Wednesday, March 9, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்


சென்னை விக்டோரியா ஹாலில் டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பேசிய பேச்சு
நமக்கு உடனடியாக தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம்
(14.3.1917)
முத்தியால்பேட்டை முஸ்லிம் அஞ்சு மான் சார்பில், சென்னை விக்டோரியா ஹாலில் 14.3.1917 அன்று நடைபெற்ற, பெரும் கூட்டமாக மக்கள் கலந்து கொண்ட  கூட்டத்தில் நமக்கு உடனடியாகத் தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம் என்ற தலைப்பில் டாக்டர் டி.எம். நாயர் பேசினார். 

இந்தக் கூட்டத்தில் பல முக்கியமான பிரமுகர் கள் கலந்து கொண்டனர். வெளியூரில் இருந்தும் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சென்னை வந் திருந்தனர். அஞ்சுமானின் செயலாளர் முஹமது உஸ்மான் அவர்கள் முன் மொழிய,  மதிப்பிற்குரிய அஹமது தம்பி மரைக்காயர் அவர்கள் கூட்டத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர் டி.எம். நாயர் அவர்களின் பேச்சு

தலைவர் அவர்களே, பெரியோர் களே! கடந்த ஜனவரி 29 அன்று உங்களுக்கெல்லாம் ஏமாற்றமளித்த எனது செயலுக்காக முதற்கண் என் மன்னிப்பைக் கோருகிறேன். அதை அப்படியே விட்டுவிட்டிருப்பேன். ஆனால்  உடல் நலமற்று இருந்த நான் உடல் நலம் தேறிய பிறகு சில நாள்கள் கழித்து, ஒரு கனவான் என்னிடம் வந்து ஜனவரி 29 அன்று உண்மையிலேயே எனக்கு உடல் நலமில்லாமல் போனதா என்று கேட்டார். அவர் ஏன் இவ்வாறு கேட்டார் என்று நான் ஒரு புலன் விசாரணையே நடத்த வேண்டிய தாயிற்று.

ஜனவரி 29 அன்று இந்த மேடையில் தோன்றுவதைத் தவிர்க் கவே நான் உடல் நலமில்லை என்று பொய் சொன்னதாக என்மீது குற்றம் சாற்றப்பட்டது என்று அறிய வந்தேன்.  அவ்வாறு என்மீது ஏன் அவதூறு கூறப் பட்டது என்பதற்குப் பல காரணங்களும் கூறப்பட்டன.

மேலும் பல காரணங்கள் இன்னமும் எனக்கு தெரிய வந்திருக்காது. அதற்கு அடுத்த நாள் இந்த மேடையில் பண்டிட் மதன்மோகன் மாளவியா பேச இருந்தார் என்பது ஒரு காரணமாகக் கூறப்பட்டது. பெரியோர்களே, பண்டிட் மதன்மோகன் மாளவியாவை நான் அறிவேன். பழைய நாள்களில் நான் அவரை அறிந்திருந்தேன்.  அவரைக் கண்டு நான் வியப்படைந்திருக்கிறேனே தவிர,  எப்போதும்  அஞ்சியதே இல்லை.

அப்போது அவரைக் கண்டு நான் அஞ்சுவதற்குக் காரணங்கள் ஏதுமில்லை என்னும்போது, இப்போது அஞ்சுவதற்கும் எந்தக் காரணமும் இருக்க முடியாது. வகுப்புவாதம் பேசுவதாகக் கூறப்படும் ஒரு இயக்கத்துடன் நான் தொடர்பு கொண்டுள்ளமைக்காக ஒரு வேளை அவர் என்னைக் குறை கூறக்கூடும். இத்தகைய இயக்கங்களில் அவரால் குறை காண முடியும் என்பது எனக்குத் தெரியாது.

அவர் அவ்வாறு குற்றம் காண்பாரேயா னால், அது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றதே ஆகும். இந்தியாவில் உள்ள மிகப் பெரிய வகுப்புவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வரும் அவரால் என்னைக் குற்றம் கூற முடியாது. எப்படியானாலும் அவரிடம் நான் எந்த வித அச்சமும் கொண்டிருக்கத் தேவையில்லை.

