Sunday, March 6, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்


தொடர் கட்டுரை

நினைவு தெரிந்த காலம் முதல், இந்தப் பிரிவினரும், சமூகத்தினரும் அரசிடமிருந்து ஊக்கமும் ஆக்கமும் பெற்று வந்திருக்கவில்லையா? கல்வியைப் பொறுத்தவரையிலும் கூட அனைத்துப் பார்ப்பன ஜாதி மக்களின் பக்கமே வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கவில்லை. கல்வித் துறையில் தாமதமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும், பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் கல்வி கற்று முன்னேறத் தொடங்கினர். பலவிதங்களிலும் முன்னேற்றம் பெற்ற  நிலைகளில் இன்று அவர்கள் இருக்கின்றனர். அவர்களில் செட்டி, கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற சமூகத்தினர் விரைந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். மிகவும் பின்தங்கியிருந்த மக்களும்கூட தங்களைவிடப் பல விதங்களிலும் முன்னேற்றம் அடைந்தவர்களைப் போலவே,  புதிய காலத்துக்கு ஏற்ற உயர்நிலையை அடைவதற்குக் கடுமையாக உழைக்கத் தொடங்கி யுள்ளனர். கல்வி கற்று முன்னேற்றம் அடைவது என்ற உணர்வு அந்நியமானது என்றாலும், சில பார்ப்பனர் அல்லாத சமூகங்களின் முன்னேற்றம், பார்ப்பனர் களின் முன்னேற்றத்தைவிட நல்லிணக்கம் கொண்ட தாகவும், ஒரே பக்க முன்னேற்றம் அற்றதாகவும் அமைந்திருந்தது. பார்ப்பனப் பெண்கள், குறிப்பாக பார்ப்பன விதவைகளின் கல்வியில், பார்ப்பனர்கள் ஏதோ பின்தங்கிய வகுப்பினரைப் போலக் கருதி, என்ன காரணத்தினாலோ கல்வித் துறை தனி அக்கறை காட்டி வந்தபோதிலும், கல்வி கற்கும் பார்ப்பனப் பெண்களின் சதவிகிதத்தை விட கல்வி கற்கும் நாயர்கள் போன்ற பார்ப்பனர் அல்லாத சமூகப் பெண்களின் சதவிகிதம் அதிகமாகவே இருந்தது. பார்ப்பனர் அல்லாத மக்கள் இப்போது பெரு விருப்பம் கொண்டவர்களாகத் தோன்றாவிட்டாலும், வாழ்க்கையின் பல தொழில்களிலும், பல்வேறுபட்ட வழிகளிலும் ராஜதானியின் பொருளாதார மற்றும் ஒழுக்கநெறி முன்னேற்றத்தில் பயன் நிறைந்த வகையில் பெரும் பங்காற்றி வந்தனர். ஆனால் அவர்களும், அவர்களின் சகோதரர்களும் இதுநாள் வரை எந்த வித உதவியுமின்றி இருட்டில் தடுமாறிக் கொண்டிருந்தனர்.  அரசியல் அதிகாரம் மற்றும் அலுவலக செல்வாக்கினை பார்ப்பன ஜாதி மக்கள் பல வழிகளிலும் நுணுக்கமாகப் பயன்படுத்தி வந்ததே இதன் காரணம்.
