Sunday, September 15, 2013

அறிஞர் அண்ணா தீட்டிய அந்த வசந்தம்-அண்ணாவிடம் - கி. வீரமணி வேண்டுகோள்

தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி விடுதலை மலருக்குக் கட்டுரை வேண்டி அண்ணா அவர்களிடம் கேட்டேன்.
நான் கொஞ்சம் அதிகமாகவே அவருக்குத் தொல்லை  கொடுத்தேன்.
ஏனென்றால், அவருக்கு அவ்வளவு நெருக்கடிகள். அவர் பதவிக்கு வந்து கொஞ்ச நாள் ஆகிறது. 1967 மார்ச்சிலே அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தார். அடுத்து ஆறு மாதத்தில் செப்டம்பரில் அய்யா பிறந்த நாளை ஒட்டி அவரிடம் மலருக்குக் கட்டுரை கேட்டேன். செப் டம்பர் மாதத்தில் ஏராளமான கோப்பு களைப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்களையும் பார்த்துக் கொண்டு இருந்தார். நான்போய் அண்ணா அவர்களிடம் நின்றவுடனே, கட்டுரை தானே  எழுதி கொடுத்துவிடுகிறேனப்பா என்று ரொம்ப மகிழ்ச்சியாகச் சொன்னார்.
அண்ணா அவர்கள் அடுத்து மது ரைக்குச் சென்றார். அண்ணா அவர் களுக்குத் தெரியும் செப்டம்பர் 17 என்றால் அவருக்குத் தெரியும். அய்யா அவர்களுடைய விடுதலை மலரை 16ஆம் தேதியே வெளியிட்டுவிடுவோம். ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் மலர் வர வேண்டியது முக்கியம்.
மதுரை திருமங்கலம் என்ற திருநகர் பகுதிக்குச் சென்று ஆதித்தனார் அவர் களுடைய வீட்டில் அண்ணா அவர்கள் தனியே அமர்ந்து கட்டுரையை எழுதி விடுதலை அலுவலகத்தில் என்னிடம் நேரடியாகக் கொடுக்கும்படி ஒரு ஆளையே போட்டு அனுப்பினார்.
அண்ணா அவர்கள் எழுதிய அந்த கட்டுரையைப் படித்து விட்டு அய்யா அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந் தார். அந்த கட்டுரைக்குத் தலைப்பே அந்த வசந்தம். அந்தக் கட்டுரை வருமாறு:
கலவரம் நடக்காத பொதுக்கூட்டம் எது?
எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு  ஆண்டு பலவற்றுக்குப் பிறகு  அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றையக் கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.
வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடு களில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.
அப்போது, கலவரம் எழாமல் ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும், பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படு முன்னர், தலைபோகும்  தாடி போகும் தடி போகும்  உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண் டிய நிலை.
பெரியாரால் திருந்திய
தமிழரோ பலப்பலர்!
அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா! என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாமய்யா! என்று ஒரு கடிதத்தைத் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார்  வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால். செல்வோம்; பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில், உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந் திருப்பின் அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக் கொண்டு தான் வருவார்! அத்தகைய தெளிவும் வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
வரலாற்றில் தனி இடம் பிடித்தவர்!
ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங் கும் இருந்ததில்லை.
அந்த வரலாறு தொடங்கப்பட்ட போது நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழே டுகள் புதிதுபுதிதாக இணைக்கப்பட்ட நாள்களிலே ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாள்களைத்தான் என் வசந்தம் என்று குறிப் பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர், பற்பலர். அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாள்கள் எனக்கு மிகவும் இனிமையான நாள்கள்; இன்றும் நினைவிலே கொண்டு வரும்போது இனிமை பெறுகின்றேன்.
எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்!
எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என் பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும், அகமகிழ்வும், மனநிறைவும் பெற்றிடச் செய்தார்.
கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டிருக்கிறேன்; கடிந்துரைக்கக் கேட்டிருக் கிறேன்; உன்னை எனக்குத் தெரியும் போ! என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டி ருக்கிறேன்; ஒருநாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப் போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது குடும்பத் தில் பிறவாப் பிள்ளை எனக் கொண்டிருந்தார்.
தமிழன் வரலாற்றில் முக்கியக் கட்டம்!
நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.
இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார். நான் அவருடன் இணைந்த போது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.
அதற்குமுன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்த ஆண்டுகள் தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள். திடுக்கிட வைக்கிறாரே! திகைப்பாக இருக்கிறதே! எரிச் சலூட்டுகிறாரே! ஏதேதோ சொல்கிறாரே! என்று கூறியும், விட்டு வைக்கக் கூடாது! ஒழித்துக் கட்டியாக வேண்டும்! நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று மிரட்டியும் தமிழகத்துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர். ஆனால், அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர். மூலையில் நின்றாகிலும், மறைந்திருந்தாகிலும்! அந்தப் பேச்சு அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்; கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்! அவருடைய பேச்சோ  அது தங்கு தடை யின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது  மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு, காடு கழனிகளை வளம் பெறச் செய்து கொண்டு ஓசை நயத்துடன்  ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார், இங்கே பேசுகிறார், அதைக் குறித்துப் பேசுகிறார், இது குறித்துப் பேசுகிறார்  என்று தமிழகம் இந்த அய்ம்பது ஆண்டுகளாகக் கூறி வருகிறது.
பெரியார் வாழ்வு முழுவதும் உரிமைப் போரே!
மனதிற்பட்டதை எடுத்துச் சொல்வேன்  எது நேரிடினும்  என்ற உரிமைப்போர் அவருடைய வாழ்வு முழுவதும், அதிலே அவர்கண்ட வெற்றி மிகப் பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர் அந்த வெற்றியின் விளைவு களை. இந்தத் தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அறிவுப் புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்! இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண் டின் அளவு, மிகப் பெரியது.
பெரியார் கண்ட தமிழகம்!
தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட் டுள்ள இந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாதது. பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்படும்போது, வியர்த்துப் போகின்றனர். அப்படியா!  முடிகிறதா! நடக்கிறதா!  விட்டு வைத் திருக்கிறார்களா!  என்று கேட்கிறார்கள்  சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு.
அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இவை போன்ற நகர்களில் என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோது, ஒவ்வோர் ஊரிலும் இதுபோலத்தான் கேட்டனர். யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்!
அந்த இடத்துப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள்  பெரிய பெரிய ஏடுகளை; எழுதுவார்கள் அழகழகான கட்டுரை களை; கூடிப் பேசுவார்கள் சிறிய மண்ட பங்களில், போலீசு பாதுகாப்புப் பெற்றுக் கொண்டு! இங்கு?
பழைமையின் பிடிவாதம் பொடிப்பொடியானது!
இங்கா இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழைமை உண்டா? எதைக்கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?
ஏ அப்பா! ஒரே ஒருவர், அவர் நம்மை அக்குவேறு ஆணிவேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே என்று, இந்நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த பழைமை அலறலாயிற்று! புதுப்புதுப் பொருள் கொடுத்தும், பூச்சுமெருகு கொடுத்தும் இன்று பழைமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. என்றா லும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதை அறியாதவர் இல்லை!
எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல; ஒரு சகாப்தம்  ஒரு கால கட்டம்,  ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை.
அக்கிரமம் தென்படும்போது, மிகப் பலருக்கு அது தன்னைத் தாக்காதபடி தடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக் கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சியும்தான் தோன்றும்; எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை.
நேர்மைக்காகப் போராடிய பெரியார்!
பெரியார் அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டாலும், எந்த வடிவிலே காணப் படினும், எத்தனை பக்கபலத்துடன் வந்தி டினும் பெரியார் அதனை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை.
அவர் கண்ட களம் பல; பெற்ற வெற்றிகள் பலப்பல! அவர் தொடுத்த போர் நடந்தபடி இருக்கிறது! அவர் வயது 89! ஆனால் போர்க் களத்திலேதான் நிற்கின்றார்!!
அந்தப் போரிலே ஒரு கட்டத்தில் அவருடன் இருந்திடும் வாய்ப்பினைப் பெற்ற நாள்களைத்தான் வசந்தம் என்று  குறிப்பிட்டேன். மேலும் பல ஆண்டுகள் அவர் நம் முடன், நமக்காக, வாழ்ந்திருக்க வேண் டும். தமிழர் வாழ்வு நல் வாழ்வாக அமை வதற்கு, பன்னெடுங் காலமாக இருந்து வரும் கேடுகள் களையப்படுவ தற்கு, அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் என்பதில் அய்ய மில்லை. வாழ்க பெரியார்!
(பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் 89ஆவது ஆண்டு விடுதலை மலருக்கு எழுதிய கட்டுரை)

