Sunday, December 5, 2010

மரண பயம் அறியாதவர் பெரியார்

தந்தை பெரியார் அவர்களின் தனி மருத்துவர்கள் பலர் உண்டென்றாலும் டாக்டர் பட் அவர்கள்தான் தந்தை பெரியார் அவர்களுக்கு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிறுநீர்ப் பையில் அறுவை சிகிச்சை செய்தவர்.அவர் தந்தை பெரியாரின் சீடராகவே ஆனார். பெரியார் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான அவர் தமது 90 ஆம் வயதில் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 20.11.2010 அன்று மறைவுற்றார்.
1974  வெளியான தந்தை பெரியார் நினைவு மலரில் டாக்டர் பட் அவர்கள் தந்தை பெரியார் பற்றி எழுதிய கட்டுரை இது:-  

டாக்டர் பட்
 பெரியார் அவர்களின் தத்துவத்தின் அல்லது ஆளுமையின் ஆழத்தை அளந்தறிந்திருக்கிறேன் என்று உரிமை கோருவதற்கு நான் யார்? நான் அப்படிப்பட்டவனல்ல என்ற உண்மையை நான் முற்றிலும் உணர்ந்திருக்கிறேன். எனினும், அவரது தத்துவம், ஆளுமை ஆகியவற்றின் தர்க்கங்கள் என்னுள் ஆழமாகப் பதிந்திருக்கின்றன என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

