Friday, March 11, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை



நமது கடந்த காலம்
நல்லது, பெரியோர்களே, இங்கே நாம் சந்தித்துக் கொண்டோம். எனவே நாம் பேசிக்கொள்வோம். எனக்கு அளிக்கப்பட்டுள்ள தலைப்பு நமக்கு உடனடியாகத் தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம் என்பது.  அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால்,  உங்களின் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் நமது அரசியல் நிலை என்னவாக இருந்தது? கடந்த கால அரசியலை, உங்களில் இளைஞர்களாக உள்ள சிலரால் நெருக்கமாகக் காண இயலாமல் போயிருக்கலாம். நமது கடந்த கால அரசியல் நிலை என்னவாகத்தான் இருந்தது என்பதை உங்களில் பெரும்பாலோர் நினைவு வைத்திருக்கலாம். நமது அரசியல் நிலையில் முன்னேற்றம் தேவை என்று இந்தியர்களாகிய நாம் எப்போதுமே ஆங்கிலேயரைக் கேட்டுக்கொண்டே வந்துள்ளோம்.  நமது கோரிக்கை களைக் கேட்டு ஆங்கிலேய அரசும் அவ்வப்போது அரசியல் சலுகைகளை நமக்கு அளித்து வந்துள்ளது. நம் நாடு நேரடியாக ஆங்கிலேய ஆட்சியின் கீழ் 1857 ஆம் ஆண்டு வந்தது.  இந்திய அரசைப் பொறுத்தவரை, 1861 முதல் இந்தியாவை ஆள்வது பற்றி தொடர்ந்து சட்டங்கள் பல இயற்றப் பட்டு வந்துள்ளன. முடிவாக 1909 ஆம் ஆண்டு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேய அரசின் கீழ் நம் நாடு நேரடி ஆட்சிக்கு வந்தவுடன், இந்தி யாவில் இந்தியர்களின் சுயஆட்சி என்ற ஒரு நடைமுறையையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர். அந்த சுய ஆட்சி யினையும் அவர்கள் அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்படுத்தி மேம் படுத்தி  வந்துள்ளனர். எனவே நமது கடந்த கால நிலை இதுதான்.  நாம் அரசியல் சலுகைகளைக் கேட்டு வருகிறோம்; அரசும் அவ்வப்போது நமக்கு அரசியல் சலுகைகளை அளித்து வருகிறது. நாம் கேட்ட சலுகைகள் அனைத்தையும் நமக்கு அரசு வழங்கி யிருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன்.  எந்த ஒரு நாட்டிலும் அவ்வாறு நடக்க முடியாது.  அரசு அளிக்க விரும்பும் சலுகைகளை விட சற்று அதிகமான சலுகைகளைத்தான்  மக்களும் கேட்டு வருவார்கள்.  ஆனால் நீங்கள் படிப்படியாக முன்னேற்றம் பெற்று வருகிறீர்கள் என்பது உறுதிப் படுத்தப் பட்டு, உங்களின் அரசியல் நிலை எப்போதுமே முன்னேற்றப் பாதையில் வளர்ச்சியே அடைந்து வந்திருக்கிறது, எப்போதும் பிற்போக்குத்தனத்தை அடையவில்லை என்பதைக் காணும்போது அது நமக்கு மனநிறைவை அளிப்பதாக இருக்கிறது. சமீப காலம் வரை நமது நிலை பற்றி நாம் அனைவரும் மனநிறைவு கொண்டவர் களாகவே இருந்து வந்துள்ளோம். 1909 இல் நமக்கு அளிக்கப்பட்ட மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் எனும் சலுகைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்நாட்டில் வரவேற்கப்பட்டன என் பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்நாட்டில், இந்தச் சீர்திருத்தத்துக் காக மிண்டோ-மார்லி பிரபுக்களுக்கு நன்றி தெரிவித்து இந்த மன்றத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். சென் னையில் உள்ள எனது அரசியல் சகாக்கள் பலரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். ஆனால், தாங்கள் விரும்பியவை அனைத்தும் தங்களுக்கு அளிக்கப் படவில்லை என்று அவர்களில் பலர் பேசினர்.  அவ்வாறு கூறியவர்களில் நானும் ஒருவன். ஆனால் இச் சலுகைகள் ஒரு தவணை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொண்டோம். தொடர்ந்து நாம் கோரிக்கைகளை முன் வைப்பது என்றும் அடுத்த தவணையில் என்ன கொடுக்கப்படுகிறதோ,அதனைப் பெற்றுக் கொள்வது என்றும் நமது மனங்களை நாம் தயார் செய்து கொண்டோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றம் திடீரென இந்திய அரசியல் நிலையில் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு நாம் ஆலோசனை செய்யும் முன், இப்புதிய அரசியல் இயக்கத்தின் ஆணிவேர் வரை சென்று, இந்த இயக்கம் தோன்று வதற்கான காரணங்கள் எவை, அவற்றை நியாயப்படுத்தும் சூழ்நிலை என்ன, அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன ஆகியவை பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  இந்தப் பொருள் பற்றி எந்த முடிவும் மேற்கொள்ளும் முன், இவற்றைப் பற்றி ஆராய்ந்து பார்த்து மன நிறை வளிக்கும் பதில் ஒன்றை நீங்கள் காண வேண்டும். அண்மையில் தோன்றிய இந்த இயக்கத்தை (இது வன்முறைசார்ந்த இயக்கம் என்பது எனது கருத்து) ஆங் கிலேய பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதை உங்களால் காட்ட முடிந்தால்,  அதுவே நமது உடன டியான அரசியல் கண்ணோட்டமாகும். அந்த இயக்கத்தை ஆங்கிலேயப் பொது மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதை மெய்ப்பிக்க நான் இங்கே வந்துள்ளேன். அப்படியானால் வேறு ஒரு உடனடியான அரசியல் கண் ணோட்டத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
அயர்லாந்து நாட்டிற்கான சுய ஆட்சி
பெரியோர்களே, அயர்லாந்தில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து வருவது பற்றிய கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட் டிருந்த ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டில் நான் மாணவனாக இருந்துள் ளேன் என்பதால், சுயஆட்சி (ஹோம் ரூல்) என்னும் கூப்பாடு பற்றி நானும் நன்கு அறிந்துதான் உள்ளேன். அரசியல் களத்தில் நான் இருந்த அந்த அய்ந்து ஆறு ஆண்டு காலத்தில்  ஹோம் ரூலைத் தவிர வேறு எதனைப் பற்றியுமே கேள்விப்படவில்லை. எங்கு பார்த்தாலும் ஹோம் ரூல்தான்.  எந்த அரசியல் கூட்டமாக இருந்தாலும், வேறு என்ன பொருள்கள் பற்றி பேசப்பட்டாலும், அயர்லாந்துக்கான ஹோம் ரூல் பற்றிய பேச்சு அங்கு கட்டாயம் இருக்கும்.  