Thursday, July 4, 2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் -4



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் -4

                                                                                                                                                                                அ.கருணானந்தன்,
                                                                                                                                       வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),                      
                                                                                                                                                                 விவேகானந்தா கல்லூரி,
                                                                                                                                                                                                  சென்னை.
சட்டத்தை மீறி சூத்திர சம்காரம் தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்ட விதிகளின்படி கல்லூரிக் குழுவிற்கு இரண்டு பேராசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் விவேகானந்தா கல்லூரியில் முதல்வருக்கு அடுத்தபடி பணியில் மூத்தவர் சூத்திரரான முனைவர் உன்னிக் கிருஷ்ணன்பிள்ளை இதுவரையில் 67 ஆண்டு வரலாற்றில் சமஸ்கிருதத் துறையில் பணியாற்றிய பார்ப்பனரல்லாத பேராசிரியர் இவர் ஒருவர் தான். அதனாலேயே அந்தத் துறையில் பார்ப்பனீய வெறியர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். அவரைத் தனிமைப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் தொடர்கின் றன.
சமஸ்கிருதத்துறையின் முறை கேடுகளை எதிர்த்தும், துறைத் தலைவரும் இன்றைய கல்லூரி முதல் வருமான சிறீனிவாசனின் முறை கேடுகளை எதிர்த்தும் இவர் பல புகார்களை நிர்வாகத்திடம் அளித் துள்ளார். விவேகானந்தரின் அத்வைத வேதாந்தம் புறக்கணிக்கப்பட்டு பார்ப்பனீய கிருஹ்ய சூத்திரம், அர்த்த சாஸ்திரம், சிருங்கார காவியங் களுக்கு சிறப்பிடம் தருவதை எதிர்த் தும் நீண்ட கடிதங்களையும் எழுதி னார். பார்ப்பனரல்லாதார், பார்ப்பன ஏகபோக சமஸ்கிருத துறையில் இருக்கலாமா? அதுவும் சமஸ் கிருதத்தில் உண்மையாகவே புலமை யுடைய சூத்திரர் இருக்கலாமா? ஆகவே அவருக்கு கல்லூரிக்குழு உறுப்பினர் பொறுப்பு மறுக்கப்பட்டது.
ஆகஸ்டில் பணி ஓய்வு பெறவுள்ள வருக்கு கல்லூரிக் குழு உறுப்பினர் பதவியா? என்று நியாயம் கற்பிக்கும் கல்லூரிச் செயலாளர் சுகதேவானந்தா என்ற பார்ப்பனீயம் கல்வி ஆண்டு முடியும் வரை அவர் பணியில் தொடர முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது செயலரின் பதில் பார்ப் பனீயச் சதியை வெளிப்படுத்தியது. உன்னிக்கிருஷ்ணன் மீது குற்றங் களைச் சாட்டி, விசாரணை நிறுவி அவரை பணியில் நீடிக்காமல் செய்ய முடியும் என்ற விளக்கம் பார்ப்பனீய வக்கிரத்தின் வெளிப்பாடல்லவா? ஆகஸ்டில் ஓய்வு பெற உள்ளவருக்கு கமிட்டி உறுப்பினர் பதவி வேண்டிய தில்லை என்றால், பணி ஓய்வு பெறவுள்ள தருணத்தில் குற்றச்சாட்டு, விசாரணை மட்டும் எப்படிச் சரியாகும்? சூத்திரர் மீதான பகை உணர்ச்சி - பழி உணர்ச்சிக்கு எல்லை இல்லையா?
இக்கல்லூரியில் தமிழ் மொழிப்பாடம் உண்டு, தமிழ் இலக்கியம் இல்லை. படிப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் வரவில்லை என்ற காரணம் காட்டி தெலுங்கு மற்றும் இந்தி மொழித் துறைகளை மூடிவிட்டவர்களின் கல்லூரி யில் சமஸ்கிருதத் துறையில் மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? சமஸ்கிருத இலக்கியத்துறையில் ஆசிரியர்கள் எண்ணிக்கையை விட மொத்த இலக்கிய மாணவர்கள் எண்ணிக்கை குறைவு. அந்தத் துறை பார்ப்பன ஆசிரியர்களுக் குத் தான் உயர் பதவிகளில் முன்னுரிமை, முழு உரிமை. இன்றைய கல்லூரி முதல்வர் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, அவரது சிறப்பு அதிகாரி அனைவரும் சமஸ்கிருதப் பேராசிரியர்கள்.
யாரால் சமூக மாற்றம்
இன்று கல்லூரியில் ஆசிரியர்கள் - மாணவர்களில் பார்ப்பனர் அல்லாத வர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு ராமகிருஷ்ணா மிஷன் நடத்தும் கல்லூரி நிர்வாகத்தின் சமூக அக்கறை காரண மல்ல. 1980-க்கு பின் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாநில அரசு கட்டாய மாக்கியதனால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது. அதுவரையில் மாணவர் சேர்க்கையிலும், ஆசிரியர் நியமனத்திலும் பார்ப்பனீய ஏக போகமே நீடித்தது. 1986-இல் தான் முதன் முதலாக தலித் ஆசிரியர்கள் நியமனம் நடந்தது. அப்படி நியமனம் பெற்ற இரு தலித் ஆசிரியர் களில் ஒருவருக்கு அந்த ஆண்டு இறுதியில் பணிநீக்க ஆணை வழங்கப் பட்டது. ஆசிரியர் அமைப்பின் ஆறுமாதப் போராட்டத்திற்குப் பிறகு, அரசு தலையிட்டதன் விளைவாக அந்தப் பணி நீக்க ஆணை ரத்து செய்யப்பட்டது.
அரசின் சலுகை யு.ஜி.சி.யின் உதவி கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கல்லூரி மாணவர் விடுதி, பிற்பட்ட, தலித் பிரிவு மாணவர்கள் எண்ணிக்கை பெருகியபோது, தனியார் விடுதியாக் கப்பட்டு, நலிந்த பிரிவு மாணவர்களுக்கு விடுதி எட்டாமல் செய்யப்பட்டது. கீழ் ஜாதியினருக்கு முதலில் கல்வி என்ற சுவாமி விவேகானந்தரின் குறிக்கோள் என்னவாயிற்று?
அது மட்டுமல்ல, பகல் கல்லூரியில் மானியம் பெறும் வகுப்புகளுக்கு அரசு ஆணைகளின் விளைவாக இட ஒதுக் கீட்டின்படி மாணவர்களைச் சேர்க்கின்ற நிர்வாகம், மாலை வகுப்புகளில் இட ஒதுக்கீட்டைப் புறக்கணிப்பது மட்டுமல்ல, ஏழை மாணவர்களுக்கு எந்தவிதச் சலுகையும் தருவதில்லை. தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு நுழையவும் வாய்ப்பில்லை. இதுதான் விவேகானந்தர் வலியுறுத்திய தரித்திர நாராயண சேவையா?
துவேஷமல்ல, சமூக நீதி, சமநீதி
சுவாமி விவேகானந்தரின் அனைத் துக் கருத்துகளையும் அப்படியே அங்கீகரிப்பது இயலாமற் போகலாம். அவரது ஆன்மீக விளக்கங்களில், வரலாற்றுப் புரிதல்களில் நம்மைப் போன்றவர்களுக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அவரது தேச பக்தியில், நலிந்தவர்களை மய்யப்படுத்திய சமூக நீதித் திட்டங்களில் அனை வருக்கும் மிகுந்த மரியாதையும் ஒப்புதலும் உள்ளன. அந்த சமூகநீதி செயல் பாடுகளை அவரால் உருவான ராம கிருஷ்ணா மிஷனும், அதனால் நிர்வகிக்கப்படும் விவேகானந்தரின் பக்தர்களிடம் மட்டுமின்றி, நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமும் உள்ளது. சங்கரமடம் போன்ற பார்ப் பனர்களுக்கு மட்டுமே உரிய மடமாக ராமகிருஷ்ணா மடத்தை விவேகானந்தர் அமைக்கவில்லை. மடத்தில் சேருவதற்கு துவிஜராகத்தான் இருக்க வேண்டும் என்ற தகுதியை அவர் புகுத்தியதில்லை. அத்தகைய ராமகிருஷ்ணா மடத்தின் துறவிகள், பூர்வாசிரமத்தில் பார்ப்பனராக இருந்தாலும், மிஷனின் திட்டங்களிலும், செயல்பாடுகளிலும், பூர்வாசிரம சாதிப்பற்றோ, ஜாதி வெறியோ இன்றி ஸ்தாபகரான விவேகானந்தரது பாமர மக்களின் மீதான பரிவையும், அவர்களது முன் னேற்றத்தையும் முன்னிலைப்படுத்திய தாகவே இருக்கும், இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதிலும், வலியுறுத்து வதிலும் என்ன தவறு இருக்க முடியும்? இது பார்ப்பனத் துவேஷமல்ல. பொதுச் சொத்தை ஜாதிச் சொத்தாக வக்கிரப் படுத்துவதை எதிர்ப்பதுதான்.
ஜாதிச் சொத்தல்ல, பொதுச் சொத்து
சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் வித்யா பீடம் என்னும் பெயரில் விவேகானந்தா கல்லூரியை நிர்வாகம் செய்யும் சென்னை ராம கிருஷ்ணா மிஷன், இக்கல்லூரி ஒரு குறிப்பிட்ட மேல் ஜாதியினரின் தன் னலக் கூடாரமாக இயங்காமல் விவேகானந்தரின் சமூக - கல்வி லட்சியங்களை நிறைவேற்றுகின்ற ஒரு பொது நிறுவனமாக இயங்க வேண் டும். இது தொடர்பாக 11.5.2013 அன்று இந்து நாளிதழில் வெளியான ஒரு நீதிமன்றத்தீர்ப்பை மிஷனின் கவனத் திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
“The management and administration of the affairs of a public charitable trust cannot be left entirely to the members of a family, as though it is a private family business concern”
ஒரு பொது அறக்கட்டளை (டிரஸ்டின்)யின் மேலாண்மையும் நிர்வாகமும், ஏதோ ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் வியாபார விவகாரம் போன்று, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் உறுப்பினர்களிடம் முழுமையாக விட்டுவிட முடியாது
இதில் ஒரு குறிப்பிட்ட குடும்பம் என்பதை ஒரு குறிப்பிட்ட ஜாதி என்று விரிவுபடுத்தினால் இந்த நீதிமன்றத் தீர்ப்பு விவேகானந்தா கல்லூரி நிர்வாகத்திற்கும் பொருந்தும் என்றே கூற முடியும்.
சென்னை ராமகிருஷ்ணா மிஷனும், வித்யா பீடத்தின் செயலாளரும் நிலை மையை மாற்றுவார்களா?
விவேகானந் தரின் மேலான விருப்பத்தை நிறை வேற்றுவார்களா? விவேகானந்தரை வழிபாட்டுச் சிலையாக மாற்றுபவர்கள், அவரது சீரிய நோக்கங்களை பலி பீடத்தில் புதைத்து விடக்கூடாது என்ற பாமர மக்களின் எதிர்பார்ப்பை இனியாவது புரிந்து கொள்வார்களா?
(நிறைவு)
விடுதலை 4.7.2013