பார்ப்பனர் அல்லாதவர்களுக்கென ஓர் அமைப்பு தேவை
கடுமையான நுண்ணறிவுப் போட்டி நிலவும் இன்றைய நாள்களில், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஒரு தனிப்பட்ட திறமை தேவை என்பதை நாம் மறுக்க வில்லை. ஆனால், மக்கள் தொகையில் ஒரு சிறு சதவிகிதம் உள்ள பார்ப்பன ஜாதி மக்கள்,  ஆங்கிலம் அறிந்த மக்களின் எண்ணிக்கையில், பார்ப்பனர் அல்லாத மக்களைவிட,  அதிக சதவிகிதம் உள்ளவர் களாக இருக்கின்றனர் என்ற  ஒரே காரணத்துக்காக, அனைத்து அரசுப் பணிகளையும் - பெரிய பதவியாக இருந்தாலும் சரி, சிறிய பதவியாக இருந்தாலும் சரி, உயர்ந்த பதவியாக இருந்தாலும் சரி, தாழ்ந்த பதவி யாக இருந்தாலும் சரி, - ஒரு சிறிய அளவிலாவது காணப்பட இயன்ற  திறமையும், அறிவும், பண்பும்  கொண்ட பார்ப்பனர் அல்லாத மக்களை ஒதுக்கி விட்டு, பார்ப்பனர்களே முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள  எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றனர் என்பதுதான் நமக்குப் புரியவில்லை.  தங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த எண்ணற்ற தடைகளையும் மீறி,    குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்த, கேள்வி கேட்க முடியாத உயர்ந்த நிலையை எட்டிய, பார்ப்பனர்களிலும் அவர்களுக்கு இணையான வர்களைக் காணமுடியாது என்னும் அளவிலான  நிருவாக, நீதித்துறை அதிகாரிகளையும், கல்வியாளர் களையும், வழக்குரைஞர்களையும், மருத்துவர்களை யும், மற்ற முக்கிய அதிகாரிகளையும் பார்ப்பனர்  அல்லாத சமூகங்கள் உருவாக்கியுள்ளன. தங்களது சுயமரியாதை உணர்வு மற்றும் அறிவொளி பெற்ற சுய நலன்களைப் பற்றிய அக்கறையினால் வழிநடத்தப் பட்ட அவர்களும் அவர்களது சமூகங்களும் எப்போதும் ஒற்றுமையாகச் செயல்பட்டிருந்தால், அரசு பணிகளுக் கான நியமனங்களிலும், அரசியல் அதிகாரத்திலும் கூட, பார்ப்பனர் அல்லாத மக்கள் அவர்களுக்கு உரிமையான உச்ச நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால் இன்று உள்ள நிலையில், தங்களுக்கென்ற திறமை வாய்ந்த தனி அமைப்புகள் எதனையும் அவர்கள் பெற்றிராத காரணத்தினாலும், நவீன ஆயுதமான விளம்பரத்தினைத் தாராளமாகவும்,  பயன் நிறைந்த வகையிலும் பயன்படுத்தக் கூடிய ஆவலோ, உணர்வோ அற்றவர்களாக அவர்கள் உள்ள காரணத் தினாலும் அவர்களின் நலன்கள், கோரிக்கைகள் முறை யான அளவுக்கு கவனத்தையோ, அங்கீகாரத்தையோ பெற்றிருக்கவில்லை.
நமக்குத் தேவையானது முறையான அரசியல் முன்னேற்றமே  அன்றி, அதிகாரபூர்வமற்ற முறையில் அரசமைப்புச் சட்டம் இயற்றுவது அல்ல இன்றைய அரசியலில் ஒரு நிலையான இடத்தைப் பெறுவதற்கான வழி இருந்தும் மனநிறைவடையாத இந்த ராஜதானியின் தீவிர அரசியல்வாதிகள், புதிய புதிய அரசியல் சலுகைகளை அவர்கள் கேட்டுப் பெறும் போதெல்லாம் இருந்ததைப் போன்ற மகிழ்ச்சியை இன்று  அடையாதவர்களாக இருக்கின்ற காரணத்தினால், அவர்கள் இப்போது ஹோம் ரூல் கேட்கின்றனர். இதுபற்றி ஒரு மறுப்புக் கருத்தை  உரிய காலத்தில் தெரிவிக்காமல் போனால், இந்தியா முழுவதிலும் ஹோம் ரூலைப் பெறுவதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்ற கருத்து ஏற்பட்டு விடும் என்று, நமது முந்தைய அனுபவங் களிலிருந்து அறிந்து கொண்ட நாம் அஞ்சுகிறோம். இந்த ஆடம்பரமான திட்டத்தினைப் பற்றிய அல்லது மாமன்னரின் சட்டப் பேரவையின் 19 உறுப்பினர்கள் மேதகு வைஸ்ராய் அவர்களுக்கு அளித்த திட்டம் பற்றிய விவரங்களுக்குள் விரிவாகச் செல்வது நமது நோக்கத் திற்குத் தேவையல்ல. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அதிகாரத்தையும், செல்வாக்கையும் குறைக்கும் நோக்கம் கொண்ட எந்த திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் நாம் ஆதரவாக இல்லை. அனைத்து இனம் மற்றும் பிரிவு மக்களிடையே சமநிலை நிலவச் செய்வதற்கும்,  ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும்,  ஒரு பொது நோக்கமோ தேசபக்தியோ அற்ற  மக்கள் குழுக்களாக இந்தியா விளங்காமல் தடுக்கத் தேவையான ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வினை மேம்படுத்தவும் ஆங்கிலேய ஆட்சியாளரால் மட்டுமே முடியும். சில குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்தமான தொழிலான, அதிகாரபூர்வமற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றும் செயலில் இருந்து நம்மை நாமே முற்றிலுமாக விலக்கிக் கொள்கிறோம். தொடர்ந்து அரசியல் முன்னேற்றத்திற்குத் தேவையான, மெய்ப்பிக்கப் படும் தகுதியின் காரணமாக உரிய காலத்தில் வழங்கப் படும் தாராளமான சலுகைகள் மற்றும் விவேகம் பெற்ற பொது மக்களின் நம்பிக்கையைப் பெற இயன்ற,  நன்கு விளக்கமளிக்கப்பட்ட ஒரு கொள்கையை பலமாக ஆதரிக்கிறோம் என்று நாம் கூறவேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் தொடக்க நாள்களில், காலம் சென்ற திருவாளர்கள் ஏ.ஓ. ஹ்யூம், டபிள்யூ.சி. பானர்ஜி, பத்ருதீன் தியாப்ஜி, எஸ்.ராமசாமி முதலியார், ரங்கைய நாயுடு, ராவ் பகதூர் சபாபதி முதலியார், சர்  சங்கரன் நாயர் கட்டுப்பாட்டிலும் வழிகாட்டுதலிலும் செயல்பட்டு வந்த காலத்தில், சென்னை ராஜதானி முழுவதிலும் இருந்த அறிவொளி பெற்ற பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் தங்களின் உளம் நிறைவான, ஆர்வம் நிறைந்த ஆதரவை அக்கட்சிக்கு அளித்து வந்தனர்.  அப்போது அந்தக் கட்சி பெயரிலும் வடிவத்திலும் இல்லாவிட்டாலும், உணர்விலும், நடைமுறையிலும் உண்மையான ஒரு தேசிய அமைப்பாக விளங்கியது. அதன் பழைய கொள்கைகளில்  சில இன்னும் அப்படியே மாறாமல் இருக்கின்றன. ஆனால் இன்று அதனை வழிநடத்திச் செல்பவர்களின் உணர்வு,  கடைப்பிடிக்கும் வழி முறைகள் அனைத்தும் இந்த ராஜதானியின் சிந்தனைமிக்க, சுயமரியாதை உணர்வு கொண்ட பார்ப்பனர் அல்லாத மக்களின் பாராட்டைப் பெற இயலாதவையாகவே உள்ளன. இந்த மண்ணில் தன் கால்களைப் பதிக்காத சமூக பிற்போக்குவாதிகளும், பொறுமையற்ற அரசியல் கோட்பாட்டளரும் காங்கிரஸ் கட்சியின் முழு கட்டுப் பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜனநாயகத்தைத் தனது நோக்கமாக இக்கட்சி கொண்டிருந்தாலும், கட்சியின் செயல்பாடுகளை பொறுப்புணர்வற்ற அதிகார அமைப் பினர் இன்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக் கின்றனர். இந்த நாட்டையும் மக்களையும் நன்கு அறிந்துள்ள, நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்பு ஏற்கத் தயாராக இருக்கும்,  சுய உணர்வும் தெளிவும் கொண்ட அரசியல் வாதிகள் காங்கிரஸ் இயக்கத்தின்மீது மீண்டும் தங்களின் ஆளுமையை ஏற்படுத்தி, நாட்டில் இன்று நிலவும் உண்மை நிலைக்கு ஏற்றவாறு கட்சியைச் சரியாக நடத்திச் செல்ல விரைவில் வழிகாட்டுவார்கள்.
