க மாட்டார் என்று நிச்சயம் நம்புகிறோம். கமிட்டியின் முன் சாட்சியம் கொடுத்துத் தன்னையும் தன்னுடைய இனத்தையும் இழிவுபடுத்த எந்தத் தோழரும் நினைக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
இந்து சட்ட திருத்தத்திற்கென்று எத்தகைய முயற்சி எடுக்கப்படும் நேரத்திலும் பார்ப்பனரல்லாத மக்களின் நலன்களைப் பாதிக்கும்படியாக சர்க்கார் தெரிந்தோ, தெரியாமலோ காரியங்களைச் செய்தார்களேயானால் கட்டாயம் கிளர்ச்சி துவக்கப்படும் என்பதை உறுதியுடன் கூறுகிறோம். இந்தப்படி, பார்ப்பனரல்லாத தோழர் களையே பெரும்பான்மையாக ஏற்படுத்தவிருக்கும் கமிட்டியில் நியமிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை ஆங்காங்குள்ள தோழர்கள் கூட்டங்கள் கூட்டி நிறைவேற்றி சென்னை சர்க்காருக்குத் தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 25.11.1944

Sunday, October 23, 2011

அசுரன் யார் என்று தெரியுமா?


திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கண வாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரி விக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தை யும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்த வர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப் பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்-களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்-கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி,  விருத் திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந் திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக் கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர் களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்-கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண் டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படு பாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளை-யடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்-கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.
அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவி டர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவி டர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திரா-விடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ-தனர், பிசாசு, பூதம் என்று குறித்துள் ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர் கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.
அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந் துபவர். அசுரன் என்றால் மது அருந் தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்-கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்-துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்-பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டி-கை-கள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்-களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.
- விடுதலை, 27.10.2005

Saturday, October 22, 2011

தமிழ் மக்களிடையே குருட்டு நம்பிக்கை இன்னும் ஒழியவில்லையே

அறிவுக்கொத்து என்ற நூலில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் எழுதியது 

நம் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குறை என்னவென்றால் எதனையும் ஆய்ந்து, ஓர்ந்து பார்க்கும் குணம் இல்லாமையேயாகும். ஒருவர் கல்வியறிவு ஆராய்ச்சியுடைய பெரியவ ராயிருந்தாலும் அவரைப் பத்துப் பேர் கொண்டாடா விட்டால் அவரை நம்மனோர் தாமுங்கொண்டாட மாட்டார், அதுவேயுமின்றி, அவரைப் பத்துப்பேர் பொறாமையினாலோ, அல்லது வேறு காரணத்தாலோ இழித்துப் பேசக் கேட்டால், அது தகுமா? தகாதா என்று ஆய்ந்து பாராமல் தாமும் அவரை உடனே இழித்துப் பேசி விடுவர்; அவர்க்குத் தீங்கு இழைப்பர்.
இனி, மற்றொருவர் கல்வியறிவு ஆராய்ச்சிகள் சிறிதும் இல்லாராயினும் அல்லது அவை சிறிதேயுடையரா யினும், பத்துப் பேர் அவர்பால்  வைத்த பற்றினாலோ, அல்லது அவர்பால் தாம்பெறும் ஏதேனும் ஒரு பயன் குறித்தோ அவரைக் கொண் டாடுவாராயின் அவர் எதற்காக அவரைக் கொண்டாடுகின்றார், நாமும் அவரை ஏன் கொண்டாட வேண்டு மென்று சிறிதேனும் ஆராய்ந்து பாராமல், உடனே அவரைக் கண்கால் தெரியாமற் கொண்டாடி விடுவர்; அக்கொண் டாட்டத்தால் வருந்துன்பங்களையும் தாம் அடைவர். பெரும்பாலும் , நாட்டவர் உண்மையறிவு ஆராய்ச் சிகள் உடைய பெரியாரைக் கொண் டாடுவதும் இல்லை; அவரால் தாம் அடைவதற்குரிய பெரும் பயன் அடைவதுமில்லை. வெளியினுக்கும் வெற்றாரவாரமும் உடையாரைப் பின்பற்றித் தமது நலனையும், தம் நாட்டவர் நலனையும் இழந்து விடுவதே அவர்க்கு இயற்கையாய்ப் படிந்துவிட்டது.