எனவே இங்கிலாந்தில் அப்போது இருந்த ஹோம் ரூல் இயக்கம் என்பதைப் பற்றி நான் நன்கு அறிந்தவனாகவே இருந்தேன். ஆனால், இந்தியாவிலும் இதே கூச்சலைக் கேட்ட போது,  உண்மையில் அது நம்பிக்கையுடன் எழுப்பப்பட்ட கோரிக்கை என்று தொடக் கத்தில் என்னால் கருத இயலவில்லை. ஹோம் ரூல் என்னும் சுயஆட்சி அளிக்கப்படுவதற்கான நிபந்தனைகள், சூழ்நிலைகள் ஆகியவை பற்றி முழுமை யாக எவருமே அறிந்திருக்கவில்லை. அவ்வாறு அறிந்திருந்தால்,  அதற்கான குரல் எழுப்ப எவருமே முன் வந்திருக்க மாட்டார்கள். அயர்லாந்தில் இருந்த சூழ்நிலைகளும் கூட சுயஆட்சிக்கு ஏற்ற வையாக இருக்கவில்லை. ஆனால்,   நீண்ட நாட்களாக இருந்து பின்னர் நீக்கப் பட்ட அயர்லாந்து நாட்டு நாடாளுமன்றம் மீண்டும் தங்களுக்கு வேண்டும் என்பது ஒன்றே அயர்லாந்துக்காரர்களின் போராட்டம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அயர்லாந் தில் நீண்ட காலமாக நாடாளுமன்றம் இருந்து வந்தது. ஆனால் 1800 ஆம் ஆண்டு இணைப்புச் சட்டத்தின் மூலம் அது நீக்கப்பட்டது. இந்த இணைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் முதல், அயர்லாந்துக்காரர்கள் அமைதியாக இல்லாமல், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற அவர்கள் ஏதோ ஒரு வழியில் போராடிக் கொண்டு இருந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக் கத்தில் உண்மையில் அந்தப் போராட்டம் ஹோம் ரூல் இயக்க வடிவத்தைப் பெற்றி ருக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அவர்கள் ஹோம் ரூல் இயக்கத்தை உருவாக்கினர்.  கத்தோலிக் கர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களது இதர கோரிக்கைகளுக்கான போராட்டம் உண்மையில் அவர்களிடமிருந்து எடுக்கப் பட்ட நாடாளுமன்றம் தேவை என்ற ஹோம் ரூலுக்கான கோரிக்கையே ஆகும்.
இந்தியாவில் உள்ள சூழ்நிலைகள்
இந்தியாவைப் பொறுத்தவரை, ஹோம் ரூல் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரச்சினையாகும். நமக்கு இதற்கு முன் நாடாளுமன்றம் என்று ஒன்று இருந்த தில்லை. உண்மையான பொருளில் சுய ஆட்சி என்ற ஒன்றை நாம் பெற்றிருந் தோமா என்பதும் எனக்குத் தெரியாது. பண்டைய இந்து அரசர்களின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டு, அப்போதிருந்த அற்புதமான வசதிகளை, சலுகைகளை, வாழ்க்கை முறையை இன்றைய 20 ஆம் நூற்றாண்டின் ஏமாற்றம் அளிக்கும் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பேசுவதே ஒரு புதுமையான பாணியாக ஆகிவிட்டது. பண்டைய இந்தியாவில் இருந்த சுயஆட்சி முறையே சிறந்தது என்றும், அதனால் நாம் அதைக் கேட்கிறோம் என்று சில நேரங்களில் நமக்குக் கூறப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை, பண்டைய இந்தியாவில் நாம் கொண்டிருந்த சுய ஆட்சி என்னவென்றால், தனிப்பட்ட கிராமங்களில் இருந்த பஞ்சாயத்துகள் தான்.  இந்த பஞ்சாயத்துகளின் கூட் டமைப்பு என்ற எது ஒன்றும் உருவாகவே இல்லை. ஒரு கிராமத்திலிருந்து இன் னொரு கிராமத்துக்கு சரியான தகவல் போக்குவரத்து வசதிகள் அந்நாள்களில் இல்லாமல் இருந்ததே இதற்குக் காரணம். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்றதாக விளங்கியது. பண்டைய இந்தியாவில் இதைத் தவிர வேறு எந்தவகை சுய ஆட்சி முறையும் நடைமுறையில் இருந்ததாக அதிகார பூர்வ ஆவணங்கள் எவற்றிலும் எங்கும் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை.  வாதத்துக்காக, பண்டைய இந்தியாவில் சுய ஆட்சி முறை இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இன்று உங்களின் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து நீங்கள் வெகு தூரம் விலகி உள்ளீர்கள். சுயஆட்சிக்கான ஆற்றலை அவர்களிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதைக் காட்ட உங்களிடம் எதுவுமே இல்லை. அத் தகைய ஆற்றலை உங்கள் முன்னோர் களிடமிருந்து நீங்கள் பெற்றிருந்தால், உங்களது நகராட்சிகள் இன்னும் மேன்மையாக நிருவகிக்கப்பட்டு இருக்க வேண்டும். சிறு நகராட்சிகளைத் திறமை யாக நிருவகிக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு நீண்ட காலம் தேவையில்லை. இந்தியாவில், நமக்கு சுய ஆட்சி தேவை என்றால் அதற்கான பயிற்சியும் நமக்கு அவசியம் தேவை. அதற்கான தகுதியை நாம் பெற்று, அதற்குத் தேவையான நமது பண்புகளை வளர்த்துக் கொண்டு, அதன் பின் சுய ஆட்சியைத் தொடங்க வேண்டும். மேலும், ஒற்றுமையாக, எந்த வித வேறுபாடுகளும் அற்ற ஒரே ஒரு நாடாக உள்ள நாடு ஒன்றுக்குதான் சுயஆட்சி என்பதைத் தர இயலும். இந்த பாடத்தை அயர்லாந்து ஹோம் ரூல் இயக்கத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். ஒரு காலத்தில் நாடாளுமன்றம் இருந்த அந்த நாட்டிற்கு, சுயஆட்சி பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் இருந்த போதிலும்,  சுயஆட்சி பெறும் நிலையில் இருந்து அவர்கள் வெகு தொலைவில் உள்ளனர். ஏன்? அயர்லாந்தின் சில பகுதிகளில் குடியேறி வாழும் பிராட்டஸ்டன்ட் கிறித்துவர்கள் தவிர, மொத்த அயர்லாந்தினரும் கத்தோலிக் கக் கிறித்துவர்கள் என்பதுதான் இதன் காரணம். பெரியோர்களே, அந்த ஒரே ஒரு காரணத்துக்காக அயர்லாந் தினால் சுயஆட்சியைப் பெற இயல வில்லை என்பதை அறிந்து கொள்ளுங் கள். இங்கிலாந்து நாட்டின் மக்கள் அவையில் நடக்கும் விவாதங்கள் அனைத்தையும் பார்த்தால், பிராடஸ் டன்டுகள் வாழும் உல்ஸ்டர் பகுதியை ஆட்சி செய்யும் வகையில் கத்தோலிக்கர் வாழும் அயர்லாந்து சுய ஆட்சியைப் பெறும் என்று நான் கருதவில்லை. சுயஆட்சிக்குத் தேவையான மற்றொரு நிபந்தனையான இதுவும் நம் நாட்டிற்கு பொருந்துவதாக இல்லை. ஹோம் ரூலுக்கான மூன்றாவது தேவை என்ன வென்றால், தங்களது வாக்குரிமையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கல்வியிலும் அறிவிலும் மக்கள் முன்னேற்றம் பெற்ற நாடாக அது இருக்கவேண்டும் என்பது. நமது நாட்டின் மிகப் பெரும்பான்மையான மக்கள் அந்த அளவுக்கு முன்னேற்றம் பெற்றவர்களாக இல்லை. அதனால், சுய ஆட்சி பெறுவதற்குத் தேவையான சூழ்நிலைகள், நிபந்தனைகளை முழு மையாக அறிந்து கொண்ட எவரும், இந்தியாவுக்கு சுயஆட்சி தேவை என்று கூற முன்வரமாட்டார்கள்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

திருநீற்று மோசடி!



எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து .....
விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-
நீறு புனைவார் வினையை
நீறு செய்தலாலே
வீறுதனி நாமமது
நீறென விளம்பும்
சீறு நரகத்துயிர்
செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில்
முன்னிறை கொடுத்தார்.

இதன்பொருள்:-  திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில்  உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.
சிவபுராண புளுகு
கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது. அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
பாவத்திற்குப் பரிகாரம்
தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேசவாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத்துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே. இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!
அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

Wednesday, March 9, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்


சென்னை விக்டோரியா ஹாலில் டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பேசிய பேச்சு
நமக்கு உடனடியாக தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம்
(14.3.1917)
முத்தியால்பேட்டை முஸ்லிம் அஞ்சு மான் சார்பில், சென்னை விக்டோரியா ஹாலில் 14.3.1917 அன்று நடைபெற்ற, பெரும் கூட்டமாக மக்கள் கலந்து கொண்ட  கூட்டத்தில் நமக்கு உடனடியாகத் தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம் என்ற தலைப்பில் டாக்டர் டி.எம். நாயர் பேசினார். 

இந்தக் கூட்டத்தில் பல முக்கியமான பிரமுகர் கள் கலந்து கொண்டனர். வெளியூரில் இருந்தும் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சென்னை வந் திருந்தனர். அஞ்சுமானின் செயலாளர் முஹமது உஸ்மான் அவர்கள் முன் மொழிய,  மதிப்பிற்குரிய அஹமது தம்பி மரைக்காயர் அவர்கள் கூட்டத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர் டி.எம். நாயர் அவர்களின் பேச்சு

தலைவர் அவர்களே, பெரியோர் களே! கடந்த ஜனவரி 29 அன்று உங்களுக்கெல்லாம் ஏமாற்றமளித்த எனது செயலுக்காக முதற்கண் என் மன்னிப்பைக் கோருகிறேன். அதை அப்படியே விட்டுவிட்டிருப்பேன். ஆனால்  உடல் நலமற்று இருந்த நான் உடல் நலம் தேறிய பிறகு சில நாள்கள் கழித்து, ஒரு கனவான் என்னிடம் வந்து ஜனவரி 29 அன்று உண்மையிலேயே எனக்கு உடல் நலமில்லாமல் போனதா என்று கேட்டார். அவர் ஏன் இவ்வாறு கேட்டார் என்று நான் ஒரு புலன் விசாரணையே நடத்த வேண்டிய தாயிற்று.

ஜனவரி 29 அன்று இந்த மேடையில் தோன்றுவதைத் தவிர்க் கவே நான் உடல் நலமில்லை என்று பொய் சொன்னதாக என்மீது குற்றம் சாற்றப்பட்டது என்று அறிய வந்தேன்.  அவ்வாறு என்மீது ஏன் அவதூறு கூறப் பட்டது என்பதற்குப் பல காரணங்களும் கூறப்பட்டன.

மேலும் பல காரணங்கள் இன்னமும் எனக்கு தெரிய வந்திருக்காது. அதற்கு அடுத்த நாள் இந்த மேடையில் பண்டிட் மதன்மோகன் மாளவியா பேச இருந்தார் என்பது ஒரு காரணமாகக் கூறப்பட்டது. பெரியோர்களே, பண்டிட் மதன்மோகன் மாளவியாவை நான் அறிவேன். பழைய நாள்களில் நான் அவரை அறிந்திருந்தேன்.  அவரைக் கண்டு நான் வியப்படைந்திருக்கிறேனே தவிர,  எப்போதும்  அஞ்சியதே இல்லை.

அப்போது அவரைக் கண்டு நான் அஞ்சுவதற்குக் காரணங்கள் ஏதுமில்லை என்னும்போது, இப்போது அஞ்சுவதற்கும் எந்தக் காரணமும் இருக்க முடியாது. வகுப்புவாதம் பேசுவதாகக் கூறப்படும் ஒரு இயக்கத்துடன் நான் தொடர்பு கொண்டுள்ளமைக்காக ஒரு வேளை அவர் என்னைக் குறை கூறக்கூடும். இத்தகைய இயக்கங்களில் அவரால் குறை காண முடியும் என்பது எனக்குத் தெரியாது.

அவர் அவ்வாறு குற்றம் காண்பாரேயா னால், அது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றதே ஆகும். இந்தியாவில் உள்ள மிகப் பெரிய வகுப்புவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வரும் அவரால் என்னைக் குற்றம் கூற முடியாது. எப்படியானாலும் அவரிடம் நான் எந்த வித அச்சமும் கொண்டிருக்கத் தேவையில்லை.

அரசாங்கம் என்னை அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடுத்துவிட்டது என்ற வதந்தி தற்போது உலவி வருவதாக எனக்குக் கூறப்பட்டது. அக்கூட்டத்தில் நான் கலந்து கொள்வதை அரசாங்கம் ஏன் தடை செய்யவேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நான் ஜெர்மன் நாட்டு ஏஜெண்ட் அல்ல (சிரிப்பு). எந்த ஜெர்மன்காரரிடமிருந்தும் நான் பணம் ஏதும் பெறவில்லை.  அந்நாட்களில் நான் லண்டனில் இருந்தபோது பல ஜெர்மனிய  பணியாளர்களுக்கு அன்பளிப்பு அளித் துள்ளேன்.  அப்போது எனது பணம்தான் ஜெர்மனியர்களின் கைகளுக்குப் போனது.

எனவே, என்னைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தடுக்க அரசாங்கத்திற்கு எந்தக் காரணமும் இல்லை. நான் கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்குக் கூறப்பட்ட மற்றொரு காரணத்தைப் பற்றிக் கூற நான் விரும்பவில்லை. படுக்கையில் இருந்து  எழக்கூடாது என்று இரண்டு மருத்துவர்கள் என்னைத் தடுக்கும் அளவுக்கு எனது உடல் நலமற்றுப் போகாமல் இருந்திருந்தால், ஜனவரி 29 அன்று நான் அக் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொண்டு எனது கடமையை செய்திருப்பேன். பெரியோர்களே, இதுவும் இன்னும் பல விஷயங்களும், இங்கே நின்று கொண்டிருக்கும் என்னை ஏதோ தடை ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்றவனைப் போன்று நினைக்க வைக்கின்றன.