Wednesday, July 3, 2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 3



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 3

அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),
விவேகானந்தா கல்லூரி,
சென்னை.
தொடரும் பூர்வாசிம வக்கிரங்கள்
துறவிகளுக்கு ஜாதியோ, பூணூலோ இல்லை என்பது கற்பிதம். துறவியானபின் காவி உடை மாற்றமும் வெறும் பெயர் மாற்றமும்தான் நடை பெறுகின்றன. மனமாற்றம் நிகழ்வ தில்லை. சன்னியாச வேடத்தில் ஜாதி வெறியர்களாகவே தொடர்கிறார்கள், ஜாதி ஆதிக்கத்திற்காகவே பார்ப்பன ஆதிக்கச் சுரண்டலுக்காகவே தங்கள் பொறுப்புகளை (தவறாகப்) பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு விவே கானந்தா கல்லூரி ஓர் ஒப்பற்ற முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
ராமகிருஷ்ணா மிஷனின் நிர்வாகச் ஜாதி வெறி எத்தகைய அத்துமீற லுக்கும் கூச்சமின்றிப் போகும் என் பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒரு கல்லூரி முதல்வர் பணி நிறைவு பெற்றபின் அடுத்த முதல்வர் முறை யாகத் தேர்வு செய்யப்படும் வரை யிலான இடைக்காலத்தில் பணியில் மூத்த பேராசிரியர் மட்டுமே பொறுப்பு முதல்வராக இருக்க வேண்டும் என் கிறது அரசு ஆணை. அரசு மானி யத்தில் இயங்கும் விவேகானந்தா கல்லூரிக்கும் இந்த ஆணை பொருந் தும்.
திரிமூர்த்திகள்
1981-ஆம் ஆண்டு முனைவர் என்.வெங்கடசுப்ரமணியன் பணியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கு அடுத்தபடி பணியில் மூத்தவர் ஜம்புநாதன் என்ற வணிக வியல் துறைத் தலைவர்.
அரசு ஆணையின்படி ஜம்புநாதன் தான் பொறுப்பு முதல்வராக வேண்டும். ஆனால் கல்லூரி நிர்வாகிகளின் பார்வையில் அவரிடம் இந்த தற் காலிகப் பொறுப்பிற்குக் கூட ஒரு தகுதிக்குறைவு இருந்தது. ஜம்புநாதன் ஒரு சூத்திரர். தங்கள் கல்லூரியில் ஒரு சூத்திரன் பொறுப்பு முதல் வராவதா- தீட்டுப்படாமல் பார்ப்பனக் கோட்டையைக் காப்பாற்ற என்ன வழி? சாணக்கியம் சிந்தித்து ஒரு தீர்வைக் கண்டது. மூன்று பேர் கொண்ட குழுவை பொறுப்பு முதல்வர்களாக நியமித்தது. ஜம்புநாதனுடன் வி.கே. சீதாராமன் என்ற வரலாற்றுத் துறைத் தலைவர், கே.கணேசன் என்ற பொரு ளியல்துறைத் தலைவர் இந்தக் குழுவின் தலைமையில் பார்ப்பனர் கணேசன். பின்னர் அவரையே முறையான முதல்வராகவும் தேர்வு செய்தனர். பொறுப்பு முதல்வர்களாக மூன்று பேர்களை நியமித்த நிகழ்ச்சி தமிழக வரலாறு காணாத புரட்சி; அல்ல... அல்ல... புரட்டாகும்.
ஜாதிக்கொரு நீதி
இந்த ஆண்டும் பார்ப்பன சாதி வெறிதான் புதிய கல்லூரி முதல்வரை முடிவு செய்தது. முதல்வர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் பார்ப்பனரல் லாத இரு பேராசிரியர்களும் இருந்தனர். தங்களது தகுதிக்களுக்கான சான்று களை பெட்டி பெட்டியாகக் கொண்டு வந்து தேர்வுக்குழுவினர் முன்னால் வைத்தனர். அதில் பொருளியல் துறைத் தலைவருக்கு ஆய்வுச் சான்றுகளும், அனுபவச் சான்றுகளும் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பார்ப்பனத் தகுதி இல்லாத அவரைத் தவிர்ப்பதற்காக கல்லூரிச் செயலாளர் சுகதேவானந்தாவால் (அவரும் பூர்வா கிராமத்தில் கன்னட பார்ப்பனர்) குழு உறுப்பினர்களுக்கு ஒரு கூடுதல் தகவல் தரப்பட்டதாகக்  கூறப்படுகின்றது.
அதாவது அந்த பொருளியல் துறைத் தலைவர் மீது அவர் துறையைச் சேர்ந்த புகார்கள் நிலுவையில் உள்ளதாம். புகாருக்கு உள்ளான ஒருவரை எப்படித் தேர்வு செய்ய முடியும் என்ற சூழல். எனவே நிர்வாகத்தால் கே.சிறீனிவாசனை தேர்வுக்குழு ஏற்கும்படி ஆயிற்றாம். நியாயம்தானே என்று அப்பாவிகள் நினைக்கக்கூடும். ஆனால்கல்லூரிச் செயலாளரால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப் பட்ட தகவல் ஒன்று உண்டு. அதாவது தேர்ந்தெடுக்கப்படவுள்ள சிறீனிவாசன் மீது அவர் துறையின் சக ஆசிரியர் முனைவர் உண்ணிக்கிருஷ்ணன் என் பவர் கொடுத்த கடுமையான புகார்கள் பல நிலுவையிலுள்ளன என்ற தகவல் தேர்வுக்குழுவிற்குத் தரப்படவில்லை. ஒரே குற்றமானாலும் வர்ணத்திற்கு ஒரு நீதி என்ற மனுதர்மத்தை இந்த நவீன யுகத்திலும் செயல்படுத்துவதில் காவி யுடுத்த பார்ப்பனர்கள் எவ்வளவு முனைப்பாக உள்ளனர் என்பது மீண்டும் உறுதிப்பட்டுள்ளது. கடைசி ஒரு பார்ப்பனர் இருக்கும் வரையிலும் கல்லூரி முதல்வர் பதவி வேறு எந்த ஜாதி யினருக்கும் சென்றுவிடக் கூடாது என்ற பார்ப்பன வெறித்தனத்தை ராம கிருஷ்ணா மிஷனிடம், பார்ப்பன ஆதிக் கம் மிக்க கல்லூரி நிர்வாகக்குழுவிடம் காண்கிறோம்.
இதுமட்டுமல்ல, பார்ப்பன நிர்வாகத் தின் வேறு சில புரட்டுகளையும் விவே கானந்தரின் விசுவாசிகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
விவேகானந்தர் விருப்பத்திற்கு மாறாக, இன்று அக்கல்லூரி வசதியான பிரிவினரின் புகலிடமாக உள்ளது. லாபம் ஈட்டும் சுயநிதி அடிப்படை மாலைக் கல்லூரி வகுப்புகளுக்கு அதிக கவனம் காட்டப்படுகிறது.
ஒரு மானியம் பெறும் கல்லூரியின் மாலை நேரப் பிரிவிற்கு பொறுப்பாளராக பகல் நேரக் கல்லூரியின் அனுபவம் மிக்க மூத்த போராசிரியரை நியமிப்பதுதான் நடைமுறையாகும். இவ்வாறு நியமிக் கப்படுபவர்களெல்லாம் பார்ப்பனர்களே. இப்போது மாலை வகுப்புகளுக்குப் பொறுப்பாளராக சுவாமி போதாத் மானந்தா என்ற துறவி, அவரது உதவி யாளர்களாக இருவர், சிறீராம் மற்றும் மணிகண்டன் என்பவர்கள் உள்ளனர். இவர்கள் முறையான பகல் நேர கல்லூரிப் பேராசிரியர்களோ அனுபவத்தில் மூத்த வர்களோ அல்லர். ஆனாலும் இருவருமே பார்ப்பனர்கள்.
கூடுதல் ஊதியம், பார்ப்பனீய ஏகபோகம்
2003-லிருந்து இக்கல்லுரி தன் னாட்சி உரிமை பெற்றுள்ளது. இதில் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூடுதல் ஊதியத்தில் நியமிக்கப் படுவார் (மாதம் 10,000 ஆயிரம் ரூபாய்)
இதுவரை இவ்வாறு கூடுதல் ஊதியத்துடன் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றியவர்கள் பட்டியல் பின் வருமாறு:
1) முனைவர் அபிராம சுந்தரம் 2) முனைவர் என்.எஸ்.வெங்கட சுப்பிரமணியன்
3) முனைவர் ரங்கதுரை
4) முனைவர் கனகசபேசன் நாகராஜன்
5) முனைவர் வாசன்ரமணன்
6) முனைவர் ராமச்சந்திரன்
அனைவருமே பார்ப்பனர்கள் அதனாலேயே இவர்களை விட பணியில் மூத்தவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். அதிக நிதி, கூடுதல் ஊதியம் பெற்றும் கூட தேர்வுச் சீர் திருத்தம் குறித்து கருத்தரங்கம், ஆய்வு போன்ற எதையும் இந்தப் பார்ப்பன சிரேஷ்டர்கள் நடத்தவில்லை. பொதுப்பணத்தை பார்ப்பனர்களே அனுபவிப்பதற்கு இந்த வாய்ப்புகளை நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. பொதுப் பணத்தை பார்ப்பனர் எடுத்துச் செல்வதற்கு வசதியாக சுகதேவா னந்தா தலைமையிலான இன்றைய நிர்வாகம் பல புதுமையான (புதுப்) பதவிகளை உருவாக்கியுள்ளது.
தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உதவியாக சிறப்பு அதிகாரி இந்தப் பொறுப்பு (?) ஓய்வு பெற்ற சமஸ்கிருதப் பேராசிரியர் பார்ப்பனர் வாசன் ரமணனுக்குத்தான் அளிக்கப்படு கிறது. வாரத்தில் ஓரிரு முறை கவுரவ வருகை தருவதற்காக இவருக்கு பல ஆயிரங்கள் மாத ஊதியமாக வழங்கப்படுவதாகத் தெரிகிறது.
இதைப் போன்று இப்போது கல்லூரி முதல்வராகத் நியமிக்கப் பட்டுள்ள சிறீனிவாசனுக்கும் கூடுதல் ஊதியத்தில் ஓர் ஆலோசகர், அவரும் ஒரு பார்ப்பனர், ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் சுவாமிநாதன். இவருக்கும் மாத ஊதியம் பல ஆயிரங்கள் இவர் முதல்வராக இருந்தபோது வந்த தேசிய மதிப்பீட்டுக்குழு (NAAC) இவரைப் போன்றவரை வைத்துக் கொண்டு எப்படி கல்லூரியை நடத்து கிறீர்கள் என்று விமர்சனம் செய்தது ஊரறிந்த ரகசியம். இவர்தான் இன்றைய ஆலோசகர்.
- (தொடரும்)
                                                                                                                                                                                 விடுதலை 3.7.2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 2