மேல்நாட்டவர் இயல்பு
இனி, மேல் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குணம் என்ன வென்றால், எவர் எதைச் சொன்னாலும், எவர் எதை எழுதினாலும், அவ்வப்பொருளின் இயல்புகளைத் தம்மாலான மட்டுஞ் சோம்பாமலாராய்ந்து பார்த்து எது தழுவத் தக்கதோ அதைத் தழுவுவர்; தழுவத் தகாததை விலக்குவர் வெறும் வெளி மினுக்கையும், வெற்றாரவாரத்தை யுங்கண்டு அவர் ஏமாந்து விடுவதில்லை. அறிவிலும், ஆராய்ச்சியிலுமே அவர்கள் தமது காலத்தைப் பயன்படுத்தி வருவ தால், அவர்கள் பால் வீணான பேச்சு களும் நிகழ்வதில்லை. பிறர்பாற் குற்றங்கள் இருந்தாலும் அவற்றை அவர்கள் ஆராய்வதில்லை; பிறர்பா லுள்ள குணங்களை மட்டும் ஆராய்ந்து அவற்றுக்காக அவரைப் பாராட் டுவதுடன்,அவரால் தாமும் உலகமும் பயன்படுதற்கான ஒழுங்குகளெல்லாஞ் செய்தவர். அதனால் மேல் நாட்டவரில் நற்குணமும், நல்லறிவும், நன் முயற்சியும் உடையவர்கள் சீருஞ் சிறப்பும் எய்தித் தாமுந்தம்மைச் சேர்ந்தவரும் வறுமையும் கவலையுமின்றி உயிர் வாழப் பெற்று, நாடோறும் ஆயிரக்கணக்கான புதுமைகளையும், ஆயிரக்கணக்கான பொறிகளையும் (இயந்திரங்களையும்) ஆயிரக்கணக்கான தொழிற்சாலை களையும், ஆயிரக்கணக்கான கல்விச் சாலைகளையும்,ஆயிரக்கணக்கான சொற்பொழிவு மண்டபங்களையும், ஆயிரக்கணக்கான கலையறிவுக் கழகங்களையும் இன்னும் இவைபோல் நம் சொல்லளவில் அடங்காத பலப்பல நலங்களையும் தாமிருக்கும் நாடு களிற்பரவச் செய்துவருவதோடு தாம் செல்லும் பிற நாடுகளிலும் அந்நலங் களையும் பரப்பி வருகின்றனர்.
நம்நாட்டவர் தன்மை
இனி, நம் நாட்டவர்களுக்கோ அறிவாராய்சியில்லாமையோடு, ஒற்றுமைக் குணமும் இல்லை; பிறர்பால் அருள் இரக்கமும் இல்லை, தமக்குத் தம் மனைவி மக்களும், நெருங்கிய உறவி னருமே உரியரெனவும், மற்றையோ ரெல்லாந் தமக்கு வேறானவரெனவும், தாமும் தம்மினத்தவரும் நன்றாயி ருத்தலே தமக்கு வேண்டும், நம்மவ ரல்லாத பிறர் எக்கேடு கெட்டா லென்ன, எத்தெருவே போனாலென்ன எனவும் நினைந்து, பிறர்நலத்தைச் சிறிதும் கருதாதவர்களாய் இருக் கின்றனர்.
தன்னலங் கருதும் இப்பொல்லாத எண்ணத்தால் இத்தமிழ் நாட்ட வர்க்குட் பிரிந்திருக்கும் அளவிறந்த சாதிகளும், அவற்றால் விளைந்திருக்கும் அளவிறந்த வேற்றுமைகளும் கணக் கிட்டுச் சொல்லல் இயலாது. நாலு பேர் ஒன்று சேர்வார்களானாற் சாதிபேச்சு; பெண் கொடுக்கல், வாங்கல் பற்றிய பேச்சும்; அவன் சாதிகெட்டவன், அவனுக்கும் நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது எங்கள் சாதியில் ஒடித்தாற்பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்காரரோடுதான் நாங்கள் கலப்பது வழக்கம் மற்றவர்கள் கையில்  தண்ணீர் கூட வாங்க மாட்டோம், என்னும் பேச்சும் அதை விட்டாற் பொருள் தேடும் வகைகளைப் பற்றிய பேச்சும் அதுவும் விட்டால் தமக்கு பொருள் சேருங்காலத்தைப் பற்றியும், நோய்தீரும் நேரத்தைப் பற்றியும், மணம் ஆகும் நாளைப் பற்றியும் எந்த இடத்திற் போனால் குறி கேட்கலாம், எந்த தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் இவை கைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா? கருப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிட லாமா? சுடலைமாடனைக் கும்பிட லாமா? என்னுஞ்சிறு தெய்வச்சிற்றுயிர்க் கொலைக் கெடும் பேச்சும் தனக்குப் பகையானவனைப் பல வகையால் இழித்துத் தன்னைப் பல வகையால் உயர்த்திச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண் கின்றோம் புகை வண்டிகளிலும், இந்தப் பேச்சே, பொதுக்கூட்டங்களிலும் இந்தப் பேச்சே கோயில்களிலும் இந்தப் பேச்சே, குளக்கரைகளிலும் இந்த பேச்சே.