ஒரு தடகள ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்றி ருந்தால் உங்களால் அதை உணரமுடியும்.  ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பார்வை யாளர்கள் முன் பேசுவது அவ்வளவு கடினமான காரியம் என்று நான் நினைத் திருக்கவில்லை. பழைய நாள்களிலும் அவ்வாறு இருந்தது இல்லை.  இந்தக் கூட்டத்தை நடத்துவதில் இன்னின்ன தடைகள் உள்ளன என்று எனது நண்பர்கள் என்னிடம் கூறுவது வழக்கம். அப்படியானால் கூட்டத்தை ரத்து செய்துவிடுங்கள் என்று நான் அவர்களிடம் கூறுவேன். 

ஆனால் இந்தக் கூட்டத்திற்கு வரும் வரைக்கும் எனது நண்பர்கள் என்னை தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே யிருந்தனர். ஆனால், நமது தலைவர் அவர்களும் இன்றிரவு சில தடைகளைச் சந்தித் திருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.  நாகப்பட்டினம் நகராட்சியின் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்து தப்பித்துக் கொண்டு அவர் வந்துள்ளார் என்று எனக்குக் கூறப் பட்டது. இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க ஒரு விரும்பத்தகாத நேரத்தில் அவர் ஒப்புக் கொண்டுள் ளார்.

அதற்காக நான் மிகவும் வருந்து கிறேன்.  எனது நண்பர்களுக்குக் கெடு தல்கள் நேர்வதை நான் விரும்புவ தில்லை. எனவே அஹமது தம்பி மரைக் காயர் அதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழ்வார் என்று நம்புகிறேன். நானும் கூட பிழைத்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  நான் நோயில் இருந்து பிழைத்து எழக்கூடாது என்று நூற்றுக்கணக்கான தேங் காய்கள் கோயில்களில் உடைக்கப்பட்ட தாக எனக்குக் கூறப்பட்டது. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

எனது சொந்த ஊரான மலபாரில் தேங்காய் களுக்கு சரியான விலை கிடைக்க வில்லை என்று சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த வழியில் சென்னை யில் அவர்களின் தேங்காய்களுக்குச் சரியான சந்தை கிடைக்குமானால், ஏதோ ஒரு சிறிய வழியில் எனது சொந்த மாவட்டத்துக்கு  என்னால் பயன் கிடைத்திருக்கிறது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