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 2

அ.கருணானந்தன், வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),
விவேகானந்தா கல்லூரி,
சென்னை.
விவேகானந்தர் பாதையில் கல்லூரி நிர்வாகம் செல்கிறதா?
இப்போதையக் கேள்வி இது தான்...
விவேகானந்தரது விருப்பத்திற்கு இசைவாகத்தான் அவரால் உருவாக் கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன், நடந்து கொள்கிறதா? விவேகானந்தரது லட்சியப்படிதான் ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் செயல்படுகிறதா?. விவே கானந்தர் பெயரைத் தாங்கியுள்ள கல்லூரி, விவேகானந்தரது லட்சியங் களை வென்றெடுக்கும் வகையில் அவரால் உருவாக்கப்பட்ட ராம கிருஷ்ணா மிஷனது கல்லூரி விவே கானந்தரின் விருப்பப்படி செயல்பட வேண்டும் என்று தான் நாமும் விரும் புகிறோம். ஆனால் விவேகானந்தர் விரும்பிய சூத்திர யுகம், சூத்திர எழுச்சிக்கு முரணாகவும், எதிர்ப்பாக வும் இக்கல்லூரி 67 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பார்ப்பன சுயநலமிகளின் கோட்டையாகவே இன்றும் தொடர்கிறது என்பது வேதனையானது, வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது, எதிர்க்கத்தக்கது.
விவேகானந்தா கல்லூரி பார்ப்பனர் கல்லூரியா?
விவேகானந்தர் கல்லூரி  பொதுச் சொத்து அக்கிரகாரச் சொத்தாக மாற்றப்பட்ட மோசடியின் சின்னம்.
1946-இல் இக்கல்லூரி துவக்கப் பட்டது. இக்கல்லூரி பார்ப்பனர்களுக் காக, பார்ப்பனர்களால் பார்ப்பனர் களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதற்கான ஒரு போலி யான மாயை உருவாக்கப்பட்டிருந்தது. அது ஒரு மோசடி. இக்கல்லூரியை துவக்க நிதி திரட்டியது மதராஸ் எஜிகேஷன் சொசைடி என்ற குழு. இதில் சுப்பராய அய்யர் செயலாள ராகவும், அல்லாடி கிருஷ்ணசாமி போன்ற பல பார்ப்பனர்கள் உறுப்பினர் களாகவும் இருந்தனர் என்பது உண்மை; ஆனால் எத்திராஜீலு முதலியார் போன்ற பிராமணரல்லா தோரும் இதில் இருந்தனர். பார்ப்பனரை விட பார்ப்பனரல்லாதோரிடமிருந்து அதிகமாக நிதி திரட்டப்பட்டது. கல்லூரி நடத்தும் பொறுப்பு சங்கரமடம் போன்ற பார்ப்பனருக்கு மட்டுமே உரிய ஒன்றிடம் கொடுக்கப்படவில்லை. பார்ப்பனர் மட்டுமே என்ற வரையறையில்லாத, கீழ் ஜாதியினருக்கு தொண்டு செய்வதற் கென்றே உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சமூக நோக்கத்திற்காகவே நடத்தப்பட்டு வந்த ராமகிருஷ்ணா (மாணவர்) இல்ல வளாகத்தின் ஒரு பகுதியை கல்லூரிக்கு ஒதுக்கினர். அங்கு பார்ப்பனரல்லாத நாட்டுக் கோட்டை நகரத்தாரால் 1921-இல் மாணவர் இல்லத்திற்கு என கட்டித் தரப்பட்ட நாட்டுக் கோட்டை நகரத்தார் வித்யாசாலை என்ற பள்ளிக்கட்டடம் கல்லூரிக்கு என ஒதுக்கப்பட்டது. பின்னர் சென்னை மாகாண அரசினால் சிடி இம்ப்ரூவ்மெண்ட் டிரஸ்டிடமிருந்து சி.அய்.டி.காலனி பகுதியில் பெரும் நிலம் (மனைகள்) கல்லூரி மைதானத்திற் காகவும், கல்லூரி விடுதி அமைக்கவும், மிக மிகச் சொற்ப விலையில் (அதிலும் பெரும்பகுதியை அரசே தந்துவிட்டது) தரப்பட்டது.
பல்கலைக்கழக மானியக் குழு தந்த நிதியைப் பயன்படுத்தி (Matching Grant) கல்லூரி மாணவர் விடுதியின் ஒரு கட்டடமும், கல்லூரி நூலகக் கட்டடமும் பெறப்பட்டது. பார்ப்பனரல்லாத நல்லி குப்புசாமிச் செட்டி, ஓபுல் ரெட்டி போன்ற கொடையாளர்களிடமிருந்து கிடைத்த கொடையில் அரங்கங்களும் புதுக்கட்ட டங்களும் எழுந்தன. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் மாநில, மத்திய அரசுகளிடமிருந்து நிதிக் கொடைகளை இவ்வாறு பெற்றது மட்டுமல்ல, மாநில அரசிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை மாதந் தோறும் ஊதிய மானியமாகவும் பெற்று வருகின்ற விவேகானந்தா கல்லூரி எப்படி ஒரு பார்ப்பனக் கல்லூரியாக இயங்க முடியும்?
எனவே இது மக்கள் வரிப்பணத் திலிருந்து ஒதுக்கப்படும் அரசின் மாநில உதவியிலும், பொதுமக்கள் கொடையிலும் இயங்கும் கல்லூரி. பாமர மக்கள் சேவைக்கென விவேகானந்தரால் உரு வாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனால் நிர்வகிக்கப்படும் கல்லூரி. ஒரு பொதுச் சொத்து; மக்கள் சொத்து.
நீதி - நியாயத்திற்குப் புறம்பான பார்ப்பன சாதி ஆதிக்கம்
இந்த பொதுச் சொத்து, பொதுக்கல்வி நிறுவனம் அது துவக்கப்பட்ட காலம் முதல் இன்று வரையில் 67 ஆண்டுகளாக நடைமுறையில் ஒரு இந்து அமைப்பாக என்று கூட இல்லாமல் ஒரு பார்ப்பன நிறுவனமாகவே இருந்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
கல்லூரி துவக்கப்பட்ட 1946-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர்களாக அய்ந்து பேர் இருந்துள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு:
சுவாமி கைலாசானந்தா (1946 - 1971), திரு என்.சுப்ரமணியன் (1971 - 80), முனைவர் சி.ராகவாச்சாரி (1980 - 86), பேராசிரியர் டி.எஸ்.சதாசிவம் (1986 - 2001), சுவாமி கவுதமானந்தா (2001 முதல்)
சர்வம் பார்ப்பன மயம்
இவர்களில் இடைப்பட்ட மூவரும் பார்ப்பனர்கள். முதலாமவரும், இன்றுள் ளவரும் சன்னியாசிகளானாலும் பூர்வா சிரமத்தில் (துறவறம் மேற்கொள்ளும் முன்னர்) அதாவது பிறப்பால் பார்ப் பனர்களே. இதைப் போன்று இந்த 67 ஆண்டு காலத்தில் கல்லூரிச் செயலாளர் களாக ஒன்பது பேர் இருந்துள்ளனர்.
திரு எம்.சுப்பராய அய்யர், திரு. எஸ்.பார்த்தசாரதி அய்யங்கார், திரு. என்.சுப்ரமணியன், சுவாமி நிஷ்க மானந்தா, சுவாமி அமிருதானந்தா, சுவாமி சத்யப் பரியானந்தா, சுவாமி ஆத்மகானந்தா, சுவாமி அபிராமானந்தா, சுவாமி சுகதேவானந்தா
இவர்களில் சுவாமி நிஷ்கமானந்தா (1970 - 1976)-வைத் தவிர அனை வரும் பார்ப்பனர்களே. பொது நிதியில் அரசு மானியத்தில் இயங்கும் இக்கல்லூரியில் 14 பேர் கல்லூரி முதல்வர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இன்றுள்ளவர் இக்கல் லூரியில் 15-ஆவது முதல்வர் அந்தப் பட்டியல் பின் வருமாறு:
டி.எஸ்.சர்மா, என்.சுந்தரம் அய்யர், டி.ஆர்.ராகவ சாஸ்திரி, டி.என்.சேஷாத் திரி, ஜி.வெங்கட்டராமன், முனைவர் என்.வெங்கட சுப்ரமணியன், முனைவர் வே.கணேசன், முனைவர் வி.தியாக ராஜன், முனைவர் பி.ஆர்.விட்டல், பி.நடராஜன், முனைவர் எஸ்.ராம ரத்னம், முனைவர் ஸி.வி. சுப்ர மணியன், ஜி.சிறீனிவாசப்பிரபு, முனைவர் எஸ்.சுவாமிநாதன் இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் கல்லூரி நிர்வாகத்தால் கல்லூரி முதல்வராக நியமனம் பெற்றி ருப்பவர். முனைவர் கே.சிறீனிவாசன்.
இவர்கள் அனைவரும் பார்ப்பன சிரேஷ்டர்கள் முனைவர் பட்டம் பெற்ற வருக்கு கல்லூரி முதல்வர் தேர்வில் முன்னுரிமை என்ற நிலையிலும், அந்த முன்னுரிமை விதியைத் தளர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பி.நடராஜன், ஜி.சிறீனிவாசப்பிரபு போன்றவர்களும் பார்ப்பனர்களே. பார்ப்பனர்களை மட்டுமே கல்லூரி முதல்வராகத் தேர்வு செய்வது என்பது ராமகிருஷ்ணா மிஷன் நிர்வாகத்தின் கொள்கை முடிவாக உள்ளது.
சூத்திரர் யுகம் என்ற விவேகானந் தரது கனவு என்னவாயிற்று? காயஸ்தராகப் பிறந்த அந்த துறவியின் கனவு என்றுமே கனவாகவே நீடிக்க வேண்டும் என்பது தான் அவரது துறவுப் பரம்பரையினரின் சாதி வர்ண வேட்கை போலும்.
(தொடரும்)
                                                                                                                                                                                விடுதலை 2.7.2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள்



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள்




 அ.கருணானந்தன், வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),
 விவேகானந்தா கல்லூரி,
 சென்னை.