பசி எடுத்த வேளையில்......
ஆனால், மேல்நாட்டவர்களிலோ எதையும் ஆராய்ந்து பார்ப்பவரும் எழுதுபவரும், ஆராயுங்கழகங்களும் அவர்களாலும் எழுதி வெளியிடப்பட்ட, வெளியிடப்படுகின்ற நூல்களும் நாள்  வெளியீடுகள், அவை தம்மைக் கற்பாருங் கற்பிப்பாரும் இவ்வகை கட்கெல் லாங்கோடி கோடியாகத் தமது பொருளை வழங்குவாரும் எண்ணிக் கையிலும் அடங்குதல் இல்லை. மேல் நாட்டவர்கள் பசியெடுத்த வேளையில் எந்த இடத்தில் எந்த உணவு கிடைக் கின்றதோ அதனைப் பெற்று மகிழ்ச்சி யோடு உண்பர். தமது வாழ்க்கைத் துணைக்கு எந்த நாட்டில் எவர் இசைந்தவராய்த் தெளியப்படு கின்றனரோ, அவரை மணந்து கொள்வர். உடம்பைப் பற்றிய இவ்விரண்டு குறைகளையும் இங்ஙனம் எளிதிலே நிரப்பிக் கொண்டு அதற்கு மேல் அவற்றில் தம் கருத்தைச் செலுத் தாமல், தம் அறிவு ஆராய்ச்சிகளை மென்மேற்பெருக்குவதிலும், நாடோறும் புதிய புதிய ஆற்றல்களையும், புதிய புதிய பொறிகளையும், புதிய புதிய உண்மை களையும் கண்டுபிடிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலுமே தமது கருத்தை ஓயாமற் செலுத்தி வருகின்றனர்.
ஆங்கிலங் கற்கும் இந்நாட்டவர்  எந்த இனத்தைச் சேர்ந்தவரா யிருந்தாலும், அவர் எல்லாம் மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கே தாங்கற்ற கல்வியைக் கருவியாக்கி, ஏழைக் குடிமக்களைப் பாழாக்குகின் றார்கள். இந்நிலையிற் பார்ப்பனரும், பார்ப்பனரல்லா தாரும் ஒத்தவர் களாகவேயிருக்கின்றார்கள்.
தந்நலந்தேடுவதிலேயே நாட்டம் வைத்திருக்கும் இவர்கள் அவைக் களங்களில் மேடை மேலேறிப் பேசும் போது மட்டும் ஏழைமக்களுக்காகக் கண்ணீர் விட்டுக்கதறுகின்றார்கள்! இஃது எதனை ஒத்திருக்கின்றதென்றால், ஆடுநனைகிறதே என்று ஓநாய் குந்தியழுததையே ஒத்திருக்கின்றது. மேடைமேல் இவ்வளவு இரக்கங்காட்டி பேசிய அவர்கள் வீட்டுக்கு, ஏழையிரவலர்கள் சென்றால் அவர்களை  ஏசித் துரத்துகின்றார்கள்.
வேலியே பயிரைத் தின்றால்....?
இந்த வகையிற் பார்ப்பனரைவிடப் பார்ப்பனரல்லாதாரே மிகக் கொடி யராயிருக்கின்றார்கள். யாங்ஙனமென் றால், உயர்ந்த நிலைகளிலுள்ள பார்ப்பனர்கள் தம் இனத்தவரல்லா தாருக்கு ஏதோருதவியுஞ் செய்ய தம்மினத்தவர்களில் ஏழைகளாயிருப் பவர்களுக்கு எல்லா வகையான உதவியுஞ் செய்யக் காண்கின்றோம். மற்றும், பார்ப்பனரல்லாதாரில் உயர்நிலைகளிலிருப்பவர்களே, ஏழைக்குடிகட்கு ஏதோரு நன்மையுஞ் செய்யக் காண்கிலோம்; நன்மை செய்யாதொழியினுந் தீமையேனுஞ் செய்யாதிருக்கிறார்களா வென்றால், அப்படியுமில்லை, எளியவர்களைத் துன்புறுத்தியும், அவர்கள் பொருளைத் தோலிருக்க சுளை விழுங்குவது போல் விழுங்கியும் வந்தாற்றானே, தாம் வல்லாண்மை வாழ்க்கை செலுத்தலாம்.