Sunday, March 6, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்


தொடர் கட்டுரை

நினைவு தெரிந்த காலம் முதல், இந்தப் பிரிவினரும், சமூகத்தினரும் அரசிடமிருந்து ஊக்கமும் ஆக்கமும் பெற்று வந்திருக்கவில்லையா? கல்வியைப் பொறுத்தவரையிலும் கூட அனைத்துப் பார்ப்பன ஜாதி மக்களின் பக்கமே வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கவில்லை. கல்வித் துறையில் தாமதமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும், பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் கல்வி கற்று முன்னேறத் தொடங்கினர். பலவிதங்களிலும் முன்னேற்றம் பெற்ற  நிலைகளில் இன்று அவர்கள் இருக்கின்றனர். அவர்களில் செட்டி, கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற சமூகத்தினர் விரைந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். மிகவும் பின்தங்கியிருந்த மக்களும்கூட தங்களைவிடப் பல விதங்களிலும் முன்னேற்றம் அடைந்தவர்களைப் போலவே,  புதிய காலத்துக்கு ஏற்ற உயர்நிலையை அடைவதற்குக் கடுமையாக உழைக்கத் தொடங்கி யுள்ளனர். கல்வி கற்று முன்னேற்றம் அடைவது என்ற உணர்வு அந்நியமானது என்றாலும், சில பார்ப்பனர் அல்லாத சமூகங்களின் முன்னேற்றம், பார்ப்பனர் களின் முன்னேற்றத்தைவிட நல்லிணக்கம் கொண்ட தாகவும், ஒரே பக்க முன்னேற்றம் அற்றதாகவும் அமைந்திருந்தது. பார்ப்பனப் பெண்கள், குறிப்பாக பார்ப்பன விதவைகளின் கல்வியில், பார்ப்பனர்கள் ஏதோ பின்தங்கிய வகுப்பினரைப் போலக் கருதி, என்ன காரணத்தினாலோ கல்வித் துறை தனி அக்கறை காட்டி வந்தபோதிலும், கல்வி கற்கும் பார்ப்பனப் பெண்களின் சதவிகிதத்தை விட கல்வி கற்கும் நாயர்கள் போன்ற பார்ப்பனர் அல்லாத சமூகப் பெண்களின் சதவிகிதம் அதிகமாகவே இருந்தது. பார்ப்பனர் அல்லாத மக்கள் இப்போது பெரு விருப்பம் கொண்டவர்களாகத் தோன்றாவிட்டாலும், வாழ்க்கையின் பல தொழில்களிலும், பல்வேறுபட்ட வழிகளிலும் ராஜதானியின் பொருளாதார மற்றும் ஒழுக்கநெறி முன்னேற்றத்தில் பயன் நிறைந்த வகையில் பெரும் பங்காற்றி வந்தனர். ஆனால் அவர்களும், அவர்களின் சகோதரர்களும் இதுநாள் வரை எந்த வித உதவியுமின்றி இருட்டில் தடுமாறிக் கொண்டிருந்தனர்.  அரசியல் அதிகாரம் மற்றும் அலுவலக செல்வாக்கினை பார்ப்பன ஜாதி மக்கள் பல வழிகளிலும் நுணுக்கமாகப் பயன்படுத்தி வந்ததே இதன் காரணம்.
பார்ப்பனர் அல்லாதவர்களுக்கென ஓர் அமைப்பு தேவை
கடுமையான நுண்ணறிவுப் போட்டி நிலவும் இன்றைய நாள்களில், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஒரு தனிப்பட்ட திறமை தேவை என்பதை நாம் மறுக்க வில்லை. ஆனால், மக்கள் தொகையில் ஒரு சிறு சதவிகிதம் உள்ள பார்ப்பன ஜாதி மக்கள்,  ஆங்கிலம் அறிந்த மக்களின் எண்ணிக்கையில், பார்ப்பனர் அல்லாத மக்களைவிட,  அதிக சதவிகிதம் உள்ளவர் களாக இருக்கின்றனர் என்ற  ஒரே காரணத்துக்காக, அனைத்து அரசுப் பணிகளையும் - பெரிய பதவியாக இருந்தாலும் சரி, சிறிய பதவியாக இருந்தாலும் சரி, உயர்ந்த பதவியாக இருந்தாலும் சரி, தாழ்ந்த பதவி யாக இருந்தாலும் சரி, - ஒரு சிறிய அளவிலாவது காணப்பட இயன்ற  திறமையும், அறிவும், பண்பும்  கொண்ட பார்ப்பனர் அல்லாத மக்களை ஒதுக்கி விட்டு, பார்ப்பனர்களே முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள  எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றனர் என்பதுதான் நமக்குப் புரியவில்லை.  தங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த எண்ணற்ற தடைகளையும் மீறி,    குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்த, கேள்வி கேட்க முடியாத உயர்ந்த நிலையை எட்டிய, பார்ப்பனர்களிலும் அவர்களுக்கு இணையான வர்களைக் காணமுடியாது என்னும் அளவிலான  நிருவாக, நீதித்துறை அதிகாரிகளையும், கல்வியாளர் களையும், வழக்குரைஞர்களையும், மருத்துவர்களை யும், மற்ற முக்கிய அதிகாரிகளையும் பார்ப்பனர்  அல்லாத சமூகங்கள் உருவாக்கியுள்ளன. தங்களது சுயமரியாதை உணர்வு மற்றும் அறிவொளி பெற்ற சுய நலன்களைப் பற்றிய அக்கறையினால் வழிநடத்தப் பட்ட அவர்களும் அவர்களது சமூகங்களும் எப்போதும் ஒற்றுமையாகச் செயல்பட்டிருந்தால், அரசு பணிகளுக் கான நியமனங்களிலும், அரசியல் அதிகாரத்திலும் கூட, பார்ப்பனர் அல்லாத மக்கள் அவர்களுக்கு உரிமையான உச்ச நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால் இன்று உள்ள நிலையில், தங்களுக்கென்ற திறமை வாய்ந்த தனி அமைப்புகள் எதனையும் அவர்கள் பெற்றிராத காரணத்தினாலும், நவீன ஆயுதமான விளம்பரத்தினைத் தாராளமாகவும்,  பயன் நிறைந்த வகையிலும் பயன்படுத்தக் கூடிய ஆவலோ, உணர்வோ அற்றவர்களாக அவர்கள் உள்ள காரணத் தினாலும் அவர்களின் நலன்கள், கோரிக்கைகள் முறை யான அளவுக்கு கவனத்தையோ, அங்கீகாரத்தையோ பெற்றிருக்கவில்லை.
நமக்குத் தேவையானது முறையான அரசியல் முன்னேற்றமே  அன்றி, அதிகாரபூர்வமற்ற முறையில் அரசமைப்புச் சட்டம் இயற்றுவது அல்ல இன்றைய அரசியலில் ஒரு நிலையான இடத்தைப் பெறுவதற்கான வழி இருந்தும் மனநிறைவடையாத இந்த ராஜதானியின் தீவிர அரசியல்வாதிகள், புதிய புதிய அரசியல் சலுகைகளை அவர்கள் கேட்டுப் பெறும் போதெல்லாம் இருந்ததைப் போன்ற மகிழ்ச்சியை இன்று  அடையாதவர்களாக இருக்கின்ற காரணத்தினால், அவர்கள் இப்போது ஹோம் ரூல் கேட்கின்றனர். இதுபற்றி ஒரு மறுப்புக் கருத்தை  உரிய காலத்தில் தெரிவிக்காமல் போனால், இந்தியா முழுவதிலும் ஹோம் ரூலைப் பெறுவதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்ற கருத்து ஏற்பட்டு விடும் என்று, நமது முந்தைய அனுபவங் களிலிருந்து அறிந்து கொண்ட நாம் அஞ்சுகிறோம். இந்த ஆடம்பரமான திட்டத்தினைப் பற்றிய அல்லது மாமன்னரின் சட்டப் பேரவையின் 19 உறுப்பினர்கள் மேதகு வைஸ்ராய் அவர்களுக்கு அளித்த திட்டம் பற்றிய விவரங்களுக்குள் விரிவாகச் செல்வது நமது நோக்கத் திற்குத் தேவையல்ல. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அதிகாரத்தையும், செல்வாக்கையும் குறைக்கும் நோக்கம் கொண்ட எந்த திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் நாம் ஆதரவாக இல்லை. அனைத்து இனம் மற்றும் பிரிவு மக்களிடையே சமநிலை நிலவச் செய்வதற்கும்,  ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும்,  ஒரு பொது நோக்கமோ தேசபக்தியோ அற்ற  மக்கள் குழுக்களாக இந்தியா விளங்காமல் தடுக்கத் தேவையான ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வினை மேம்படுத்தவும் ஆங்கிலேய ஆட்சியாளரால் மட்டுமே முடியும். சில குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்தமான தொழிலான, அதிகாரபூர்வமற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றும் செயலில் இருந்து நம்மை நாமே முற்றிலுமாக விலக்கிக் கொள்கிறோம். தொடர்ந்து அரசியல் முன்னேற்றத்திற்குத் தேவையான, மெய்ப்பிக்கப் படும் தகுதியின் காரணமாக உரிய காலத்தில் வழங்கப் படும் தாராளமான சலுகைகள் மற்றும் விவேகம் பெற்ற பொது மக்களின் நம்பிக்கையைப் பெற இயன்ற,  நன்கு விளக்கமளிக்கப்பட்ட ஒரு கொள்கையை பலமாக ஆதரிக்கிறோம் என்று நாம் கூறவேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் தொடக்க நாள்களில், காலம் சென்ற திருவாளர்கள் ஏ.ஓ. ஹ்யூம், டபிள்யூ.சி. பானர்ஜி, பத்ருதீன் தியாப்ஜி, எஸ்.ராமசாமி முதலியார், ரங்கைய நாயுடு, ராவ் பகதூர் சபாபதி முதலியார், சர்  சங்கரன் நாயர் கட்டுப்பாட்டிலும் வழிகாட்டுதலிலும் செயல்பட்டு வந்த காலத்தில், சென்னை ராஜதானி முழுவதிலும் இருந்த அறிவொளி பெற்ற பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் தங்களின் உளம் நிறைவான, ஆர்வம் நிறைந்த ஆதரவை அக்கட்சிக்கு அளித்து வந்தனர்.  அப்போது அந்தக் கட்சி பெயரிலும் வடிவத்திலும் இல்லாவிட்டாலும், உணர்விலும், நடைமுறையிலும் உண்மையான ஒரு தேசிய அமைப்பாக விளங்கியது. அதன் பழைய கொள்கைகளில்  சில இன்னும் அப்படியே மாறாமல் இருக்கின்றன. ஆனால் இன்று அதனை வழிநடத்திச் செல்பவர்களின் உணர்வு,  கடைப்பிடிக்கும் வழி முறைகள் அனைத்தும் இந்த ராஜதானியின் சிந்தனைமிக்க, சுயமரியாதை உணர்வு கொண்ட பார்ப்பனர் அல்லாத மக்களின் பாராட்டைப் பெற இயலாதவையாகவே உள்ளன. இந்த மண்ணில் தன் கால்களைப் பதிக்காத சமூக பிற்போக்குவாதிகளும், பொறுமையற்ற அரசியல் கோட்பாட்டளரும் காங்கிரஸ் கட்சியின் முழு கட்டுப் பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜனநாயகத்தைத் தனது நோக்கமாக இக்கட்சி கொண்டிருந்தாலும், கட்சியின் செயல்பாடுகளை பொறுப்புணர்வற்ற அதிகார அமைப் பினர் இன்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக் கின்றனர். இந்த நாட்டையும் மக்களையும் நன்கு அறிந்துள்ள, நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்பு ஏற்கத் தயாராக இருக்கும்,  சுய உணர்வும் தெளிவும் கொண்ட அரசியல் வாதிகள் காங்கிரஸ் இயக்கத்தின்மீது மீண்டும் தங்களின் ஆளுமையை ஏற்படுத்தி, நாட்டில் இன்று நிலவும் உண்மை நிலைக்கு ஏற்றவாறு கட்சியைச் சரியாக நடத்திச் செல்ல விரைவில் வழிகாட்டுவார்கள்.