விவேகானந்தர் விழாக்கள்
சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு விழா கொண் டாட்டங்கள் நாடெங்கும், ஏன் உல கெங்கும் கொண்டாடப்படுகின்றன. தமிழக அரசும் தன் பங்கிற்கு ராம கிருஷ்ண மடத்திற்கு பலவற்றை வாக்களித்துள்ளது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களே விவேகானந்த இல்ல விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார், மிக்க மகிழ்ச்சி. சென்னை விவேகானந்தா கல்லூரி நிர்வாகமும் தனக்கே உரிய முறையில் தொடர்ந்து 15-ஆவது முறையாக ஒரு பார்ப்பனரையே கல் லூரி முதல்வராக நியமித்து விவே கானந்த விழாவைக் கொண்டாடி யுள்ளது. இந்தத் தருணத்தில் ராமகிருஷ்ண மிஷனால் நடத்தப்படும் சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி நிர்வாகத்தின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரிய போக்கினை அரசு மற்றும் பொதுமக்கள் குறிப்பாக சுவாமி விவேகானந்தரிடம், அவரது லட்சியங்களிடம் ஈடுபாடு கொண்ட வர்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டியுள்ளது.
ராமகிருஷ்ணா மிஷன் எதற்காக உருவானது?
விவேகானந்தரை தேசபக்தத் துறவி என்று சிறப்பிக்கிறார்கள். அவரால் தான் ராமகிருஷ்ண மடம், துறவியர் அமைப்பாக உருவாக்கப்பட்டது. துறவுடன் நின்றுவிடாமல் தனது சமூக லட்சியங்களை நிறைவேற்றவும் ஆதரவற்ற இந்தியாவின் நலிந்த சமூகத்தினருக்கு தொண்டாற்றவும் ராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப் பினையும் நிறுவினார். (1897, மே முதல் நாள்). அந்த ராமகிருஷ்ண மிஷனால், விவேகானந்தரின் சமூக மாற்றக் கனவுகளை நிறைவேற்ற மாணவர் இல்லம் முதலில் உருவானது.
விவேகானந்தரின் சமூக நீதி
விவேகானந்தரின் சமூகம் மற்றும் கல்வி பற்றிய கருத்துக்களையும், லட்சியங்களையும் ஒரளவிற்கு உள்வாங்கிக் கொண்டால்தான், அவரால் உருவான ராமகிருஷ்ண மிஷன், அவரது நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படுகிறதா என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அவரது கருத்துக்களையும், லட்சியங் களையும் ராமகிருஷ்ணமட வெளியீடு களே தெளிவுபடுத்துகின்றன. அவற் றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்.
புரோகித - பார்ப்பன ஆதிக்கம்
இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்திற்கும் வேராக இருக்கின்ற ஒரே விஷயம் ஏழைகளின் நிலைமை.... புரோகித ஆதிக்கமும், அன்னியரின் ஆக்கிரமிப்பும் நூற்றாண்டுகளாக அவர்களை கீழே தள்ளி மிதித்து வந்துள்ளன.
எனது பாரதம், அமரபாரதம். இராம கிருஷ்ண மடம் வெளியீடு சென்னை 2005
இங்கு புரோகித ஆதிக்கம் என்று விவேகானந்தர் குறிப்பிடுவது பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் என்பதை பின்வரும் விவேகானந்தரின் சொற்களில் அறி கிறோம்.
பார்ப்பனர்கள் ஆளும்போது, பிறந்த குலத்தைக் காரணமாகக் கொண்டு, பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் ஒதுக்கப்படுகிறார்கள். புரோகிதர் களுக்கும் அவர்களது சந்ததிகளுக்கும் எல்லாவித பாதுகாப்புகளும் அளிக்கப் படுகின்றன. அவர்களைத் தவிர, வேறு யாருக்கும் எந்த அறிவும் கிடைக்க வழி யில்லை; அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அறிவைப் போதிப்பதற்கான உரிமையும் இல்லை,
- அதே புத்தகம் பக்கம் 75
இத்தகைய பார்ப்பன ஏகபோகச் சதியை மேலும் கடுமையாக விவேகானந் தர் சாடுகிறார்.
புரோகிதத்துவம் (அதாவது பிரா மணீயம் அல்லது பார்ப்பனீயம்) இந்தி யாவைப் பீடித்த ஒரு சனியன். பார்ப்பனர் களும், சத்திரியர்களும் செய்த கொடுங் கோன்மை கூட்டுவட்டி போட்டு அவர்கள் தலையிலேயே மறுபடியும் விழுந்திருக் கிறது. ஆயிரம் ஆண்டுகள் அடிமைத் தனமும் இழிவும் தான் அவர்கள் கர்ம வினையின் பலன்
- அதே புத்தகம் பக்கம் 38 -39
தென்னிந்தியாவில் சத்திரியர்கள் இருந்ததில்லை என்பதை விவேகானந் தரே வேறொரு தருணத்தில் கூறி யுள்ளார். எனவே இங்கே சீரழிவின் முழுப்பொறுப்பும் பார்ப்பனர்களுக்கே உரித்தாகிறது. அதிலும் கல்வித் துறை யில் பார்ப்பனச் சதியை விவேகானந் தரால் சீரணிக்க இயலவில்லை.
ஆணவம், அரசு ஆணை இவற்றின் துணையுடன் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரிடம், எல்லா கல்வியும் புத்தி நுட்பமும் உடைமையாக்கப்பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் (பக்கம் 39)
தேசியப் பெரும்பாவம்
இதனை ஒரு தவறு என்று தட்டிக் கழிக்க விவேகானந்தர் விரும்பவில்லை. பெரும் பாவம் என்று அடையாளப்படுத்து கிறார்.
சாதாரண மக்களைப் புறக்கணித் தது நமது தேசியப் பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். (பக்கம் 47)
தேசத்தின் சீரழிவிற்கு யார் காரணம், எது காரணம் என்பதை மிகத் தெளி வாகவும், திடமாகவும் எடுத்துரைத்த விவேகானந்தர், அதற்கான தீர்வையும் மிக விரிவாகவே கூறியுள்ளார்.
நமது நாட்டின் தாழ்ந்த வகுப்பின ருக்குச் செய்ய வேண்டிய ஒரே சேவை கல்வி அளிப்பது:
இழந்த தனித்துவத்தை மீண்டும் பெறச் செய்வதற்கு முதலில் நாட்டு மக்களுக்குக் கல்வியை அளியுங்கள்... சமுதாய சீர்த்திருத்தத்திற்குக் கூட முதலில் நாம் செய்ய வேண்டிய கடமை மக்களுக்குக் கல்வியை அளிப்பது தான்.
கல்வியில் முன்னுரிமை யாருக்கு?
மக்களுக்குக் கல்வி என்று பொத் தாம் பொதுவாகக் கூறிவிடாமல் யாருக்கு கல்வியில் முன்னுரிமை தர வேண்டும் என்பதைப் பற்றியும் விவேகானந்தர் மிகத் துல்லியமாக விளக்கியுள்ளார். அவரது சொற்களிலேயே அவற்றைக் காண்போம். இயற்கையில் சமமில்லாத நிலை இருக்கலாம். ஆனாலும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் தான் வாய்ப்புகள் அமையும் என்றால், பலசாலிகளை விட பலவீனர் களுக்குத்தான் அதிகமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அதாவது கல்வி கற்பித்தல் சண்டாளனுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு பார்ப்பனனுக்குத் தேவையில்லை. பார்ப்பனனின் மகனுக்கு ஓர் ஆசிரியர் தேவையானால் சண் டாளனின் மகனுக்குப் பத்து ஆசிரியர் கள் தேவை. அதாவது இயற்கை யாருக்குப் பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தந்து உதவவில்லையோ அவனுக்கு அதிக உதவியளிக்க வேண்டும். ஒரு பொருள் மிகுதியாக உள்ள இடத்திற்கு அந்தப் பொருளையே கொண்டு செல்வது பைத்தியக்காரத் தனம் அல்லவா?
- நாகரீகமும் சமுதாயக் கோட்பாடும் ராமகிருஷ்ண மட வெளியீடு பக்கம் 96
சண்டாளர் போன்றவர்களுக்கு இயற்கை பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தரவில்லை என்ற விவே கானந்தரின் புரிதலில் நமக்கு உடன் பாடு இல்லை. சூத்திர பஞ்சமர்களுக்கு வாய்ப்புகள் தராமல் தடுத்தது பார்ப் பனிய வக்கிரம் என்பது நமது அனு பவம். ஆனாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த வெகு மக்களுக்குத்தான் முன் னுரிமை வேண்டும் என்ற விவே கானந்தரின் சமூக நீதியைப் போற் றியே ஆக வேண்டும் நடைமுறைப் படுத்தியே ஆக வேண்டும்.
பார்ப்பனர்களுக்கு வேண்டுகோள்
சமூக நீதிக் கல்விக்கு பார்ப் பனர்கள் எதிர்ப்பாக இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட விவேகானந்தர் அவர்களிடம் பின் வருமாறு கூறினார்:
ஏ பார்ப்பனர்களே! பரம்பரை கார ணமாக பார்ப்பனர்களுக்கு கீழ்ஜாதி யினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கின்றது என்றால், பார்ப்பனர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள். எல்லாவற்றையும் கீழ்ஜாதியினருக் காகச் செலவிடுங்கள். உதவியற்றவர் களுக்குக் கொடுங்கள். ஏனெனில் அவர்களுக்குத் தான் எல்லா செல் வமும் தேவைப்படுகிறது. பார்ப்பனர் பிறவியிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும். பிறவி யிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரி யர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும் பகுத் தறிவுமாகும்.
- நாகரீகமும் சமுதாயக் கோட்பாடும் பக்கம் 97.
இது தந்தை பெரியாரின் வார்த்தை களல்ல; விவேகானந்தரின் வார்த் தைகள். சமநீதி-சமவாய்ப்பு என்பதை விவேகானந்தர் என்ற துறவி பின் வருமாறு வலியுறுத்துகிறார்.
எல்லோருக்கும் வாய்ப்புக் கொடு; பிறகு
இறைவனின் விருப்பப்படி ஆகட்டும்
இறைவனையும், இறைவனின் விருப்பத்தையும் உறுதி செய்ய முடியாது. ஆனால் விவேகானந்தரது விருப்பம், லட்சியம் என்ன என்பது தெளிவாகி விட்டது.
(தொடரும்)
                                                                                                                                                                                 விடுதலை 1.7.2013

