Saturday, March 5, 2011

எழுத்தில் சீர்திருத்தம்


தமிழ்பாஷை எழுத்துக்கள் வெகு காலமாகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் இருந்து வருகின்றன.


உலகில் உள்ள பாஷைகள் பெரிதும் சப்தம், குறி, வடிவம் எழுத்துகள் குறைப்பு, அவசியமான எழுத்துகள் சேர்ப்பு ஆகிய காரியங்களால் மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன.

கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப பாஷைகளும், சப்தங்களும், உச்சரிப்புகளும், வடிவங்களும் மாறுவது இயல்பே யாகும்.

வார்த்தைகள் கருத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்டவைகள் என்பது போலவே எழுத்துக்கள் சப்தத்தை உணர்த்த ஏற்பட்டவைகளேயாகும்.

ஆனால் நம் பண்டிதர்களுக்குத் தாராளமாய் அறிவைச் செலுத்த இடமில்லாமல் மதம் பழக்க வழக்கம் ஆகியவைகள் குறுக்கிட்டு விட்டதால் எழுத்துகளுக்கும் அதன் கோடுகளுக்கும், வடிவங்களுக்கும் தத்துவார்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியமேற்பட்டு எழுத்துக்களையே தெய்வமாகவும், தெய்வ வடிவமாகவும் கருத வேண்டிய நிலை நம் நாட்டில் ஏற்பட்டு விட்டது.

தற்காலம் எத்தனையோ புதிய பாஷைகள் வந்து நமது தமிழ் பாஷையில் புகுந்து கொண்டன. அவைகளை இனி விலக்க முடியவே முடியாது. விலக்குவதும் புத்திசாலித் தனமாகாது. அப்பேர்ப்பட்ட வார்த்தைகளைச் சரியானபடி உச்சரிக்க நமக்குப் பழக்கத்தில் எழுத்துகள் இல்லாமல் பாஷையையும் உச்சரிப்பு அழகையும் கொலை செய்கின்றோம். விஷ்ணு என்பதை விட்டுணு என்றும், விண்டு என்றும் உச்சரிப்பதில் பெருமை அடைகின்றோம். பாஷாபிமானப் பட்டமும் பெறுகின்றோம்.

அதற்கு இலக்கணம் இருக்கிறது என்கின்றோம். அதோடு சப்தங்கள் மாறி விடுவதால் கருத்தும், அர்த்தமும் மாறுவதில்லை என்று கருதுகின்றோம். அது போலவே சில எழுத்துகள் பழைய பழக்கம் வழக்கம் என்பதற்காக மாற்றக்கூடாது என்று இல்லாமல், சவுகரியத்துக்காக மாற்ற வேண்டியது அவசியம் என்றால் அறிஞர்கள் அதற்கு இடம்கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

சுமார் 70, 80 வருஷ காலத்துக்கு முந்திய பதிப்புகளிலும், எழுத்துகளிலும் ஈ என்கின்ற எழுத்தானது இ எழுத்தையே மேலே சுழித்த வட்ட வடிவத்தில் இருந்து வந்திருக்கிறது.

இன்னும் 400,500 வருஷங்களுக்கு முந்தின கல் எழுத்துகள் அனேகம் வேறு வடிவத்தில் இருந்திருக் கிறது. இப்பொழுது அவைகள் மாற்றமடைந்ததற்குக் காரணங்கள் கேட்பாரும் இல்லை; சொல்லுவாரும் இல்லை. அதனால் சப்தமோ, அர்த்தமோ, பாஷையின் அழகோ கெட்டுப் போனதாகக் குறை கூறுவாரும் காணப்படவில்லை.

அதுபோலவே இப்போதும் சில எழுத்துக்களின் வடிவங்களை மாற்ற வேண்டியதும், சில எழுத்துகளைக் குறைக்க வேண்டியதும், சில குறிகளை மாற்ற வேண்டி யதும் அவசியம் என்றும், அனுகூலம் என்றும் பட்டால் அதைச் செய்ய வேண்டியதுதான் அறிவுடைமையே ஒழிய அதன் தத்துவார்த்தத்துக்கு ஆபத்து வருகின்றதே என்பது அறிவுடைமையாகாது என்பது நமது கருத்து.

ஆகவே இப்போது ணா, றா, னா ஆகிய எழுத்துகளும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளும், மற்ற கா, நா, ரா முதலாகிய எழுத்துகளைப் போலும் டை, நை, ழை, முதலிய எழுத்துகளைப் போலும், ஆகாரத்துக்கு  குறியையும் அய்காரத்துக்கு  குறியையும் பெறாமல் தனி வடிவத்தைக் கொண்டு இருப்பதை மாற்றி ணா, றா, னா, ணை, லை, ளை, னை போல உபயோகித்து பிரசுரிக் கலாம் என்று கருதியிருக்கின்றோம்.

இதன் பயனாய் அச்சு கோப்பதற்கு எழுத்து கேசுகளில் (அறைகளில்) 7 கேசுகள் (அறைகள்) குறைகின்றது என்பதோடு பிள்ளைகளுக்கும் இந்த ஏழு எழுத்துகளுக்கு தனிவடிவம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் சவுகரியம் ஏற்படுகின்றது.

இன்னமும் தமிழ் பாஷை எழுத்துகளில் அனேக மாறுதல்கள் செய்ய வேண்டி இருந்தாலும், இப்போதைக்கு இந்தச் சிறு மாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியாகவே எழுத்துகளை உபயோகித்து அடுத்தாற்போல் பிரசுரிக்கப் போகும் குடிஅரசு பத்திரிகையைப் பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம்.

இதை வாசகர்களும் மற்றும் தமிழ் பாஷை பத்திரி கைக்காரர்களும், தமிழ்ப் பண்டிதர்களும் ஆதரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.
- பகுத்தறிவு - 30.12.1934

2 comments:

  1. அன்றைய சூழலில் ஏற்பட்ட சிந்தனை இன்றைய சூழலுக்குப் பொருந்தாது.
    விரிவாக வேண்டுமெனில்

    http://thiru-padaippugal.blogspot.com/2010_09_01_archive.html

    http://thiru-padaippugal.blogspot.com/2010/06/blog-post_9159.html

    http://thiru-padaippugal.blogspot.com/2010/06/blog-post.html

    ஆகியவற்றைக் காண்க.
    எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
    தமிழே விழி! தமிழா விழி!

    ReplyDelete
  2. பெரியார் 1934-ல் எழுதிய கட்டுரை தந்தமைக்கு நன்றி. 1935-ல் எழுதிய தலையங்கத்தில் உ, ஊ உயிர்மெய் வரிசைகள் சீராக அமைக்க வேண்டியதன் அவசியத்தை எழுதியுள்ளார். அதனைக்கொண்டே பெரியார் நிறுவிய விடுதலை இதழ் அழகான உ, ஊ உயிர்மெய் சின்னங்களோடு சில பத்திகள் வெளியிடுகின்றது. அம்முறை பரவலாகக் கணினிக்கு வர பெரியார் தொண்டர்களும், தமிழ்நாடு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டாக்டர் நா. கணேசன்

    ReplyDelete