எந்த ஜாதியின் ஆட்சியும் கூடாது
நம்மைப் பொறுத்தவரையில், நாம் முன்பே கூறியபடி, இன்றைய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமில்லாத, தேவை யில்லாத மாற்றங்களை அறிமுகப்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம். ஜாதி அல்லது வர்க்க ஆட்சியை வன்மையாகக் கண்டிக்க நம்மால் இயலாது. இந்தியாவின் சிறந்த உண்மையான நலனுக்காக, ஆங்கிலேயரின் நீதி மற்றும் சமவாய்ப்பு என்னும் கொள்கைகளின் அடிப் படையில் இந்திய அரசு தொடர்ந்து நடத்தப்படவேண்டும். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பலத்த ஆதரவையும், அக்கறையையும், ஆர்வத்தையும் தெரிவிப்பவர்களாக நாம் இருக்கிறோம்.  பல குறைபாடுகள் மற்றும் எப்போதாவது நேரும் குழப்பங்களை அது கொண்டிருந்தாலும், ஆங்கிலேய ஆட்சி பொதுவாக நியாயமாகவும், மக்கள்மீது அனுதாபத்துடனும் நடத்தப்படுவதாகும். இந்த நாட்டைப் பற்றி அவர்கள் இன்னும் அதிகமாக  அறிய நேரும்போது, பொது மக்களின் விருப்பத்திற்கு - குழப்பமற்ற தெளிவான விருப்பத்திற்கு - பெரிதும் மதிப்பளித்து, அது பற்றி முடிவு எடுப்பதற்கு முன், இதுவரை முன் எப்போதும் இல்லாத முறையில், வழக்கமான முறையில் அல்லாமல், ஒவ்வொரு ஜாதி, பிரிவு, சமூக மக்களின் நலன்கள் மற்றும் விருப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். சமூகப் புறக்கணிப்பு உணர்வும், கடுமையான ஜாதி, பிரிவு வேறுபாடுகளும் மறையத் தொடங்கும்போது ஏற்படும் சுயஆட்சியை நோக்கமாகக் கொண்ட முன்னேற்றம் மனநிறைவளிப்பதாக இருக்கும் என்பதில் அய்யமேதுமில்லை. ஆனால், இன்றைய நிலையில், உண்மை நிலையை உணர்ந்துள்ள அரசியல்வாதி, தன் முன் உடனடியாக உள்ள விஷயங்களைப் பற்றியே கவலைப்பட வேண்டும்.
சமஅதிகார விநியோகத்தின் அடிப்படையிலான சுய ஆட்சி
போர் வெற்றிகரமாக முடிந்த பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் முன் இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றிய பிரச்சினை வரும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. தனது அரசமைப்புச் சட்டம் அகண்டதாகவும், ஆழமானதாகவும் இருக்க வேண்டும் என்றும், தன் மக்கள் - ஒவ்வொரு பிரிவு, ஜாதி, சமூகத்தின்  பிரதிநிதிகளாக விளங்குபவர்கள் - நாட்டில் அவர்களுக்கு உள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை மற்றும் அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கையின்படி,  அதன் நிருவாக விஷயங்களில் மேலும் பயனுள்ள வகையில் ஆலோசனை கூற அனுமதிக்கப்படவேண்டும் என்றும்,  உள்நாட்டின் கொள்கை மற்றும் பொருளாதார நிலையைப் பாதிக்கும் விஷயங்களில் நிதிச் சுதந்திரமும், சட்டமியற்றும் சுயஅதிகாரமும் அளிக்கப்பட வேண்டும் என்றும்,  அதன் மக்களின் - ஆங்கிலேயக் குடிமகன்களான அவர்களின் -  சுயமரியாதை உணர்வுக்கு ஏற்ற,  எந்த சுயஆட்சி காலனி யாலும் ஆக்ரமிக்கப்பட்ட அதிகாரம், கவுரவத்திற்குச் சற்றும் குறையாத அளவில்- ஆங்கிலேயப் பேரரசின்கீழ் ஓரிடம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவதற்கான உரிமையை இந்தியா ஈட்டியிருக்கிறது.
பார்ப்பனர் அல்லாதாரின் உடனடியான கடமை
விழிப்புணர்வு பெற்று செயல்பட்டு வரும் பார்ப்பனர் அல்லாத சமூகத்தின் அறிவொளி பெற்ற  உறுப்பினர் களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள். அவர்களின் எதிர்காலம் அவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள பணி மிகவும் பெரியதும், அவசரமானதுமாகும்.  முதலாவதாக, இது வரை செய்ததைவிட அதிக எண்ணிக்கையில் தங்களின் பையன்களையும், பெண்களையும் அவர்கள் கல்வி பயிலச் செய்யவேண்டும். பொறுப்புணர்வு மிக்க பார்ப்பனர் அல்லாத சமூகத் தலைவர்களின் வழிகாட்டுதலில் சங்கங்கள் ஒவ்வொரு மக்கள் தொகை அதிகமாக உள்ள மய்யங்களிலும் தொடங்கப்பட்டு, திறமை மிக்க நிலையில் நிருவகிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள கல்வி வசதிகளை மேலும் சுதந்திரமாக அனுமதிக்க பல்வேறுபட்ட பார்ப்பனர் அல்லாத சமூகங்களைத் தூண்டுவதுடன், அத்தகைய வசதிகள் இல்லாத இடங்களில் வசதிகளை ஏற்படுத்தவும், ஏழையாக உள்ள அறிவுக்கூர்மையான மாணவர்களை - மற்றவர்களின் உதவியின்றி அவர்களால் படிக்க முடியாது என்ற காரணத்தால் -  படிக்க வைக்கத் தேவையான நிதியைத் தேடித் திரட்டவும் வேண்டும். மேலும்  நீண்ட காலத் தேவையான, தீவிரமான ஒரு கல்விக் கொள்கை பார்ப்பனர் அல்லாத மக்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். பார்ப்பனர் அல்லாத பிரிவு மக்கள் கல்வியில் முன்னேற்றம் பெறச் செய்வதற்கான சங்கங்களைத் துவக்குவதுடன்,  சமூக - பொருளா தார அமைப்புகளையும் தேவைப்படும் இடங்களில் தொடங்கி நன்கு நிருவகிப்பதுடன், தங்களின் கொள் கைகளை, கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லத் தேவையான நம் உள்ளூர் மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சொந்த நாளிதழ்களைத் தொடங்கி நடத்தவும் வேண்டும். பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் தங்களின் மவுனம் மற்றும் செயலற்ற தன்மையால், தங்களின் குரல் கேட்கப்படச் செய்யத் தவறிவிட்டனர். அவர் களை விட புத்திசாலிகளான மற்றவர்கள் தங்களின் சுயநலத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக் கொண்டதன் விளைவாக,  பார்ப்பன சக குடிமக்க ளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தாங்கள் அடைந் துள்ள இழிந்த நிலையையும், இழந்த வாய்ப்புகளையும் எண்ணி பார்ப்பனர் அல்லாதவர்களிடையே பெரும் அளவிலான மனநிறைவின்மை தோன்றியது. இதைப் பற்றி அரசு முழுமையாக அறிந்திருக்கவில்லை.  இந்த மனநிறைவின்மை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அரசின் கவனம் அதன் பக்கம் ஈர்க்கப்பட வேண்டும். ஆனால் பார்ப்பனர் அல்லாதவர்கள் முதலில் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து கல்வி, சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தையும் அகண்டதொரு வழியிலும்,  நீடிக்கும் வகையிலும்  அவர்கள் செய்ய வேண்டும். அதன் பின், ஆங்கி லேயக் குடி மக்களான அவர்களின் எதிர்கால வாழ்க்கை இன்றிருப்பதைவிட ஒளிமிகுந்ததாகவும், வளம் மிகுந்ததாகவும் இருக்கும். தேசக் கட்டமைப்பு என்று கூறப்படுவது, உயிர்த் தோற்ற வளர்ச்சியின் மெதுவான நடைமுறையில், ஒவ்வொரு சமூகமும் பிரிவும் குறிப்பிட்ட காலத்தில் தங்களின் கடமைகளை  முதலாவதாகவும் முதன்மையானதாகவும் செய்வது என்பது ஒரு கடினமான மாபெரும் பணியாகும்; தேவையானதுமாகும். இந்தியாவில், எந்த வழியிலும் எதிர்காலத்தில் வரும் சில நாள்களில், ஒவ்வொரு சமூகமும் தங்களின் சமூக அமைப்பின் நிலையை சரி செய்து கொள்ள வேண்டும்; அப்போதுதான், உயர்ந்த சமூக நோக்கங்களுக்காக மற்ற சமூகங்களுடன் சேர்ந்து செயலாற்றும்போது,   வெறும் தலைகளை எண்ணும் மந்தைக் கூட்டமாக இல்லாமல், சுதந்திர மற்ற - உதவுவதற்கு எவரும் அற்ற - இனமாக இல் லாமல், சுயமரியாதை உணர்வுள்ள - மிகவும் முன் னேற்றம் அடைந்த சமூக அமைப்பாக செயல்பட்டு, முற் றிலும் சமத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக் குவது என்ற பொது நோக்கத்தை எட்டுவதற்காக விருப்பத்துடன் இணைந்து செயலாற்ற முடியும்.
- பி.தியாகராய செட்டி
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)
நன்றி:விடுதலை 06-03-2011