Sunday, June 16, 2013

பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் - அவதூறுக்குப் பதிலடி! - 4

1) 1921-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினருக் கும் பார்ப்பனரல்லாத ஜாதியினருக்கும் கலவரம் மூண்டபோது நீதிக்கட்சி, அரசாங்கமும் அதன் தலைவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலையை எடுத்தனர் என்று தோழர் அருள் கூறுகிறார் அல்லவா? மேலே நாம் எடுத்துச் சொன்னதிலிருந்து பார்ப்பனர் அல்லாத ஜாதியினர், முஸ்லிம், ஆதி திராவிடர் ஆகிய தொழிலாளர்கள் ஜாதி வித்தியாச மின்றி பணியாற்றியதை, போராடி வந்ததைப் பிளவு படுத்தியது யார் - எம்.சி.ராஜா என்று ஆவணங்கள் இன்றும் பேசிக்கொண்டு இருக்கின்றன. இவரால் தான் கலவரமே மூண்டது அவரே ஒப்புக் கொண்டு நாளடைவில் வருந்தினார். இதற்கு என்ன சொல்லு கிறார் அருள்?
நீதிக்கட்சியின் அதிகாரம் என்னவென்பதை விளக்கி இருக்கின்றோம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எப்படி சும்மா இருக்க முடியும்? களத்தில் இறங்கி சமரசத்திற்கு முயற்சியை மேற்கொண்டார்கள். இதை எதிரான நிலை என்று சொல்லுவது சரியா? பிறகு, எதிரான நிலை எனத் தோழர் அருள் எதனைக் குறிப்பிடுகிறார்? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பல சலுகைகள், ஆணைகளை வழங்கிய கட்சி நீதிக்கட்சி ஆயிற்றே!
பி அண்டு சி  ஆலை வேலை நிறுத்தம் நடக்கும்போது எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் தானே இருந்தார். இந்த நிலையை அவர் மேற்கொள்ள ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஓ.தணிகாசலம் செட்டியார் வேலை நிறுத்தம் பற்றியும், கலவரம் பற்றியும் சட்டமன்றத்தில் பேசிய அளவுக்கு பொதுமை உணர்ச்சியோடு எம்.சி.ராஜா நடந்து கொள்ளவில்லையே அது ஏன்? என்பதை அருள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.
நீதிக்கட்சி வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் ஆனால் உண்மையான ஆட்சியாளரான ஆங்கிலேயர்கள்தான் எதிர்த்தனர் என்றும் தோழர் அருளே அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். இதிலிருந்து தெரிவது என்ன? வேலை நிறுத்தத்திற்கு எதிரானவர்கள் ஆங்கிலேயர்கள், அவர்கள் தான் வேலை நிறுத்தத்தின்போது ஜாதி பார்க்காமல் போர்க் குணத்தோடு இயங்கியவர்களை - ஆதிதிராவிடர் களைப் பிரித்தார்கள். அதற்குத் துணை நின்றார் எம்.சி.ராஜா என்பது தானே நிகழ்மை. குஹஊகூ இதனால் தானே கலவரம் நிகழ்ந்தது. குழப்பம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடந்தது, 6+2=8 பேர் மாண்டனர். எயிலிஸ் கமிட்டியை அரசாங்கம் போட்டது. கலவரம் நடந்த பகுதிக்கு கவர்னர் லார்டு வெலிங்டன் வந்தார். நீதிக்கட்சியினர் நிதி தண்டியபோது ரூ. 750/- வழங்கினார். இவ்வளவும் ஏற்பட்டது யாரால்? நீதிக் கட்சியாலா? அக்கட்சியின் இதரத் தலைவர்களாலா? அருள்தான் இதனை விளக்க வேண்டும்.
2) கட்டுரையாளர் அருள் பிட்டி.தியாகராயர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் அவர், தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது என்றும் அந்த அறிக்கை இந்துவிலும், திராவிடனிலும் வெளிவந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த அறிக்கையை நம்மால் பார்க்க முடியவில்லை. 1921-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி விரிவான ஆவணங்களாக நமக்குக் கிடைப்பவை திரு. வி.க.வின் வாழ்க்கைக்குறிப்புகளும் ஆ.சிவசுப்பிரமணியனும், ஆ.இரா.வேங்கடாசலபதியும் எழுதியுள்ள பின்னி ஆலை வேலை நிறுத்தம் - 1921 எனும் நூலுமாகும். இவ்விரு நூல்களில் நன்றாகப் பிரச்சினை அலசப்பட்டும், ஆராயப்பட்டும் இருக்கின்றன. இதுவன்றி நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் - ஓர் ஆய்வு? எனும் நூலிலும் வேலை நிறுத்தம் பற்றி மேலோட்டமும் கூறப்பட்டு இருக்கிறது. சிங்காரவேலர் எழுதியுள்ள கட்டுரையில் அப்போதைய நிலைமைகள் மட்டும் விளக்கப்பட்டன. எம்.சி.ராஜா தமது நூலில் தமக்கு சாதகமானதைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். இப்படி பல ஆவணங்கள் இருந்தாலும் இது குறித்த சிறந்த ஆவணமாகத் திகழுவது பின்னி வேலை நிறுத்தம் - 1921 எனும் நூல் மட்டுமே! அந்நூலில் இவ்வேலை நிறுத்தம் எல்லாக் கோணங்களிலும் பார்க்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்நூலில் அருள் குறிப்பிடும் பிட்டி. தியாகராயரின் அறிக்கை மட்டும் காணப்படவில்லையே - அது ஏன்? அவர்கள் இருவரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் அல்லர்.
எயிலிஸ் கமிட்டியின் அறிக்கையின்படி 400-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பாதிக் கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு அரசின் சார்பாக முகாம் அமைக்கப்பட்டு உதவி இருக்கிறார்கள் என்றும் ஆவணங்கள் பேசுகின்றன. இவ்வளவு அவலங்களை யும் நீதிக்கட்சித் தலைவர்களான பிட்டி.தியாகராயர், ஓ.தணிகாசலம் செட்டி, டாக்டர் சி.நடேச முதலியார் கலவரப் பகுதிகளைச் சென்று பார்வையிடுகிறார்கள். அப்பகுதியில் உள்ள டாக்டர் சி.நடேச முதலியாரின் உறவினர் வீடு பாதிக்கப்பட்டதால் தான் நீதிக்கட்சித் தலைவர்கள் வந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். எது எப்படி இருப்பினும் நீதிக்கட்சித் தலைவர்கள் கலவரப்பகுதியில் சென்று பார்த்து இருக்கிறார்கள். நிதி திரட்டி இருக்கிறார்கள், உதவி இருக்கிறார்கள் கலவரம் நிற்க வேண்டும் - வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தியவர் களாக இருந்திருக்கிறார்கள் என்பது மிக வெளிப் படையாகத் தெரிகிறது.
மேலும் அருள் குறிப்பிட்டு இருக்கிற பிட்டி. தியாகராயர் அறிக்கையைப் படித்து பார்த்தோம். அய்யத்திற்கு இடமின்றி ஆம் (டிக உடிரசளந) என்று ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவ்வறிக்கை அவருடையதாக இருக்க முடியாது என்றே கருத இடமிருக்கின்றது. ஏனென்றால் ஒரு சில ஆவணங்களில் இவ் வேலை நிறுத்த கலவரம் குறித்து அரசுக்கு பிட்டி. தியாராயர் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார்கள். அக்கடிதமும் இன்ன தென்று நமக்குத் தெரியவில்லை. அதில் வேலைக்குச் செல்லும் புதியவர்களை அப் புறப்படுத்த சொன்னதாகக் கூறுகிறார்கள்.  திரு. வி.க.வோ, ம.சிங்காரவேலரோ பிட்டி. தியாகராயரின் அறிக்கையைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் வேலை நிறுத்தம் பற்றி பிட்டி. தியாகராயர் நிகழ்த்திய இராஜதந்திரப் பேச்சைப் பற்றி திரு. வி.க. குறிப்பிடுகிறார்.
அப்பேச்சில் ஓர் இடத்தில் அப்புறப்படுத்துதல் என்ற சொல் வருகிறது. ஆனால் நகரத்தை விட்டே ஆதி திராவிடர்களை ஓட்டும்படியாக அதில் இல்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்தே அதனை அவர் கூறுகிறார். தியாகராயரின் பேச்சு குறித்து திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில்,
வேலை நிறுத்தம் எப்படி முடிந்தது? ராஜா ஸர், இராமசாமி முதலியார் பங்களா வெளியில் கூடிய கூட்டத்தில் சர்.பி.தியாகராய செட்டியார் நிகழ்த்திய இராஜதந்திரச் சொற்பெருக்கில் மூழ்கித் தொழிலாளர்கள் பலர் வேலைக்குத் திரும்பினர். சர்.பி.செட்டியார், மாதங்கள் பல ஆயின. இனிப் பிடிவாதம் வேண்டாம், உங்களுக்கு இராஜ தந்திரம் வேண்டும். மில்களில் புதிய ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள். புது ஆட்கள் தொழிலைப் பயின்று விடுவார்களாயின் உங்களுக்குத் தொல்லை விளையும். போலீஸ் காவலையும், இராணுவக் காவலையும் கடந்து அவர்களைத் தடுத்தல் இயலாது. ஆனால் அவர்களை ஒரு வழியில் அப்புறப்படுத்தல் கூடும். நீங்கள் எல்லோரும் வேலைக்குச் செல்ல உறுதி கொண்டால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ஆதலால் நீங்கள் உள்ளே போங்கள், நன்மையே விளையும், சங்கம் சாகாது என்று பேசிய பேச்சு அவ்வேளையில் தொழி லாளர்க்கு உசிதமாகத் தோன்றிற்று, சர்.பி.செட்டியாரின் ஜோசியம் பெரிதும் பலித்தது என்று எழுதியிருக்கிறார். திரு.வி.க. இந்து ஏடு வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் கஸ்தூரி ரங்கன் அய்யங்கார் ஆதரவு தந்தார் என்றும் எழுதியிருக்கிறார். ஆக நமக்குத் தெரிந்த அப்புறப்படுத்தல் என்பது தியாகராயரின் பேச்சில் தொழிலாளர் நலன் விழைந்தே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திராவிட இயக்கத்தினர் வரலாற்றை மறைப் பதில்லை. எங்களுக்கு அகப்பகைவர்களும் உண்டு. புறப் பகைவர்களும் உண்டு, அவர்களின் விமர்சனங்களினால் அவை மறைக்கப்படுவது உண்டு.