செல்வர்களால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றங்களில் முறையிடச் செல்லும் எத்தனை எளிய மக்கள், தாம் நடுவர்க்குக் கைக்கூலி கொடுக்க இடமில்லாமையின் அங்கும் நடுவிழந்து, ஓலமிட்டு அழுகின்றார்கள்! ஆங்கிலர் நடுவராயிருப்பின், அவரால் எத்திறத்த வரும் முறையாக வழக்குத் தீர்க்கப் பட்டுத்தங்குறை தீருகின்றனர். நம் நாட்டவர் அந்நிலைகளில் இருப்பிற், பெரும்பாலும் அவரால் நடுவராக வழக்குத் தீர்க்கப்படுதல் இல்லை. அவர்க்குக் கைக்கூலி கொடுப்பார் பக்கமே வழக்கு நன்றாய் முடிகின்றது. இதனினும் பெருங்கொடுமையிருக் கின்றது. காவலாக இட்ட வேலியே பயிரை தின்றால் பயிர் விளைவ தெப்படி? இங்ஙனம் பொருளையே பெரிதாய் நினைந்து நடுவு தவறி, எளியவர்களை வருத்திப் பொருள் சேர்க்கும் ஆங்கி லங்கற்ற நம்மனோர், பார்ப்பனரல்லாத நம்மனோர்க்கு, இவ்வாறெல்லாந் தீங்கி இழைப்பினும் பார்ப்பனர்காலில் விழுவதற்கும், அவர்க்குத் தாம் சேர்த்த பொருளை மிகுதியாக வழங்குவதற்கும் மட்டும் அவர்கள் சிறிதும் பின்வாங்குகின்றார்களில்லை.
பார்ப்பனர் காலில் நம்மவர்.....
இவர்கள் ஆங்கிலம் கற்றது வயிற்றுப்பிழைப்புக்கும் பெருமைக்குமே அல்லாமல், ஆங்கிலத்திலுள்ள விழு மிய அறிவாராய்ச்சியைப் பெறுவதற்கு அன்றாகையால், இவர்கள் தம் வீட்டிலுள்ள அறிவில்லாப் பெண் மக்களின் சொல்லுக்கும் ஆராய்ச்சி யில்லாப் பேதைகளான தம் சுற்றத்தார் சொல்லுக்குங் கட்டுப்பட்டவர்களாகித் தம் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு சடங்கிற்கும் பார்ப்பனர்களை வர வழைத்து, அவருக்கு அவர் வேண்டிய பொருளை வழங்கி அவர் காலிலும் விழுகின்றார்கள்! ஒரு வேளை நல்ல சோறுகூடக் கிடையாமற் பட்டினியும், பசியுமாய்க் கிடந்து வாடி வதங்கும் ஏழைகள் முகத்தை ஏறெடுத்தும் பாரா மல் பேதமை வயப்பட்டு வறுமை யறியாத பார்ப்பனர்க்கும், ஆரவாரக் கொண்டாட்டங்கட்கும் சிறு தெய்வ வெறியாட்டுகட்கும் அழிவழக்குகட்கும் தமது பொருளைக் கணக்கின்றிச் செலவிடும் நம்மனோரின் நிலை எண்ணுந்தோறும் நடுக்கத்தை விளைவிக்கின்றது!
இனி, ஆங்கிலமாவது தமிழாவது கல்லாதிருந்தும், பெருஞ்செல்வர்களாக வும், சிற்றரசர்களாகவும் வாழ்வார், நம்நாட்டிற்  பெருந் தொகையினராய் இருக்கின்றனர். இவர்களுடைய செல்வச்செருக்கையும், இவர்கள் தங்கீழ் உள்ள ஏழை மக்கட்குச் செய்யும் கொடுமைகளையும், நாம் எண்ணிப் பார்ப்போமானால் நமதுள்ளம் இன்னும் மிகுதியாய் நடுங்கா நிற்கும். செல்வர்கள் இல்லங்களில் இருக்கும் பொற்சரிகை பின்னிய பட்டாடை களிலும், அவர்களும் அவர்களின் மாதரும் அணிந்து கொள்ளுங் கல்லி ழைத்த நகைகளிலும்,  அவர்கள் புழங் கும் பொன், வெள்ளி ஏனங்களிலும் அவர்கள் ஏறிச் செல்லும் ஊர்தி களிலும், இன்னும் இவை போன்ற வெளிமினுக்குகளிலும் அவர்கள் செலவு செய்திருக்கும் பொருளைக் கணக்கிடப் புகுந்தால், அவை நூறாயிரக்கணக் காயிருக்கும்.