Saturday, March 5, 2011

எழுத்தில் சீர்திருத்தம்


தமிழ்பாஷை எழுத்துக்கள் வெகு காலமாகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் இருந்து வருகின்றன.


உலகில் உள்ள பாஷைகள் பெரிதும் சப்தம், குறி, வடிவம் எழுத்துகள் குறைப்பு, அவசியமான எழுத்துகள் சேர்ப்பு ஆகிய காரியங்களால் மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன.

கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப பாஷைகளும், சப்தங்களும், உச்சரிப்புகளும், வடிவங்களும் மாறுவது இயல்பே யாகும்.

வார்த்தைகள் கருத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்டவைகள் என்பது போலவே எழுத்துக்கள் சப்தத்தை உணர்த்த ஏற்பட்டவைகளேயாகும்.

ஆனால் நம் பண்டிதர்களுக்குத் தாராளமாய் அறிவைச் செலுத்த இடமில்லாமல் மதம் பழக்க வழக்கம் ஆகியவைகள் குறுக்கிட்டு விட்டதால் எழுத்துகளுக்கும் அதன் கோடுகளுக்கும், வடிவங்களுக்கும் தத்துவார்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியமேற்பட்டு எழுத்துக்களையே தெய்வமாகவும், தெய்வ வடிவமாகவும் கருத வேண்டிய நிலை நம் நாட்டில் ஏற்பட்டு விட்டது.

தற்காலம் எத்தனையோ புதிய பாஷைகள் வந்து நமது தமிழ் பாஷையில் புகுந்து கொண்டன. அவைகளை இனி விலக்க முடியவே முடியாது. விலக்குவதும் புத்திசாலித் தனமாகாது. அப்பேர்ப்பட்ட வார்த்தைகளைச் சரியானபடி உச்சரிக்க நமக்குப் பழக்கத்தில் எழுத்துகள் இல்லாமல் பாஷையையும் உச்சரிப்பு அழகையும் கொலை செய்கின்றோம். விஷ்ணு என்பதை விட்டுணு என்றும், விண்டு என்றும் உச்சரிப்பதில் பெருமை அடைகின்றோம். பாஷாபிமானப் பட்டமும் பெறுகின்றோம்.

அதற்கு இலக்கணம் இருக்கிறது என்கின்றோம். அதோடு சப்தங்கள் மாறி விடுவதால் கருத்தும், அர்த்தமும் மாறுவதில்லை என்று கருதுகின்றோம். அது போலவே சில எழுத்துகள் பழைய பழக்கம் வழக்கம் என்பதற்காக மாற்றக்கூடாது என்று இல்லாமல், சவுகரியத்துக்காக மாற்ற வேண்டியது அவசியம் என்றால் அறிஞர்கள் அதற்கு இடம்கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

சுமார் 70, 80 வருஷ காலத்துக்கு முந்திய பதிப்புகளிலும், எழுத்துகளிலும் ஈ என்கின்ற எழுத்தானது இ எழுத்தையே மேலே சுழித்த வட்ட வடிவத்தில் இருந்து வந்திருக்கிறது.

இன்னும் 400,500 வருஷங்களுக்கு முந்தின கல் எழுத்துகள் அனேகம் வேறு வடிவத்தில் இருந்திருக் கிறது. இப்பொழுது அவைகள் மாற்றமடைந்ததற்குக் காரணங்கள் கேட்பாரும் இல்லை; சொல்லுவாரும் இல்லை. அதனால் சப்தமோ, அர்த்தமோ, பாஷையின் அழகோ கெட்டுப் போனதாகக் குறை கூறுவாரும் காணப்படவில்லை.

அதுபோலவே இப்போதும் சில எழுத்துக்களின் வடிவங்களை மாற்ற வேண்டியதும், சில எழுத்துகளைக் குறைக்க வேண்டியதும், சில குறிகளை மாற்ற வேண்டி யதும் அவசியம் என்றும், அனுகூலம் என்றும் பட்டால் அதைச் செய்ய வேண்டியதுதான் அறிவுடைமையே ஒழிய அதன் தத்துவார்த்தத்துக்கு ஆபத்து வருகின்றதே என்பது அறிவுடைமையாகாது என்பது நமது கருத்து.

ஆகவே இப்போது ணா, றா, னா ஆகிய எழுத்துகளும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளும், மற்ற கா, நா, ரா முதலாகிய எழுத்துகளைப் போலும் டை, நை, ழை, முதலிய எழுத்துகளைப் போலும், ஆகாரத்துக்கு  குறியையும் அய்காரத்துக்கு  குறியையும் பெறாமல் தனி வடிவத்தைக் கொண்டு இருப்பதை மாற்றி ணா, றா, னா, ணை, லை, ளை, னை போல உபயோகித்து பிரசுரிக் கலாம் என்று கருதியிருக்கின்றோம்.