3) தோழர் அருள் அவரது கட்டுரையில் 1921 வேலை நிறுத்தத்தின் போது 14,000 தொழிலாளர்கள் இருந்த தாகத் தெரிவித்து இருக்கிறார். அக்காலக்கட்டத்தில் இரு ஆலைகளிலுமாக தொழிலாளர்கள் எத்தனை பேர் பணி யாற்றினார்கள் என்பது குறித்து நாம் மேலே குறிப்பிட்டு இருக்கின்றோம். அதன்படி 1921-இல் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது தொழிலாளர்களின் எண்ணிக்கை 14,000 அல்ல; சுமார் 11,000 மட்டுமே! மேலே புள்ளி விவரத்தை ஒப்பு நோக்கிப் பார்த்துக் கொள்க!
4) தோழர் அருள் சொல்லுகிற மற்றொரு செய்தியைப் பார்ப்போம். அவர் கூறுகிறார்:-
இந்த சூழலில் 1921 ஜூன் 28 அன்று இரவு புளியந்தோப்பு சேரி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் பெரும் மோதலாக வெடித்தது. புளியந்தோப்பு கலவரம் 1921 என்று அழைக்கப்படும் இந்த கலவரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், மற்றவர் களும் மோதிக்கொண்டனர். சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. மூன்றுபேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் (இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருக்கலாம்). போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசின் காவல்துறையினர் நடத்திய துப் பாக்கிச் சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆறு பேரும் பார்ப்பனரல்லாத இந்துக்கள்.
புளியந்தோப்பில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சுமார் மூன்றாயிரம் பேர், அங்கிருந்து ஆங்கிலேய அரசாங்கத்தால் வெளியேற்றப் பட்டு வியாசர்பாடி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
கே.ஓ.அந்தோணி சிறப்புக் கடமையாற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் அறிக்கை ஜூன் 29/1921-லிருந்து ஜூலை 4-ஆம் தேதி வரை கலவரத்தைப் பற்றி வெளி யிடப்பட்டது. இதில் ஆதிதிராவிடர்களின் குடிசைகள் 269, சக்கிலியர் குடிசைகள் 61, ஓட்டர் குடிசைகள் 17, ஜாதி இந்துக்கள் குடிசைகள் 28, முகமதியர் குடிசைகள் 43 என மொத்தம் 418 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. எந்தெந்த ஜாதியினர் என்னென்ன ஆயுதங்களை வைத்து இருந்தனர் என்ற விவரத்தையும் அப்போதைய நீதித் துறையின் ஆவணங்கள் நமக்கு இன்றும் கூறிக்கொண்டு இருக்கின்றன. இவையன்றி கலவரத்தினால் இறந்த வர்கள் பற்றிய குறிப்பில் ஆதி திராவிடர் எவரும் இல்லை. தோழர் அருள் குறிப்பிட்டிருப்பது போல மூன்று பேர் வெட்டிக் கொல்லப்படவும் இல்லை. ஆதிதிராவிடர் எவரும் இறக்கவும் இல்லை. இறப்பு, காயம் அடைந்தவர்களின் விவரம் வருமாறு:
1921 ஆம் ஆண்டு ஆக்ஸ்டு 29-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் இறந்தனர். இவர்களின் சடலம் மறுநாள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இடுக்காட்டில் திரு. வி.க., சிங்கார வேலர், சக்கரைச் செட்டியார் போன்றோர் உரையாற்றினர். இவை தான் கலவரங்களின் போது நடைபெற்ற இழப்புகளாகும்.
தோழர் அருள் வியாசர்பாடி முகாம்களில் 3000 பேர் இருந்ததாக எழுதி இருக்கிறார், அது தவறு. ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த முகாமில் 1669 பேர் இருந்தனர். இவர்கள் 446 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஜூலை 2-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 2-ஆம் தேதி வரை முகாம் வாழ் மக்கள் அனைவருக்கும் இலவச உணவு, துணிமணிகள் வழங்கப்பட்டன. இதற்காக ரூ. 2885 - 3 - 0 செலவழிக்கப்பட்டது. அகதிகள் முகாம் அமைப்பதற்காக ரூ. 2849 = 13 - 0 செலவழிக்கப்பட்டது. 1922 ஜூன் வரை உணவு வழங்குவதற்காக ரூ. 12,495. 11 - 5 செலவாகி இருக்கிறது. இவ்வளவு அன்பு ஆதிதிராவிடர்கள் மேல் ஆங்கிலேய அரசுக்கு ஏன் ஏற்பட்டது? பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தை உடைத்ததற்காக! எம்.சி.ராஜாவின் வழிகாட்டு தலுக்காக! இந்நிலையில் நீதிக்கட்சி அரசு என்ன செய்ய முடியும்? அதன் தலைவர்கள் என்ன செய்ய முடியும்? இயன்றதைச் செய்ய அவர்கள் தவறவில்லை.
5) எம்.சி.ராஜாவின் சட்டமன்றப் பேச்சைப் பற்றி அருள் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் பேச்சும் குற்றச்சாட்டுகளும் சட்டமன்றத்தில் எடுபடவில்லை. இதர நீதிக்கட்சி தலைவர்களின் பேச்சு சிறப்பாக இருந் தது. ராஜா தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். நீதிக்கட்சியின் மேல் சொந்த பகையை வைத்துக் கொண்டு தனது ஜாதியாரை அவர் பலி கொடுத்து அவர்களுக்கும் அவர் கெட்ட பெயரையே சம்பாதித்துக் கொடுத்தார். அது சரித்திரமாகி விட்டது. அவரே ஒப்புக்கொண்ட அதை  அருள் ஒன்றும் செய்ய முடியாது.
காந்தியார், சென்னைக்கு வந்தது பற்றியும் அவரிடம் ஆலை பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டது பற்றியும் தோழர் அருள் கூறியிருக்கிறார். ஆம், காந்தியார் 1921 செப்டம்பர் திங்களில் வந்தார். செப்டம்பர் 16-ஆம் தேதி தொழிலாளர்களிடையே பேசினார். வழக்கம் போல் ஒத்துழையாமை, அகிம் சையைப் பற்றி பேசினாரேயன்றி ஆலைத் தொழி லாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரி டையாகவோ, தெளிவாகவோ எந்தக் கருத்தையும் எடுத்துக் கூறவில்லை. வேலை நிறுத்தம் செய்தவர்கள் சரணடைந்து விட்டதாக அருள் தெரிவிக்கிறார். பிட்டி. தியாகராயரின் பேச்சை ஏற்று தொழிலாளர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொண்டார்கள். ஆட்சியாள ருக்கு துணை நின்ற எம்.சி.ராஜா போன்றவர்களை வைத்துக் கொண்டு எந்தத் தொழிலாளர்கள் இலக்கை அடைய முடியும்? இன்னும் பல செய்திகள் இது குறித்து சொல்ல வேண்டி இருந்தாலும், அது இங்கே - அருள் எழுப்புகிற பிரச்சினைக்கு பொருந்தாது.
தோழர் அருள் அல்லது அருள் போன்றவர் களுக்கு நாம் சொல்வதெல்லாம் இதுதான்:-
நீதிக்கட்சிக்காரர்கள் ஜாதி இந்துக்கள் தான்; பெருந்தனக்காரர்கள்தான்! ஆனால் மனிதா பிமானிகள். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாத வர்கள். பிரித்தாளப்பட்டபோது உண்மையின் பக்கம் நின்றவர்கள் அவர்கள். அரையாட்சி அதிகாரத்தில் எதுவும் செய்யாத நிலையில் இருந்தனர். எதையாவது செய்து பிரச்சினையை அமைதிக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டினார்கள். அவர்கள் எரிந்து கொண்டு இருக்கையில் எண்ணெய்யை வார்க்க வில்லை, ஆதித்திராவிடர்களை ஒழிக்க நினைத்தா பார்ப்பனர் அல்லாதார் தொகுப்பிற்குள் அவர்களை நீதிக்கட்சியினர் கொண்டு வந்தார்கள்? நேரிய பார்வையானாலும் இயல்பாகவே ஒரு பகுதி, பார்வைக்கு உட்படாதது போல பல சிக்கல்கள் நாட்டில் இருப்பதைப் பார்க்க வேண்டும்.
நாம் அடிக்கடி ஒரு கருத்தை வலியுறுத்தி வருவோம். வாழ்நிலையிலிருந்து தான் சிந்தனை தோன்றுகிறது. அந்தச் சிந்தனை பல பரிமாணங்களைத் தோற்றுவிக் கிறது. அப்படித் தோன்றியதுதான் அரசியல் இயக்கங்கள்; நீதிக்கட்சி முதலானவை! அதன் பிறகு தான் தேவையும், மறந்துபோன சேர்த்துக் கொள்ள மறந்தவைகள் பலவும் விவாதத்திற்கு வருகின்றன. இவை இணைத்துக் கொள்ளப்பட்டு அரசியல் இயக்கங்கள் அதனதன் கொள்கைகளுக்கு ஏற்ப முன்நகர்வை இயல்பாக பெறுகின்றன. இவற்றில் சர்ச்சைகள் எழும்; சண்டைகளும், இழப்புகளும் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கும். செய்தவைகள் நியாமானதாகத் தெரியும். பின்னர் அவற்றைப் பரிசீலிக்கிறபோது நேர்ந்தவைகளுக்காக வருத்தப்பட வேண்டி இருக்கிறது. அப்படித்தான் 1921-ஆம் ஆண்டு பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பல அனுபவங்களை அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் நமக்கு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அருள் போன்றவர்கள் தெரிந்து கொண்டால் போதுமானது.
(நிறைவு)
விடுதலை 16.6.2013 

பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் - அவதூறுக்குப் பதிலடி! - 3