பிற மனிதர்களின் வாழ்வில் சில கால கட்டங்களில் தொடர்பு கொள்ளக் கூடிய மிகப் பெரிய வாய்ப்பு மற்ற மனிதர்களைவிட மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு அதிகமாக வாய்க்கிறது. அந்தக் கால கட்டத்தில் அவர்கள் (அந்தப் பிறர்) மற்றவர்களுக்கு உதவும் நிலையில் இருந்திருக்கலாம், அல்லது பிறரிடமிருந்து உதவி பெறும் நிலையில் இருந்திருக்கலாம்.
இவ்வாறாக, நான் மாமனிதரான பெரியாரைச் சந்திக்கும் பொன்னான வாய்ப்பினைப் பெற்றேன். உடல் நலத்துடன் இருக்கும்போதும் சரி, உடல் நலமின்றி இருக்கும்போதும் சரி உண்மையிலேயே அவர் பெரியாராகவே இருந்தார்.
பெரியார் என்னும் உயர்நிலையை ஈ.வெ.ரா. அடைந்தது விதி செய்த மாயம் அன்று. பிறக்கும்போதே விடு-தலை விரும்பியாகப் பிறந்த பெரியார் சர்வ சுதந்திரமான ஒரு மனிதராகவே இறந்தார்.
அவர் தொண்டு எது?
மதத்தடைகள், அடிமை மனப்-பான்மைகள், சுற்றிலுமுள்ள பிறரது தத்துவ மதாச்சார விபரீதங்கள் என்னும் தளைகள் ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவித்து மேலே உயர்த்துவதுதான் அவரது தொண்டு. இந்தப் பணியின் தலைவர் என்ற முறையிலும், ஒரு தனி மனிதர் என்ற முறையிலும், அச்சத்தையும் துயரத்தையும் எல்லா வகையிலும் அவர் வெற்றி கொண்டார்.
பெரியார் யுகம்
ஈ.வெ.ரா.வுக்கு முன் பெரியார் என்று எவருமே இல்லை. அவருக்குப் பின்பும் ஒரு பெரியார் தோன்றுவார் என்று கூறுவதற்கில்லை, எனினும் பெரியார் யுகம் என்பதை அவரால் விடுதலை செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்து செயற்படுத்துவார்கள்.
பெரியார் அவர்களின் தனி வாழ்க்கை முறையை ஒரு சத்தியாக்கிரகியால்தான் பின்பற்றி நடக்க இயலும். அவரை ஒரு முறை பார்த்தால் போதும்; அவரது சக்தியை உணர்ந்து கொள்ளலாம். அவரை ஒரு முறை சந்தித்தால் போதும்; அவரது இதயத்தின் விசாலத்தை உணர்ந்து கொள்ளலாம். அவரது மாளிகைக்கு ஒரு முறை சென்றால் போதும்; அதனை மாளிகை என்று பெயரிட்டழைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து வியக்கலாம். ஒரு பள்ளியாசிரியர் தமது அத்தியாவசியத் தேவை என்று கூறும் படாடோப வசதிகள் கூட அங்கே இருக்கவில்லை. நாடி நரம்பும் புரட்சி செய்யும்
தன்னுடனிருப்பவர்கள் யார் மீதும் அவர் கோபம் கொள்வதில்லை. எனினும், தனது மக்களுக்கு துளியளவு சுதந்திரமேனும் மறுக்கப்படுவதாகத் தெரிந்தால் அதை எதிர்த்து பெரியாரின் உடம்பின் ஒவ்வொரு நாடி நரம்பும் புரட்சி செய்யும். மரணம் அவரை அரவணைத்துக் கொண்டிருக்கும்போதுகூட அவர் போர் வீரராகவே இருந்தார். வாழ்வின் அந்திம காலம் வரையிலும் அவரது உடல் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது நமக்கெல்லாம் ஒரு புதிர் போல இருக்கும். சாவின் அமைதி தம்மீது பரவிக்-கொண்டிருந்த காலத்திலும் நிதானமாக நிற்கும் போர் வீரனைப் போல அவர் காட்சியளித்தார். சாவினை எதிர்த்துப் போராடுவதற்குச் சிறிது அவகாசம் கூட அவருக்கு இல்லை அப்படி வந்து விட்டது சாவு. மாரடைப் பின் நம்பிக்கைத் துரோகம் இதுதான்.
மரண பயம் அறியாதவர்
தமது வாழ்வின் நூறாவது ஆண்டு விழாவை அவர் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது. அந்த வேளையில், இந்த நோயன்றிப் பிறிதொரு நோயாக இருந்தால், அதனைப் போகிற போக்கில் துச்சமெனத் தூக்கி வீசிவிட்டுப் போயிருப்பார். பெரியாருக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மிகவும் சிறியது. எனி-னும் அது பற்றி என்னளவுக்கு மருத்துவத் துறையிலுள்ள அறுவை மருத்துவர் எவரும் தடுமாறியிருக்க மாட்டார்!
தனது வேதனையையும் சவுகரியக் குறைவையும் பெரியாரளவுக்குப் புகார் கூறாமல் பொறுத்துக்கொண்ட நோயாளியை நான் கண்டதே இல்லை. பெரியாருக்கிருந்த மரியாதைக்கு அவர் எவ்வளவு புகார் கூறியிருக்கலாம். தனது மக்களுக்கான தனது போராட்டத்தில் பெரியாரின் மனம் எதற்கெல்லாமோ வேதனைப்பட்டிருக்கலாம். எனினும் மரணம் பற்றிய பயம் அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை.
பொதுஜன அபிப்பிராயம்
குழந்தையை யொத்த நம்பிக்கையும், மக்கள் மீது கொண்ட பாசமும் படைத்த இத்தனை பெரிய மனிதர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், அவர்கள் அனைவரிலும் முதன்மையில் இருப்பவர் பெரியார் தான். ஏனென்றால், அவர் ஜாதி, குலம், பிறப்பில் உயர்வு தாழ்வு போன்ற தடைகளையெல்லாம் வென்றவராகக் காட்சியளிக்கிறார். தமது தொண்டுகளின் விளை-வாகத் தமது மக்களை நல்லதோர் புதிய உலகத்துக்கு வழி நடத்திச் செல்லலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தவரையில் அவர் பொதுஜன அபிப்பிராயம் எப்படி இருந்தது என்பது பற்றியும் அதிகம் அக்கறைப்படவில்லை.
பண்புகளின் குடியிருப்பு
அவரது நகைச்சுவை உணர்ச்சி, உயிர்கள் அனைத்தின் மீதும் அவர் கொண்ட பாசம், தன்சார்பு நிலை மீது அவர் காட்டிய மரியாதை, நட்பினைப் பேணிக் காக்கும் பண்பு, அறிவியல் மீதும் முன்னேற்றத்தின் மீதும் அவர் கொண்டிருந்த நம்பிக்கை, காலந்தாழாமை, கடமையுணர்ச்சி, அவரது கொடைத் திறம், தாம் சரியென்று உணர்ந்ததைத் துணிச்சலுடன் எடுத்துக் கூறும் போக்கு, எளிமையான மனப்பாங்கு இவையனைத்தும், அவர் மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்த போதும் கூட அவரிடம் குடிகொண்டிருந்த பண்புகள். ஒரு சவாலை ஏற்றுக் கொள்வது என்றால் அவருக்கு எல்லா நேரமும் நல்ல நேரம்தான். அதற்கென்று நேரம் காலம் பார்ப்பதில்லை. சவாலைச் சந்திப்ப தற்கு அவர் பெற்றிருந்த கருவிகள் அவரது வாழ்நாள், அவரது வேன், ஒரு ஒலி பெருக்கி, அத்துடன் தாழ்த் தப்பட்ட மக்கள் மீது அவர் கொண் டிருந்த ஆறாக்காதல்! இக்கருவி களையே அவர் நம்பியிருந்தார்.
பெரியார் ஏற்றிய விளக்கு
தாழ்த்தப்பட்டவர்களிலும் மிகவும் தாழ்ந்தவர்களுக்கே அவர் இலகுவில் கிடைப்பவராக இருந்தார். எனவேதான் அவர் மறைந்த போது அம்மக்கள் தாமாகவே விம்மி விம்மி அழுதார்கள். அது இயல்புதானே?
பெரியார் ஏற்றிய கொள்கை விளக்கு தொடர்ந்து சுடர் விட்டெரியும்; அவரைப் பின் பற்றுகிறவர்கள் புத்திர வாஞ்சையுடன் அவர் மீது செலுத்தும் பற்று என்னும் எண்ணெய், அந்த விளக்குத் தொடர்ந்து எரிவதற்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.


No comments:

Post a Comment