இதன் பயனாய் அச்சு கோப்பதற்கு எழுத்து கேசுகளில் (அறைகளில்) 7 கேசுகள் (அறைகள்) குறைகின்றது என்பதோடு பிள்ளைகளுக்கும் இந்த ஏழு எழுத்துகளுக்கு தனிவடிவம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் சவுகரியம் ஏற்படுகின்றது.

இன்னமும் தமிழ் பாஷை எழுத்துகளில் அனேக மாறுதல்கள் செய்ய வேண்டி இருந்தாலும், இப்போதைக்கு இந்தச் சிறு மாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியாகவே எழுத்துகளை உபயோகித்து அடுத்தாற்போல் பிரசுரிக்கப் போகும் குடிஅரசு பத்திரிகையைப் பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம்.

இதை வாசகர்களும் மற்றும் தமிழ் பாஷை பத்திரி கைக்காரர்களும், தமிழ்ப் பண்டிதர்களும் ஆதரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.
- பகுத்தறிவு - 30.12.1934

Friday, March 4, 2011

குரங்கைக் கும்பிடும் இந்தியர்கள்!


சின்னஞ்சிறு நிலத்தில் குவிந்துகொண்டு, சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியடைவதையும், வர்ணிக்க முடியாத கொடுமைகள் நிகழ்வதையும், பெரிய நகரங்களின் மக்கள் படுகொலை செய்யப் படுவதையும் சலனம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சமூகங்களின் காட்டுமிராண்டித்தனமான தன்னகங்காரத்தை நாம் மறக்க முடியாது; 


இயற்கையில் நிகழும் சம்பவங்கள் சம்பந்தமாக எவ்வளவு அக்கறை காட்டினார்கள்? தவிர எந்த ஆக்கிரமிப் பாளனுடைய கவனமானது இதன் மீது விழுந்துவிட்டால், இந்தச் சமூகங்கள் எதிர்க்க வகையில்லாமல் ஆக்கிரமிப்புக்கு இரையாயின. 

இந்தத் தேக்கம் நிறைந்த அசைவற்ற வாழ்க்கை அகவுரவ வாழ்க்கை - சிருஷ்டிக்கும் திறனில்லாத செயலற்ற வாழ்க்கை நேர்மாறான விளைவுகளையும், சிருஷ்டித்தது. கட்டுக்கடங்காத நாசகார சக்திகள் - நோக்கமில்லாமல் அழிக்கும் சக்திகள் குமுறி எழுந்தன. இந்துஸ்தானத்தில் கொலையே ஒரு தெய்வச் சடங்காயிற்று.

இதை நாம் மறக்கக் கூடாது. இந்தச் சிறு சமூகங்கள் ஜாதி வேறுபாடுகளாலும் அடிமை முறையாலும் களங்கமடைந்திருந்தன. மனிதனைச் சூழ்நிலைக்கு எஜமானனாக்குவதற்குப் பதிலாக, அவனைச் சுற்றுச் சார்புக்கு அடிமைப்படுத்தின.

தானாக வளர்ந்து கொண்டிருந்த சமூக நிலையை, ஒரு பொழுதும் மாறாத இயற்கை விதியாகச் செய்தன. இவ்விதமாக இயற்கையையே மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலைமையைச் சிருஷ்டித்தது. இயற்கையின் எஜமானனாகிய மனிதன், குரங்காகிய அனுமான் முன்பும், பசுமாட்டின் முன்பும் தெண்டனிட்டு வணங்கியதில் இந்தச் சிறுமை காட்சியளித்தது. இவற்றையும் நாம் மறக்கக் கூடாது.
இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் -எங்கெல்ஸ்

அறிவுக்கு எட்டாததை நம்பச் சொல்லும் நாடு


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

நான் ரஷ்யா சென்றிருந்தபோது திருச்சியிலே ஒரு மாபெரும் கூட்டத்திலே காங்கிரஸ் தலைவர்கள் ரஷ்யாவைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார்கள்.

ரஷ்யாவிலே ஒன்றும் கிடையாது. மக்கள் எல்லாம் கஷ்டப்படுவதுதான் வழக்கம். ஆனால் அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் அதைப்பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள்.

இப்பொழுது இங்கிருந்து ஒரு கோமாளி போயிருக்கிறான். அவன் வந்து என்னென்னவோ உளறப் போகிறான். அதை நீங்கள் எல்லாம் நம்ப வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள்? அது உண்மைதான்.

நம் நாட்டிலே எதை நம்பச் சொல்கிறார்கள் தெரியுமா? அறிவுக்கு எட்டாத எங்கோ இருப்பதாகச் சொல்லுகிற சொர்க்கத்தை நம்பச் சொல்லுகிற நாடு நம் இந்தியா. தேவலோகத்தை நம்பச் சொல்லும் நாடு. ஒருவரும் பார்க்கவில்லை. யாரும் ஏற்க முடியாது.

அதை நம்பச் சொல்லுகிறது நம் நாடு. ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் நேராகச் சென்று ரஷ்யாவைப் பார்த்து வருகிறான். அவன் சொல்வதை நம்பாதே. நாம் எப்படி உருப்பட முடியும்? இந்தியா ஒரு காலத்திலும் ரஷ்யாபோல் மாறுமென்று சொப்பனம் கூடக் காண முடியவில்லை.

அங்கு கோவில்கள் இருக்கின்றனவா என்றால் இருக்கிறது. அங்கு பெரிய சர்ச்சுகள் இன்றும் இருக்கின்றன. அந்த சர்ச்சிலே என்ன இருக்கிறது என்றால், மியூசியம் இருக்கிறது. சர்ச்சுகளில் சாமி இல்லை.

சாமி படத்தை அப்புறப்படுத்தி விட்டார்கள்.  இம்மாதிரி அப்புறப்படுத்தப்பட்ட சிற்பங்கள், நகைகள், மற்றவை எல்லாம் மியூசியம் மாதிரியாக ஜனங்கள் பார்த்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறார்கள்.

கடவுளை அடித்து விரட்டி, ஜோசியர்களுக்குத் தண்டனை கொடுத்து ஜெயிலில் போட்டு,  சகுனம் பார்ப்பவர்களைச் சமுத்திரத்தில் தள்ளி தன் கையே தனக்குதவி என்று வாழ்கின்றது. அதுதான் ரஷ்யா!

அங்கு ஒரு ஸ்டாலின் சிலையைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் எனக்குப் பல காரணங்கள் தோன்றிவிட்டன. எப்படியென்றால் கையை முன்னாலே வைத்திருப்பது வணக்கத்தைக் கூறுகிறது.

இரண்டாவது, -நண்பா, ஜோசியத்தை நம்பாதே, கடவுள், மதம் இவற்றை வெறுத்து விடு, தன் கையே தனக்குதவி, பிறத்தியாரை என்றும் நம்பி வாழாதே என்று சொல்வது போல் இருந்தது.
சென்னை கடற்கரையில் 29.10.1951இல்
கலைவாணர் என்.எஸ்.கே.ஆற்றிய உரையிலிருந்து....