எந்த ஜாதியின் ஆட்சியும் கூடாது
நம்மைப் பொறுத்தவரையில், நாம் முன்பே கூறியபடி, இன்றைய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமில்லாத, தேவை யில்லாத மாற்றங்களை அறிமுகப்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம். ஜாதி அல்லது வர்க்க ஆட்சியை வன்மையாகக் கண்டிக்க நம்மால் இயலாது. இந்தியாவின் சிறந்த உண்மையான நலனுக்காக, ஆங்கிலேயரின் நீதி மற்றும் சமவாய்ப்பு என்னும் கொள்கைகளின் அடிப் படையில் இந்திய அரசு தொடர்ந்து நடத்தப்படவேண்டும். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பலத்த ஆதரவையும், அக்கறையையும், ஆர்வத்தையும் தெரிவிப்பவர்களாக நாம் இருக்கிறோம்.  பல குறைபாடுகள் மற்றும் எப்போதாவது நேரும் குழப்பங்களை அது கொண்டிருந்தாலும், ஆங்கிலேய ஆட்சி பொதுவாக நியாயமாகவும், மக்கள்மீது அனுதாபத்துடனும் நடத்தப்படுவதாகும். இந்த நாட்டைப் பற்றி அவர்கள் இன்னும் அதிகமாக  அறிய நேரும்போது, பொது மக்களின் விருப்பத்திற்கு - குழப்பமற்ற தெளிவான விருப்பத்திற்கு - பெரிதும் மதிப்பளித்து, அது பற்றி முடிவு எடுப்பதற்கு முன், இதுவரை முன் எப்போதும் இல்லாத முறையில், வழக்கமான முறையில் அல்லாமல், ஒவ்வொரு ஜாதி, பிரிவு, சமூக மக்களின் நலன்கள் மற்றும் விருப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். சமூகப் புறக்கணிப்பு உணர்வும், கடுமையான ஜாதி, பிரிவு வேறுபாடுகளும் மறையத் தொடங்கும்போது ஏற்படும் சுயஆட்சியை நோக்கமாகக் கொண்ட முன்னேற்றம் மனநிறைவளிப்பதாக இருக்கும் என்பதில் அய்யமேதுமில்லை. ஆனால், இன்றைய நிலையில், உண்மை நிலையை உணர்ந்துள்ள அரசியல்வாதி, தன் முன் உடனடியாக உள்ள விஷயங்களைப் பற்றியே கவலைப்பட வேண்டும்.
சமஅதிகார விநியோகத்தின் அடிப்படையிலான சுய ஆட்சி
போர் வெற்றிகரமாக முடிந்த பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் முன் இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றிய பிரச்சினை வரும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. தனது அரசமைப்புச் சட்டம் அகண்டதாகவும், ஆழமானதாகவும் இருக்க வேண்டும் என்றும், தன் மக்கள் - ஒவ்வொரு பிரிவு, ஜாதி, சமூகத்தின்  பிரதிநிதிகளாக விளங்குபவர்கள் - நாட்டில் அவர்களுக்கு உள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை மற்றும் அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கையின்படி,  அதன் நிருவாக விஷயங்களில் மேலும் பயனுள்ள வகையில் ஆலோசனை கூற அனுமதிக்கப்படவேண்டும் என்றும்,  உள்நாட்டின் கொள்கை மற்றும் பொருளாதார நிலையைப் பாதிக்கும் விஷயங்களில் நிதிச் சுதந்திரமும், சட்டமியற்றும் சுயஅதிகாரமும் அளிக்கப்பட வேண்டும் என்றும்,  அதன் மக்களின் - ஆங்கிலேயக் குடிமகன்களான அவர்களின் -  சுயமரியாதை உணர்வுக்கு ஏற்ற,  எந்த சுயஆட்சி காலனி யாலும் ஆக்ரமிக்கப்பட்ட அதிகாரம், கவுரவத்திற்குச் சற்றும் குறையாத அளவில்- ஆங்கிலேயப் பேரரசின்கீழ் ஓரிடம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவதற்கான உரிமையை இந்தியா ஈட்டியிருக்கிறது.