அறியாமை, தலை காட்டுமா?
இனிச் சிற்றரசர்களாகிய ஜமீன் தாரர்களின் அரண்மனைகளிலும் இங்ஙனமே ஆடைகளிலும் அணி கலங்கள் முதலியவற்றிலும் மடங்கி வறிதேகிடக்குஞ் செல்வப் பொருளைக் கணக்கிடப் புகுந்தால் அவை கணக்கிலடங்கா.
இவ்விதமே சைவ-- வைணவ சுமார்த்த மாத்துவ மடங்களில் ஏதொரு நற்பயனுமின்றி அடங்கிக்கிடந்து மங்கும் பெரும் பொருட்டிரளுங் கணக்கில் அடங்கா.
இவ்வாறெல்லாம் இவர்கள் கையில்
முடங்கிக்கிடந்து அவியும் பெரும்
பொருட் குவியல்களெல்லாம்,
இவர்களைவிட்டு நீங்கிப் பொது
மக்கட்குப் பயன்படு நிலைமையை
யடையுமானால் இவ்விந்திய நாட்
டில் வறுமையும், நோயும், அறி
யாமையுந் தலை காட்டுமா?
இவற்றைச் செய்யுங்கள்!
இப்பெரும் பொருள் கொண்டு நூறாயிரக்கணக்கான கல்விச் சாலைகள் நாடெங்குத் திறப்பிக்கலாம். மிக வறியார் விருப்பங்கட்கு அவர் வறுமை நீங்கும் மட்டும் உணவு கொடுக்கும் அறச்சாலைகள் எங்கும் அமைக்கலாம். ஏழையெளிய பிள்ளைகட்கு உண்டியும் உடையும் நூல்களும் வாங்கிக் கொடுத்துச் சம்பளம் வாங்காமற் கல்வி கற்பிக்கலாம். உழவுத் தொழில், கைத்தொழில்களை அறிவாராய்ச்சி யோடு செய்து, இப்போது பெறும் பயனிலும் நூறு  மடங்கு ஆயிரம் மடங்கு மிகுதியான பயனைப் பெறலாம். வாணிகத்திற் பொய்யும், புரட்டுங்கலவாமல் அதனை நேர்மையோடு செய்து பேர் ஊதியத்தை அடையச் செய்யலாம். இவை மட்டுமோ, இந்தியர்கள் தாமே தமது பொருள் கொண்டு புகை வண்டி  தொடர்கள், மின்சார வண்டிகள், வான வூர்திகள் முதலியனவெல்லாம் அமைத் துக் கொள்ளலாம். நீர் வளமில்லாத நாடு நகரங்களுக்குக் குளங்கள் கூவல்கள் எடுப்பித்து குடிநீர்ப்பீலி வைக்கலாம். பொதுமக்கட்கு அறிவு ஊட்டுங் கழகங்கள் நிலை நிறுத்தி, அவற்றிற் கலைவல்ல அறிஞர்களை அமர்த்தலாம். அவர்கள் கடவுளைப் பற்றியும் உயிர்களைப் பற்றியும், உலகங்களைப் பற்றியும், உலகியற் பொருட்களைப் பற்றியும் குழாங்கொண்டு ஆராய்ந்து அறிவு பெறுதற்குக் கலையாராய்ச்சி மன்றங்கள் நிறுவலாம்; அவர்கள் ஆராய்ந்தெழுதும் நூல்களுக்குத் தக்கப்படி பொருளுதவி புரிந்து, அவற்றை அச்சிட்டு நாடெங்கும் பரப்பலாம்  ஆண்டு கடோறும் பன்னூறாயிரக் கணக்காய் மக்களுயிரைக் கொள்ளை கொண்டு போகுங்கொடிய நோய்களை வராமற்றடைசெய்து, மக்கள் வாழ்நாளை நீளச் செய்து, அவரறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும் மருத்துவக் கழகங்கள் எங்கும் அமைக்கலாம்.