அரசாங்கம் என்னை அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடுத்துவிட்டது என்ற வதந்தி தற்போது உலவி வருவதாக எனக்குக் கூறப்பட்டது. அக்கூட்டத்தில் நான் கலந்து கொள்வதை அரசாங்கம் ஏன் தடை செய்யவேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நான் ஜெர்மன் நாட்டு ஏஜெண்ட் அல்ல (சிரிப்பு). எந்த ஜெர்மன்காரரிடமிருந்தும் நான் பணம் ஏதும் பெறவில்லை.  அந்நாட்களில் நான் லண்டனில் இருந்தபோது பல ஜெர்மனிய  பணியாளர்களுக்கு அன்பளிப்பு அளித் துள்ளேன்.  அப்போது எனது பணம்தான் ஜெர்மனியர்களின் கைகளுக்குப் போனது.

எனவே, என்னைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தடுக்க அரசாங்கத்திற்கு எந்தக் காரணமும் இல்லை. நான் கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்குக் கூறப்பட்ட மற்றொரு காரணத்தைப் பற்றிக் கூற நான் விரும்பவில்லை. படுக்கையில் இருந்து  எழக்கூடாது என்று இரண்டு மருத்துவர்கள் என்னைத் தடுக்கும் அளவுக்கு எனது உடல் நலமற்றுப் போகாமல் இருந்திருந்தால், ஜனவரி 29 அன்று நான் அக் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொண்டு எனது கடமையை செய்திருப்பேன். பெரியோர்களே, இதுவும் இன்னும் பல விஷயங்களும், இங்கே நின்று கொண்டிருக்கும் என்னை ஏதோ தடை ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்றவனைப் போன்று நினைக்க வைக்கின்றன.

ஒரு தடகள ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்றி ருந்தால் உங்களால் அதை உணரமுடியும்.  ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பார்வை யாளர்கள் முன் பேசுவது அவ்வளவு கடினமான காரியம் என்று நான் நினைத் திருக்கவில்லை. பழைய நாள்களிலும் அவ்வாறு இருந்தது இல்லை.  இந்தக் கூட்டத்தை நடத்துவதில் இன்னின்ன தடைகள் உள்ளன என்று எனது நண்பர்கள் என்னிடம் கூறுவது வழக்கம். அப்படியானால் கூட்டத்தை ரத்து செய்துவிடுங்கள் என்று நான் அவர்களிடம் கூறுவேன். 

ஆனால் இந்தக் கூட்டத்திற்கு வரும் வரைக்கும் எனது நண்பர்கள் என்னை தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே யிருந்தனர். ஆனால், நமது தலைவர் அவர்களும் இன்றிரவு சில தடைகளைச் சந்தித் திருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.  நாகப்பட்டினம் நகராட்சியின் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்து தப்பித்துக் கொண்டு அவர் வந்துள்ளார் என்று எனக்குக் கூறப் பட்டது. இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க ஒரு விரும்பத்தகாத நேரத்தில் அவர் ஒப்புக் கொண்டுள் ளார்.

அதற்காக நான் மிகவும் வருந்து கிறேன்.  எனது நண்பர்களுக்குக் கெடு தல்கள் நேர்வதை நான் விரும்புவ தில்லை. எனவே அஹமது தம்பி மரைக் காயர் அதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழ்வார் என்று நம்புகிறேன். நானும் கூட பிழைத்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  நான் நோயில் இருந்து பிழைத்து எழக்கூடாது என்று நூற்றுக்கணக்கான தேங் காய்கள் கோயில்களில் உடைக்கப்பட்ட தாக எனக்குக் கூறப்பட்டது. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

எனது சொந்த ஊரான மலபாரில் தேங்காய் களுக்கு சரியான விலை கிடைக்க வில்லை என்று சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த வழியில் சென்னை யில் அவர்களின் தேங்காய்களுக்குச் சரியான சந்தை கிடைக்குமானால், ஏதோ ஒரு சிறிய வழியில் எனது சொந்த மாவட்டத்துக்கு  என்னால் பயன் கிடைத்திருக்கிறது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

No comments:

Post a Comment