பார்ப்பனர் அல்லாதாரின் உடனடியான கடமை
விழிப்புணர்வு பெற்று செயல்பட்டு வரும் பார்ப்பனர் அல்லாத சமூகத்தின் அறிவொளி பெற்ற  உறுப்பினர் களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள். அவர்களின் எதிர்காலம் அவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள பணி மிகவும் பெரியதும், அவசரமானதுமாகும்.  முதலாவதாக, இது வரை செய்ததைவிட அதிக எண்ணிக்கையில் தங்களின் பையன்களையும், பெண்களையும் அவர்கள் கல்வி பயிலச் செய்யவேண்டும். பொறுப்புணர்வு மிக்க பார்ப்பனர் அல்லாத சமூகத் தலைவர்களின் வழிகாட்டுதலில் சங்கங்கள் ஒவ்வொரு மக்கள் தொகை அதிகமாக உள்ள மய்யங்களிலும் தொடங்கப்பட்டு, திறமை மிக்க நிலையில் நிருவகிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள கல்வி வசதிகளை மேலும் சுதந்திரமாக அனுமதிக்க பல்வேறுபட்ட பார்ப்பனர் அல்லாத சமூகங்களைத் தூண்டுவதுடன், அத்தகைய வசதிகள் இல்லாத இடங்களில் வசதிகளை ஏற்படுத்தவும், ஏழையாக உள்ள அறிவுக்கூர்மையான மாணவர்களை - மற்றவர்களின் உதவியின்றி அவர்களால் படிக்க முடியாது என்ற காரணத்தால் -  படிக்க வைக்கத் தேவையான நிதியைத் தேடித் திரட்டவும் வேண்டும். மேலும்  நீண்ட காலத் தேவையான, தீவிரமான ஒரு கல்விக் கொள்கை பார்ப்பனர் அல்லாத மக்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். பார்ப்பனர் அல்லாத பிரிவு மக்கள் கல்வியில் முன்னேற்றம் பெறச் செய்வதற்கான சங்கங்களைத் துவக்குவதுடன்,  சமூக - பொருளா தார அமைப்புகளையும் தேவைப்படும் இடங்களில் தொடங்கி நன்கு நிருவகிப்பதுடன், தங்களின் கொள் கைகளை, கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லத் தேவையான நம் உள்ளூர் மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சொந்த நாளிதழ்களைத் தொடங்கி நடத்தவும் வேண்டும். பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் தங்களின் மவுனம் மற்றும் செயலற்ற தன்மையால், தங்களின் குரல் கேட்கப்படச் செய்யத் தவறிவிட்டனர். அவர் களை விட புத்திசாலிகளான மற்றவர்கள் தங்களின் சுயநலத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக் கொண்டதன் விளைவாக,  பார்ப்பன சக குடிமக்க ளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தாங்கள் அடைந் துள்ள இழிந்த நிலையையும், இழந்த வாய்ப்புகளையும் எண்ணி பார்ப்பனர் அல்லாதவர்களிடையே பெரும் அளவிலான மனநிறைவின்மை தோன்றியது. இதைப் பற்றி அரசு முழுமையாக அறிந்திருக்கவில்லை.  இந்த மனநிறைவின்மை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அரசின் கவனம் அதன் பக்கம் ஈர்க்கப்பட வேண்டும். ஆனால் பார்ப்பனர் அல்லாதவர்கள் முதலில் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து கல்வி, சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தையும் அகண்டதொரு வழியிலும்,  நீடிக்கும் வகையிலும்  அவர்கள் செய்ய வேண்டும். அதன் பின், ஆங்கி லேயக் குடி மக்களான அவர்களின் எதிர்கால வாழ்க்கை இன்றிருப்பதைவிட ஒளிமிகுந்ததாகவும், வளம் மிகுந்ததாகவும் இருக்கும். தேசக் கட்டமைப்பு என்று கூறப்படுவது, உயிர்த் தோற்ற வளர்ச்சியின் மெதுவான நடைமுறையில், ஒவ்வொரு சமூகமும் பிரிவும் குறிப்பிட்ட காலத்தில் தங்களின் கடமைகளை  முதலாவதாகவும் முதன்மையானதாகவும் செய்வது என்பது ஒரு கடினமான மாபெரும் பணியாகும்; தேவையானதுமாகும். இந்தியாவில், எந்த வழியிலும் எதிர்காலத்தில் வரும் சில நாள்களில், ஒவ்வொரு சமூகமும் தங்களின் சமூக அமைப்பின் நிலையை சரி செய்து கொள்ள வேண்டும்; அப்போதுதான், உயர்ந்த சமூக நோக்கங்களுக்காக மற்ற சமூகங்களுடன் சேர்ந்து செயலாற்றும்போது,   வெறும் தலைகளை எண்ணும் மந்தைக் கூட்டமாக இல்லாமல், சுதந்திர மற்ற - உதவுவதற்கு எவரும் அற்ற - இனமாக இல் லாமல், சுயமரியாதை உணர்வுள்ள - மிகவும் முன் னேற்றம் அடைந்த சமூக அமைப்பாக செயல்பட்டு, முற் றிலும் சமத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக் குவது என்ற பொது நோக்கத்தை எட்டுவதற்காக விருப்பத்துடன் இணைந்து செயலாற்ற முடியும்.
- பி.தியாகராய செட்டி
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)
நன்றி:விடுதலை 06-03-2011

No comments:

Post a Comment