பி அண்டு சி ஆலை வேலை நிறுத் தத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றில் ஜாதி, இந்துக்கள், முஸ்லிம்கள், ஆதி திராவிடர் என்று வேற்றுமை பார்க் காமல் தொழிலாளர் என்கிற முறையில் ஒட்டு மொத்தமாக பங் கேற்று வந்தனர். 1921 ஜூன் 20-ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் ஆயத்த மாகி இருந்தனர். ஆனால் அதற்கு முதல் நாள் ஜூன் 19-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு நிலைமை வேறாக இருந்தது. பக்கிங்காம் ஆலையின் ஆதி திரா விட தொழிலாளர்களின் கூட்டம் புளியந்தோப்பு பகுதியில் கூட்டப்பட்டது. அக்கூட்டத்திற்குத் ஆதிதிராவிடத் தலைவரான எம்.சி. ராஜாவும், சுவாமி தேசிகானந்தாவும் முன் நின்றனர், உதவித் தொழில் துறை ஆணையாளரும் உடனிருந் தார். அவர் பெயர் சுந்தராச்சாருலு. இக்கூட்டத் தில் அனுதாப வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடி வெடுக்கப்பட்டது. அரசும், ஆலை நிரு வாகமும் இணைந்தே இப் பிளவை உண்டாக்கினர். எம்.சி.ராஜா இதற்கு துணை நின்றார்.
இந்நிலைமைக் குறித்து வெகுண் டெழுந்து திரு.வி.க.,
... இந்நாளில் எம்.சி.ராஜா வேலை நிறுத்தத்தை உடைத்தெறிய ஊக்கங் கொண்டு முன் வந்ததன் நோக்கத்தை அறிய விரும்புகின்றோம், வேலை நிறுத்த காலத்தில் தலைகாட்டிய சிறீமான் எம்.சி.ராஜா தொழி லாளர்கள் 11ஙூ  மணி நேரம் வேலை செய்து வருந்திய காலத்தில் எங்கே சென்றிருந்தார்? தொழிலாளர் இருண்ட காலத்தில் எங்கே சென்றி ருந்தார்? தொழிலாளர் மலக்குப் பையில் அழுத்தப்பட்ட காலத்தில் எங்கே இருந்தார்? பகலில் உணவு கொள்ளப் போதிய நேரம் பெறாது சாப்பிட்டதும் சாப்பிடாமலும் கை கழுவியும், கை கழுவாமலும் மில்லுக் குள் ஓடித் தொழிலாளர் வருந்திய போது எங்கே நண்ணினார்?
தொழிலாளர் சங்கத்தை அமைத் துக் கொண்டு, நியாயக்கிளர்ச்சி செய்து வேலை நேரத்தைப் பத்து மணியாகவும் பகல் உணவு கொள் நேரத்தை ஒரு மணியாகவும் செய்து கொண்டு, வேறு பல நன்மைகளை பெற்று வரும் இந்நாளில் ஆதி திராவிடர் பெயரை முழங்கிக் கொண்டு வேலை நிறுத்தத்தைக் குறைக்க வீர வார்த்தை பேசுவது நியாயமோ? என்று எழுதினார்.
- நவசக்தி நாளிதழ் (25.6.1921) தலையங்கம்
ஆக, வேலை நிறுத்தம் கெடுவதற்கு எம்.சி.ராஜா முக்கிய காரணமாக இருந் திருக்கிறார் என்பது திரு. வி.க.வின் எழுத்துகளிலிருந்தும் பிற ஆய்வு நூல்களிலிருந்தும் காணக்கிடைக்கிற செய்திகளாகும். முதலில் வேலை நிறுத்தத்திற்கு எதி ராக செயல்பட்ட எம்.சி.ராஜா பின்னர் 1930ஆம் ஆண்டு களில் இது குறித்து அவர் வருத்தப்பட்டும் இருக்கிறார் என்று  பதிவுகள் கூறுகின் றன. ஆதி திராவிட தலை வர்களில் ஒருவரான ராவ் பகதூர் மதுரைப் பிள்ளை இது குறித்து எம்.சி.ராஜா வின் அணுகுமுறையை ஏற்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது குறித்து அவர்கள் வெளியிட்ட கருத்துக்களையெல்லாம் இக்கட்டுரை யில் இணைத்தால் கட்டுரை மிக நீண்டதாக ஆகிவிடும், ஆகவே அவற்றை நாம் இங்கே வெளியிட விரும்பவில்லை. அவையெல்லாம் ஆவணங்களாக பதிவாகி இருக்கின்றன,
ஆலை வேலை நிறுத்தத்தில் ஏற்பட்ட இக்குழப்பங்களில் போலீஸ் பாதுகாப்பும், வழிக்காவலும் வேலை நிறுத்தத்திற்கு எதிராக இருந்தவர்களுக்குத்தான் சாதகமாக இருந்தது. ஆனாலும் இந் நிலைமைகள் குறித்து எல்லாம் 1921 மே இறுதியில் வெளிவந்த சுதர்மா எனும் ஏடு கீழ்க்காணும்படி எழுதி இருக்கிறது.
... தொழிலாளர் நெடும் போராட் டத்திற்குத் தயாராகி வருகின்றனர். போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு ஆதிதிராவிடரைத்தான் கம்பெனி நம்பியுள்ளது. ஏழை ஆதிதிராவிட தொழிலாளர் வேலைக்குத் திரும்ப வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வேலை நிறுத்தம் முறிவதோடு சங்க ஒற்றுமையும் குலையும், பிரித்தாளும் சூழ்ச்சி கையாளப்படும் என்பது வெளிப் படை பக்கிங்காம் ஆலையில் சென்ற முறை ஏற்பட்ட வேலை நிறுத்தத்தில் இதே போல் மிரட்டினர், இம்முறை இது வெறும் மிரட்டலாக முடியுமா, இல்லையா என்பது ஆதிதிராவிடரைப் பொறுத்துள்ளது
எம்.சி.ராஜாவினால் ஆதிதிராவிடர் கள் வேலை நிறுத்தத்திலிருந்து விலகி இரு ஆலைகளுக்கு கொஞ்சம் கொஞ்ச மாகச் செல்லத் தொடங்கினர். இதன் விவரத்தை எயிலிஸ் கமிட்டியின் அறிக்கை கீழ் காணும் விதத்தில் எடுத்து கூறுகிறது. இந்த எயிலிஸ் கமிட்டி என்பது என்ன? என்பது குறித்து பின்னர் ஓர் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம்.
இவ்வாறு இரண்டு மாதங்களில் வேலை நிறுத்தம் உடைவதற்கு எம்.சி. ராஜா காரணமாக இருந்தார். ஜூலை 11-ஆம் நாளிலிருந்தே ஆலைகளின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்த திரு. வி.க.வுக்கு ரூபாய் ஒரு இலட்சத்தை காங்கிரஸ் கமிட்டி கொடுத்தது என்று மெயில் எழுதியது. அவதூறான இச் செய்தியை எதிர்த்து வழக்குத் தொட ருவேன் என்று திரு. வி.க. கூறியதால் மெயில் அச்செய்தியைத் திரும்பப் பெற்றது. இதனால் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பதற்றம் ஏற் படுவது இயல்பே. இதனால் தொழி லாளர் வாழும் குடிசைப் பகுதிகளில் தீ வைப்பு நிகழ்வுகள் நடந்தேறின. ஆதிதிராவிடர்கள் வாழ்ந்த பகுதி களிலும் தீவைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றை விசாரிப்பதற்காக எயிலிஸ் கமிட்டி அமைக்கப்பட்டது. 1921 ஜூன் 29-ஆம் தேதியிலிருந்து பெரம்பூர் வட்டத்தில் நிகழ்ந்த குழப்பங்களை விசாரிக்கவே இக்கமிட்டி நியமிக் கப்பட்டது.
இக்குழுவில் சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.வேங்கடரத் தினம் நாயுடு, ராவ்பகதூர் நரசிம்ம மாச்சாருலு உறுப்பினர்களாக இருந் தனர். இக்குழுவின் முன் செல்ல திரு. வி.க. மறுத்துவிட்டார். எல்லா ஜாதிகளும் தொழிலாளர் களாகப் பணியாற்றிய நிலையில் சங்கம் வேலை நிறுத்தம் மேற்கொண்டபோது எம்.சி.ராஜா ஏற்படுத்திய பிளவே பெருங்குழப்பங்களுக்கு காரணமா யிற்று. ஹோம் ரூல் இயக்கத்தின் அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சும் வாடியா விலகி அய்ரோப்பா சென்றதற்குப் பிறகு முற்று பெற்று விட்டது எனலாம். தலைமை பொறுப்பில் திரு.வி.க.வே இயங்கினார் காங்கிரஸ் விடுதலை இயக்கமாக இயங்கிய காலகட்டமாதலால் திரு. வி.க. காங்கிரஸ்காரராக இருந்தும் உழைத்தும் சங்கத்திற்கு நிதி உதவியோ தொழிலாளர்களுக்கு வேறுவித தார்மீக ஆதரவோ வழங்க வில்லை. வழங்குவதாகக் கூறி செய் யவும் இல்லை என்று எழுதினால் இன்றும் சரியானது என்று கருது கின்றோம். அடுத்து நீதிக்கட்சி இக்கட்சி அப்போதுதான் இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது. எப்படி மாறுகிறது என்றால் நிதி, இராணுவம், போலீஸ் மூன்றையும் ஆங்கிலேயர் வைத்துக் கொண்டு இதரதுறைகளை இந்தியர் களுக்கு வழங்கியது தான் இரட்டை ஆட்சி முறை. இந்நிலையில்தான் இரண்டு பெரிய கலவரங்கள் சென்னை மாகாணத்தில் உண்டாயின 1) பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தம் 2) மலையூரில் மாப்பிள்ளை கலகம், நாம் அவற்றில் பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தைத்தான் இங்கே பார்த்து வருகின்றோம்.
இப்போது நாம் பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பற்றிய விவரங்களை மிகச்சுருக்கமாக மேலே எடுத்து கூறி இருக்கின்றோம், இனி தோழர் அருள் எழுதியுள்ள வற்றைப் பார்ப்போம்.                      
                                                                                                                                         (தொடரும்) விடுதலை 15.6.2013